வியாழன், செப்டம்பர் 13, 2012

நீண்ட கூந்தல் அவசியமா?

திருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்திருக்க  மிகவும் சிரமப்படவேண்டி இருக்கும்.  கூந்தல் பராமரிப்பு என்பது அவ்வளவு சுலபமானதல்ல. சரியான முறையில் கூந்தலைப் பாதுகாக்காவிடில் பேன் பொடுகு பிடித்துவிடும். முடி உதிரும். தலையில் புண்கள் வரும்.


முன்பெல்லாம் நான் மிகவும் மெலிந்து காணப்படுவேன். ஆனால் தலையில் பேன் மட்டும் அதிகமாக மொய்க்கும். இரட்டை இரட்டையாக மொய்க்கும். எப்போது பார்த்தாலும் கைகள் தலையையே பிராண்டிக்கொண்டிருக்கும். சாப்பிடுகிற சாப்பாட்டையெல்லாம் பேனுக்குக்கொடுக்கின்றீர்களா ? என்று கூட சிலர் கிண்டலாகக் கேட்பார்கள்.

நீண்ட கூந்தல் வைத்திருக்கின்ற காலகடத்தில், பள்ளிக்குச் செல்லுகையில், தலைவாரி சடை பின்னி பள்ளிக்குக் கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சரியாக வாரிக்கொள்ளாமல் சும்மானாலும் சுருட்டிக்கொண்டு பள்ளிக்குச்சென்றால், பொது மேடையில் பல மாணவர்களின் முன்னிலையில், இது சரியில்லாத தலைவாரல்; என்று உதாரணம் காட்டி அவமதிப்பார்கள். அதற்காகவே எண்ணெய் வைத்து, இழுத்து வாரி, இறுக்கமாக இரண்டு சடைகள் நுனிவரை பின்னி, அதை ரிப்பன்னால் தொடர்ந்துப் பின்னி, மடித்துக்கட்டிக் கொள்வோம். (மூணு படத்தில் பள்ளிக்குச்செல்லும் நடிகை ஸ்ருதி போல்.)


இந்த இரட்டைச் சடை பின்னல் பார்ப்பதற்கு சுலபம் போல்தான் இருக்கும், ஆனால் அதைப் பின்னுவதற்கு மிகவும் கடினம். முதலில் நேர்கோடு, அதன் பிறகு பின்பக்கம் நேர்கோடு எடுத்து முடியை இரண்டாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். வலதுபக்கம் வாரி சடை பின்னி, ரிப்பன் கொண்டு கட்டியபிறகு, இடதுபக்கம் வார வேண்டும். எல்லாம் சரியாக செய்துமுடித்து கண்ணாடியைப்பார்த்தால் ஒன்று மேலேயும் மற்றொன்று கொஞ்சம் இறங்கி கீழேயும் இருக்கும். ஒன்றை அவிழ்த்து சரி செய்து பின்னியபின் மற்றொன்று கோளாறாக இருப்பதைப்போல் இருக்கும். எல்லாம் சரியாக வந்ததுபோல் இருந்தால் ஒரு பக்கம் சடை மொத்தமாகவும் இன்னொரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். அப்படி இப்படி என பின்னிக் கொண்டு பள்ளிக்குச்சென்றால், தோழிகள் கிண்டல் செய்வார்கள், `உன் பின் பக்கம்  இருக்கின்ற பின்னல் வகிடு, கிள்ளான் ஆறு மாதிரி கோணல் மாணலாக செல்கிறதே.!’ என்று.

ஆக, யாருமே இல்லாமல் தனியாளாக நமது நீண்ட கூந்தலை நாமே பின்னி முடிப்பதென்பது கஷடமான காரியமே..

வாரத்திற்கு இரு முறை தலை குளிக்கவேண்டும். அதுவும் செவ்வாய் வெள்ளி கிழமைகளில்தான் தலை குளியல். மற்ற நாட்களில் மழையில் நனைந்தால் கூட, தலையைத் துண்டால் துடைத்துக்கொண்டு உடம்போடுதான் குளித்துவிட்டு வருவோம்.

