திங்கள், பிப்ரவரி 25, 2013

சுவாரஸ்யம்

எந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் எனக்கு நிகழ்ந்தாலும், நான் உடனேயே அதை எழுத்தில் கொண்டு வந்துவிடுவேன். எழுதிவைக்கும்போது பலர் வாசிக்கின்ற வாய்ப்பு ஏற்படலாம், அவைகளை தமது அனுபவங்களோடு ஒப்பிட்டு, நிருத்துப்பார்க்கலாம், சில விஷயங்கள் நம்மூலமாக அவர்களும் அனுபவித்து தெரிந்துகொள்ளலாம். சில அனுபவங்கள் பாடமாகவும் அமையலாம், சில அனுபவங்கள் எச்சரிக்கை சமிக்ஞை, சில பகிர்வுகள் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என.

நேற்று இரவும், இன்று காலையும் எனக்கு இரண்டு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தேறின. நினைத்து நினைத்து மனம்விட்டுச் சிரித்தேன். சிரித்துக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் அழைக்க, நண்பரிடமும் சொல்லிச்சிரித்தேன்.

நான் ஒரு சுவாரஸ்யமான நகைச்சுவை சம்பவமொன்றை உங்களிடம் சொல்லப்போகிறேன் என்று ஆரம்பிக்கும்போதே.. ம்ம்.. சொல்லுங்க, சொல்லுங்க நான் தயாரிவிட்டேன் சிரிப்பதற்கு என்றார். `என்ன கிண்டலா?’ என்று சிணுங்கவும்.. என்னடா இது அநியாயமா இருக்கு, சொல்கிற நகைச்சுவையைக் கேட்டுவிட்டுச் சிரிப்பதற்குத் தயாராவதுகூட பொல்லாப்பாப்போச்சு.. பெண் நட்பில் இதான் பிரச்சனை என்று அலுத்துக்கொண்டார்.

என் நண்பர் அலுத்துக்கொள்வதிலும் நியாயமிருக்கு.. காரணம், ஜோக் சொல்கிறேன் என்று சொல்லி மொக்கையாக எதையாவது உளறிவிட்டு வழிவதுதான் பெண்பாலின் பெருபாலான இயல்பு. சொல்லிமுடித்தும் கூட, .. ம்ம்.. என்னமோ ஜோக் சொல்கிறேன் என்றீர்களே அதை முதலில் சொல்லுங்கள், பிறகு சிரிங்க சாவகாசமாக என்பார். டென்ஷன்..ஊ.

அலுத்துக்கொண்டு கேட்டபோதிலும், மேலே நான் குறிப்பிட்ட அந்த சுவாரஸ்யமான விவரத்தைச் சொன்னபிறகு, அவருக்கே சிரிப்பு தாளவில்லையென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன், அந்த சுவாரஸ்யத்தின் மகிமையை. சொல்லும்போதே நான் சிரிக்க, சிரிக்கச்சொன்னேன்தானே!? என்று அவரை நான் மிரட்ட, மௌனமாகச் சிரிக்கிறேன் என்று பெருமூச்சு வர அவர் சிரிக்க, ஒரே ரகளைதான் போங்க.

இப்படிச் சுவாரஸ்யமான சம்பவமொன்றை எழுதமுடியாமல் போவதுதான் இங்கே வேதனை. சிலவேளைகளில் நமக்கு நிகழ்வது நடப்பது எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியாதே.!

சிலர், நாம் என்ன செய்கிறோம், என்ன எழுதுகிறோம், முகநூலில் என்ன பதிவேற்றுகிறோம், எங்கேயெல்லாம் நமது பின்னூட்டங்கள் இடம்பெறுகின்றன, யாரிடம் அதிகமாக பேசுகின்றோம், யாரிடம் மூக்கறுபடுகின்றோம்/மூக்கு உடைபடுகின்றோம் என, நமது அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் உளவுபேதாக்களாக நம் பின்னாலேயே உலவிக்கொண்டிருப்பார்கள்.

நாம் எழுதுகிற எழுத்தில், அவர்களின் பாத்திரத்தின் பங்கு குறித்து அறிந்துகொள்வதற்கு நம்மிடம் ஒர் அணுக்கத்தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டிருப்பார்கள். அறிந்தோ அறியாமலேயோ இதற்கு நாம்தான் மறைமுக காரணகர்த்தா என்பதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கதை சொல்லில் இருவர் மற்றும் மேலும் ஆட்கள் இருப்பதுவே இதற்கு மூலக்காரணம். உண்மையை மறைக்கமுடியுமா என்ன..!?  

நாம் பகிரப்பட்ட விவரங்களை பிய்த்துமெய்ந்து, தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கிறேன் பேர்வழி என்று கூறி..;

`நான் எதற்காக அப்படிச் சொன்னேன் தெரியுமா..!? நாம் என்ன பேசினோம், நீ என்ன எழுதியிருக்கிறாய்? புரியாமல் எதையாவது எழுதி பெயர் வாங்க அலையாதே.. இதையெல்லமா வெளியே சொல்வாங்க..! எதை எதை எழுதனும்னு ஒரு வெவஸ்தையே இல்லையா..? இதெல்லாம் உனக்கு ஒரு விளையாட்டா...!! சின்னப்புள்ளத்தனமா இல்லே..! நல்லதுக்குக்காலமில்ல...  திருந்தாதஜென்மங்கள், விஷக்கிருமிகள்...  எஃக்சுவலி... பை ரைட்.. ஷோ.. பை தி வேய்..குட் பை...!! என்று சம்பந்தமே இல்லையென்றாலும் சம்பந்தபட்டது `நான்தான், நான்தான்’ என்று கூப்பாடு போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் சொதப்பிவிடுவார்கள்.

எப்படித்தான் திரித்து மறைத்து எழுதினாலும், அந்தப் பாத்திரத்தில் தான்தான் கதாநாயகன் என்பதை மிகத்துல்லியமாகக் கண்டுகொண்டு பலவழிகளில் நம்மை டார்ச்சர் செய்வார்கள். தேவையற்ற கோபம், தேவையற்ற கீழறுப்பு, தேவையற்ற விளக்கவுரை, தேவையற்ற மனவுளைச்சல், தேவையற்ற புறம்பேச்சு, தேவையற்ற சாடல், தேவையற்ற உள்குத்து, தேவையற்ற அழைப்பு, தேவையற்ற குறுந்தகவல்,  என தொடர் அல்லல் அன்றாட பணிகளுக்கு ஊறு விளைவிக்கும்.

எழுத்திற்கு இருக்கும் மகிமையைப் பார்த்தீர்களா..!!?

ஆக, சில சுவாரஸ்யங்கள் நமக்கு நாமே  சிரித்துக்கொள்வதற்காக, வேண்டாம் விட்டிடுவோம்....