எனது முதல் கணினி அனுபவம் என்கிற தலைப்பில்
http://nanjilmano.blogspot.jp/search?updated-max=2013-07-23T16:53:00-07:00&max-results=1 நாஞ்சில் மனோ தமது பதிவை எழுதி சிலரை அழைத்திருந்ததை நானும் வாசித்தேன்.
நல்ல சுராஸ்யமான தலைப்பாக உள்ளதே என, அதை வாசிக்கின்ற போது நானும் எனது அனுபவங்களை மனதிற்குள் அசைபோட்டுப் பார்த்துக்கொண்டேன்.
தொடர் பதிவு எழுத, வலைத்தலத்தில் நீண்ட நாள் எழுதாமல் இருப்பவர்களையும் என்ன எழுதுவதென்று புரியாமல் போராடிக்கொண்டிருப்பவர்களையும் இதுபோன்ற தலைப்புகளைக் கொடுத்து அவர்களைத் தனிப்பட்ட முறையில் அழைத்து தொடர் எழுத வைப்பதென்பது சிறப்பான ஒன்றே. பாராட்டுகள்.
முகநூல் வந்ததிலிருந்து ப்ளாக் எழுதுவது குறைந்துள்ளதாகவே சில குற்றச்சாட்டுகள் முகநூலிலும் ப்ளாக்கிலும் பதிவாகியிருந்தது. அனைவரும் விரைவாக feedback வேண்டி பதிவுகளை ப்ளாக்கில் போடுவதை விடுத்து முகநூலில் இட்டு, பின்னூட்டம் லைக் என கண்சிமிட்டும் வேளையில் குவிகின்றதைக் கண்டு மகிழ்ந்துகொள்கின்றனர். இது காலத்தின் கட்டாயம் என்கிற போதும் முகநூல் தொடர்ந்து நம்முடைய டைரியாய் இருந்து செயல் படமுடியாது என்பதை உணர்கின்ற தருணத்தில் ப்ளாக்கின் பக்கம் பதிவுகள் வரத்துவங்கியிருக்கின்றன- நாஞ்சில் மனோ போன்ற பதிவர்களின் உந்துதலின் பேரில்.
மனோ நிறைய நாட்டு, வீட்டு, ரோட்டு நிகழ்வுகளைக் கலாட்டா செய்து நகைச்சுவையாக பல பதிவுகளை எழுதுபவர். அவர் பதிவு எழுதினாலேயே நிறையபேர் வந்து வாசித்து பின்னூட்டம் இடுவார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி வட்டம் இருப்பதை நான் கண்டுள்ளேன். என் வளி தனி வளி என்பதைப்போல் அவ்வட்டத்தின் செயல்பாடுகளின் காற்று ஒரே பக்கமாக வீசுவதை, அவர்களைத்தொடரும் நான் உணர்ந்து வந்துள்ளேன்.
இருப்பினும் இந்த வட்டதிற்குள் நான் எப்படி வந்தேன்.?
நாஞ்சில் மனோ தமது பதிவைத்தொடர
http://krvijayan.blogspot.jp/2013/07/blog-post.html கே.ஆர்.விஜயன் அவர்களை அழைத்திருந்தாரல்லவா.? அதையும் நான் வாசித்தேன்.
கே.ஆர். விஜயன் தமது அனுபவங்களை எழுதிய பிறகு தங்கை செல்வியை அழைத்து பதிவைத் தொடரச் சொல்லி முடித்திருக்கின்றார்.
என் முதல் கணினி அனுபவம்
http://skselvi.blogspot.jp/2013/07/blog-post_23.html என்று தமது அற்புத அனுபவங்களை வலைப்பதிவில் ஏற்றி என்னையும் தொடரச்சொல்லி அழைத்து, `உன் பெயரைப் போடுகிறேன் - மானத்தை வங்காமல் தொடரு’ என்கிற எச்சரிகையின் பேரில் உத்தரவு போட்டார்
செல்வி.
ஊர் கூடி உருண்டைச்சோறு சாப்பிடுகிறபோது, நாம் மட்டும் சும்மா இருக்கலாமா? சரி என்றேன்.
எனது முதல் கணினி அனுபவம்.
நான், ஆரம்பத்தில் ஒரு சிறிய கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தேன். சேரும்போது, அந்தக் காலகட்டமென்பது (1990) கணினியின் பயன்பாடுகள் அவ்வளவாக இல்லை. இல்லை என்பதைவிட பெரும்பாலான கம்பனிகளில் அது அமல்படுத்தப்படாமலேயே இருந்தது. அரசாங்கம் அப்போதுதான் கணினி அறிமுக செயல்பாடுகளை நாடு தழுவிய நிலையில் அமல்படுத்துகிற காரியங்களில் முழுமூச்சாக ஈடுபடத்துவங்கியிருந்தது.
