புதன், பிப்ரவரி 29, 2012

உறவு ஒரு பொருட்டு அல்ல

சுஜா, கணவனை விவாகரத்து செய்து விட்டு, தனிமையில் ஒரு ப்ளாட் வீட்டில் வாடகைக்குத் தங்கிக்கொண்டு, அருகாமையில் இருக்கும் பல தொழிற்சாலைகளில் தேநீர் கலக்கிக்கொடுத்தும் இன்னும் பல எடுபிடி வேலைகளைச் செய்து கொடுத்தும், ஜாலியாக எந்த ஒரு பிக்கல் பிடுங்கள் இல்லாமல் வாழ்ந்து வரும் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி.

அவள், அவளின் கணவனை விவாகரத்து செய்த்தது பெரிய விவகாரமாக வெடித்து விட்டதால், அவளை அவளின் குடும்பத்தில் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டார்கள்.

அதைப்பற்றியெல்லாம் சுஜா கவலைப் படுவதேயில்லை.. பின்னே, தமிழ் பெண்ணாகப் பிறந்து விட்டால் திருமணம் செய்தே ஆக வேண்டுமென்று, நாற்பது வயதில் ஒரு அறுபத்தைந்து வயது வாலிபனுக்கு(!) அதுவும் இரண்டாந்தரமாகக் கட்டி வைத்தால் எப்படிப் பொறுத்துக்கொள்வது.!

‘உங்களுக்குத்தேவை நான் கல்யாணம் செய்வது. என்னை மணக்கோலத்தில்  பார்த்து விட்டீர்களே, ஆள விடுங்க. அந்த ஆளுக்கு ஒண்ணுமே தெரியவில்லை. (சுஜா,  ‘அந்த மாதிரி’ விவகாரத்தில் வேகமானவள்)  இன்னும் கொஞ்ச நாள், நோயில் படுத்துக் கொள்வான், நான் அவனை வச்சுக்கிட்டு என்ன பண்றது.!? பூவும் பொட்டும் இருந்திட்டா மட்டும் போதுமா வாழ்கையில்? என்னை நிம்மதியா விடுங்கள்’ என்று சொல்லி, ஈப்போவில் இருந்து கோலாலம்பூர் பக்கம் வந்து விட்டாள்.

நிம்மதியாக இருக்கிறேன், என்பாள். எனக்கு அப்படித்தோன்றவில்லை. சில வேளைகளில் மிகவும் சோர்வாகவும் இருப்பாள். தனக்கு யாருமே இல்லை என்கிற ஏக்கத்தின் வெளிப்பாடு அவ்வப்போது அவளின் பேச்சில் வெளிப்பட்டவண்ணமாகவே இருக்கும்.

நான் கொஞ்சம் ஆறுதலாகப் பேசுவதால், என்னிடம் அட்டைபோல் ஒட்டிக்கொண்டாள். எல்லாவிவரங்களையும் என்னிடம் பகிர்வாள்.
நான் அவளிடம் நெருங்கக் காரணம் அவளின் வெளிப்படையான பேச்சு. ஏறக்குறைய ஒரே மாதிரி சிந்தனையில் நாங்கள் இருவரும்..!

என்னைப் போலவே நிகழ்காலத்தில் வாழ்பவள். ஒரு சிலர் மாதிரி, இன்றைய ஜோக்கிற்கு, வீட்டிற்குப்போய் ரூம் போட்டு யோசித்து விட்டு, மறு நாள் சிரிப்பவள் அல்ல அவள்.. உடனே கலகலப்பாகிவிடுவதில் எனக்கு நிகர் அவள்தான்.

எது நடந்தாலும், அதை மறுநாள் காலையிலே என்னிடம் பகிர்ந்துவிடும் பழக்கமுள்ளவள் சுஜா. சில விஷயங்கள் அறுவைதான்..  என்ன செய்வது, மனித உறவுகள் வேண்டின், எல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.!

“என்ன சுஜா, நேத்து ஆளையே காணோம், வேலைக்கு வரலியா?”

“வரல விஜி, ஒரு பிரச்சனை..”

“என்ன பிரச்சனை?”

“லீமாவுக்கும், மணிக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன்..”

“என்னாது.. கல்யாணம் பண்ணி வச்சியா???”

