சனி, அக்டோபர் 20, 2012

நவராத்திரி பூஜை


நவராத்திரி ஒன்பது பத்து நாள் பூஜை செய்கிறேனோ இல்லையோ.. ஆனால் சரஸ்வதி பூஜை மட்டும் கண்டிப்பாகச் செய்வேன். செய்வேன் என்றால் வடை பாயாச விருந்தெல்லாம் கிடையாது.. (செய்கிறேன் வா, என்றால்.. என்ன சமைக்கின்றாய் என்றுதான் கேட்பார்கள் அதனால் சொல்கிறேன்)

வீட்டிலேயே பூஜை செய்வேன், வீட்டில் வீணை மற்றும் மிருதங்கம் இருப்பதாலும், எனக்கும்  தொடர் வாசிப்பு பழக்கம் இருப்பதாலும், புத்தகங்கள் போன்றவைகளை வைத்து சிறப்புப்பூஜை செய்வது வழக்கம். பூஜையை நானே செய்வேன். தெய்வீகம் நிலைத்திருக்க.

அதற்குத்தயாராகும் நிலையில், கிடப்பில் உள்ள வீணையையும் மிருதங்கத்தையும் சுத்தம் செய்கிற போது.. சில நிகழ்வுகள் பின்நோக்கி நகர்ந்தன..

என் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் போது வீணை மற்றும் மிருதங்க வகுப்பில் சேர்த்து விட்டேன். அவைகளைக் கற்றுக்கொண்டு வீட்டிலும் வாசித்து வந்தார்கள். அமைதியான சூழலுக்கு வருடலாய் வரும் கீதங்கள் அவை. அதுவும் என் மகள் தேவார திருவாசங்களைப் பாடிக்கொண்டே வீணையை மீட்டுவாள். வீடே களைக்கட்டும். ரசிப்பேன்.

இப்போதும் அவைகளைத் தொடர்ந்து வாசிப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தால், `மறந்தாச்சு, மீண்டும் கற்க வேண்டும். நேரமில்லை..பிறகு பார்க்கலாம்’ என்கிறார்கள். படிப்பதற்கே எவ்வளவு இருக்கு, எங்கே அதைத் தொடுவது என்கிறார்கள்.!

அதுவும் என் மகன் இருக்காரே, `வேண்டாம் நான் வாசிக்கல, வெட்கமாக இருக்கிறது..’, என்கிறார். மகளாவது மற்றவர் முன்னிலையில் வாசித்து பாராட்டு பெற்றுள்ளார். ஆனால் மகன், தெரிந்ததை தெரியுமென்று காட்டிக்கொள்ளாமல், யாருமில்லாத சமையத்தில்தான் வாசிப்பார். நான் கூட மறைந்திருந்துதான் கேட்டு ரசித்துள்ளேன். ஆட்களைப் பார்த்தால், வாசிப்பதை நிறுத்திவிடுவார்.

செமஸ்டர் ப்ரெக், மூன்று வார விடுமுறையில் வந்துள்ளார் மகன், எஞ்ஜினியரிங் காலெஜ் படிக்கிறார். படிப்பு படிப்பு என உளைச்சலாகி இருப்பியே, விடுமுறையில் எதாவது கலை சம்பந்தப்பட்டதில் உன்னை ஈடுபடுத்திக்கொள், மீண்டும் குருவிடம் செல், மிருதங்கம் தொடர்ந்து கற்றுக்கொள், என்றால்.. ஆள விடு, எனக்கு இதெல்லாம் சரி பட்டு வராது, என்கிறார்..

இப்போது ஓரளவு வசதியாய் இருக்கின்றோம், ஆனால் இந்த மிருதங்கம் மற்றும் வீணையை வாங்குவதற்கு பதினைந்து வருடங்களுக்கு முன் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? குருவி மாதிரி சேமித்து வைத்த பணத்தை அப்படியே ரொக்கமாகக் கொடுத்து வீணையை வாங்கினேன்.

