செவ்வாய், ஜூன் 12, 2012

அசம்பாவித வியூகங்கள்

நமக்கு நிகழ்கின்ற அல்லது நிகழ்ந்து விட்ட சில அசம்பாவித விடயங்களை அசை போட்டுப்பார்த்தோமேயானால், சில நிகழ்வுகளின் போது மயிரிழையில் உயிர் பிழைத்திருப்போம். அல்லது சில சம்பவங்கள், நிகழாமல் நமக்கு மிக நெருக்கமாக வந்து உராய்ந்து விட்டுச் சென்றிருக்கும்.

உதாரணத்திற்கு -  சாலைவிபத்துகள் (கார் ஓட்டுவதால், இந்த அனுபவம் எனக்கு அடிக்கடி நேரும்), - நாம் செல்லவிருந்த விமானம் நடுவானில் வெடித்து நொறுங்குவது - நாம் நின்ற இடத்திலிருந்து ஒரு அடி நகரும் போது, அங்கே ஏதாவது ஒரு கனமான பொருள், நாம் நின்ற இடத்திற்கு நேராக கீழே விழுவது -  என இப்படி இன்னும் சில உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதுபோல் பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம். அதிர்ச்சியில், வார்த்தைளால் வெளிப்படுத்த முடியாமல், வாயடைத்து நின்றிருப்போம். நாம் மயிரிழையில் உயிர் தப்பிய அச்சம்பவங்களின் சாத்திய அசாத்திய கூருகளை நம்மைச்சுற்றி இருப்பவர்களிடத்தில் கூறுபோட்டு வியந்துகொண்டிருப்போம்.

`அப்படி நிகழ்ந்திருந்தால்!!? நல்ல வேளை!! கொஞ்சம் தவறியிருந்தால்!! அப்போதுதான் அங்கிருந்து வந்தேன்..!! இந்நேரம்..!!’ என நாமாகவே சில சாத்தியங்களை யூகித்துக்கொண்டு, தப்பித்துப் பிழைத்ததை எண்ணி  மனம் நெகிழ்ந்து கொள்வோம்.  அத்தருணத்தில், நாம் வணங்கி வருகின்ற நமது காவல் தெய்வங்களுக்குக் கூடுதல் மரியாதை செலுத்தி, சில  விஷேச பூஜைகளைச் செய்து, நமது நன்றி விசுவாசத்தைப் பறை சாற்றிக்கொள்வோம்.

சிலவேளைகளில், நாம் முற்பிறவியில் எதோ ஒரு புண்ணியம் செய்திருக்கவேண்டும், அதனால்தான் இன்று இந்த அசம்பாவித சம்பவம் என்னை ஒன்றும் செய்யவில்லை, என்றும், இல்லையேல், பெற்றவர்கள் செய்த புண்ணியம் நம்மைக் காப்பாற்றியது என்றும், இல்லையேல், நம் பெயர் கொண்ட யாரோ ஒருவரை, எங்கோ ஒரு மூலையில், எதோ ஒரு நல்ல காரியத்திற்காக, யாரோ ஒருவர் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கக்கூடும் என்றும் நினத்து, வியந்து கொண்டு  மன ஆறுதல் அடைந்து, மனதிற்குள் முனகிக்கொண்டு, மார்பின் மீது கைவைத்து பெருமூச்சு விட்டுக்கொள்வோம். 
இதுபோன்ற நிகழ்வுகள் என் தோழிக்கு நிகழ்ந்ததைப்பற்றிப் பேசுகையில்,  நிகழ்வுகள் சுவாரஸ்யமாகச் செல்லவே, எனக்கும் நிகழ்ந்துவிட்ட சில சம்பவங்களை நினைவுகூரலாமே என, நானும் சில விஷயங்களைச் சொல்லி பதிவிடுகிறேன். -

1. குட்டையில்..