நாங்கள் கூட்டுக்குடும்பம். ஆக, நிறைய பெண்கள் இருப்போம். வீட்டில் ஷம்பூ எல்லாம் வாங்க மாட்டார்கள். கட்டுப்படியாகாது என்பதால். கிலோ கணக்கில் சியக்காய்களை வாங்கிவைத்துக்கொண்டு, அதை ஒரு அண்டாவில் ஊறவைத்து, அம்மியில் நன்கு அரைத்துத்  தலையில் தேய்த்துக் குளிக்கவேண்டும். அதன் நுரையே ஷம்பூ போல் தான் இருக்கும்.

நாங்களே குளித்தால், மிக ஜாலியாக குளித்துவிட்டு வருவோம், சில வேளைகளில் அம்மா, தலை குளிக்கும்போது, குளியலறைக்குள் நுழைவார், திக்கென்றிருக்கும். அதாவது, தலை கசக்கி விடுகிறேன் என்று சொல்லி, தலை முடியை பிடித்து பிய்த்து இழுத்து, பலம் கொண்டு தேய்த்து கசக்கிக்குளிப்பாட்டி ஒரு வழி பண்ணிவிடுவார்.

அவர் தலை தேய்த்துக்குளிப்பாட்டி விட்டால், முடியில் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு காணவே இரண்டு நாள்கள் ஆகும். சடைமுனி மாதிரி முடி அப்படியே திரித்துக்கொண்டும் முறுக்கிக்கொண்டும் நிற்கும். எண்ணெய்யை விட்டு வழித்து வழித்து சீவுகிற போதுதான் பழைய நிலைக்கே வரும். கொடுமையாக இருக்கும் நிலைமை..

முன்பெல்லாம் மாலை வேளைகளில் வாசலில் அமர்ந்துகொண்டு ஒருவர் தலையை ஒருவர் பேன் பார்ப்பார்கள். கதறக்கதற பேன் சீப்பு கொண்டு சீவுவார்கள்..பேன்கள் அப்படியே கொட்டும், அங்கேயும் இங்கேயும் உதிரும். அதை பெருவிரல் நகங் கொண்டு படக் படக் என்று நசுக்கிச்சாகடிப்பார்கள். கையில் வாங்கிக்கொண்டு இரு நக இடுக்கிலும் வைத்துக்கொண்டு சாகடிக்க அவ்வளவு பிரியம்.

பேன் விடுகதைகளும் அப்போது மிகப்பிரபலம். கிளை இல்லாத மரங்களில் ஏறுவான், மரத்திற்கு மரம் தாவுவான், குரங்கு அல்ல, அவன் யார்? எல்லோருக்கும் கால்கள் கீழே இருக்கும், ஒருவனுக்கு மட்டும் கால்கள் தலையில் இருக்கும், அவன் யார்? என இப்படி....

நம் இனப் பெண்பிள்ளைகளின் தலைகளில் பேன் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். காரணம் எல்லோருக்கும் நிச்சயமாக பேன் பிடிக்கும். முன்பு, நான் பள்ளிப்பயிலும் காலகட்டத்தில், அரசாங்க கிளினிக்குகளில் பேன் மருந்து இலவசமாகக் கொடுக்கப்பட்டது. பேன்களை ஒழிப்போம் என்கிற பிரச்சாரப் பலகைகள் எல்லாத் தமிழ் பள்ளிகளிலும் காணலாம். பேன்கள் ஏற்படுத்துகிற விளைவுகளை நன்னெறி பாட நூலிலும் சேர்த்திருப்பார்கள்.

நீண்ட கூந்தலைச் சரியாகப் பராமரிக்கதெரியாமல் இருப்பவர்களுக்கு சடைமுனி மாதிரி திரிந்த கூந்தல் ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். அதிக எண்ணெய் விட்டு சரியாக வாரிவந்தால் இப்பிரச்சனைக்கு ஒரு விடிவு ஏற்படும்.