“ஏய், நீ ஏன் வாய் பிளக்கற..நிறுத்தும்மா!..”

“எப்படி இப்படி மோசமான வேலையெல்லாம் நீ செய்யற?”


லீமா, சுஜாவின் வீட்டில் ஒரு அறையில் வாடகைக்குத் தங்கியிருக்கும் இந்தோனிசியப்பெண். இங்கே வீட்டு வாடகை அதிகமென்பதால், ஒரு ப்ளாட் வீட்டில் மூன்று அறைகள், அந்த மூன்று அறைகளிலும் யாரையாவது குடிவைத்தால், ஒரே ஆள் வாடகைச் செலவை ஏற்க வேண்டிய சங்கடமிருக்காது என்பதால், அவள் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் துப்புறவு பணிகள், கண்டீன் ஊழியர்கள் என சில வெளிநாட்டு வாசிகளுக்கு அறையை வாடகைக்கு விட்டிருந்தாள். (பெண்கள்தான்).

மணி சுஜாவின் நண்பர். ஒரு தையல்காரர். எல்லாவற்றிக்கும் சுஜாவிற்கு உதவியாய் இருப்பவர். அவளின் அனைத்துத் தேவைகளுக்கும் உடனடி சேவை மணிதான். செலவு சாமான்கள், உணவு வாங்கிக்கொடுப்பது,  இருவரும் சினிமா படம் பார்க்கச்செல்வது, மணியின் தையல் தொழில் பெருக்கத்திற்கு உதவியாய் ஆட்கள் பார்த்துக்கொடுப்பது என இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாய், நல்ல நணபர்கள்.  அடிக்கடி மணியைப்பற்றியே பேசுவாள். மணி நல்லவன், மென்மையானவன், உதவி என்றால் ஓடோடி வருபவன், கோபமே படமாட்டான், எப்போதும் சாந்தமாக புன்னகையோடு இருப்பான்...அப்படி இப்படி என ஓயாமல் அவன் புராணமே...

மணி வேறு ஒரு வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தாலும், அடிக்கடி சுஜா வீட்டிற்குச் செல்பவன். அப்படிச் செல்லுகையில், ஒரு நாள், பக்கத்து வீட்டுப்பெண்மணி (மலாய்) JAIS -யிற்கு -  (முஸ்லீம்கள் கள்ளவுறவுகள் வைத்திருந்தால் புகார் கொடுக்கும் இடம்) அழைத்து, சுஜா வீட்டில் விபச்சாரம் நடப்பதாகச் சொல்லி, புகார் கொடுத்து விட்டாள். வந்த அதிகாரிகள், அங்கே மணியையும் லீமாவையும் கையும் களவுமாகப் பிடித்து விட்டு, சுஜாவின் வீட்டை சீல் வைத்துவிட்டார்கள்.

நல்லவேளை இருவரும் வெளிநாட்டவர்கள், இல்லையேல் சுஜா பயங்கர வில்லங்கத்தில் மாட்டியிருப்பாள். அதிகாரிகளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, அந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டது. கதை வீட்டின் சொந்தக்காரருக்கும் போய், வேறு வீடு பார்த்துக்கொள்ளும்படி நெறுக்குதலும் கொடுக்கப்பட்டது. பேச்சுத்திறன் உள்ளவள் என்பதால் எல்லாவற்றையும் சுமூகமாகச் சமாளித்தாள் சுஜா.

இருப்பினும் அந்த சமயத்தில் இவள் பட்ட மனவுளைச்சளுக்கு அளவே இல்லை. அவ்வளவு சோர்ந்து, அழுது வாடியிருந்தாள். அதை இன்னமும் நினைத்து மனவேதனை கொள்வாள். அச்சம்பவத்தை நினைத்த மாத்திரத்திலே சோர்ந்து போவாள். வாழ்வில் அவள் பட்ட துன்பங்களில் இது மிக கொடுமையானது என வருந்துவாள்.

