செவ்வாய், ஜனவரி 31, 2012

பெண்ணுரிமை

சிரித்தாலும் விழுவான்
அழகாய் சிரிக்கிறாய் என,

முறைத்தாலும் விழுவான்
கோபம் பிடிச்சிருக்கு என,

மார்டனா உடுத்தினாலும்
மேலும் கீழும் நோக்குவான்

முக்காடு போட்டாலும்
எதையெதையோ தேடுவான்

பேசாமல் இருந்தாலும்
மௌனமே உன் மொழி
பிடிச்சிருக்கு என்பான்

படபடவென பேசினாலும்
பட்டாசு நீ,
விரும்புகிறேன் உன்னை என்பான்..

தென்றலாய் இருந்தால்
வருடுகிறாய் என்பான்

மின்னலாய் இருந்தால்
தாக்குகிறாயே என்பான்

ஆண்கள் நடத்திய
பெண்ணுரிமைப் போராட்டங்கள்
தலைதூக்கிய காலகட்டத்தில்

அழகாய் இருந்த எங்க பாட்டி
வெளியே வரத்துவங்கினாள்
நாங்கள் அடைப்பட்டுக்கிடக்கின்றோம்
அடிமையாய்..

பெண்ணியம் காக்க.

திங்கள், ஜனவரி 30, 2012

ஓய்வுப்பொழுதுகளில் உன் நினைவுகளில்


ஆன்மா
மற்றவர்களைப் பற்றி
எழுத நினைக்காதபோது,
எழுதுகோல்
உன் ஆன்மாவை நோக்கிப்பாய்கிறது
குருதியாய் சில கவிதைகள் 

வாழ்வு
எத்தனையோ
விசில்களில்
இன்னும் வேகாத
இறைச்சிகளாய்..

நிவாரணம் சாபம்

 வலியால் உதிக்கின்ற
வார்த்தைகள் யாவுமே..
வலியால் உணரப்பட
எழுதுகிறேன் ஒரு
நிவாரண சாசனம்...

நீ வரைந்த
சொற்கள் யாவுமே
நிரந்தரமாய்
தனிமையின் நிழல் வட்டமாய்
பிரபஞ்சத்தில் என்னோடு
இன்றும் என்றுமே..

வெள்ளி, ஜனவரி 27, 2012

தப்பித்துவிட்டோம்

யாருமே இல்லாத
தனி அறையில்
கத்திக் கத்தி
நமக்குப்பிடித்த பாடலை
நாம் பாடித் தொலைத்ததில்லையா?

தனிமையில்
கதவுகளையெல்லாம்
மூடிவிட்டு
மனபாரத்தை வெளியே கொட்டுவதற்கு
குறைகளையெல்லாம்
சொல்லிச் சொல்லி கதறிக் கதறி
அலங்கோலமாக அழுததில்லையா?

ஆஸ்கார் விருது

கணவருக்கு சம்பளம்
பட்ஜெட்டில் மனைவிக்கு
ஆயிரம் ரிங்கிட்..
ம்ம்ம் பெரிய தொகைதான்
கேட்பவர்களுக்கு..!

அன்றாடம் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு
பஸ் கட்டணம், மாணவர் சந்தா, வகுப்புச் சந்தா, இயக்கச் சந்தா
டியூஷன் செலவு, இத்யாதி இத்யாதி
இதற்கே ஐநூறு செலவாகிறது
சென்ன செய்வது
கல்வியின் அவசியம் அறிந்த தாய் நான்.

அன்றாடச் செய்தியில்
சமையல் எண்ணெய், கோதுமாவு மற்றும் சீனியின்
விலையேற்றத்திற்கு மட்டும் அறிவிப்பு
பேரங்காடிக்குச் சென்றால்
எல்லாப் பொருட்களும்
20 முதல் 30 விழுக்காடு வரை
விலையேற்றம்..
வாங்கித்தான் ஆகணும்
சாப்பிடணுமே.!

நாட்டிலே வெள்ளம்
பக்கத்து நாட்டிலே வெள்ளம்
தக்காளிக்கு தங்க விலை
வெங்காயத்திற்கு வெள்ளி விலை
பருப்பிற்கு பவளவிலை
முட்டைக்கு முத்துவிலை
கோழி,மீன்,இறைச்சியின் விலையில்
மீதிப் பணமும் கரைகிறது..
வாங்கித்தான் ஆகணும்
சத்துணவு..!