அக்கம்பனியில் நான் வேலைக்குச் சேர்ந்தபோது, அங்கே வேலை செய்யும் ஒரு டைப்பிஸ்ட் வேலையை விட்டு சென்று விடவும், அவர் செய்துவந்த டைப் அடிக்கும் வேலைகள் சில எனக்கும் வந்தது. டைப் ரைட்டரின் முன்னே அழுவாத குறையாக அமர்ந்துகொண்டு `டொக் டொக் டொக்’ என்று அந்த மிஷினோடு மல்லுகட்டிக்கொண்டிருப்பேன். (டைப் அடிக்கின்ற வேலையில் அனுபவம் இல்லை). எங்களின் முதலாளிக்கு கோபம் வரும். திட்டுவார். நிச்சயம் நீ விரைவாக டைப் அடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் இல்லையேல் இங்கே வேலை செய்யமுடியாது என்று எச்சரிப்பார்.
கவலையில் ஒரு நாள் மாலை, வேலை முடிந்து, எனது தோழி மேகலாவின் (டீச்சர்) ஆலோசனையின் பேரில், அவரே அறிமுகப்படுத்திய ஒரு டைப் ரைட்டிங் வகுப்பில் சேர்ந்துகொண்டேன். அங்கே அப்போதுதான் டைப் ரைட்டிங் மிஷின்களையெல்லாம் எடுத்துவிட்டு கணினிகளை வைத்து பாடம் நடத்தத்துவங்கியிருந்தார்கள்.
ஆளுக்கொரு கணினி மேஜையில் அமர்ந்துகொண்டு, ஆசிரியர் white board யில் கற்பிக்கின்ற பாடங்களை நாங்கள் கணினியில் பயிற்சி செய்து பார்க்கவேண்டும். கணினி பற்றிய போதனையில் ஆரம்பித்து quotopro, word process, lotus 123 போன்றவற்றில் தொடர்ந்தது எங்களின் கணினிப் பயிற்சி. எப்படி கணக்கு செய்வது, கிரஃப் வரைவது, கோடு போடுவது, கடிதங்கள் எழுதுவது என பல விஷயங்கள் போதிக்கப்பட்டன அங்கே.
வகுப்பு படு சுவாரஸ்யமாகச் சென்றாலும், கற்றதை அலுவலகத்தில் அமல் படுத்த இயலாமல் திணறினேன். கணினியின் கீபோர்ட்’டில் கை வைத்தவுடன் எழுத்து தட்டச்சாகும், அதுவே டைப் ரைட்டர் என்கிற போது விரல்களால் அழுத்தி தட்டும்போதுதான் மூன்று நான்கு கார்பன் காகிதங்களில் எழுத்து/எண்கள் விழும். எவ்வளவோ முயன்றேன் எனக்கு டைப் ரைட்டரும் அதனின் சத்தமும் வெறுப்பையே கொடுத்துக்கொண்டிருந்தது. அலுவலகத்திலும் கணினிக்கு மாறுவதை கலாச்சாரக் குற்றமாகவே கருதி டைப் ரைட்டரையே பூஜித்து வந்தனர்.
கணினி ஆசிரியரிடம் (சீனர்) எனது பிரச்சனைகளைச் சொன்னேன். அதற்கு அவர், நீ வேலையை மாற்றிவிடு. உலகமே கணினி மையமாக மாறிக்கொண்டிருக்கும் போது உங்களின் அலுவலகம் பழைய பஞ்சாங்கம் பாடுகிறது. கணினி கற்பவர்களுக்குத்தான் இனி வேலை வாய்ப்புகள் என்று அரசாங்கமே சொல்லிவிட்டது, என்று கோடுதான் போட்டார், ஒருவருடம் கழித்து கணினி சான்றிதழ் கையில் கிடைத்தவுடன் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர ரோடே போட்டுவிட்டேன் நான்.
JVC ELECTRONICS ( JAPAN VICTOR COMPANY) எண்பதுகளில் மக்களின் பயன்பட்டில் முக்கிய பங்கு வகித்த வீடியோ மற்றும் அதன் கருவிகள் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனம் அது. அந்நிறுவனத்தில் அட்மின் கிளார்க்’ஆக பணியில் அமர்த்தப்பட்டேன். கணினி அனுபவம் இருந்ததால், ஆரம்பத்திலேயே EFFICIENCY REPORT செய்யும் வேலைக்குப் பணிக்கப்பட்டேன். அந்த ரிப்போர்ட் செய்யும் பணிதான் எனது முதல் கணினி அனுபவமும் கூட.