என் தம்பிகள், அவர்களின் நண்பர்கள் என, அவரவர் வீட்டைச் சுற்றும் சில சொரி நாய்களைக் குளிப்பாட்டுவதற்காக வீட்டின் அருகாமையில் இருக்கின்ற குட்டைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். பள்ளிவிடுமுறை என்றால் பொழுதைக் கழிப்பதற்கு இப்படி எதாவதொரு வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவது இவர்களின் பொழுதுபோக்கு.

பெற்றோர்கள் அனைவரும் இவன்களையெல்லாம் கடுமையாகக் கண்டித்து, அடித்து அடக்கிவைக்கப்பார்த்தும் இவன்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. இளங்கன்று பயமறியாது என்பதைப்போல விடுமுறையென்றால் எதாவதொரு காரணத்தைக் காட்டி எங்கேயாவது விளையாடச்சென்று விடுவார்கள்.

அப்படி அவர்கள் அடிக்கடி விளையாடச்செல்லுமிடமான அந்தக் குட்டை மிகவும் ஆபத்தான இடம். மேலே நீர் தெளிவாக இருப்பதைப்போன்று இருந்தாலும், அதனின் அடி பாகம் சேறும் சகதியும் நிறைந்தது. நமது கால்களை நாம் உள்ளே வைத்தால், அது அதனின் வேலையைக் காட்டத்துவங்கிவிடும். படு வேகமாக நம்மை விழுங்கிக்கொ(ல்லு)ள்ளும்.

இதனின் அபாயத்தை பலமுறை எடுத்துச் சொல்லியும் இந்தப் பொடிப்பையன்களில் மத்தியில் எடுபடாமலேயே போனது. எப்படியாவது பெற்றோர்களுக்கு `டிமிக்கி’ கொடுத்து விட்டுச் சென்றுவிடுவார்கள்.

ஒருமுறை, அக்குட்டையில் மூழ்கி, இவர்களின் நண்பர்களில் மூவர் பலி. இதே நாய் குளிப்பாட்டும் வேளையின் போதுதான் இச்சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. மூழ்கியவர்கள் யார் யார் என்றால், என் தம்பிகளின் பெயர் இல்லை. பலியான இவர்களுடன் தம்பிகளும் சென்றுள்ளனர் நாய் குளிப்பாட்டுவதற்கு.

ஆனால் தம்பிகளைக்  காணவில்லை. வீட்டில் அப்பா எரிமலையாய் வெடித்துக்கொண்டிருந்தார்.. அம்மாவிற்கு அடிவிழாத குறையில் ஏச்சும் பேச்சும் சரமாரியாக விழுந்துகொண்டிருந்தது.

எங்களின் வீடு மட்டுமல்ல அந்த `ஏரியா’வே மரண ஓலத்தில் மூழ்கியிருந்தது.  ஒரே பரபரப்புச்சூழல். ஆட்கள் இங்கேயும் அங்கேயும் விரைந்து ஓடிக்கொண்டிருந்தனர், அலாரங்கள் ஒலிக்கும் போலிஸ் வாகனங்கள், அம்புலன்ஸ் என அமளியாய் அவ்விடம். மக்களின் கதறல் ஒருபுறம். மறக்கமுடியாத ஒரு சூழல் அது.

அப்பா இவன்களைத் தேடத்துவங்கி , கண்டுபிடித்து, அங்கேயே உள்ள செராக் கட்டையால் செம்மையாக விளாசியுள்ளார். வலிபொறுக்காமல் வீடோடி வந்த இவன்களை அம்மாவும் கோபத்தில் விளாசு விளாசு என விளாசினார்.. கோபம் விரக்தி படபடப்பு, மகிழ்ச்சி என எல்லாம் கலந்துவந்த அவர்களின் உணர்வுகள் தம்பிகளை அடிப்பதில் வெளிப்பட்டது.
இரவுவேளையின் போது எல்லாம் ஓரளவு ஓய்ந்த பின்னர், தம்பிகளிடம் நடந்தனவற்றைப் பற்றி விசாரித்தோம். எங்கே போனீர்கள்? எப்படி உன் நண்பர்கள் மட்டும் குட்டையில் சிக்கிக்கொண்டார்கள்?  என கேட்டோம்.

