எனக்கு ஒரு பிரச்சனை. நான் செய்தது தவறா?
என் தோழி புத்தாண்டுப் பரிசாக எனக்கு ஒரு டிரஸ் வாங்கித்தந்தாள். நல்ல சாமியார் கலர் கணக்கா.
பெரும்பாலும் பரிசுப்பொருட்களால் எனக்கு தர்ம சங்கடமே. காரணம், ஒன்று - அது எனக்குப் பிடிக்காது. இரண்டு - என்னிடம் அப்பொருள் இருக்கும். மூன்று - நானும் எதையாவது வாங்கித்தர வேண்டுமே என்கிற குடைச்சல் ஆரம்பமாகும்.
நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன், எனக்கு எதுவும் வேண்டாம், உன் அன்பு மட்டும் போதுமென்று. சரி என்பாள் மீண்டும் எதையாவது வாங்கித் தந்து, எப்படி யிருக்கு? பிடிச்சிருக்கா? போட்டுப்பார்த்தாயா, என்பாள்!!....
அவள் புத்தாண்டுப்பரிசாக வாங்கிக்கொடுத்த அந்த டிரஸின் மேல் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. காரணம் வர்ணம் மற்றும் எனக்கு அந்த உடை கொஞ்சம் பெரிதாக இருந்தது. போடாமல் அலமாரியை அலங்கரிப்பதால் யாருக்கு என்ன பயன். நான் கொஞ்சம் குண்டானால் போடலாம்தான். ஏற்கனவே இருக்கிற குண்டு போதாதா என்ன!
சென்ற வாரம், என் உறவுக்கார பெண் ஒருவள் வீட்டிற்கு வந்திருந்தாள். பிரயாணக் களைப்பில் அவளின் மகன், அவள் மடியிலே வாந்தி எடுத்ததால் உடையெல்லாம் நாறிப்போனது. மாற்று உடை எதும் இருந்தால் கொடு என்று என்னிடம் கேட்டாள். அவள் இருக்கும் உடல்வாகிற்கு என் தோழி எனக்குப் பரிசாகக் கொடுத்த அந்த உடை கனக்கச்சிதமாகப் பொருந்தவே, ` இந்த ஆடையை எனக்குக் கொடேன்’ என்று அவளும் உரிமையுடன் வாய் திறந்து கேட்க, நானும் சரி என்று கொடுக்கவும்.. அவள் அதை அணிந்துகொண்டு சென்றும் விட்டாள்.
இதுதான் வில்லங்கம்..
நேற்று என் தோழி (ஆடையைப் பரிசாகக் கொடுத்தவள்..) என்னை அழைத்து, `அந்த ஆடை சேரவில்லை என்றாயே, எடுத்து வரமுடியுமா.? நான் தையல்காரரிடம் கொடுத்து, கச்சிதமாக உனக்குச்சேரும்படி அல்டர் செய்து தருகிறேன், என் செலவிலேயே என்றாள்.
நான் என்ன செய்ய?
இன்று அவளைச் சந்திக்கச்செல்லுகையில், நடந்த உண்மையைச் சொன்னேன்...
அடேயப்ப்பா, இப்படியா ஒரு பெண்ணிற்கு அசிங்கமாகக் கோபம் வரும்..! தாறுமாறாக என்னைத் திட்டித்தீர்த்துவிட்டாள். `அதன் விலை என்ன தெரியுமா? நான் என்ன இரவுச் சந்தைக் கடைகளில் பொருட்கள் வாங்குபவளா? பரிசுகளை பாதுகாகத்தெரியாதா உனக்கு? நீ தர்மம் செய்ய நினைத்தால், உன் பொருளைக் கொடுக்க வேண்டியது தானே..’ நாவடக்கமிட்டால் வார்த்தைகளைக் கொட்டித்தீர்த்தாள். கூனிக்குறுகினேன் நான்..!
இனி சேர்வதற்கு மனம் வருமா? உடைந்த மனதை ஒட்ட வைக்க முடியுமா? நட்பு எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுத்து பிரிவைச் சந்திக்கின்றது பார்த்தீர்களா!? எனக்கு ஒருவரின் சுயரூபம் தெரிந்து விட்டால் மறுபடியும் சேர மனம் ஒப்பாது.
பிரியவும் முடியாது. சரியான அட்டை. இன்னமும் போன் ஓயவில்லை. மெசெஜ் அண்ட் மிஸ் கால்ஸ்..
எனக்கு மட்டும் ஏன் இப்படி?