EFFICIENCY REPORT’யில் நான் புகுத்துகிற எண்களாகப்பட்டது கம்பனியின் அனைத்து சிஸ்டத்திலும் நுழைந்து மொத்த வீடியோ வெளியீட்டை உறுதிபடுத்தும். அங்கே ஏதேனும் தவறுகள் நிகழ்ந்து அது எங்கள் டிப்பார்மெண்ட் பிரச்சனையாக இருந்துவிட்டால், அப்போது பலியாவது நானாகத்தான் இருக்கும். இதனாலேயே மிகக் கவனமாகக் கூர்ந்துகவனித்து, தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கற்று சொந்தமாகவே சிஸ்டத்தில் இருக்கின்ற பிரச்சனைகளைக் களையவும், சுயமுயற்சியில் அவைகளைச் சரி செய்யவும், எளிய வழிகளில் format formula போன்றவற்றை அமல்படுத்தி அறிமுகப்படுத்தவும் கற்று கைத்தேர்ந்தேன். நாளடைவில் கண்களை மூடிக்கொண்டு விரல்கள் கீபோர்ட்டில் நர்த்தனம் ஆடுகிற அளவிற்கு எனது கணினி ஞானம் வளர்ந்திருந்தது.
இருந்தபோதிலும் தமிழில் பக்கம் பக்கமாக மனதின் பதிவுகளை தட்டச்சு செய்வதை முகநூலில் தங்கை
செல்வி, முகநூல் நண்பர் லியோ மெடி மற்றும் நண்பர் கார்த்திக்கின் மூலமே கற்றுக்கொண்டேன்.
இந்த முகநூல் மட்டும் இல்லையென்றால் நான் இங்கில்லை. எனது கணினி அறிவாகப்பட்டது ரிப்போர்ட் செய்கிற ஸ்தானத்திலேயே இருந்து மழுங்கிப்போயிருக்கும். அதுவே கணினி ஞானம் என்கிற முட்டாள்தனமான சிந்தனைப்போக்கிலேயே நான் உலாவந்திருப்பேன்.
முகநூல் சகவாசம்தான் என்னை அதிகம் கணினியின் பால் நாட்டம் கொள்ளவைத்தது.
தினமும் பதிவு எழுதவேண்டும். புகைப்படம் போட வேண்டும், புகைப்படத்தில் தெரிகிற தொப்பை, முகத்தின் கரும்புள்ளிகளைக் குறைத்து அழகாக எடிட் செய்து காட்டவேண்டும் (
இதைக் கற்றுக்கொடுத்தது முகநூல் தோழி தங்கை சாந்தி), லிங்க் கொடுப்பது, பிழையில்லாமல் எழுதுவது, வீடியோ பதிவேற்றம், குரல் பதிவு, ஸ்கைஃப் என இன்னும் பல அம்சங்களை கற்றுக்கொண்ட இருப்பதற்கு இந்த முகநூல்தான் உந்துதல் சக்தி. வாழ்வின் கற்றல் தத்துவம் இங்கே தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்துள்ளதை நினைத்து உவகை கொள்கிறேன்.
இருப்பினும் கணினியின் பயன்பாட்டில் சந்தேகங்கள் வருவது எப்போதுமே தவிர்க்க இயலாத ஒன்றாகிக்போவது கணினி பயன்படுத்துபவர்களின் பெரும்பிரச்சனையே. ஏன்? எப்படி? எதனால்? என்ன செய்யலாம்? எப்படிச்செய்யலாம்? யாரை அழைக்கலாம்? என்கிற போராட்டாம் இல்லாத கணினி பயன்பாடு அமைந்துவிடாது யாருக்குமே. எனக்கும் சிலவேளைகளில் பல சிக்கல்கள் ஏற்படும். அப்படி ஏற்படுகிற போது, கடல்தாண்டி ஐந்தாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பாலில் உள்ள நண்பர் கார்த்திக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பி அந்தப் பிரச்சனையைக் களையச்சொல்லி மன்றாடுவேன். கணினி துறையிலே கல்வி கற்றவரான கார்த்திக் பலமுறை எனது சந்தேகங்களை தீர்த்துவைத்துள்ளார். இன்னமும்..
இன்றைய எனது இப்பதிவைத் தொடர நான்
எல் கே என்கிற
கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மனையே http://bhageerathi.in/ அழைக்கின்றேன்.
அழைப்பிற்கு நன்றி. சிந்தனையைத்தூண்டிய நாஞ்சில் மனோவிற்கு பாராட்டுகள்.