வியாழன், ஆகஸ்ட் 01, 2013

இடுக்கண் வருங்கால் ந(சுக்)குக

நடக்கின்ற அனைத்திற்கும் நாம்தான் காரணம். நாம் அனுமதிக்காமல் யாரும் நம்மை நோகடித்துவிட முடியாது. ஒரு செயல் பிறர் மூலமாக வருகிறபோது அது நம்மை துளியும் பாதிக்காதவகையில் நம்மை நாம் பக்குவப்படுத்தி பாதுகாத்துக்கொள்வது அவசியம், நம்மை மீறி யாரும் நம் உணர்ச்சியைத் தூண்டி விட முடியாது அல்லது காயப்படுத்திவிடவும் முடியாது, .... என்கிற சில வாசகங்களை யோசிக்காமலேயே உணரப்படாமலேயே `காப்பி பேஸ்ட்’ தத்துவங்களாக போகிற போக்கில் சிலர் நம்மிடம் இறக்கிவைத்துவிட்டுச் செல்வார்கள்.

இதே அடிப்படையிலான தத்துவங்கள் நம்மிடம் அதிகம்தான். புத்தர் சொன்னார், விவேகானந்தர் சொன்னார், கன்பூஸியஸ் சொன்னார், காந்தி சொன்னார், வள்ளுவர் சொன்னார் என பலவாறாக தன்னம்பிக்கையை வளர்க்கின்ற வாசகங்களை சிலர் விடாப்பிடியாக பிடித்துவைத்துக்கொண்டு, யார் என்ன சொன்னாலும் தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும், என்கிற தாரகமந்திரத்தின் அடிப்படையிலும், அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்கிற பழமொழியின் அடிப்படையிலும்  புத்தி மழுங்கிய நிலையிலேயே சிலவிஷயங்களைத் தட்டிக்கேட்கத் தயங்கி அமைதிகாத்துவிடுகிறோம். இது நல்ல வழிமுறையேயானாலும் அநாகரீக செயல்பாடுகளுக்கு உடனே பதிலடி கொடுப்பதன்பது சில இறுக்கமான சூழ்நிலையிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ள அது பாலமாக அமையலாம் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை..

எனது நோக்கம், கத்திக்குக் கத்தி ரத்தத்திற்கு ரத்தம் என்பதல்ல. நாம் அகிம்சாவாதிகள்தாம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக கோழைத்தனம் இயலாமை எல்லாம் அகிம்சை என்கிற முகமுடியில் பதுங்குவதைத்தான் சகிக்கமுடியவில்லை என்கிறேன்.

பெண்ணிற்கு உடனே தட்டிக்கேட்கிற குணம் இயற்கையாகவே அமையப்பெற்ற ஒன்று. சே குவரா போன்ற வீரர்களுக்கு நிறைய காதலிகள் இருப்பதற்குக் காரணமே பெண்கள் வீரத்தை விரும்புகிறவர்கள் என்பதால்தான். தப்பு நடக்கின்ற போது, எது நியாயம் என்பதை பட்டென்று சொல்லிவிடுவாள் பெண். இதனால்தான் புராணக்காலங்கள் தொடங்கி இன்றுவரை பெண்களுக்கு வாயாடி, பின்புத்தி, சகுனி, கூனி, இராச்சசி என்கிற பட்டப்பெயரெல்லாம் சூட்டி அழைத்துவந்திருக்கின்றனர்.  
 .
வீண்வம்பு வெட்டிச்சண்டை என்பதைவிட, வேண்டுமென்றே எரிச்சலூட்டப்படுகிற, நம் நிலையறியாமல் நம்மை நோகடிக்கப்படுகின்ற சூழல் நமக்கு வாய்க்கின்றபோது - அங்கே அக்காரியத்தைச் செய்பவனுக்கு பதிலடி அவசியம் கொடுக்கப்படவேண்டும். கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பதைப்போல் எதாவது ஒன்று நிகழ்கின்றபோது, ஒன்று சம்பந்தப்பட்டவன் திருந்தவேண்டும், இல்லையேல் நமக்கு பாடம் ஒன்று இலவசமாகக் கிடைக்கவேண்டும். அவ்வளவே.