அதில் இன்னொரு கொடுமை என்னவென்றால்.., இந்த மணி சுஜாவைக் காதலிப்பதாகக் கூறி உருகி உருகி காதலித்து, உடலுறவு வரை சென்றுள்ளார்கள். இருவரும் பலமுறை கலவியில் களிப்புற்றதாக என்னிடம் பகிர்ந்துள்ளாள். பத்துவயது வித்தியாசத்தில், இளயவனான மணியின் ‘அந்த’ சேவை அவளை வெகுவாகவே கவர்ந்திருந்தது. இதைப்பற்றி மணிக்கணக்காக உளறியிருக்கின்றாள் என்னிடம். அவள் தனிமையில் உழல்வதால்  உண்மையிலே மணியைக் காதலித்திருந்தாள் என்பதனை அவள் உருகும் உருகலில் அறிந்துகொண்டேன். அவனைப்பற்றிப் பேசும் போதெல்லாம் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளிவட்டம் பிரகாசிக்கும்.

ஆனால், அன்று ஜாயிஸ் அதிகாரிகளிடம் அகப்படும்போது, லீமாவும் மணியும் அல்லவா கலவியில்....!?  இவர்களின் இந்த லீலை, அப்போதுதான் சுஜாவிற்கே தெரியவந்தது. இது அவளை பெரிய அளவில் பாதித்திருந்த போதிலும்,  இந்த ஏமாற்றத்திலிருந்து தன்னை மிக விரைவாகவே சுதாகரித்துக்கொண்டாள். (பரிதாபமாகவே இருந்தது)

தனிமையில் உழலும் பெண்களை எப்படியெல்லாம் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் இந்த ஆண்கள் என்பதை நினைக்கின்ற போது எனக்கும் வேதனையே.!

ஆனால் இப்போது, அந்த இருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டேன் என்கிறாளே, இது என்ன கதையோ..!!!

“ என்ன செய்யறது விஜி, அன்றாடம் இருவரும் செய்கிற லீலைகள் என்னால் பொறுக்க முடியவில்லை..தினமும் வருகிறான், என்னைப் பார்க்கும் சாக்கில், அவளின் ரூமுக்குள் நுழைந்துகொள்கிறான், அவளும் இவனுக்கு விழுந்து விழுந்து பணிவிடைகள் எல்லாம் செய்கிறாள்,.!” குரலில் ஒரு கரகரப்பு.

“சரி, அதுக்கு நீ ஏன் கவலைப்படற.. ? விடு.. இந்த விஷயத்தில் எவனும் யோக்கியன் இல்லை. அதுசரி, ஒரு இந்தோனிசியப் பெண்மணியை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் அங்கே.?”

“அங்கே எதுக்கு கூட்டிக்கிட்டுப் போகப்போறான்! இருக்கும் வரை, இவள் இங்கே பொண்டாட்டி, அங்கே போனா, சாதி சனத்தோட கட்டிக்கிட்ட சொந்த பொண்டாட்டி.., இவளுக்கும் பிரச்சனை இல்லை, இவளும் கல்யாணமானவள் தானே..!!!

அடக் கடவுளே.. இதெல்லாம் ஒரு பொழப்பா..!

மணி திருமணமானவன். தமிழ் நாட்டிலிருந்து, கடந்த ஏழு வருடமாக இங்கு தங்கி வேலை செய்து வருபவன். இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தை.



பரஸ்பரம்

வாலாட்டவேண்டும் என்பதற்காக
நாயிற்கு போடப்படும்
எலும்புத்துண்டு போல்
எனக்கு நீ கொடுத்துவிட்டுப் போகும்
சில ‘வணக்கங்கள்’

விபத்து

சாலையில்
சிட்டுக்குருவிக்கும் விபத்து
மனிதன் வாகனத்தில்
பறந்தவண்ணமாக

வாகனம்

யாரும் இறங்கவில்லை 
எவரும் ஏறவில்லை
பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன
‘பஸ் ஸ்டாப்’ தான் தனிமையில்

உன்னையே

குளியலறையில் ஒரு வண்ணத்துப்பூச்சி
நீண்ட நேரம் என்னையே பார்த்துக்கொண்டு
முன்பு சொல்வார் அம்மா
இறந்துப்போன யாரோ ஒருவர்
நம்மை நினைக்கும் போது
இப்படிச் சில வடிவங்களில் வருவார்களாம்
நான் உயிரோடு இருக்கும்
உன்னை நினைக்கிறேன்...வேறென்ன!