இப்படி எண்ணெயினை அதிகம் விட்டு வாரிவருவதால், நேரம் செல்லச்செல்ல அந்த எண்ணெய்யானது நெற்றியின் வழி முகமெல்லாம் வடியத்துவங்கிவிடும். எண்ணெய் வடிகிற முகத்தில் பளீரென்று படுகிற சூரியன் விட்டுச்செல்கிற கோலமானது, இன்னும் கொடுமை. முகத்திற்கு கருமையைக் கூட்டிவிட்டுச்செல்லும். பல இனங்கள் பயிலும் பள்ளிகளில், நம்மவர்களைக் கண்டாலே, ஒரு அடி தள்ளிதான் நிற்பார்கள். நமது எண்ணெய் வழிகிற முகம் கவரும்படியே இருக்காது. பழைய எண்ணெய்யின் நாற்றம் வேறு தூக்கலாக இருக்கும். அதுவும் ஒரு காரணம்.



இவ்வளவு அவஸ்தைகளிலும், நீளமான கூந்தலுக்குத்தான் காவியம் என்று கவிஞர் சொல்லிச்சென்றுள்ளார் என்பதால், நீண்ட கூந்தல் பிடிக்கவில்லை, முடி வெட்டிக்கொள்ளப் போகிறோமென்று சொன்னால், அப்பாவிற்கு அவ்வளவு கோபம் வரும். நீண்ட கூந்தல்தான் அழகு. முடி வெட்டிக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டாம் அப்படியே எங்கேயாவது குளம் குட்டையில் விழுந்து சாவுங்கள், என்று சொல்லி மிரட்டுவார்கள். சாபமிடுவார்கள். அவ்வளவு ஸ்டிரிக். கூந்தல் விஷயத்தில்.

சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா எல்லாம் விக் வைத்துக்கொண்டு குடும்ப பாங்கான படங்களின் நீண்ட கூந்தலைக் காட்டி  நடிக்கின்றார்கள். அவர்கள் மாதிரி நாங்களும் இருக்கவேண்டுமென்றால் எப்படி முடியும்? முடி வெட்டினால் காலை வெட்டுவேன், என்று கூட மிரட்டியிருக்கின்றார் அப்பா.

சில வேளைகளில், ஆரோக்கியமில்லாத நீண்ட கூந்தலின் நுனியில், கூந்தல் வெடிப்பு இருக்கும். அதாவது ஒரே முடிதான் ஆனால் அதன் நுனியில் மட்டும் வெடித்து இரண்டாகத்தெரியும். இப்படி இருந்தால் கூந்தல் வளராது என்று சொல்லி, பலவிதமான எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்திய அனுபவமும் உண்டு.

பாம்பு எண்ணெய் - எப்படித்தான் செய்வார்களோ தெரியாது, ஆனால் அதன் பெயர், பாம்பு எண்ணெய். பாம்பின் கொழுப்பில் செய்வார்கள் போலிருக்கு. கூந்தலின் நுனியில் அழுத்தித்தேய்த்து வந்தால் கூந்தல் கருகருவென வளரும் என்பார்கள். (அட முருகா, கூந்தலின் நுனிக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் சம்பந்தமிருக்கா என்ன.!) செம நாற்றம் தெரியுங்களா இந்த எண்ணெய். எங்க சின்னம்மா அடிக்கடி இதைப் பயன்படுத்துவார். வாடை, அவரின் பக்கமே செல்ல முடியாமல் செய்துவிடும்.

உடும்பு எண்ணெய் - கடவுளே இதுவும் பயங்கரமாக நாற்றமடிக்கும். கூந்தல் வளர்ச்சியில் நம்மவர்களுக்குத்தான் எவ்வளவு பேராசை பாருங்களேன்.

சொந்தமாகத்தயாரிந்த தேங்காய் எண்ணெய் - தேங்காய்ப்பாலை நன்கு காய்ச்சி எண்ணெய்யாக்கி அதில் செம்பருத்தி, பொண்ணங்கன்னி, செண்பகப்பூ, வெந்தயம், வேர்கள் என சேர்த்து வைத்துக்கொண்டு தலையில் தேய்த்துக்கொள்ளவார்கள். எங்களுக்கும் எங்களின் அம்மா இதைத்தான் செய்து கொடுப்பார்.