இதர செலவுகள்
இடையில் வரும் விருந்தினர் வருகை வேறு
திருமண மொய், பிறந்த நாள் பரிசு

மனப்பூர்வ நன்றிக்காக...
கோவில் உண்டியலில் காணிக்கை

அறிவைப் பெருக்கிக் கொள்ள
வார மாத நாளிதழ்கள்

நட்பு உறவு தொடர
சிறிய தொகை
கைத்தொலைப்பேசிக்கு
டாப் ஆஃப்..
கையிருப்பு தீர்ந்துப்போகிறது

மாத இறிதியில்
அப்பாடா என ஓய்ந்திருக்கும் போது
ஐயையோ.. கேஸ் இல்லையே..

“என்னங்க, கேஸ் முடிந்து விட்டது
வாங்கணும் பணம் கொடுங்க.”

பதில் வரும்
“கொடுத்த பணமெல்லாம் என்னாச்சு?
நீ அதிக செலவு செய்யும்
‘பொறுப்பற்ற பொண்டாட்டி’!”

இறுதியில்
இல்லத்தரசிகளான எங்களுக்குக் கிடைக்கும்
‘ஆஸ்கார் விருது’
இதுவே.!


நன்றி மக்கள் ஓசை - 2007





படித்ததில் பிடித்தது (ஏ.தேவராஜன்)

மனம் நிறைய
நேற்றைப் போல் இன்றும்
அடைக்காக்கிறது பெட்டை
பத்து முட்டைகளில்
ஓர் ஊளையை...

ஏ.தேவராஜன்

விருப்பம்

வேண்டாம்
என்பதால்
வெறுப்பேற்றிக்
கொண்டிருக்கிறேன்
எனக்கு விருப்பம்
இருந்த போதிலும்

வியாழன், ஜனவரி 26, 2012

எனது வினா.?

வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம்
எழுதுகிறார்கள்
முத்திரை பதிக்க

ஒரு வரி
இரு வரி
பல வரிகள்

ஒரே ஒரு
வரியில் இருந்தால்
’குறிப்பு’
என்கிறார்கள்

சட்டை

நான் சட்டை
செய்யாதபோதும்
என்னைச் சதா
தழுவிக்கொண்டே இருக்கிறது
ஒர் உடல்
இரு கைகள்

மன வெ(வ)டிப்பு

கோடுகள்
நெளிந்து நெளிந்து
வட்டமாகி வடிவமாகி
அழகான
ஓவியமானது

அதைப்பார்க்கப் பார்க்க
பொங்கினான்
பதற்றமானான்
பரிதவித்தான்
பார்வையாளன்

அது வெறும்
ஓவியம் தான்
ஏன் கண்ணாடி போல்
என் பிம்பம் காட்டுகிறது!?

ஓவியனும்
திகைத்தான்
அது தன் உருவத்தை
இன்னும் கம்பீரமாக
காட்டிக்கொண்டிருந்தது.

புதன், ஜனவரி 25, 2012

கல்யாணம் பண்ணிக்கலாமா?

கல்யாணம் பண்ணிக்கலாமா?? 

: உன்னை ரொம்ப பிடிக்கும். 
:அப்படியா, எனக்கும் தான். 

:உன்னோடு யார் பேசினாலும், எனக்கு பொறாமை வரும். 
:ஓ என் மேல், எவ்வளவு பிரியம் உனக்கு! 

:அன்பே நீ என் உயிர்....! 
:ஐயோடா... நான் கொடுத்து வைத்தவள். 

:உன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிடட்டா? 
:என்ன.. புதிதாய் கேட்கிறாய்? இப்போது கூட இடுப்பைத்தானே கட்டிக்கொண்டிருக்கின்றாய்...! 

:உம்மா.. ஐ லவ் யூ.. 
:இந்த, ஐ லவ் யூ தான் எனக்குப்பிடிக்கல!! 

:ஏன், நான் ஐ லவ் யூ சொல்லக்கூடாத!? 
:சரி எதையாவது சொல்லித்தொலை... 

:சரி, சரி கோபம் வேண்டாமடி.. இன்று புதிதாய் ஒன்று சொல்லட்டுமா? 
:புதிதாகவா? என்ன பீடிகை!!! 

:நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துகொள்ளலாமா? 
:அடிப்பாவி.. பாதகி, கல்யாணம் கட்டிகிட்டு என்ன செய்வதாம்???? 
...........நீயும் பெண்தானே!!!!!!!!!!!!!

உறக்கம்

எவ்வளவு தாமதமாக 
வந்தாலும், 
உன் வரவு வசந்தமே.