எல்லோரும் ஒன்றாகத்தான் நாய்களைக் குளிப்பாட்ட அழைத்துச் சென்றார்களாம். போகும் வழியில், சீனன் ஒருவன் வைத்திருக்கும் பன்றிக்கொட்டகையில் புதிதாக நிறைய பன்றிகள் வந்து இறங்கவும் அவைகளைக் காண அங்கேயே அமர்ந்துகொண்டார்களாம். பற்றிகளை, ரப்பர் குழாயை, நீர்க்குழாயில் பொருத்தி, நீரைப் பாய்ச்சியவண்ணம் அவைகளைக் குளிப்பாட்டுவதைப் பார்ப்பதற்கு பரவசமாய் இருந்ததாம். அதனால் அங்கேயே இருந்துகொண்டார்களாம். பொறுமை இழந்த நாய் அவ்விடத்தை விட்டு ஓடிவிடவும், அன்று குட்டைக்குச்செல்லாமல் தப்பித்துள்ளனர்.

ஒருஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த அம்மா, பெருமூச்சுடன்....
`இறைவன், வராக அவதாரம் எடுத்து பசங்களைக் காப்பாற்றியுள்ளார்.’ என்று, கைகளைக்குவித்து இறைவனை வணங்கினார்.


2. கேஸ்.

ஒருமுறை, இரவில் வைத்த முட்டைக்குழம்பை காலையில் சூடுகாட்டுவதற்காக கேஸ் அடுப்பை மூட்டி, குழம்புப் பானையை அதன் மேல் வைத்துவிட்டு, மறந்தாட்போல் வேலைக்கு வந்துவிட்டேன். அப்போதெல்லாம் காலைவேளையிலே  குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவேண்டிய பரபரப்பில் சில விஷயங்கள் மறந்தே போகும்.

இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டதை, கொஞ்சங்கூட நினைவில் வைத்துக்கொள்ளாமல், வேலைக்குச் சென்றுவிட்டேன்.

வேலை முடிந்து வீடு திரும்புகையில், பக்கத்து வீட்டு மலாய்க்கார அண்ணன், உங்களின் வீட்டில் ஏதோ தீஞ்ச வாடை வந்தது, ஏன் காலையிலே எதாவது தீயவைத்து விட்டாயா? என்று கேட்டார். அப்போதுதான் அச்சம்பவம் என் நினைவிற்கு வர, அரக்கப்பறக்க அடுப்பங்கரைக்கு ஓடிச்சென்று பார்த்தால், பானையில் உள்ள குழம்புமுட்டைகள் அனைத்தும் வெடித்துச்சிதறி, குழம்பு கருகி.. பானையே கரிக்கட்டையாகி விட்டிருந்தது...

ஏன் தீப்பிடிக்கவில்லை? என்றால், கேஸ் முடியும் தருவாயில் இருந்ததால், பாதியிலே தீ அணைந்து, தீப்பிடிக்காமல் சூழலைக்காப்பாற்றியது.

என் நல்ல நேரந்தான் போங்க. இல்லையேல், முன்பு நாங்கள் இருந்த வீடு தீயில் கருகிச் சாம்பலாகியிருக்கும். எங்களின் வீடு மட்டுமல்ல, அந்த வரிசை வீடுகளே தீயிற்கு இரையாகியிருக்கும். அக்கம் பக்கத்து மலாய்க்காரர்கள் என்னை சபித்துச் சாம்பலாக்கியிருப்பார்கள். நினைத்துப்பார்க்கும் போது, எதோ ஒரு சக்திதான், அன்று என்னைக் காப்பாற்றியிருக்கக்கூடும்.!


3. கரையான்

முன்பு, நாங்கள் வசித்த வீட்டில், தாங்க முடியாத அளவிற்கு கரையான் தொல்லை. வீட்டின் முன், மரமாக வளந்திருந்த முருங்கை வேப்ப மரங்களையே அடியோடு சாய்க்கின்ற அளவிற்குக் கரையானின் ராஜ்ஜியம்.