கடையில் விற்கிற பொண்ணாங்கன்னித்தையலம் - முன்பு இவ்வெண்ணெய் இங்கே மிகப்பிரபலம். ஒரு பெண் நீண்ட கூந்தலை அவிழ்த்து விட்டபடி போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார். கரும் பச்சை வர்ணத்தில் இருக்க்கும் இந்த எண்ணெய். இதைத் தேய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு பேன் புளுத்துக்கிடக்கும். காரணம் அதன் மணம் பேனுக்கு விருப்பமாம்.

இவற்றையெல்லாம் மாறி மாறி தேய்த்துக்கொண்டிருந்தாலும் கூந்தல் எலி வால் மாதிரி மெலிந்துதான் இருக்கும் சிலருக்கு. கூந்தல் வளர்ச்சியில் எண்ணெய்களின் பங்கு, சிக்கல் இல்லாமல் வாரிக்கொள்வதற்குத்தான், மற்றபடி உணவுப்பழக்கம், தூய்மை, நல்ல காற்று, நீர், வயது, சுற்றுச்சூழல், கவலையில்லா நிலை, வாழ்க்கை முறை, பரம்பரை போன்றவைகள்தான் கூந்தல் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கின்றதென்று இன்னுமும் நம்ப மறுப்பவர்களை மாற்றுவது கஷ்டமே.

அண்மையில், என் பள்ளித்தோழி ஒருவளை ஒரு திருமண வைபவத்தில் சந்தித்தேன். பள்ளியில் பயில்கிற போது, நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு நீண்ட கூந்தல் வைத்திருப்போம் இருவரும். இப்போது என் கூந்தல் எனக்கு தோள்வரைதான் இருக்கிறது, ஆனால் அவள் இன்னமும் அதே நீண்ட கூந்தல் வைத்திருக்கின்றாள். ஒற்றைச்சடை பின்னல் இட்டு பிட்டம்வரை ஆடிக்கொண்டிருந்தது அவளின் கூந்தல்.  அடிக்கிற காற்றில் உடைகள் கூட அசையவில்லை, ஆனால் அவளின் சடை அசைந்து கொண்டே இருந்தது. அவ்வளவு மெல்லிய சடை.

எதுக்கு இன்னமும் இந்த வால் போன்ற கூந்தலை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டதிற்கு, கணவர் வெட்ட விட மாட்டேன் என்கிறார், என்ன செய்ய! என்கிறாள்.  அடப்பாவமே இன்னமுமா? நீண்ட கூந்தலால் என்ன வந்து விடப்போகிறதோ தெரியவில்லை.!

என்ன செண்டிமெண்டலா இருக்கும்..!!?  இப்படி எலி வால் போல் இருக்கும் கூந்தலை விட மொட்டைத்தலையே மேல்.

நீண்ட அடர்ந்த கூந்தலை வைத்திருக்கும் போது, விதவிதமாக தலைவாரிக்கொள்வோம். ஒரு அனுபவம் பின்நோக்கி.....



இரட்டைப்பின்னல்

பூராண் சடை - இதை நாமே பின்ன முடியாது. யாராவது பின்னி விட்டால்தான் உண்டு.

சடையை ரிப்பன் கொண்டு மடித்துக்கட்டுவது

நன்றாக இழுத்து, பின்னே ஒரு ஒற்றைக்கொம்பு கட்டி, அதை சடையாக்கிக்கொண்டு பின்னி ரிப்பன் கட்டுவது.

நீண்ட சடை பின்னிய பிறகு அதை கொண்டையாகக் கட்டிக்கொள்வது

இரண்டு சடை பின்னி, வலதுபுற சடையை இடதுபுற சடையில் ரிப்பன் கொண்டு கட்டுவது. இடதுபுற சடையை வலது புற சடையில் கட்டுவது.

இரண்டு சடை பின்னி இறுதியில் இரண்டையும் சேர்த்து ஒன்றாகக்கட்டிக்கொள்வது.

முடியை லூஸ் செய்து, பாதியிலிருந்து சடை பின்னிக்கொள்வது. (80’ஸ் நடிகைகள் போல்..)

கோணல் சடை - முடியைச்சீவி ஒரு பக்கமாக வைத்து சடை பின்னிக்கொள்வது.

