வியாழன், பிப்ரவரி 21, 2013

என்ன ஆளுங்க.. (சிறுகதை)

கையில் சிகரட்டை ஏந்திக்கொண்டு, புகையை சுகமாக உள்ளே இழுத்து இழுத்து வெளியே விட்டு, சிகரட் ஏந்தியிருக்கின்ற விரல்களை அங்கேயும் இங்கேயும் நீட்டியபடி எதோ ஒரு முக்கிய விவரத்தை சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்கள் இரு பெண்கள்.

அலுவலக வளாகத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த இந்தக் காட்சியை ஆச்சிரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெண்கள் பொதுவில் புகைப்பது எனக்கு ஆச்சிரியமே.. அதுவும் நம்ம பெண் என்றால்.. ஆச்சிரியமோ ஆச்சிரியம்.. 

இதைக் கண்ணுற்ற நான், கையில் வைத்திருந்த பேனாவை, விரல் இடுக்கில் சிகரட் போல் பிடித்துக்கொண்டு, `ஸ்ஸ்ஸ் ஊஊ..’ என்று ஊதி புகைப்பதுபோல் பாவனை செய்து பார்த்தேன். சிரித்துக்கொண்டேன்.
அருகில் இருந்த கைப்பேசி சிணுங்கியது.

`ஹாலோ, சரஸ் சொல்லுங்க..’

`விஜி.. அந்தப் பொண்ணுக்கும் எம் மவனுக்கும் ஜாதகப் பொருத்தம் சரியில்லையாம்...! பரவாயில்லை வேண்டாம் விட்டிடுவோம், வேறு பொண்ணு எதும் இருந்தா சொல்லு சரியா?’

`ம்ம்..சரி.. ஒகே.. பார்ப்போம்.. ’ என்று சொல்லி, நான் என்ன ப்ரொக்கர் வேலையா செய்கிறேன், என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே தொலைப்பேசியை வைத்தேன்.

யாராவது நம்மிடம் வந்து, உங்களுக்குத்தெரிந்தவர் யாரேனும் பெண் பையனுக்கு வரன் தேடுகிறார்களா? இருந்தால் சொல்லுங்க.. என் வீட்டில் பொண்ணு இருக்கு, பைய்யன் இருக்கான் என்றால், அறிமுகம் செய்துவைக்கவே அலர்ஜியாக இருக்கிறது. அப்பப்பா எவ்வளவு இடைஞ்சல்கள் இடையூறுகள் நம்மவர்களுக்குள்.!

சரஸ், நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளை வியாபாரம் செய்வதோடல்லாமல் நன்றாக துணிமணிகளையும் தைப்பார். ரவிக்கைகள் தைப்பதென்றால் சரஸ் தைத்தால்தான் எனக்குப் பூர்ண திருப்தி. தமிழ்நாடுவரை சென்று ரவிக்கை தைத்துப்பார்த்துவிட்டேன் சரஸ் தைப்பதுபோல் வரவேவராது. இதைப்பற்றி நான் அவரிடம் அடிக்கடிப் புகழ, அவரும் உச்சுக்குளிர, அதனால் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் வந்தது. அப்படியே நட்பும் தொடர்ந்த்து.

சரஸ் துடிப்பு மிக்கவர். அழகாகவும், இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்.

ஒரு நாள் என்னை அழைத்து தாம் எதிர்நோக்கியுள்ள சில சிக்கல்களைச் சொல்லி தம் மகனுக்கு ஒரு நல்ல பெண் பார்த்துக்கொடுக்கும் படி சொன்னார்.
  