எல்லோரையும் நம் வழிக்குக் கொண்டுவருவது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில், சிலரில் செயல்பாடுகள் நமக்குள் கெட்ட அதிர்வுகளை விளைவிக்கின்ற போது, குறைந்தபட்சம் கோபத்தின் மூலமாக நம் உணர்வை நாம் வெளிப்படுத்துவதென்பது  எந்த விதத்தில் குற்றமாகும்.? அதுவும் நம்மவர்கள் சிலரின் attitude இருக்கே, எந்த வகை சோப்புகளைக் கொண்டு கழுவினாலும் போகாது.

சிலரின் மனோபாவம் மாறவேண்டும் என்பதற்காகத்தான் நான் இதை இங்கு சொல்லவருகிறேன். உலகமே மாறினாலும் நம்மவர்களில் சிலர் மாறுவதாக இல்லை.

சில உதாரண சம்பவங்களைச் சொல்கிறேன் :-

சிலர் சில விஷயங்களை மறைத்துச்செய்கிற பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு புகைப்பழக்கம். புகைப்பிடிப்பதை யாரிடமும் காட்டுவதையோ அல்லது பொதுவில் புகைப்பிடிப்பதையோ அவர்கள் விரும்பமாட்டார்கள். மறைவாகச்சென்று புகையை இழுத்துவிட்டு, அதனின் வாடையைப்போக்க மிட்டாய் எதேனும் வாயில் போட்டுக்கொண்டு வந்துவிடுவார்கள். அதைப் பார்த்துவிடுகின்ற நம்மவர்களில் சிலர் நகைச்சுவை செய்கிறேன் பேர்வழி என சம்பந்தப்பட்டவர் கூனிக்குறுகுகிற அளவிற்கு பொதுவில் அதை அம்பலப்படுத்திவிடுவார்கள். கேட்டால் நகைச்சுவை செய்தேன் என்பார்கள். `அவர் பணம் அவர் புகைக்கின்றார் குடிக்கின்றார், அதை ஏன் மறைத்துவைத்துக்கொண்டு செய்வானேன்..’ என்று தாம் அம்பலப்படுத்திய அக்காரியத்திற்கு நியாயம் வேறு கற்பித்து வெட்டி வேதாந்தம் பேசிக்கொண்டிருப்பார்கள். இதையும் சிலர் `ஆமாம்..ஆமாம்’ என்பதைப்போல ஒத்தூதுவார்கள். பிறரின் உணர்வுகளுக்கு நாம் என்றுமே மதிப்பளிக்க விரும்புவதில்லை என்பதுதானே இங்கே வெட்டவெளிச்சம்.!

எனக்கு `கேஸ்ட்ரிக்’ பிரச்சனை வந்ததிலிருந்து, இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை சாப்பிடவேண்டும். வயிறுகாலியாக இருந்தால் பிரச்சனை மோசமாகும் என மருத்துவர்கள் நண்பர்கள் ஆலோசனைகள் வழங்க, இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் நோயிற்கு நிவாரணம் - இருப்பினும், உடல் பூதாகரமானது.

இது சரிப்பட்டு வராது என்பதால், நானே நெட்டில் இதற்குத்தீர்வுகளைத் தேடி, யூ.எஸ் மருத்துவ ஆலோசனையின் படி, 10 Billion CFU probiotics  என்கிற வைட்டமின் மாத்திரைகளை தொடர்ந்து விழுங்கி வந்தால், இதற்கு முழுநிவாரணம் கிடைக்கப்பெறலாம் என்கிற ஆலோசனை அங்கே வழங்கியிருந்ததால், அவ்வைட்டமின் மாத்திரையை மருந்தகத்தில் சொல்லி, அதை வாங்கி தினமும் விழுங்கிவருகிறேன். சதா உணவு உற்கொள்ளும் கொடிய நிலையில் இருந்து விடுதலையும் கிடைத்துள்ளது.

ஏற்கனவே முறையான உணவுப்பழக்கம் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தலைதூக்கி இருக்காது. நாம்தான் உடல் உறுப்புகள் கெடும்வரை சில நல்ல விஷயங்களைக் கடைபிடிக்கமாட்டோமே.

