காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வு, மயக்கம், வாந்தி வருவதைப்போல் குடலைப் பிரட்டியது, வயிற்றில் லேசான வலி வேறு. என்ன சாப்பிட்டோம் நேற்று இரவு? யோசித்தேன். வீட்டு உணவுதானே. நானே சமைத்தது, புதிய எண்ணெய், புதிய பொருட்கள் தூய்மை என மிக சுகாதாரமாக சமைப்பவளாச்சே நான்.! ஆக வீட்டு உணவால் பிரச்சனை வர வாய்ப்பில்லைதான். வெளியே சென்று சாப்பிட்டால், எதோ ஒரு கோளாறு நடந்துள்ளதென்று சொல்லலாம்.!
வேலைக்கு வந்தவுடன், என் மருத்துவ நண்பருக்கு அழைப்புவிடுத்தேன். அவர் கேட்ட கேள்வியும் அதே தான்.
`நேற்று இரவு என்ன சாப்பிட்டீர்கள்.? ’
`மீன் சம்பல், கோபிஸ் சாம்பார். ’
`ஓ..வீட்டுச் சமையலா? பிரச்சனையில்லையே.! என்ன மீன்? அந்த மீனை இதற்கு முன் சாப்பிட்டுள்ளீர்களா?’
`வழக்கமாக சாப்பிடும் மீன் தான் டாக்டர்.’
`பிரஷர் சுகர் எதும் இருக்கா உங்களுக்கு. ?’
`இல்லையே டாக்டர். சுகர் இல்லை, ஆனால் பிரஷர் தான் எல்லோருக்கும் வருமே.!’
`நான் உங்களை நேரில் சந்தித்தால் தான் சொல்லமுடியும். பிரஷர் பார்க்கனும். எதுக்கும் அருகில் உள்ள கிளினிக் செல்லலாமே!’
`இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, பிறகு செல்கிறேன் டாக்டர். ’
`சரி சரி.. என்ன பிரச்ச்னைன்னு பிறகு அழைத்துச் சொல்லுங்கள், ஒகேங்களா.! ’
`நன்றி டாக்டர்.’
அவரிடம் பேசிவிட்டு, ஒரு 100+ குடித்தேன் (isotonic). மாற்றம் இல்லை, சிறியதாக ஒரு ஏப்பம் வந்தது ஆனால் வயிற்று வலி அதிகரித்தைப்போல்தான் இருந்தது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் வலி வேறுமாதிரியாக வர ஆரம்பித்தது. தொப்புழ் பகுதியில் சுருக் சுருக் என்றது.
மாறுநாள் வெளியூர் பயணம் செல்லவேண்டும், நீண்ட தூர பயணம் அது. இப்போதே இது போன்ற கோளாறுகள் ஏற்பட்டால், நாளையின் நிலை? சும்மானாலுமே எனக்குப் பிரயாண அசதி பேய் மாதிரி வரும். இதில் கோளாறோடு சென்றால், சுத்தம். எல்லாம் பாழ்.
இன்றே இதைக் குணப்படுத்தி ஆகவேண்டுமே. மருந்து எடுப்பதில் அவ்வளவாக விருப்பமில்லை. எதையாவது சாப்பிட்டுப்பார்ப்போமே என, கைவசம் இருந்த நெஸ்டம்’ஐ எடுத்துக்கொண்டு, ரெஸ்ட் கார்னருக்குச் சென்றேன். கையோடு டி.எஃக்ஸ்.என் தையலத்தையும் எடுத்துச்சென்றேன்.
காப்பிக் கோப்பையில் நெஸ்டமைப் போட்டு அதில் சுடுநீரை மட்டும், எதுவுமே போடவில்லை, மற்ற நாள் என்றால் பால் சக்கரை சேர்த்துக்கொள்வேன். இன்று கொஞ்சம் உப்பு மட்டும் அதில் சேர்த்துக்கொண்டு, கொஞ்ச நேரம் சுடுநீரில் ஊற வைத்துவிட்டு, கொண்டு வந்த டி.எஃக்ஸ்.என் தையலத்தை வயிற்றில், தொப்புழ் பகுதியைச் சுற்றி தடவ ஆரம்பித்தேன்.
அங்கே சுத்தம் செய்கிற ஒரு இந்தோனிஷிய பெண்மணி வந்தாள்.