`எங்க வீட்டுக்காருக்கு ஸ்ட்ரொக் வந்து வேலை போனதிலிருந்து, எனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லாமல் போயிடுச்சு விஜி.. என் கால் சுண்டு விரல் அரிக்கிறதுன்னு சொரிஞ்சேன், திட்டிர்னு அங்கே ஒரு புண்ணு வந்திருச்சு.. டாக்டர்கிட்ட போய் செக் பண்ணினா, இனிப்பு நீர் என்கிறார். புண்ணு ஆறலன்னா காலையே எடுப்பார்களாம்..! துணிதைக்கிற வேலையெல்லாம் தூக்கிப்போட்டுட்டேன்’டா. ஆஸ்பித்திரியும் கையுமா அலையறேன். எனக்கு இல்லேன்னா அவருக்கு, அவருக்கு முடிந்தா எனக்கு’ன்னு நடையா நடக்கறேன். காலகாலமா கஷ்டப்பட்டு சேர்த்துவைச்ச பணமெல்லாம் இதுக்கே செலவாயிடும் போலிருக்கு.!
மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செஞ்சிகொடுத்தாச்சு.. நிம்மதி. மகனுக்கு முப்பத்துமூன்று வயதாகிவிட்டது.. காதல் கீதல்’ன்னு எதும் இருந்தா பேசி கீசி முடிக்கலாம்.. ஒண்ணுமில்லை’ன்றான். உனக்குத் தெரிந்த நல்ல பெண், கொஞ்சம் அழகா... இருந்தா சொல்லேன். பேசிடலாம். இந்த நெலமையில் யாராவது ஒத்தாசையா இருந்தா மனதிற்குத் தெம்பா இருக்கும். இவனுக்குக் கல்யாணம் பண்ணிப்பார்க்காம செத்துபோயிடுவோமோ’ன்னு வேறு கவலையா இருக்கு, காசி ராமேஸ்வரம் என போயி எவ்வளவோ செலவு செஞ்சி திஷ்டி தோஷம் எல்லாம் கழித்தாச்சு, ஒரு நல்லது நடக்கமாட்டேன் என்கிறது..’ என்றார் சோகம் கலந்த மனவுளைச்சளோடு.

ஏற்கனவே எனக்குத் தெரிந்த தோழி ஒருவள், தமது மகளுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தாள். படித்த பெண். மிகவும் அழகானவள். அரசு ஊழியர், நல்ல சம்பளம், தாதி தொழில் செய்பவர். தெய்வ பக்தி கொண்டவர்.. தேவாரம் திருமுறை என பல மேடைகளில் தோன்றி நிறைய பரிசுகளை சிறு வயதிலிருந்து வென்றுக்கொண்டிருப்பவள். அடக்கமானப் பெண். வீட்டு வேலைகளில் கெட்டி. பெரியவர் முன்னிலையில் மரியாதை, மென்மையான பேச்சு..

தோழியும் சில தினங்களுக்கு முன்புதான், தன் மகளுக்கு இருபத்தாறு வயதாகிவிட்டது, நல்ல வரன் கிடைத்தால் கல்யாணம் கட்டிவைத்துவிடலாம். யாராவது இருந்தால், கேட்டால் சொல். அவள் கல்யாணமே வேண்டாம் என்கிறாள், நாம் அவளை அப்படியே அவளின் போக்கிற்கே விட்டுவிட முடியுமா? காலாகாலத்திலேயே நல்லபடி எல்லாம் செய்து வைப்பதுதானே நம் கடமை. வீட்டுக்காரரும் அவளிடம் சேர்ந்துகொண்டு.. எதுக்கு இப்போ அவசரப்படற? விடு விடு என்கிறாராம்..! தாய் தமது கடமையை முடித்துவைக்கத் துடிக்கிறார்.

இரண்டு கோரிக்கைகளும் ஒரே நேரத்தில் வர, அவனின் தொழில், குணம்,வயது மற்றும் தோற்றம், இவளின் தொழில், குணம்,வயது மற்றும் தோற்றம் போன்றவைகளை மனதில் நிறுத்தி இருவரையும் சேர்த்துப்பார்த்தேன்.. அழகாக அமோகமாக இருந்தது ஜோடிப்பொருத்தம். சொல்லிப்பார்க்கலாமே என்று ஆசை வந்தது, தோழியிடம் சொல்லி, பெண்ணிற்குக்கூட தெரியாமல் பெண்ணின் புகைப்படத்தை தோழியின் மூலம் பெற்றுக்கொண்டு, சரஸிடம் விவரத்தைச் சொன்னேன்..

`அப்படியா.. நர்ஸ்வேலை நல்லவேலைதான், பொண்ணும் அழகா இருக்கா மூக்கும் முழியுமா.. மகன் கிட்ட கேட்டுட்டுச் சொல்றேன். சரியா? ரொம்ப நன்றி விஜி...’ என்று சொல்லி புகைப்பட்த்தை வாங்கிக்கொண்டார் சரஸ்.