வகுப்பில் மற்ற மாணவிகளின் வீணையை இரவல் வாங்கி வாசிக்கின்றாள் உங்களின் மகள். மற்றவர் வாசிக்கும் வரை, அவர்களையே பார்த்துக்கொண்டு சும்மா இருக்கின்றாள், கண்டிப்பாக நீங்கள் ஒரு வீணையை வாங்கியே ஆக வேண்டும் என்று வீணை ஆசிரியை என்னிடம் சொன்ன போது, நிஜமாலுமே கலங்கிப்போனேன். எனக்குக் கிடைக்காதது எல்லாம் என் பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டுமென்கிற ஆதங்கம் எனக்கு எப்போதுமே இருக்கும்.

இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடைகளுக்குப் படையெடுத்தேன். எங்குமே கிடைக்கவில்லை . `ஆடர் செய்து தமிழ்நாட்டிலிருந்து வர கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாகலாம். முன் பணம் செலுத்தி பதிவு செய்துக்கொள்ளுங்கள்’, என்றார்கள் கடைக்காரர்கள். எனக்கு உடனே வேண்டுமே என்று பல இடங்களுக்கு அலைந்து திரிந்து கிள்ளானில் ஒரு கடையில்  ஒரே ஒரு வீணை மட்டுமே இருந்தது. அதை உடனே வங்கிக்கொண்டேன்.


மகள், இசை வகுப்பிற்குச்செல்லுகையில் அதைத்தூக்கிக்கொண்டு இரண்டு மாடி ஏறி இறங்குவேன். வகுப்பு இரண்டு மணி நேரம், வீடு வந்து செல்வது சரிப்பட்டு வராது என்பதால், அருகில் உள்ள ப்ளே கிராவுண்டில், ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு தனிமையில் உட்கார்ந்திருப்பேன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இதே போல் கழிந்தது என் சனிக்கிழமை பொழுதுகள்.

மிருதங்க ஆசிரியர் சர்மா அவர்கள், `பையன் நல்லா வாசிக்கின்றார். என்னுடைய மிருதங்கத்தைத் தருகிறேன். தஞ்சாவூர் இசைக்கச்சேரி மேடைகளில் பல வித்துவான்களின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட மிருதங்கம் இது. தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. நல்ல ராசியான மிருதங்கம். இதை வீட்டில் வைத்திருப்பதே ஐஸ்வரியம். வைத்துக்கொள்ளுங்கள், பையன் படிக்கட்டும், நன்கு வாசிக்கட்டும், பணம் இருக்கும் போது மட்டும் கொடுங்கள். ஒண்ணும் அவசரமில்லை, என்றார். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி முடித்தேன்.
பார்க்கச் சிறியதாகத்தானே இருக்கின்றது.! மிகவும் கனமானது. தூக்கமுடியாது. இதையும் நான் தான் தூக்கிக்கொண்டு அலைவேன். என் கணவர் என்ன செய்வார் என்று கேட்க நினைப்பவர்களுக்கு. அவருக்கு இதுபோன்ற நுண்கலைகளில் ஆர்வமில்லை. எனது ஆர்வத்தை பிள்ளைகளிடம் நுழைத்தேன். அதனால் நான் தான் எல்லாவற்றையும் செய்தேன்.

வீணை ஆசிரியை முன்பெல்லாம் தொலைப்பேசியில் அடிக்கடி அழைத்து, அரங்கேற்றத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த உங்களின் மகள் அற்புதமான இசைப்பிரியர். விடாமல் கற்றுக்கொள்ளச்சொல்லுங்கள் என்பார்.

மிருதங்க குருவை கோவிலில் சந்தித்தேன். எப்போது வேண்டுமானாலும் பையனை வரச்சொல்லுங்கள். இதுபோன்ற கலையில் இங்கே பலருக்கு ஆர்வமிருப்பதில்லை. ஆர்வம் இருந்தாலும் கலையைக் கற்கின்ற களம் சரியாக அமைவதில்லை. நல்ல குருவும் கிடைப்பதில்லை.நான் இந்த பூமியில் இருக்கும் வரை, எத்தனை பேரை உருவாக்க முடியுமோ அத்தனை பேரை உருவாக்கிவிட்டுச் செல்கிறேன், என்கிறார்.

என்ன செய்ய..! குழந்தைகளாக இருக்கும் போது நாம் சொல்வதை அவர்கள் கேட்பார்கள். இப்போது அவர்கள் சொல்வதை நாம் கேட்டுக்கொள்கிறோம்! உலகம் மட்டுமல்ல வாழ்வும் வட்டமே.