புதன், ஜூலை 18, 2012

என்னுள் எழும் சில வினாக்கள்??

சில கேள்விகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும், அவைகள்தான் சிலவேளைகளில் உணர்வுக் கொந்தளிப்பாக  விஸ்வரூபம் எடுக்கும்.


இதோ இவைகள் :-

எல்லார் மீதும் எரிந்து விழும்போதுதான் இலக்கியவாதி என்கிற அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்கிற அற்ப சிந்தனை வருவது எதனால்?


யாருமே அவரை வாசித்திருக்கமாட்டார்கள், ஆனால் அவர் நாடுபோற்றும் இலக்கியவாதி. எப்படி?


இணையத்தில் எழுதினால் எழுத்தாளர்கள் இல்லையா?


கதை எழுதினால்தான் எழுத்தாளரா?


பேட்டி எடுக்கப்படும் இலக்கியவாதிகளிடம், அம்மாவிற்கு பிடித்தவை, மனைவிக்கு பிடித்தவை, கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்கிற கேள்விகளையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு, இலக்கியதைப் பற்றி மட்டும் பேசினால் நல்லா இருக்குமே.! இலக்கியப் புரிதல் பேட்டி கொடுப்பவரை விட, பேட்டி எடுப்பவருக்கு அவசியம்.. சரியா?


திட்டுகிறவர்களை திட்டிவிடலாம். பாராட்டுகிறவர்களை என்ன செய்யலாம்?


சினிமா பாடல்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, பேச்சின் போது இடையிடையே அதில் வரும் கருத்தினை நுழைத்துப் பேசுகிறவர்களை பெரிய இலக்கியவாதியாகப் பார்க்கப்படுவது எதனால்?


மேடையில் முழங்கிவிட்டால் பெரிய இலக்கியவாதியா?


தமிழ் எழுத்துக்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, தமிழ் பற்றில் உச்சத்தில் இருப்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறவர்களைப் பார்த்தால் எனக்கு வெறிவருகிறது. ஏன்?


நாத்திகம் பேசுகிறவர்கள் பெண்களின் நிலையை யோசித்திருக்கின்றார்களா? பெண்களால் நாத்திகம் பேசமுடியாது என்பதைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் இருந்தால், பல பெண்கள் மனநோயாளியாகியிருப்பார்கள்! யோசித்துப்பாருங்கள்!?


பரிசு பெற்ற சிறுகதை/நாடகம் ஒரு சினிமா படக் கதையின் காப்பி என்கிற கருத்தை நாம் முன்வைத்தால், ஏன் பரிசு கொடுக்கக்கூடாது!? எத்தனையோ பேர் அந்த சினிமா படத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்!! (சினிமா பார்க்க மாட்டார்களாம், இவர் எழுதிய கதை/நாடகத்தை உட்கார்ந்து கேட்பார்களாம், படிப்பார்களாம்.. இது எப்படியிருக்கு?) சரி அப்படியே சினிமா கதையாக இருந்தால் என்னவாம்!? அது போன்ற கதைகளை மீண்டும் எழுதினால் தப்பா? கதை எழுதுவது எவ்வளவு கடினமான வேலை... பேனா பிடித்து எழுதிப்பாரும், பிறகு தெரியும்!!? இப்படியெல்லாம் வெட்டியாக எழுதுபவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்பவர்களை  என்னவென்று சொல்வது?


இலக்கியத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது எது? பல இலக்கியவாதிகளிடம் கேட்கப்பட்ட கேள்வி? இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லலாம்.?  கஷ்டமான கேள்விதானே.!?


தமிழ் மொழியில் மாஸ்டர்/ பி.எச்.டி பட்டம் வைத்திருப்பவர்களுக்கு, இலக்கியப் புரிதல் வந்துவிடுமென்று நம்பலாமா? நான், ஒரு தமிழ் பேராசிரியர் ஆய்வு செய்த கதைகளைக் கவனித்தேன், அவர் ஒரு அற்புதமான கதையில் ஒன்றுமேயில்லை என்று சொல்லி ஆய்வு செய்திருந்தது  இன்னமும் எனக்கு வருத்தம்.


இலக்கியப் புரிதல் எனபது ஒரு ஜென்.. ஆன்மிகப் புரிதல் போல். வெளியே சொல்ல முடியாத ஒரு உணர்வு அது. எல்லோருக்கும் வந்து விடாது. ஏற்றுக்கொள்கிறீர்களா?


மாற்றத்தைக் கொண்டு வர முடியாத ஒரு துறை, நம் இலக்கியத்துறை (தமிழ்). வாய் சவுடால்களும் வெட்டிப்பேச்சுகளும்தான்  அதிகம் இங்கே.!?

ஏதோ முட்டாள் போல் உளறுவதாக இருந்தால், மன்னிக்கவும். என் மனதில் பட்டது.  ஏற்றுக்கொள்ளமுடியாதவர்கள் அமைதி அமைதி...