மறுநாள் அழைத்து, தயங்கித்தயங்கி ஒரு விஷயத்தைக்கேட்டார்.. `வந்து..அதுவந்து..தப்பா நினைக்காதே.. அவங்க என்ன ஆளு?’ அட்டா இப்படி ஒரு விஷயம் இருக்கு இல்லே நம்மவர்களிடம் ..`அட, மறந்துட்டேனே.. சரி கேட்டுட்டுச் சொல்றேன்.. ஒகே வா.!’ `ம்ம்..கேளு கேளு.. பார்த்து, உனக்குத்தான் தெரியுமே, எங்களுடையது கொஞ்சம் ஒசத்தி.. கால காலமாக பார்க்கிறார்கள்..! `அட ஏன் சரஸ் இன்னமும்..!! நல்ல பொண்ணு மாப்பிள்ளை கிடக்கவே கஷ்டமா இருக்கு, இதில் இதுவேறயா..!’ `எனக்குப் பிரச்சனை இல்லை விஜி.. எங்க மாமியார்தான்.... கொழுந்தனார் கொழுந்தன் பொண்டாட்டிமார்கள் என்னைப்பிச்சுப் பிடுங்கிவிடுவார்கள்..’ என எதையோ சொல்ல வந்தார். என்னடா இது, இப்படி மாட்டிக்கொண்டோமே என்று நினைத்து..! `சரி விடுங்க, விசாரிச்சுட்டா போச்சு..’ என்று சொல்லி தற்காலிகமாகத் தப்பித்தேன்.

எதாவது தகவல் வருமா என்று காத்திருந்த தோழியிடம் எப்படி சொல்வது என்று யோசித்து யோசித்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. `சுகா.. என்னமோ ஆளு கீளுன்னு கேட்கறாங்க.. விடு வேண்டாம் அந்த சம்பந்தம்..’ என்று பட்டும்படாமல் விவரத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல் ஆரம்பித்தேன். அவள் புரிந்துகொண்டாள். `ஆமா, பார்ப்பார்கள்.. நம்மவர்கள் கல்யாணம் என்றால்.. சாப்பாடு இருக்கோ இல்லையோ..இதில் குறைவிருக்காது. சொல்லு உண்மையை, நான் ஒரு ஆளு, என் கணவர் ஒரு ஆளு, என் மகள் ஒரு ஆளுன்னு, பயப்படவேண்டாம், எங்களை விட என் மகள் மிக உசத்தி.. ஜாதியில்.’ என்றாள். அப்போதுதான் எனக்கும் அந்த ரகசியம் தெரியவந்த்து. மகள் அவளின் சொந்த மகள் அல்ல வளர்ப்பு மகள் என்று.

தேவையா இது..! இதுவும் வேணும் இன்னமும் வேணுமென்று மனதில் அசைபோட்டுக்கொண்டே, சரஸிடம் விவரத்தைச் சொன்னேன்.. மென்று விழுங்கினாள்.. `எ..ன..க்...கு அ... தெ... ல்... லா.. ம் பெ...ரி...ய விஷயமேயில்லை.. எங்க மாமிதான் ஒரு பிசாசு.. கலப்படம்னு வேற சொல்றே, முக்கியமா பொண்ணு எங்க ஆளுங்க மாதிரிதான், உசத்திதான்.. இருந்தாலும், எல்லார் கிட்டேயும் கேட்டுக்கிட்டு சொல்றேன். ஜாதகமெல்லாம் வேறு பார்க்கணும்.. பொருத்தம் சரியா இருந்தால் முடிச்சிடலாம்.. எதுக்கு இந்த பாழாய்ப்போனதையெல்லாம் இன்னமும் கட்டிக்கிட்டு அழனும்..!!’ என்று `பரந்த’ மனம் கொண்டவள் போல் பாசாங்கு செய்து, தப்பிப்பதற்காக பிறரின்மேல்  பழியைப்போட்டுவிட்டு அசட்டுத்தனமாக சிரித்து, பார்ததுக்கொடுத்த என் மனம் வேதனைப் படக்கூடாது என்பதற்காக, முகத்தில் தோன்றிய கலவரத்தையும் மறைக்கமுயன்று, பதில் சொல்லி இடத்தைக் காலி செய்தார் சரஸ்.

இன்று சரஸிடமிருந்து வந்த அழைப்பில், பொருத்தம் சரியில்லை என்கிற பதில்.

இதுதான் நாம்..!!

இது மேலே உள்ள கதையோடு தொடர்பில்லை –

தோழி ஒருவளுக்கு குடும்பத்தில் பிரச்சனை. கணவன் வேலை முடிந்து சரியான நேரத்திற்கு வீடு திரும்புவதில்லை. சதா குடி குடி.. சில சமயங்களில் இரவு வீட்டிற்கே வருவதில்லை. விடிந்து மறுநாள் வேலைக்குச் சென்று மறுபடியும் இரவு குடித்துவிட்டு வீடு திரும்புகிறார். மனம் விட்டுப் பேசுவதற்குக்கூட வாய்ப்பில்லாமல் போவதுதான் தோழிக்கு ஆதங்கம்.

