திங்கள், டிசம்பர் 19, 2011

எங்க ஊர் பத்திரிக்கைசெய்தி

ஒரு 16 வயதுடைய மாணவி, மாடியிலிருந்து தற்கொலை செய்துகொள்ள முயலும் போது, அவரது ஆசிரியரால் காப்பாற்றப்பட்டார். காரணம் காதல் தோல்வி. காதலன் வேண்டாம் என்றவுடன் இப்படி ஒரு முடிவைத்தேடி பல முறை முயற்சித்துள்ளார் அந்த மாணவி.

ஆசிரியரிடம் விசாரித்த போது, அவள் அடிக்கடி இந்த முடிவைத்தேடித் தான் பயணிக்கிறாள். ஏற்கனவே ஒரு முறை இப்படி ஒரு விபரீத முயற்சியிலிருந்து நாங்கள் அவளைக் காப்பாற்றியுள்ளோம். ஒருமுறை தமது தலையால் கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு பலமாக அடித்து ரணமாக்கிக்கொண்டாள். பிறகு ஒரு முறை சவர்க்கார நீரைப் பருகி உயிரை மாய்த்துக்கொள்ளவும் முயற்சித்துள்ளாள்.

காதலனைக் கேட்ட போது, அவள் தனக்கு பலவிதமான நெறுக்குதல்களைக் கொடுப்பதாகவும், தன்னை இறுக்கிப்பிடிக்க நினைப்பதன் காரணமாகவும், அவளை விட்டு விலக நினைக்கிறேன் என்கிறான்.

தாயிடம் கேட்ட போது, அவள் ஏற்கனவே தமது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு சாக முயன்றுள்ளாள், நான் காப்பாற்றிவிட்டேன் என்கிறார்.

நானே விவாகரத்து செய்துக்கொண்டு தனிமையில் வாழும் ஒரு தாய், நான் எப்படி இவளைச் சமாளிப்பேன் என புலம்புகிறாளாம் தாய்.

பாவம் அந்த மகள்...!!


இரவிந்திரநாத் தாகூர் ஓர் அறிமுகம்

எங்க ஊர் சிற்றிதழில்,  அண்ணன் (திரு கண்ணன்) அவர்கள் இரவிந்திரநாத் தாகூர் பற்றிய ஓர் கேள்வியை எழுப்பினார்.  அதற்கு நான் செய்த ஒரு சிறிய அறிமுகம் தான் இது. 2008யில் வந்தது.

கண்ணா அண்ணனின் கேள்விற்கு எனது சிறிய அறிமுகம். இரவிந்திரநாத் பற்றிய விவரம் எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும் அவருடைய கவிதை புத்தகம் ஒன்று என்னிடத்தில் உள்ளது. அதைப் பகிர்ந்துக்கொள்வோமே..!

ஓஷோவின், ’மறைந்திருக்கும் உண்மைகள்’ என்ற புத்தகத்தை வாசிக்கும் போது, இரவிந்திரநாத் தாகூரைப்பற்றிய தகவல் ஒன்றை இடைச்சருகலாக நுழைத்திருப்பார். அதாவது, காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கோவில்களையும் சிற்பங்களையும் அன்றைய ஆட்சியாளர்கள் அழிப்பதற்கு ஆயத்தமானபோது, அதற்குக் கடும் எதிர்ப்பை வழங்கியவர் இந்த இரவிந்திரநாத் தாகூர் தான் என்று சொல்லியபோது, எனக்கு அவரைப்பற்றிய தேடலில் ஆர்வம் பிறந்தது. அப்போது கண்டெடுத்த புத்தகம்தான் தாகூரின் ‘ஏகாந்தப்பறவைகள்’.  படித்தேன் பரவசமடைந்தேன்.

கவிதை, நாடகம், சிறுகதை, நாவல், கட்டுரை, ஓவியம், இசை, மேடைப்பேச்சு, என பல துறைகளில் ஆழமான, அழகான, அறிவார்ந்த புதிய சிந்தனைகளை காலத்தை வெல்லும் படைப்பாக படைத்து, வங்கமொழி இலக்கியதிற்கு வளமூட்டிய ஒரு மகாகவி.