காலைமுதல் மாலைவரை எந்த உணவையும் உட்கொள்ளாமல், கடுமையான பசியோடு பட்டென்று காரம் புளிப்பு மசாலா என கலந்து ஒருகட்டு கட்டி உள்ளே தள்ளுகிறபோது, நாளடைவில் இதுபோன்ற பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கும், பின்விளைவுகளைக் கொடுக்கும் என்பதனை என் அனுபவமாக நான் உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்.

ஆக, அந்த மாத்திரை ஒன்றினை தினமும் விழுங்குவேன். இன்று அதை விழுங்குகிறபோது இங்குள்ள நம்மவர் ஒருவர் என்னைப் பார்த்துவிட்டார். மாத்திரை கொஞ்சம் நீளமாக இருக்கின்ற பட்சத்தில் அதை விழுங்குகிறபோது குமட்டல் வரும். நீரைப்பருகி குமட்டலைச் சரிசெய்கிறபோதா அவர் என்னைப் பார்க்கவேண்டும்.! `என்ன மசக்கையா?’ முதல் கேள்வி. அமைதியாக இருந்தேன். `கேட்கறந்தானே.?’ இரண்டாவது கேள்வி. நாம் நன்றாக பேசுகிறோம் என்பதற்காக இப்படியா அநாகரீகமான கேள்விகளைக் கேட்பது.? ஒருமுடக்கு நீரைப் பருகி, தொண்டைவரை வந்த கடுஞ்சொற்களையும் சேர்த்து விழுங்கி, அவரைப் பார்த்தேன்.

இல்லை.. சொன்னால் புரியாது என்பதால், கேஸ்ட்ரிக் மாத்திரை என கேள்விக்கு முற்றுப்புள்ளிவைக்க நினைத்தேன். `நல்லாதானே சாப்பிடுவிங்க, எப்படி கேஸ்ட்ரிக் வருது.? சும்மா கண்ட கண்ட மாத்திரைகளையெல்லாம் சாப்பிடாதிங்க. உடம்பிற்குக்கெடுதல். இப்படித்தான் எங்க உறவுக்காரர் ஒருவர்............. என்று ஒரு கதையையே சொல்ல ஆரம்பித்துவிட்டார். அக்கறையின் பேரில் சொல்வதைப்போல் அறிவுரைகளாக நீண்டது பேச்சு. இதுபோன்ற கதைகளையெல்லாம் கேட்கக்கூடாது என்பதற்காவே வைட்டமின் மாத்திரைகளையும் வயக்கரா மாத்திரையை மறைத்துவைத்து உண்பதைப்போல் உண்ணவேண்டும் போலிருக்கு.

மற்றொரு சம்பவம். புதிரான புதிய கைப்பேசி ஒன்று தற்போது என்னிடம் உள்ளது. எல்லோரும் வைத்திருக்கின்றார்களே என, என் மகன் எனக்காக பணம் சேகரித்து வாங்கிக்கொடுத்த அன்புப் பரிசு. பேசுவது காதுகொடுத்து கேட்டால் போதாதா, எதற்கு இதுபோன்ற `ஹைடெக்’ தொலைபேசிகள் என அலுத்துக்கொண்ட போதிலும், மனமுவந்து அன்புப் பரிசாகக் கொடுக்கப்பட்டதால் வேறுவழியில்லாமல் பயன்படுத்திவருகிறேன்.

இது ஒரு  `டச் ஸ்கிரீன்’ கைப்பேசி. நம் விரல் அதன்மீது பட்டாலே எண்கள் போகத்துவங்கிவிடுகிறது.

சும்மானாலுமே விரல் பட்டுப்பட்டு அழைப்புபோகத்துவங்கி, மறுமுனையில், யார்? என்று கேட்க, அதை அங்கேயும் இங்கேயும் நோண்டி, யாருக்குப்போட்டோமென்று ஆராய்ந்து, தவறுதலாக அழைத்துவிட்டேன், மன்னிக்கவும் என்று சொல்லி முடிப்பதற்குள் எனது டாப் ஆப் காலியாகிவிடும். இப்படிச் செய்து செய்தே எனது டாப் ஆப் முழுமையாகக் கரைந்தது, போன மாதம்.