சந்தேகம் தலைவிரித்தாட, கணவரின் நண்பர் ஒருவருக்குத் தொலைப்பேசியின் வழி தொடர்பு கொண்டு, விவரத்தை அறிய முனைகிறாள் தோழி.

வீட்டிற்கு வராதா சமயங்களில் கணவர் எங்கு செல்கிறார் எங்கே தங்குகிறார் என்று கேட்டுள்ளாள் நண்பரிடம். இது தவறுதான்.  கணவனின் நண்பரிடம் இப்படிக் கேட்பது அசிங்கம் என்று பலமுறை சொல்லியும், சிதறுண்ட அவளின் மனம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், சிந்தனையும் ஒரே பக்கமாக அவளை அழுத்தியதால், தமது ஏமாற்றமே தமக்கு முதன்மைக் காரணமாகத் தோன்றவே, இக்காரியத்தில், பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இறங்கிவிட்டாள்.

நண்பர்கள்தான் தெரியாதா..! இந்த ஆண் நண்பர்களே இப்படித்தான் போலும்.. நட்பிற்காக உயிரைக்கொடுக்கிறேன் இதைக்கொடுக்கிறேன் அதைக்கொடுக்கிறேன் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, நண்பனைக் காப்பாற்றுவதற்க்காகவேண்டி, வீட்டிற்குத் திரும்பாத சமையத்தில் அவன் என் வீட்டில்தான் தங்கிக்கொள்வான் அங்கேயேதான் தூங்குவான். நீ ஒண்ணும் கவலைப் படாதேம்மா, அவனிடம் சொல்லிவைக்கிறேன், என்றிருக்கிறார்.

இதைப்பற்றி நண்பரிடம் மேலும் பேசி வம்பு வளர்க்க விருப்பமில்லாமல், நண்பரின் மனைவிக்கு அழைத்து, வாறுவாறு என்று வாறியிருக்கிறாள்...

`உனக்கு அறிவில்லையா? ஒரு கல்யாணம் பண்ணிய ஆம்பள, குடிச்சுப்புட்டு உன் வீட்டில் படுத்துக்கிடக்கறான்.. அவனுக்குக் குடும்பம் இருக்கு, பொண்டாட்டி இருக்கு அவனை வீட்டிற்கு விரட்டவேண்டியதுதானே..! அவனை வீட்டில் படுக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறீயா? ரெண்டுபேரும் குடிச்சிட்டு படுத்துக்கிடப்பானுங்க, நீ போய் யார்கிட்ட படுப்ப.. ? என் குடும்பமே சின்னாப்பின்னமாய் கிடக்கு, என் புருஷனை உன் வீட்டில் படுக்கவைச்சுக்கிட்டு கும்மாளாம் போடுகிறீர்களா..? என் வீட்டில் இதுவரைக்கும் நான் எந்த ஆம்பளகளையும் தங்க விட்ட்தில்லை.. குடிக்க வந்தா, வெளியே குடிச்சிட்டு அப்படியே கிளம்புவானுங்க...வீட்டுக்குள்ளே நுழையக்கூடாதுன்னு சொல்லி மிரட்டிவச்சுருக்கேன் என் வீட்டுக்காரனை. உன்னால அப்படிச் சொல்லமுடியாதா? வளர்ர பிள்ளைகளை வைச்சுக்கிட்டு குடிகாரர்களை வீட்டுக்குள் விடறீயே, நீயெல்லாம் பொம்பளையா....!!!! என்று கண்ணாபிண்ணான்னு சத்தம் போட்டு திட்டியிருக்கிறாள்.. சில கெட்டவார்த்தைகளையும் கூடவே சேர்த்து... 

அவளுக்கு பயங்கர கோபம் வர, அவளின் கணவன் மூலம் அவளுக்குத்தெரிந்த இவளின் கணவன் செய்யும் மைனர் திருட்டுவேலைகளையும் மாற்றான் தோட்டத்து மல்லிகை ரகசியங்களையும் இவளிடம் சொல்லி இவளையும் தாறுமாறாகத்திட்டி தொலைப்பேசியை துண்டித்துள்ளாள்.

பிறகென்ன – “ஆமா, நான் வைச்சுருக்கேன்..’’என்று அவர் சொல்ல, கதைகந்தலாகி, விவரம் விவாகரத்தில் நிற்கிறது. தினமும் தொலைப்பேசியில் அழுகிறாள்.. வேலை செய்யவே மூட் இல்லை என்று புலம்புகிறாள். பிள்ளைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன் என்று அழுகிறாள்.

எவ்வளவுதான் சமாதானம் சொல்வது.. சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.