`அக்கா என்ன் செய்கிறாய்? ’ என்றாள். சொன்னேன் என் பிரச்சனையை. அவ்வளவுதானா, `கொடு அந்தத் தையலத்தை’ என என் கையிலிருந்த தையலத்தைப் பிடுங்கி, அருகில் இருந்த நாற்காலியை இழுத்து, என்னை அதில் அமரச்செய்து, அவள் கிழே என் கால்களுக்கு நேராக அமர்ந்துகொண்டு, எனது இரண்டு கால்களையும் அவளின் தொடையின் மேல் வைத்து, பாதங்களை அவளது விரல்களால் ஜாலம் செய்ய ஆரம்பித்தாள். தேய்த்தாள், பிடித்து விட்டாள், அமுக்கினாள், அழுத்தினாள்.. எனக்கு சங்கடமாக இருந்தது. வேண்டாம் விடு என்றேன். கொஞ்ச நேரம் இரு அக்கா, என்று சொல்லி பத்து நிமிடங்கள் பிடித்து விட்டப்பிறகு, என் இரண்டு கால் விரல்களில் உள்ள மூன்றாவது நான்காவது விரல்களை, அவளது மோதிர நடுவிரல்களின் இடுக்கில் வைத்துக்கொண்டு, அவைகளை பலம் கொண்டு இழுத்து விட்டாள் பாருங்க.. அய்யோ அம்மா, ஆள விடு, என்று கதறியே விட்டேன். அவ்வள்வு வலி.
பொறு பொறு.. அமைதி அமைதி.. என தொடர்ந்தாள்.. , சரி, செய்துத்தான் பார்ப்போமே என வலியைப் பொறுத்துக்கொண்டேன்.
கால்கள் நடுங்குகிற அளவிற்கு வலி.. போச்சுடா, நாளைய பயணம்! நடக்க விடாமல் செய்திடுவாளோ என அஞ்சினேன். `போதுன்டி ஆள விடு.’ என்றேன். பிறகு எழுந்தாள். எனது ஆடைகளை பாதியாக களைத்து, குனிய வைத்து, முதுகுப் பகுதியில் கொஞ்சம் தையலத்தைத் தேய்த்து, சில்லரை காசு கொண்டு, வருடிவிட்டால்.. அதன் பிறகு குனிய வைத்து, பொத்துபொத்து அடித்தாள். அவ்வளவுதான். கொஞ்சம் சுடுநீர் வெதுவெதுப்பாக அருந்தகொடுத்தாள். போ சரியாயிடும் என்றாள். ஒரு பெரிய ஏப்பம், மிக சத்தமாக வெளியேறியது. உடம்பு லேசானது. வலியில்லை, பசி ஆரம்பித்தது. நெஸ்டம் சாப்பிட்டேன். மயக்கம் இல்லை, ஒண்ணுமே இல்லை. !
என்ன மேஜிக் இது?
இப்போது, அவளை மீண்டும் அழைத்தேன். சிரித்துக்கொண்டே வந்தாள். எப்படி இருக்கு அக்கா? என்றாள். என்ன சொல்வது.. என்ன அதிசயம் வலியெல்லாம் காணாமல் போயிடுச்சே, என்றேன்.
மௌனமாக சிரித்த வண்ணம்.. அதுதான் ரகசியம் என்றாள். என்ன ரகசியம், எப்படி உனக்கு இந்த சூட்சமம் தெரிந்துள்ளது.? கேட்டேன்.
`இந்தோனிஷியாவில், உடம்பு பிடிக்கும் பரம்பரையில் இருந்து வந்தவள் நான். எங்கள் வீட்டிற்கு எப்போதும் ஆட்கள் வருவார்கள், எதாவது ஒரு கோளாறோடு.. தாத்தா, அப்பா, பாட்டி, அம்மா, போன்றோர்கள் செய்வதைப்பார்ப்பேன், நானும் கற்றுக்கொண்டேன்..’ என்றாள்.
எனக்கு ஆச்சிரியம். எதாவது செய்யவேண்டுமென்று நினைத்து, பத்து வெள்ளியை நீட்டினேன். அவளுக்குக்கோபம் வந்தது. பணம் கொடுத்து எல்லாவற்றையும் கொச்சைப்படுத்தாதே என்று அன்பாகக் கண்டித்துக்கொண்டாள்.
மருந்து எடுக்காமல் எவ்வளவோ வழிகள் உள்ளன நம் நோயை நாமே குணப்படுத்த. நாம்தான் தும்மினாலும் மாத்திரை வாங்க கிளிக் செல்கிறோம்.