ஆகையால் இப்போது யாருக்காவது அழைப்புவிடுக்கவேண்டுமென்றால், கைப்பேசியை கவனமாகக் கையாள்வதைக் கற்றுவருகிறேன். இருப்பினும் இன்று ஒருவரிடம் மாட்டிக்கொண்டேன். கிரேடிக் மிகக்குறைவாக இருக்கும் பட்சத்தில், அழைப்பு போனவுடன், மறுமுனையில் பட்டென்று `ஹலோ’ என்கிற குரல். டப்பு டுப்புன்னு மூடுவதற்குள், குரல், `ஹாலோ ஹாலோ’ என வேகமாக வந்தவண்ணமாகவே இருந்தது. தெரிந்தவர்தான். `சாரி, போனைவையுங்கள், உங்களின் எண்களை தெரியாமல் அமுக்கிவிட்டேன். காசு முழுங்குகிறது..’ என்று கூச்சல் போட்டேன், கேட்டபாடில்லை. `ஹலோ..ஹலோ..’ என மீண்டும் மீண்டும் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது மறுமுனையில்.  அங்கேயும் இங்கேயும் தட்டி, சிகப்பு பட்டனை அழுத்தியவுடன் தான், அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்தக் கைப்பேசி எப்படித்தெரியுங்களா.? நாம் ஒருவரின் எண்களைத்தேடுகிறோமென்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அழைப்பு வரிசையில் உள்ள எண்களை விரல்களைக்கொண்டு அலச ஆரம்பிக்கின்றோம். அப்படி அலசுகையில் அங்குள்ள எதாவதொரு எண்களில் விரல் தவறுதலாகப் பட்டுவிடுகிறது. டச் ஸ்கிரீன் ஆச்சே, பட்டவுடம் அழைப்பு செல்லத்துவங்கிவிடும். தவறுதலாக அழுத்திவிட்டோமே என்று, எஸ்கேப் பட்டனை (கணினி பயன்பாட்டால் வந்தவினை) அழுத்திவிடுகிறோம். எஸ்கேப் பட்டனை அழுத்தியவுடன், ஸ்கிரீன் ஹோம்மிற்கு வந்துவிடுகிறது. ஹோமில் அழைப்பில் ஆள் இருப்பது தெரியும். இருப்பினும் எனக்கு அதெல்லாம் பார்க்கத்தெரியாது. நாம் தவறுதலாக அழைத்த அந்த நபர் `ஹலோ ஹலோ ..’என்று கத்திக்கொண்டு அங்கேயே நிற்பார். பணம் விரையமாகிக்கொண்டிருக்கும். மீண்டும் பழையபடி dial number சென்று, அதே சிகப்பு கைப்பேசி சின்னம் பட்டனை அமுக்குகின்றபோதுதான் அந்த அழைப்பாகப் பட்டது துண்டிக்கப்படும். அதுவரையில் மறுமுனையில் அந்தநபர் கைப்பேசியை ஆஃப் செய்யாதவரை நம்முடைய பணம் காலி.

மூன்றுமுறை ஹலோ சொல்லியபின் அழைப்பின் மறுமுனையில் பதில் வரவில்லை என்றால் அந்த அழைப்பை உடனே துண்டிக்க வேண்டும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.?

மன்னிக்கவேண்டும். யாருக்கோ அழைக்கநினைத்து உங்களுக்கு அழைத்துவிட்டேன், என்று சொன்னபோது. `ம்ம்ம் யாருக்கு காலையிலே போன்?’ என்றார் தோழி. என்னுடைய பணிப்பெண் அழைத்திருந்தாள், அவளை அழைக்கத்தான்.. `பணிப்பெண்? ஏன்? இப்போ அவங்க உங்க வீட்டில் இல்லையா, எங்கே? எப்போ போனாங்க? எப்போ வருவாங்க? என்ன விஷயம்?’ போன்ற கேள்விகளைக்கேட்கத்துவங்கி விட்டார் தோழி.
ஒரு தவறுதலான அழைப்பிற்கு ஆயிரம் குடும்பகக் காரணங்களைப் பகிரவேண்டுமா என்ன ..! இதுதான் attitude problem.

