சில செய்கைகளில் நமக்கு அடக்க முடியாத ஆர்வம் வருவதென்பது இயற்கையான ஒன்று. அது மனித இயல்பும் கூட.
உதாரணத்திற்கு ரகசியம் என்று யாராவது போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுச் சென்றார்களேயானால் - அது என்னவாக இருக்கும்.? என்கிற ஆராய்ச்சியில் சில நொடிகள் நம் மனது ஈடுபடாமல் இருக்காது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.. `எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, இதெல்லாம் தேவையற்ற ஒன்று.' என்கிற வாசகத்தை அடிக்கடி உச்சரிக்கின்றவர்களாக இருப்பவர்களேயானாலும் கூட, சில விஷயங்கள் மறைமுகமாக நிகழ்கின்ற போது, தமக்குச் சம்பந்தமில்லை என்கிற உணர்வு ஆழ்மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தாலும் கூட, அது என்ன ரகசியமாக இருக்குமென்கிற யோசனை தலைதூக்காமல் இருக்காது.
சிலருக்கு இதுபோன்ற ஆர்வம் இருப்பதற்குக்காரணம் அவர்களுக்கென்று இருக்கின்ற தனிப்பட்ட சுற்றம் நட்பு போன்ற வட்டத்திற்குள் சுவாரஸ்ய பேச்சுகள் அமையவேண்டும் என்பதற்காக சில சம்பவங்களில் கூடுதல் கவனமெடுத்து ஆராயத்துவங்கிவிடுவார்கள். இது ஒரு தவறாக செய்கை என்று சொல்வதற்கில்லை. காரணம் நல்ல சுற்றம் நல்ல நட்புவட்டம் என்று அமைகின்றபோது தைரியமாக சில கதைகள் (ஊர்கதையாக இருப்பினும்) பேசுவதில் எந்தப் பாதிப்புகளும் வராது என்று உறுதியாக நம்பலாம். அப்படி நம்புகிறபோது நமது பேச்சாகப் பட்டது பல கோணங்களில் நகரலாம். எடுத்துக்காட்டுக்கு; எனது நட்புவட்டம் என்பது வேறு - கணவரின் நட்புவட்டம், நண்பர்களின் நட்புவட்டம், சகோதரிகளின் நட்பு வட்டம், பிள்ளைகளின் நட்புவட்டம் என பலவட்டங்கள் தனித்தனியாக இயங்குகின்ற பட்சத்தில், ஒருவருக்குகொருவர் சந்தித்து உரையாடுகிற சமையத்தில், அவரவர் வட்டத்துப்பேச்சுகள் பற்றியும் சம்பவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறபோது அங்கே பலரின் கதைகள் பேசப்படுவது இயல்பான ஒன்று. தவிர்க்கமுடியாத ஒன்றும். சாடல் சொல்லாடல்களாகவும் அது விரியும்.
`எனக்கு யார்கதைகளைப் பற்றியும் பேசப்பிடிக்காது. நான் உண்டு என் வேலை உண்டு’ன்னு இருப்பேன்.’ என்று பீற்றிப் பிதற்றிக் கொள்பவர்களின் ஆழ்மனமாகப்பட்டது சுனாமி அடித்துக்கொண்டிருக்கும் கடல் என்றே உவமை கூறலாம். - நீங்கள் ஞானநிலையில் இருந்தால் - இந்த அற்ப சுகவாசியின் கருத்தை ஒரு பொருட்டாகக் கருதத்தேவையில்லை. நிஜமாலுமே நீங்கள் ஊர்கதைகள் பேசா கேளா ஆசாமிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவே நீங்கள் சாதாரண ஆள் என்றால், சராசரி நிலையில் உள்ள என்னோடு கைகுலுக்கிக்கொள்ளுங்கள். நாமெல்லாம் ஒரு ஆள்.