அவரது பாடல்களைப் பாடாத வங்க இல்லமே இல்லை எனும் அளவிற்கு, கொடிக்கடிப்பறந்த ஒரு வங்க கவிஞர். அவரின் கவிதைகள் சில......

‘அழகே நீ உன்னைக்
காதலில் அடையாளம் கண்டுக்கொள்.
கண்ணாடி காட்டும் பொய்ப்பாராட்டில்
இல்லை உனது அடையாளம்!’

‘என் வீட்டிற்குள் வர
உன்னை நான் அழைக்க மாட்டேன்
எனது நேசனே,
எல்லையற்ற என் தனிமைக்கு வா!’

‘உனது அமைதியின்
மையத்திற்கு என்னை அழைத்துப்போ,
என் இதயத்தை
உன் பாடல்கள் கொண்டு நிறைக்க!’

‘ஒரு சொல்லை
எனக்காக வைத்திரு
உனது மௌனத்தில்
நான் இறந்தபிறகு சொல் அதை
‘நான் நேசித்தேன்’ என்று!’

‘இதுவே
எனது கடைசி வார்த்தையாக
இருக்கட்டும் -
“ உன் அன்பில்தான்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன்” !’...........

காதலை மிக அழகாகச் சொல்லும் கவிதைகள் இவை. வாசிப்போரின்  மனதைக்கொள்ளைக் கொள்ளும் ஆற்றல் இரவிந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கு உண்டு என்பதை நம்மால் மறுக்க முடியுமா என்ன.!

நன்றி:  தென்றல் (வார இதழ்)

இலக்கியமும் குழாயடி சண்டையும்

1970களின் இறுதிக்காலகட்டத்தில், அதாவது 1980யின் ஆரம்பத்தில், மலேசியாவில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம். எப்படியென்றால், வீட்டிற்கு வீடு பைஃப் வசதி இருக்காது. ஒரு ஏரியாவிற்கு ஒரு பைஃப் தான் பொருத்தியிருப்பார்கள்.

அப்போது நான் ஆரம்பப்பள்ளி மாணவி. குழாயடியில் தத்தம் வாளிகளை அடுக்கிக்கொண்டு, ஒவ்வொருவரும் அவரவர் நேரம் வரும் வரை வானத்தை அன்னார்ந்து பார்த்துக்கொண்டு பே.ன்னு உற்கார்ந்திருப்பார்கள். அப்படி உற்கார்ந்திருக்கும் பலரில் நானும் ஒருவள்.

அந்த இடத்தில் பலமாதிரியான குளறுபடிகள் நடைபெற்ற வண்ணமாக இருக்கும். உதாரணத்திற்கு சிறிய வாளிகளைக் காட்டி விட்டு, அவர்களின் நேரம் வரும்போது பெரிய தோம்பையோ அல்லது பெரிய வாளியையோ வைப்பார்கள். 
தண்ணீரை அங்கே உள்ள வாளிகளில் மட்டும்தான் பிடிக்கவேண்டும், அதை விடுத்து நேராக வீட்டிற்குக் குழாயைப் பொருத்தினால், சண்டை வரும்.

வேகமாக எடுத்துச்சென்று விரைவாக ஊற்றி விட்டு மீண்டும் யாருக்கும் தெரியாமல் வாளியை கமுக்கமாக வைத்து ஏமாற்றப்பார்ப்பார்கள். இச்செய்கையால் நீண்ட நேரம் காத்திருப்பவர்களுக்குக் கடுமையான கோபம் வரும்.  அவர்கள் தண்ணீர் பிடிக்கும் நேரம் முடிந்தவுடன், அந்த பைஃப் கித்தாவை கூடவே எடுத்துச் சென்றுவிடுவார்கள், அப்படி அவர்கள் மறந்தாட்போல் அதை அங்கேயே வைத்து விட்டுச் செல்லும்போது, மறுநாள் அந்த கித்தா அங்கு இருக்காது... அவ்வளவுதான், வீட்டில் உள்ள பரம்பரைகளையே  இழுத்து கடுமையான கொச்சை வார்த்தைகளைக்கொண்டு நாறடிப்பார்கள்.

