புதன், பிப்ரவரி 19, 2014

இருபத்துமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு

பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை என்கிற செய்தி கிடைத்த அன்றைய காலைவேளையை நினைத்துப்பார்க்கிறேன்.

காலைத் துயில் எழுந்தவுடன் தலையைச் சொரிந்துகொண்டு வானொலியை முடுக்கிவிடுவது அப்போதைய அன்றாட கடமைகளில் ஒன்று. 

அன்றைய காலை செய்தி, பாதிநேரம் அவரின் படுகொலை பற்றியதுதான். 

கணவர் வேலைக்குக் கிளம்பிவிட்டார். அவருக்கு செய்தி தெரியாது. தற்போதைய சூழல்போல் கைப்பேசி இருந்திருந்தால், அவரிடம் சொல்லி ஆறுதல் தேடியிருப்பேன். பேரதிர்ச்சியாக இருந்தது இச்செய்தி.. படுபாவிகளா.. அழகிய முகத்தை வெடிவைத்துவிட்டார்களே.. என்று வேதனையாக இருந்தது.

ஐய்யோ.. என்ன கொடுமை. என்கிற வேதனை முனகலோடு வாசலுக்கு விரைந்தேன். எதிர்விட்டு பெரியவர் அவரின் வீட்டுவாசலில், மண்வெட்டியால் நிலத்தைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்.

விடியலை நோக்கி காத்திருக்கும் இருட்டிய காலைப் பொழுது அது. சுறுட்டோ சிகரட்டோ தெரியவில்லை, புகைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக அவரின் பூந்தோட்டத்தில் என்னமோ செய்துகொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

`பெரியப்பா.. பெரியப்பா..’

`என்னம்மா.. காலையிலே..’

`ரஜீவ் காந்தியை குண்டு வைத்து கொலை செய்துவிட்டார்களாம்..’

`யாரவன்?’

` நேரு பேரன். இந்திராகாந்தி மகன். இந்தியாவோட பிரதமர்.’

`அய்யோ.. என்னமா சொல்றே? அவரா? என்னாச்சு? அய்யோ. நிஜமாவா? யம்ம புரளியா இருக்கப்போவுதும்மா.. நில்லு நில்லு நான் பேப்பர பார்த்துட்டுத்தான் சொல்லணும் .. நம்ப முடியல.. கடவுளே. என்ன அநியாயமா இருக்கு..’ என்று முனகிக்கொண்டே, மண்வெட்டியை கோபமாக கடாசி விட்டு உள்ளே போனார் வேகமாக..

நான், பக்கத்துவீட்டில் பூஜை செய்ய வெளியே வந்த ரோஷியின் அம்மாவிடம்.. இது குறித்து மேலும் தகவல் அறிய பேச்சுக்கொடுத்தேன்..

`ஆமாம் என் மகன் சொல்லிக்கொண்டிருந்தார்.. ச்சே.. குண்டு வெடித்தது, அதுவும் தமிழ்நாட்டிலாம் .. நம்மவர்கள் வைத்த குண்டாம். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. எதும் செய்தி கிடைத்தால்.. சொல்லு.. நானும் சொல்றேன். கவலைதான்.. போ, வேலைக்குக் கிளம்பு..’ என்று சொல்லி, மணியடித்துக்கொண்டே உள்ளே சென்றார்.

மறக்கமுடியாத நாள். அன்றுமுழுக்க மலேசிய மண்ணில் இந்தச் செய்தி பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன்பிறகு அது அப்படியே அமுங்கிப்போனது.

முன்பு பத்திரிகைகள் மற்றும் வானொலி தொலைக்காட்சிகள் கொண்டுவரும் செய்திதான்.. அதுகூட, இந்தியாவில் எப்படித்திரித்து செய்தி பகிரப் படுகிறதோ, அதே மாதிரிதான் இங்கேயும் வரும். கூட்டிக்குறைத்து எல்லாம் இருக்காது. ஒட்டுமொத்த அவலத்திற்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று செய்திகள் பரவலாக வந்துகொண்டிருந்தன. பிரபாகரன், நளினி போன்றோர்களின் பெயர் புகைப்படங்கள் அதிகமாக வந்துகொண்டிருந்த காலகட்டம் அது. நாங்களும் நம்பினோம். காரணம் உண்மைச் செய்திகளைவிட, பரபரப்புச்செய்திகள்தான் அதிகம்.

தமிழ்நாட்டில் அப்போது ஜெயா ஆட்சி என்றுதான் நினைக்கிறேன். (தவறாக இருந்தால் மன்னிக்கவும்)

அப்போது என்மகளுக்கு இரண்டுவயது. இருபத்திமூன்றுவருடங்கள் கடந்துவிட்டன.

மூவருக்கு விடுதலை. இருபத்துமூன்று வருட சிறைவாசத்திற்குப்பிறகு...

வாழ்த்துகள்..