யாரிடமும் எதுவுமே பகிராமல் இருக்கின்ற ஆசாமிகளுக்குக் கதைகளே இருக்காது. கதைகளோ செய்திகளோ இல்லாத ஒரு ஆள் மனநோயாளி போல் நடந்துகொள்வான். இப்படி இருக்கின்றவன் யாரிடம் என்ன பேசுவான்? பழம்பெருமைதான் அவனின் கதைகளாக இருக்கும். பழம்பெருமை பேசி மகிழும் மனிதனிடம் நிகழ்காலச்சிறுமைகள் மளிந்து கிடக்குமென்று ஒரு வாசகம் படித்தேன் புத்தகத்தில். இது நிஜமும் கூட. இன்றைய நவீன காலகட்டமென்பது முன்புபோல் அல்ல, கூட்டுக்குடும்பம், அண்டையையலார் என நல்லுரவு பேணி அளவளாவி மகிழ்வதற்கு. நல்லது கெட்டது முன்பைவிட அதிக அளவில் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற காலகட்டமிது. கூடி பேசுவதற்கு ஆள் இல்லாமல், எல்லாவற்றையும் சல்லடை செய்து பேசி, தாம் பொதுவில் உயர்ந்த மனிதன் என்கிற பறைசாற்றலை நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தில் தனிமையில் தனிமனிதன் மனநோயாளியாய் உழன்று தம்மைத்தாமே தீர்த்துகட்டிக் கொள்வதற்கும் தயாராகி விடுகிறான்.
நான் மேல் நிலை மனிதன். மேல் தட்டு வாசி. உயர் பதவி வகிப்பவன் என்கிற நிலையிலும் சிந்தனைப்போக்கிலும் உலாவருபவர்கள் கூட, யாரிடமாவது தூது அனுப்பியாவது சில விவரங்களைச் சேகரித்து முழுகதைகளையும் அறிந்துவைத்திருப்பார்கள். நம்மைவிட இன்னும் அதிக அளவில் ஊர் உலக விவரங்கள் (பக்கத்துவீட்டுப் பெண்ணின் கள்ளக்காதல் முதற்கொண்டு) தெரிந்திருக்கும் அவர்களுக்கு. மனித இயல்பு இதுதான். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கின்றது.!
எனக்குத்தெரிந்த உயர் பதவி அதிகாரி ஒருவருக்கு சினிமா கிசுகிசுக்கள் அத்துப்படி. இரண்டு எழுத்து சினிமா படத்தில் நடித்த முன்று எழுத்து நடிகையும், நான்கு எழுத்து நடிகரும், ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ஆறு எழுத்து இயக்குனரின் சிபாரிசில், ஏழு செய்தார்கள்...என்று எழுதியிருந்தால், அதான்.. இது இது.. இவரு... இந்தக்கதைதான் என்று மிகச் சரியாகக் கண்டுபிடித்து சொல்லிவிடும் ஆற்றல் கொண்டவர் இவர். இதில் மட்டும் ஆற்றல் உள்ளவர் அல்லர், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவரும் குறுக்கெழுத்துப் போட்டியிலும் மிகக் கெட்டிக்காரத்தனமாக செயல்பட்டு வெற்றி வாகை சூடும் திறமையும் கொண்டவர்தான் அவர்.. கவனித்தீர்களா, இதுபோன்ற தீர்க்கப்பார்வை உள்ளவர்கள் தெளிந்தநிலை அறிவாளிகளாகத் திகழ்கின்றார்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
சிலரை நாம் பார்த்தோமென்றால் நமக்குத்தேவையில்லாத காரியம் இது என்று சொல்லிவிட்டு, ஜாடை மாடையாக துருவித்துருவி சில விவரங்களை வாங்க சதா நமக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தவண்ணமாக இருப்பார்கள். கதை அங்கேயும் இங்கேயும் அலைமோதினாலும் `ஆங்.. கேட்க மறந்துட்டேன்...’ என்கிற பீடிகையோடு அழைத்ததன் நோக்கத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். நாம்தான் உளறுவாயாச்சே, எதாவது சொல்லப்போக, விஷயங்களைத் திரட்டிய திருப்தியில், `தேவையா இது நமக்கு? ஊர் கதை எதுக்கு? வேலைவெட்டி இல்லாதவர்கள் செய்கிற காரியம் இவையெல்லாம்..’ என தம்மை விடுவித்துக்கொள்கிற எச்சரிக்கையில் விலகிச்செல்வதைப்போல், நழுவிவிடுவார்கள். இவர்களை அடையாளங்காண்பது மிகச்சுலபம். தொலைபேசியில் அழைக்கின்றபோது அதைத்துண்டித்துவிடுவதுதான் நாம் செய்கிற நல்ல செய்கை.
