ஞாயிறு, நவம்பர் 25, 2012

மொழி பிரச்சனை


மாமிக்கு யாராவது உடன் இருந்து பேசிக்கொண்டே இருக்கவேண்டும்.

இங்கே யாருக்கும் அதுக்கு நேரமில்லை. பெற்ற பிள்ளைகளே மிரள்கிறார்கள் பேசுவதற்கு, காரணம் பேச்சு தொண தொண என்று அப்படியே நீண்ட தூரம் செல்கிறது..

கொஞ்ச நேரம் யாரும் இல்லையென்றால் எதையோ பார்த்து பயப்படுவதைப்போல் நம்மை சதா அழைத்துக்கொண்டே இருக்கின்றார்.

நன்றாக இருக்கும் காலத்தில் வீடு வீடாக பஞ்சாயித்திற்கு இவர்தான் தலைவி. (தப்பில்லை)

சென்ற திங்கட்கிழமை, ஒருவரை உணவுக்கடையொன்றில் சந்தித்தோம். அப்போது, அவரும் மாமியைப் பற்றி விசாரித்தார். `ஒரு காலத்தில், எங்கள் வீட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உங்க மாமிதான் பஞ்சாயித்து போர்ட் தலைவி. கொடுக்கல் வாங்கல், அரிசி பருப்பு, காப்பி சக்கரையென எது கேட்டாலும் உடனே கொடுப்பார்..தங்கமான மனுஷி.. வரேன் வந்து பார்க்கிறேன்.’ என்றார்.

நல்ல விஷயம்தான் ஆனால் இப்போது? யாருக்குமே பேச நேரமில்லை பேசவும் விரும்பவில்லை.. ஆனால் மாமி மட்டும் அதே நிலையில்தான் இன்னமும்.

பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டால், என்ன ஒரே சத்தம்? என்கிறார்.
அக்கம் பக்கத்தில் குழந்தைகள் யாரேனும் அழும் சத்தம் கேட்டால், `அந்த பொம்பள என்ன பண்ணுகிறா? புள்ள அழுவுது.! என்கிறார்.

ஏன் இங்குள்ளவர்கள் யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? என்ன மனுஷாட்கள்?

அந்த மனுஷி நம்ம வீட்டிற்கு வர மாட்டாரா?

உங்கம்மா காலையிலே வரும்.. இன்னிக்கு ஏன் வரல.?

நீ மார்கெட் போயிட்டு ஏன் இவ்வளவு நேரங்கழித்து வர?

அவருக்கு பேசுவதற்கு ஆள் இருக்கவேண்டும் எப்போதும்.
அதற்காக எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள். இவரின் தங்கையை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து விடலாம், என்கிற முடிவுதான் அது.

கொஞ்சம் பணம் அனுப்பி பாஸ்போர்ட் எல்லாம் எடுக்கச்சொல்லி, தங்கையிடமும் ஆசை காட்டி விட்டாச்சு. எல்லாமும் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில்,  ஒரு அரசல் புரசல் குடும்பத்தில்...

மாமியின் தங்கையின் வயதும் அறுபத்தைந்து, அவரின் உடல் மற்றும் மன நிலை எப்படியோ!? அவர் இங்கே வந்து, அவருக்கு எதும் பிரச்சனை என்றால், ஒருவருக்கு இருவரை வைத்துக்கொண்டு அவதிப்பட வேண்டி வருமே, அவர் யார் வீட்டில் இருப்பார்? எங்கு தங்குவார்? யார் இரு வயதானவர்களையும் பார்த்துக்கொள்வார்கள்.? புள்ளையார் பிடிக்க குரங்காகி விடும் போலிருக்கே. ! என்கிற சிந்தனை சென்ற தீபாவளியன்று உடன்பிறப்புகளின் மத்தியில் உலவ ஆரம்பித்தது. தெளிவாக சிந்திக்கின்றார்களாம்.. ம்ம்ம். சின்னம்மாவை அழைத்து வரும் யோசனையும் கைவிடப்பட்டது. கைவிடப்பட்டது என்பதைவிட ஒத்திப்போட்டார்கள் எனலாம், காரணம் நிச்சயம் அழைத்து வரவேண்டும், ஒரே ஒரு சின்னம்மா, சின்ன வயதில் ஊருக்குப்போனவர், அவருக்கும் ஆசையிருக்காதா, பிறந்த ஊரைப் பார்க்க (மலேசியா). ஆனால் இப்போது வேண்டாமென்று முடிவெடுத்து விட்டார்கள்.  

சரி, இந்த முடிவை அவர்களிடம் சொல்லவேண்டுமா இல்லையா?  `இப்போது வேண்டாம், நாங்கள் பிறகு இதைப்பற்றி ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கிறோம், இங்கே நிலைமை கொஞ்சம் மோசமாக உள்ளது..’ என்று, அவர்களிடம் சொல்லவேண்டுமா இல்லையா? ஹ்ம்ம்..

தன் உடன்பிறப்பையும், பலகாலம் பிரிந்த உறவுகளையும் பார்க்க, இதுவரையில் அந்த குக்கிராமத்தை விட்டு எங்குமே சென்றிராத அந்த மூதாட்டி வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார். தன் அக்காள் மகன்கள் வந்து தம்மை அழைத்துச்சென்று விடுவார்கள் என்கிற நம்பிக்கையோடு..

ஆனால், நிலைமை இங்கே? அவர்களின் அழைப்பைக்கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள். மிஸ்ட் கால் வைத்து வைத்து ஓய்ந்தே விட்டார்கள், அங்குள்ள சுற்றங்கள்.

எனக்கு மட்டும் அவர்களின் மொழி தெரிந்தால்,அல்லது அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால், நானாவது அந்த அழைப்புகளை எடுத்து, `அத்தை, உங்களை இங்கே அழைத்து வரும் எண்ணம் யாருக்கும் இல்லை. காத்திருக்க வேண்டாம், வயலுக்குப்போய் பிழைப்பைப்பார்க்கவும்..’ என்று தெலுங்கில் செப்பியிருப்பேன்.

இதனால்தான் எனக்கு எப்போதும் கெட்டப்பெயர்..