முகநூல் அனுபவம் ஒன்று. அங்கே நாம் பலவற்றை மிகஜாலியாக பகிர்கின்றோம். அதில் சமையல் செய்கிற பதார்த்தங்களும் ஒன்று. பெண்களான எங்களுக்கு நன்கு சமையல் செய்கிற சில நட்புகள், சமையல் வீட்டுக்குறிப்புகள் கொண்ட சில குழுக்கள், என்றிருப்பவர்களுடன் அணுக்கத்தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வோம்.அப்படியிருக்கையில் அவர்கள் செய்கின்ற சமையலை நாமும் செய்துபார்த்து, உங்களின் மூலமாக நாங்களும் இதைக்கற்று செய்தோமென்று, செய்த சமையலை புகைப்படம் எடுத்து அதை முகநூல் சுவரில் பதிவேற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதென்பது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று.

அப்படிப் பதிவேற்றிய எனது முதல் பிரியாணி அனுபத்தை எல்லோரும் பாராட்டியும் திட்டியும் கிண்டலடித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கும் வேளையில், அழையா விருந்தாளியாக ஒருவர் நுழைந்து.. `இதென்ன பிரியாணியா? ரயில்பெட்டியின் கக்கூஸில் கிடப்பதுபோல் இருக்கிறதே, பார்ப்பதற்கே வாந்திவருகிறது.. சைய் என் வாழ்வில் இனி நான் பிரியாணியை நினைக்க முடியாத அளவிற்கு இருக்கின்றது உங்களின் பிரியாணி.’ என்கிற அநாகரீகமான கருத்து ஒன்றினைப் பகிர்ந்திருந்தார். எது நகைச்சுவை எது அவமதிப்பு என்பது பற்றிய அறிவு கூட இல்லாமலா இருப்பேன் நான்.!

மௌனமாகக் கண்ணுற்றேன். ஜீரணிக்கமுடியாத செய்கை இது. சில நொடிகள் அக்கருத்து அங்கே பின்னூட்டமாகவே இருந்தது. இருக்கட்டும் சிலர் பார்த்து அவரின் லட்சணத்தை அறிந்துகொள்ளட்டும் என்று காத்திருந்து, பதிலடி கொடுத்து, அவரையும் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கினேன்.

உணவிற்கு மரியாதை செலுத்தவேண்டும் என்கிற அறிவு கூட இல்லாமலா இருப்பார்கள்..! பஞ்சம் பசியால் வாடுபவர்களை கொஞ்சம் நினைத்துப்பார்க்கவேண்டும் இல்லையா. காலநேரம் பார்க்காமல் எதற்காக நாம் உழைக்கின்றோம்.!? ஒருவேளை என்றாலும் நல்ல உணவு சாப்பிட வெண்டும் என்பதற்காகத்தானே.!  உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்கிறார்களே. எது உயிரை வளர்க்கிறது? உடலை எது வளர்க்கிறதோ அதுவே உயிரையும் வளர்க்கிறது. அப்போ அங்கே பூஜிக்கப்படுவது என்ன? உணவுதானே. உணவே மருந்து மருந்தே உணவு என்கிற வாசகமும் நம்மவர்களுக்குள் மிகப்பிரபலம் என்பதனையும் நாம் மறக்கலாகாது.

இறைவனின் படத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் கிண்டலடியுங்கள், ஆனால் என்னைப்பொருத்தவரையில் உணவு என்பது இறைவனுக்கும் மேலானது.  பசியால் வாடுபவர்களைக் கேட்டுப்பாருங்கள், உங்களின் கடவுள் யார் என்று.? பிறகு தெரியும் எது கடவுள் என்று.!

இதுபோன்ற மனோவியாதி கொண்டவர்களின் மத்தியில்தான் நாம் தினம் தினம் நம் பொழுதினை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம். இதனால் அனுபவங்கள் பல என்றாலும், நமது நல்ல பொழுதுகள் சில தரங்கெட்ட மனித ஜென்மங்களால் பாழ்படுகிறதென்பதும் மறுக்க இயலாத ஒன்றே.

ஆக, அவசியம் ஏற்படுகிறபோது தட்டிக்கேட்பது அவசியம் என்றே படுகிறது. இடுக்கண் வருங்கால் நகுக என்பது நல்ல தாரக மந்திரமே என்றாலும் நகுக என்பதை நசுக்குக என்று சில இடங்களின் நாம் மாற்றிப் போட்டுக்கொள்ளலாம்.