முகநூல் அரட்டைகள்கூட சிலரை அடையாளங்காட்டிவிடும். எழுத்துவடிவில் கருத்துப்பகிர்தல் நிகழ்ந்தாலும், அமைதியாய் சிலரின் ஆழ்மனதைப் படம்பிடித்துக்காட்டுகிற கருவி இந்த முகநூல். என் தேடல் ஆர்வத்திற்கு வடிகாலாக முகநூல் அமைந்துவிட்டதால் நான் தினமும் செல்வேன் அங்கே. அங்கு நிகழ்கின்ற கூத்துகள் கொஞ்சநஞ்சமா.? சிலர் நான் முகநூல் வருவதில்லை. அங்கே நிகழும் வெட்டி அரட்டைகள் படு போர். தேவையா? தினமும் எதாவது எழுதிகொண்டு மொக்கை போடுகிறார்கள் அதற்கும் ஆயிரதெட்டு லைக்குகள் கமெண்டுகள்... என்று, அவைகள் பிடிக்காததுபோல் காட்டிக்கொண்டாலும், தினமும் அங்கே நடக்கின்ற அக்கப்போர்கள் அனைத்தையும். அக்கு அக்காகச் சொல்லி தமது மனப்புழுங்களை வெளிக்கொணர்வார்கள். நாமாவது கணினிமுன் இருக்கின்றபோது கொஞ்சம் ஈடுபாடு காட்டிவிட்டு, பிறகு அதை ஒருபொருட்டாகவே கருதாமல் நமது அன்றாட நடவடிக்கைகளில் முழுமூச்சாக ஈடுபடத்துவங்கிவிடுவோம். ஆனால் இவர்களோ, நான் போகவில்லை, நான் முகநூலை மூடிவிட்டேன், எல்லாம் போலி, யாருக்கும் ஒழுக்கமில்லை, நேர்மையில்லை.. ஆச்சா போச்சா.. என்று தாண்டுவார்கள், இருந்தபோதிலும் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். என்ன ஒரு வெக்ககேடு இது.!
அதற்கு எல்லாவற்றிலும் சமநிலைநோக்கோடு இருந்துவிட்டுப் போகலாம். வாழ்வாவது சுவாரஸ்யமாக இருந்து தொலைக்கும்.
என்னைச்சுற்றி இருக்கின்ற தோழிகளுடன் பேசிவிட்டு வந்தால், அது சுவாரஸ்யமான பிறர்கதைகளே என்றாலும் அதில் குற்றவுணர்வு வராமல் பார்த்துக்கொள்வோம். தாம் செய்கிறதனைத்தும் யோக்கியம் அடுத்தவர் செய்வது எல்லாம் அயோக்கியத்தனம் என்கிற ரீதியில் நமது பேச்சு இல்லாமல், நாம் ஏற்கனவே செய்த குளறுபடிகளோடு சம்பவங்களை ஒப்பிட்டு கதைகளை நகர்த்துகின்றபோது அங்கே குற்றவுணர்வு வருவதற்கு வாய்ப்பேயில்லை. பக்குவப்பட்ட மனமுதிர்வு உரையாடலாக அது பதிவாகின்றபோது, `ஏய் எங்கேயும் உளறிவைக்காதே.. அவகிட்ட சொல்லிடாதே, போய் கேட்பியா? அம்மா சத்தியமா? சாமி சத்தியாமா? என்கிற எச்சரிகை வாசகங்களைத் தேவையில்லாமல் உதிர்க்கவேண்டிய அவசியம் ஏற்படாது.
இரண்டு நிகழ்வுகள் - இரண்டும் பொடிவைத்துப் பேசப்பட்ட பேச்சாகவே இருந்தன.