ஏய், நீ யாரை வைச்சுருக்கேன்னு சொல்லவா? எனக்கு ஏண்டி அந்தப் பொழப்பு, நீ தான் ஊர் மேயறவ.., என பல மாதிரியான கெட்ட வார்த்தைகள்...!! பழைய பகைமையை மனதில் வைத்துக்கொண்டு,  அடுத்தவர் குடி நீரில் மண் விழும்படிதமது சைக்கில்களை ச்ர்ர்ரென்று திருப்புவார்கள்.. அடிதடிதலைமயிர் இழுத்துச் சண்டை போடுகிற நிலைமையெல்லாம் வரும். மண்டையில் ரத்தம் வழிய, தனி நபர் சண்டை, குடும்பமே தெருவுக்கு வந்து, எல்லைச் சண்டையாகிஏரியாவே கிடுகிடுக்கும் படி குண்டர் சண்டையாகி, போலிஸ்காரர்களின் வண்டி வந்து குழுகுழுவாக ஆட்களை வண்டியில் ஏற்றிய பிறகுதான் ஓயும் சண்டை.

இவற்றையெல்லாம் கண்குளிர பார்த்து, காதுகுளிர கேட்டு  ரசித்த ஒரு பக்கா நடுத்தர வர்க்கவாசி நான். அதே பாணி சண்டைகளில் சில இங்கேயும் ஈடுபடுவதைப்பார்க்கும் போது, ரசிப்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் இந்த போலிஸ் (வித்யாசகர்) கொஞ்சம் சென்சார் செய்தால். தெருச் சண்டைபோல் ஆகாமல், இலக்கிய விவாதமாக அமையலாம்.!

தெருச் சண்டையில் தனிநபர் தாக்குதலும் வாய் சவடாலுமே இருக்கும். ஆனால் இலக்கியச் சர்ச்சை என்பது அப்படியல்ல, தனிநபர் தாக்குதலுக்கு அங்கு இடமில்லை. அப்படியே இருந்தாலும், அது கொஞ்சம் நக்கல் நையாண்டியாக இருக்கவேண்டுமே தவிர முழுமையான சாடலாக இருக்காது இருக்கவும் கூடாது. அங்கு  இலக்கியம் சார்ந்த குறிப்புகள் வம்புகளோடு கலந்து வரும்பொழுது, அது சக வாசகர்களை உற்சாகப்படுத்துவதோடு, வாசகனின் வாசிப்பிற்கும் உந்துதலாக அமையலாம். 

இதெல்லாம் புரியாதவர்கள், அரைத்தமாவையே அரைத்துக்கொண்டு, புளித்துப்போன விவரங்களையெல்லாம் இலக்கியச் சர்ச்சை என்கிற பெயரியில் எல்லாவற்றையும்  நாசமாக்கிக்கொண்டுதமது பெயரில் எதாவது சர்ச்சைகள் வந்தால் மட்டும் போதும், தாமும் இலக்கியவாதியைப்போல் பாவனை செய்துகொண்டு எதையாவது குழப்பிவிடலாமே என்று நினைத்துக் கிறுக்கிக்கொண்டிருக்கின்றார்கள். அதுதான் இங்கே சிலரின் நோக்கமென்றால், உங்களின் மரியாதையை நீங்களே கெடுத்துக்கொள்கிறீகள் என்று அர்த்தம். ஏனென்றால் உங்களில் பலருக்கு வாசிப்புப் பழக்கம் அறவேயில்லை எனபதனை உறுதியாகச்சொல்லலாம். மேலும் பலரின் எழுத்துகள் குறுகிய வட்டத்தில் சிக்குண்டுக் கிடக்கிறது. ஆரம்பப்பள்ளியில் படித்த அதே இலக்கியச் சிந்தனையிலே கட்டுண்டுக்கிடக்கின்றார்கள்.

நவீன இலக்கியம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தப் பயணத்தில் நாம் இருக்கின்றோமா என்பதனை வாசக எழுத்தாளர்களான நாம் யோசித்துள்ளோமா? நம்மில் எத்தனைப் பேருக்கு நவீன இலக்கியத்தின் புரிதல் உண்டு?  நாம் இன்னமும் சிறுபிள்ளைத்தனமாக, கவிதைகளுக்கு விளக்கம் கேட்டவண்ணமாக நமது கேள்வி ஞானத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றோம் ..!!  இந்த நிலை மாறுகின்றபோதுதான் நம் நாட்டு இலக்கியத்தில் மறுமலர்ச்சியைக் காணமுடியும்.!