ரெண்டு கொம்பு - அதில் சடை.

தலையிலேயே வலதுபுறமாகப்பின்னிக்கொண்டு பிறகு இடதுபுறமாகக் கொண்டு வருவது.

நீண்ட சடை பின்னி, ரப்பர், ரிப்பன் எதுவும் பயன்படுத்தாமல் ஒரு முடிச்சு போட்டுக்கொள்வது.

எல்லாவற்றிலும் சடை இருக்கவேண்டும். தலைவிரி கோலமாக நடந்தால், கிழவி வெற்றிலை உரலை நம்மீது வீசும். (முன்பு நாங்கள் கூட்டுக்குடும்ப வாசிகள்)











  

15 கருத்துகள்:

  1. இன்றைய அவசர உலகில்
    நீண்ட கூந்தல் பராமரிப்புக்கென நேரம் ஒதுக்குவது
    சாத்தியமில்லை என்பதுமட்டும் அல்ல
    அவசியமானதும் இல்லை என்பது எண்ணம்
    தாங்கள் கூந்தல் பராமரிப்புக்கான பிரயத்தயங்களைச் சொல்லிச்
    சென்றவிதம் அருமை

    பதிலளிநீக்கு
  2. அப்பப்பா ஜடையில் இத்தனை ஆராய்ச்சியா?

    விஜியக்காவின் கோல்கேட் சிரிப்பு அழகு! :)

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கூந்தலில் இத்தனை விஷயங்கள்.... மீண்டும் சிறு வயதில் வீட்டில் சகோதரிகள் பட்ட கூந்தல் பராமரிப்புக் கஷ்டங்கள் நினைவுக்கு வந்தது. அம்மா மகளுக்குத் தலைப்பின்னி விடும்போது எல்லா வீட்டிலும் சண்டை வரும்.... ”ஒழுங்கா தலையை காட்டு” என அம்மாவும், “உனக்கு ஒழுங்கா பின்ன தெரியலை” என பெண்ணும்!!

    பதிலளிநீக்கு
  4. தோழி பழைய நினைவுகளை மீள் பிரசுரம் செய்கிறது அந்த நினைவுகள் சுகத்தோடு கொஞ்சம் வலியும் கூட .......ஆனாலும் அம்மாவின் பாசம் அந்த வலிகளை கலைந்தது ...........நன்றி நினைவுகளை பரிசளிததர்க்கு உங்கள் பழைய படம் கூட காலத்தை பின்னோக்கி நகர வைதது அழகாய் இருக்கிறாய் தோழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி வருகைக்கும் கருத்திற்கும்..
      அழகாய் இருக்கிறாய்.. ஆஹா. நன்றி நன்றி

      நீக்கு
  5. சொந்தமாகத்தயாரிந்த தேங்காய் எண்ணெய் - தேங்காய்ப்பாலை காய்ச்சிக் காய்ச்சி எண்ணெயாக்கி அதில் செம்பருத்தி, பொண்ணக்கன்னி, செண்பகப்பூ, வெந்தயம், வேர்கள் என சேர்த்து வைத்துக்கொண்டு தலையில் தேய்த்துக்கொள்ளவார்கள். எங்களுக்கு எங்களின் அம்மா இதைத்தான் செய்து கொடுப்பார்.// இதையேத்தான் என் அக்காகாரிகளும் பண்ணிவெச்சி ஒரே குப்பையா இருக்கும் பாட்டிலுக்குள்ள...ஹிஹி...கைய உள்ள விடவேமுடியாது :-))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பெண்களின் நீண்ட கூந்தல் பிடிக்கும். ஒரு பெண்ணின் அழகே அவள் கூந்தல் தான். எனக்கு வரவிருக்கும் மனைவியின் கூந்தல் அடர்த்தியாக இல்லை என்றாலும் நான் என் முயற்சியில் அவளுக்கு இயற்கை முறையில் நீண்ட கூந்தல் பெற முயற்சி செய்வேன்.

      நீக்கு
    2. கண்டிப்பாக ப்ரொ. முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள். கருத்துக்கு நன்றி.

      நீக்கு