என் மலாய் தோழி ஒருவளிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது - அவள் சொன்னாள், `நேரமிருந்தால் இந்தப்பக்கம் வாயேன். நோன்புப்பெருநாள் பலகாரங்கள் எல்லாம் உன் வருகைக்காகக் காத்திருக்கிறது.’, என்றாள்.
நான் உடனே, `இன்று முடியாது நானும் என் இன்னொரு தோழியும் வெளியே செல்கிறோம், வேறுநாள் பார்க்கிறேன்.’ என்றேன்.
`அடூய்ய் உனக்கு வயசாச்சுதானே? தோழிகளோடு ஊர் சுற்றுவதை இன்னும் விடலையா? நீயும் எங்கம்மாவும் ஒண்ணு. அவர் அவரின் கணவனோடு வெளியே கிளம்பும்போது பார்க்கணுமே உடுத்தலை..!’ என்றாள்.
நான் மௌனமானேன். அம்மாவின் கணவன் என்றால் அவளுக்கு அப்பாதானே.? ஏன் இவள் அப்பா என்று சொல்லாமல் அம்மாவின் கணவன் என்கிறாள்..! யோசித்தேன், இருப்பினும் காட்டிக்கொள்ளவில்லை. குடும்ப விவகாரம். கேட்டால் எதாவது வில்லங்கமாகுமே என்று, `ஹ..ஹ’ என்கிற சத்தத்தத்தோடு முடித்துக்கொண்டேன். இருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலையை உருவாக்கிக்கொண்டு, என்றாவது ஒருநாள் நிச்சயம் கேட்பேன்.
இன்னொரு சம்பவம் - கம்பனியில் வேலை செய்கிற ஒருவளோடு இங்கே அண்மையில் கெந்திங் மலையில் நடந்த மிகமோசமான சாலை விபத்தொன்றைப் பற்றிப்பேசுகையில், அவள் சொன்னாள், `என் முன்னால் கணவன், என்னை அடிக்கடி இந்த மலைப் பிரதேசத்திற்குத்தான் அழைத்துச்செல்வான். எனக்குப் பிடிக்கவே பிடிக்காது, கெந்திங் என்றால் என் அம்மா விடவே மாட்டார். இதனாலேயே எனக்கும் அவருக்கும் பிரச்சனை வரும்..’ என்றாள். ஆ.. இன்னும் கல்யாணம் ஆகாத பெண் இவள் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன இப்படியொரு கதையைச் சொல்கிறாளே.! ` உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?’ கேட்டேன். `நிச்சயதார்த்தம் ஆகி பாதியிலேயே நின்றுபோனது என் திருமணம்.’ என்றாள்.
நாம் பேசுகிற எல்லாக் கதைகளிலும் யாராவது இருப்பார்கள். அது நல்லதோ கெட்டதோ நிச்சயம் மூன்றாவது மனிதர் சூட்சமாக நம் அருகில் இருப்பார். ஆலோசனை என்கிற பெயரில் சில விஷயங்கள் வருகிறபோது சாமர்த்தியமாக தவிர்த்துவிடுவது நல்லது. காரணம் மனித உறவு என்பது, இன்றைய பகைவன் நாளைய நண்பன்,என்கிற ரீதியின் மிக விரைவாகப் பயணிக்கத்துவங்கிவிடும். நாமும் ஒரே மாதிரியாக பல ஆண்டுகள் சிந்திக்கப்போவதில்லை.
ஆக, நல்லதை மட்டும் பேசுகிறேன் என்று ஒரு வித போலி உரையாடல் உள்ளபடியே சுவாரஸ்யமற்றது. மனமுழுக்க குப்பைகளை சுமந்துகொண்டு நாவில் மட்டும் தேன் தடவி பேசிக்கொண்டிருப்பவர்கள்தான் குள்ளநரிகள்.
அவர்களை மட்டும் அடையாளாங்கண்டு விலக்கிவிட்டால், பிரச்சனைகள் வராது. நாம் என்னவேண்டுமானாலும் பேசலாம் இஷ்டம்போல்....