இதையெல்லாம் நீ மட்டும் செய்யலாமா? என்று யாராவது என்னைக்கேட்டால, எனது எழுத்து பாணியே இது தான், நான் கடந்த இருபத்தைந்து வருடங்களாக எழுத்துத்துத் துறையில் இருந்து வருகிறேன். என் முதல் சிறுகதை வரும் போது எனக்கு வயது பதினேழு. இத்தனை வருடங்களாக என்ன எழுதினேன் என்பதைவிட எப்படியெல்லாம் திட்டு வாங்கினேன் என்பது தான் என் எழுத்துலகச் சரித்திரம். அவைகள் என்னை ஒரு போதும் கீழே இறக்கியதில்லை. மேலும் மேலும் மௌனமாகக் கற்றுக்கொள்ளவே தூண்டின.

எனக்குள் ஒரு தேடலை விதைதது இந்த எழுத்துலகம் தான்.  எனக்குள் எவ்வளவு ஆராய்ச்சிகள், தேடல்கள்.! எதையும் என்னால் தெளிவாக உள்வாங்கி (செக்ஸ் உட்பட) கிரகித்து எழுத்திற்குள் கொண்டுவர முடியும்.

எது தேவையற்ற அசிங்கமான கரு? எது உள்ளபடியே நல்ல எழுத்து,?  எது ஆர்ப்பாட்டம்? எது சுயபுராணம்? எது போலி? எது வயிற்றெரிச்சல்? எது பக்குவப்பட்ட  எழுத்து? எது மறைமுக தாக்குதல்? எது உயர்வு நவிற்சி? எது வஞ்சப்புகழ்ச்சி? எது ஜால்ரா? எது மயக்கம்.? எது ஒன்றுமே இல்லாத பாசாங்கு எழுத்து? எது காழ்புணர்ச்சி.?  என எல்லாவற்றையும் அக்கு அக்காக இனங்கண்டு பகுதறிய முடியும்  என்னால்.  அப்பேர்ப்பட்ட பக்குவத்தை அளிக்கக்கூடிய இந்த அற்புதமான இலக்கியத்துறையை, சில புல்லிருவிகள் தனிநபர் சாடலுக்குப் பயன் படுத்துவது தான்  வேதனை.   

எனது எழுத்து பாணியே இதுதான். எதையாவது போட்டு வாங்குவது எனக்குச் சுவாரஸ்யம். அதில் எனக்குத் தேடுதல் உண்டு, தகவல்கள் வரும், ஆரய்சிகள் தொடரும். தொடர் வாசிப்பிற்குத் தூண்டுதல்கள் அவை.

நான் எப்போதுமே, தேவையற்றதை உளறுபவள் அல்ல. எழுத்தில் எளிதில் உணர்ச்சி வயப்படுபவளும் அல்ல, அப்படி உணர்ச்சிவயப்படுவதைப்போல் நடித்து எழுதியிருப்பேனேயொழிய மற்றபடி என் உளறலகள் அனத்திலும்,  நிச்சயமாக எதாவதொரு படிப்பினைகள் இருக்கும்.  தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்பது யாரிடமும் இருந்ததில்லை எனக்கு. வேண்டுமென்றால் என் எழுத்துப்படிவங்களை மீள்பார்வை செய்துபாருங்கள், புரியும்.

இலக்கியம் தான் எல்லாமும், எப்பேர்ப்பட்ட கல்வியாளர்களேயானாலும் இலக்கியவாதிகள் இலக்கியவாதிகள்தாம். இலக்கியவாதிகளின் உலகமென்பது வேறு. மெத்தப் படித்தவர்களெல்லாம் இலக்கியம் படைக்கலாம் ஆனால் அது இலக்கியமா, இல்லையா? என்பதனை என்னால் சொல்லவிடமுடியும்.!

(ஒரு சர்ச்சையால், எங்க ஊர் பத்திரிக்கைக்கு நான் எழுதிய ஒரு பதிவு இது)