அதன் தலையீடு வீட்டின் உள்ளேயும் மிகக்கொடுமையாகவே காணப்பட்டது. மேலே, பலகை தூண்களையெல்லாம் ஏறக்குறைய விழுங்கியவண்ணம். மழைக்காலமென்றால் ஈசலின் கொடுமை அளவுக்கு அதிகமாக இருந்த போது, ஒரு கட்டுமானப் பணியாளரை அழைத்து, மேலே ஏறி கண்காணிக்கச் சொன்னபோதுதான், அவன் சில சட்டங்களை மாற்றியாகவேண்டுமென்று சொல்லிவிட்டுச் சென்றான். நாம்தான் தமிழர்களாச்சே, அசம்பாவிதங்கள் நடக்கும் வரை அஜாக்கிரதையாகத்தானே இருப்போம்.

எங்களின் அத்தை வாரம் ஒரு முறை வீட்டிற்கு வருவார். என் மகன், சிறு குழந்தையாக இருந்த போது, அவனை கவனித்துக்கொள்கின்ற பொறுப்பை கொஞ்ச காலம் ஏற்றுக்கொண்டதால், என் மகன் அவரை விடமாட்டான். வார வாரம் அழைப்பான், வரச்சொல்லி. அவர் வந்தால், உள்ளே இருக்கின்ற மெத்தையை மெனக்கட்டு வெளியே இழுத்து வந்து, ஹாலில் போட்டுக்கொண்டு, டீவி பார்த்துக்கொண்டே, பேசிக்கொண்டே படுத்துத்தூங்குவார்கள் இருவரும். இது வாரந்தவராமல் நடைபெறும்.

சம்பவம் நிகழ்ந்த  அந்த வாரம், இருவருக்குள் எதோ பூசல் ஏற்பட்டு, ஊடல் வந்து, மெத்தையை நீ இழுத்துக்கொண்டு வா, என போட்டாபோட்டியோடு போராட்டம். இதனால் அத்தை பொய்க்கோபங் கொண்டு அறைக்குள் படுத்துக்கொள்ள, அவனும் வழக்கம்போல் என்னருகில் படுத்துக்கொண்டான். 

காலை மணி மூன்று இருக்கும், நடு ஹாலில் படாரென்று படுபயங்கரமான ஒரு சத்தம். எல்லோர் தூக்கமும் கலைந்து விட்டது. என்ன சத்தமென்று வெளியே வந்து பார்த்தால், அவர்கள் எப்போதும் படுக்கும் அந்த இடத்திற்கு நேராக மேலே சுழலும் சீலிங்க் ஃபேன் கீழே விழுந்துக்கிடந்தது. ஃபேன் மாட்டியிருந்த தூணை கரையான் முழுமையாக தின்றுத்தீர்த்து விட்டதால், அந்த ஃபேன்’ஐ தாங்கிப் பிடிக்கின்ற சட்டம் உடைந்து விட்டது, பாரம் தாளாமல். மின்விசிறி விழுந்த இடத்தில், மார்பல் கல்லே விரிசல் கண்டிருந்ததென்றால், மனிதர்கள் நிலை என்னவாகியிருக்கும்.!? என்னுள் இருந்த தெய்வபக்தி சுடர்விட ஆரம்பித்தது.


4. மண்சரிவு

என் கணவர், ஆரம்பத்தில் கோலாலம்பூர் வந்து  வேலை செய்தபோது, ஒரு வீட்டின் அறையொன்றில் வாடைகைக்குத் தங்கிக்கொண்டார். தெரிந்த ஒருவரின் வீடுதான். ஆற்றோர வீடு அது. மாதம் ஒரு முறை ஊருக்குச்சென்று அம்மாவைச் சந்தித்து, சம்பாதிக்கின்ற பணத்தையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு வருவது அவரின் வழக்கம். அப்போதுதான் எங்கள் இருவருக்கும் லவ். இரு குடும்பங்களுக்கும் லடாய். (தமிழர்களாச்சே விடுவார்களா!?)

மாதம் ஒரு முறை அவர் ஊருக்குக் கிளம்புகையில், எனக்கு தனிமை மிகவும் கொடுமையாக இருக்கும். போக வேண்டாமென்று தடுப்பேன். அதை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார். அம்மாவைப் பார்க்க ஓடிவிடுவார்.

ஒரு முறை அவர் அப்படிச்செல்லுகையில், இங்கே கடுமையான மழை, வெள்ளம். பக்கத்தில் உள்ள ஆறு, அணைதிரண்டு மண்சரிவை ஏற்படுத்தி, அங்குள்ள வீடுகளையெல்லாம் மண்ணில் புதைத்துக்கொண்டது. இரவு வேளை, தூங்கிக்கொண்டிருந்த மக்கள் தவியாய்த்தவித்தனர். எல்லோர் வீடுகளையும் விட என் கணவர்(காதலன்) தங்கியிருந்த குடும்பத்தின் வீடு அதிக சேதத்துக்குள்ளாகியிருந்தது. அதிலும் அவர் தங்கியிருந்த அறை முழுவதுமாக மண்ணில் புதையுண்டது. எதுவுமே கையில் கிடைக்காதவண்ணம் எல்லாமும் மண்ணின் சிக்கிக்கொண்டது. அன்று மட்டும் அவர் என் பேச்சைக் கேட்டு, வீட்டிலேயே  தங்கியிருந்திருந்தால்..!!!??  அம்மாவின் பிரார்த்தனைதான் அன்று அவரைக் காப்பாற்றியிருக்கக் கூடும்.


அண்மையில், ஒரு யாக பூஜையில் கலந்துகொள்ளுகிற வாய்ப்புக்கிடைத்தது. சேவை மனப்பான்மை கொண்ட ஒரு நல்ல மனிதர், தாம் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை, இது போன்ற அறப்பணிகளில் செலவழித்து மக்கள் நலம் பேண, வருடத்திற்கு ஒரு முறை இந்த யாக பூஜை செய்வது வழக்கம். பத்து நாள்கள் அந்த `தாமானே’ கலைக்கட்டுகிற அளவிற்கு, கோவில் நிகழ்வு கோலாகலமாக  நடைப்பெற்றது.

இளஞர்கள் முதியோர்கள், கன்னிப்பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் ஒன்றாக இணைந்து சேவை செய்கிற அந்தக் காட்சிகள், கண்கொள்ளா அழகியக் காட்சிகளே.

கணவர் தினமும் சென்றார். நான் வார இறுதியில் மட்டும் கலந்துகொண்டேன். அந்த பத்து நாட்களின் பூஜையில் எந்த பங்கமும் ஏற்படாமல் பூஜை மிகச் சிறப்பாகவே நடந்து முடிந்தது. பதினோராவது நாள், அதாவது அந்த விஷேச நாட்கள் எல்லாம் முடிந்த மறுநாள், விடியற்காலையில், ஏற்கனவே நோயில் அவதியுற்றிருந்த அந்த சேவை மனப்பான்மைக் கொண்ட மனிதரின் தாய் இறைவனடி சேர்ந்தார். முதல் நாள் கோவிலில் பார்த்தேன் அவரை. ஒரு தடியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக நவக்கிரகங்களை வழிபாடு செய்துகொண்டிருந்தார். இது எதிர்ப்பார்த்த மரணமேயானாலும், அந்த பத்து நாட்களில் எதாவதொரு நாளில் இந்த இறப்பு நடந்திருந்தால்..!!? பூஜை வழக்கம்போல் நடந்திருக்கும், ஆனால் தலைவர் வீட்டில் துக்கமென்றால், பலருக்கு அது தர்மசங்கடமே.!


என்னமோ சொல்லனும்’னு தோன்றுகிறது.... ஹ்ம்ம் தெரியவில்லை.