நல்ல நண்பர்

எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு பார்வையாளன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு ரசிகன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு வில்லன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு அசுரன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு கலைஞன்

மறந்து விடவும்


என் முகம் நினைவில் இருக்கா?
மறந்து விடவும்.

நான் யார் என்று தெரிந்திருந்தால்
தயவு செய்து மறந்து விடவும்.

இன்னார் மனைவி, மகள், தாய், மருமகள் என
எப்போதாவது நான் சொல்லியிருப்பேன்..
ப்ளீஸ் மறந்து விடவும்..

என்ன சொன்னேன், எப்படிச் சொன்னேன்..பேசினேனா?
என் குரல் கேட்டதுண்டா? ஞாபகம் இருக்கா?
மறந்து விடவும்.

என் உயரம், எ(இ)டை, நிறம், பதவி,பட்டம், ஆடம்பரம்
ஆணா பெண்ணா?? எதாவது உங்களுக்குத்தெரிந்திருந்தால்...
மறந்து விடவும்..

ஏதேனும் உளறல்கள், திட்டுதல்கள், கோபம், பந்தா பகட்டு..நிச்சயம் இருந்திருக்கும்..
மறந்து விடவும்.

இனி எழுத்தால்,சொற்களால் என்னை
அடையாளப் படுத்திக் கொள்ளப் போகிறேன்
யார் என்று காட்டிக்கொள்ளாமல்...

மறுபிறவியில்  

சுமைகள்

எங்களின் கம்பனியில் கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்துகிறார்கள். பங்கு பெறும் அனைவருக்கும் பரிசு உண்டு. நற்சான்றிதழ்களும் கொடுக்கப்படும். முதல் மூன்று பரிசுகள் அற்புதமானவை. 

மூன்று தலைப்புகள், 

1. கம்பனியில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனைகள் அதிகரிக்க, தனி நபர் ஊழியரான உனது பங்கு என்ன?

2. வருங்காலங்களில் கம்பனியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர நீ எடுக்கவிருக்கும் முயற்சிகள் யாவை?

3. சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகுள்ளாகமல் பாதுகாக்க, நீ ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிக்கவேண்டும். அது என்ன பொருள்? எப்படி கண்டுபிடித்தாய்? ஏன்? என்பனவற்றை தெளிவான விளக்கத்துடன் விவரிக்கவேண்டும்.

விதிமுறைகள்:

ஒருவர் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
கட்டுரை எத்தனை பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்.
சுறுக்கமாக தெளிவாக இருப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்.
காப்பி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
ஏற்கனவே மார்கெட்டில் உள்ள, மற்ற கம்பனி பொருட்களைக் கண்டுபிடிப்பில் சேர்த்துக்கொள்ளப் படாது.
கட்டுரை ஆங்கிலம், மலாய்,மெண்டரின் மற்றும் ஜப்பான் மொழியில் இருப்பது அவசியம். (சிக்கலே இதுதான்)
நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

இதில் காமடி என்னவென்றால், இதன் நோட்டிஸை பொதுவில் பார்வைக்கு ஒட்டிய மறுவினாடி எனக்கு சில அழைப்புகள் வந்தன. ’எழுது எழுது 64இஞ்ச் டீவி உனக்குத்தான்’. கொடுமை.! வெளியூர் டிகிரி வைத்திருப்பவனே திணறுகிறான். நானா...? சான்றிதழ் வேண்டுமானால் கிடைக்கலாம்.!! :)

ஒருவரைப்பற்றி சரியாகத் தெரியாத போதுதான், நம்பிக்கை என்கிற யூகத்தில் சுமைகள் பொதிகளாக ஏற்றிவைக்கப் படுகின்றன.

நிராகரிக்கத் தெரியாதவன் கழுதையாகிறான்.

வீரம்

அமைதியான நேரத்தில் 
கூக்கரின் திடீர் சத்தத்தில் 
திடுக்கென்று பயந்து 
உடல் ஆட்டங்கண்டு 
சுற்றும் முற்றும் பார்த்து 
ஒரு உலுக்கலோடு சுதாகரிக்கும் 
சராசரிப் பெண்ணான 
என்னைப் பார்த்து 
அதிதைரியசாலி 
என்கிறார்கள்..
சில பயந்தாகொல்லிகள்.

செவ்வாய், ஜனவரி 24, 2012

பத்திரிக்கையில்

திருமண மாதம்

கவுண்டர் 
மேனன்
நாயர்
நாடார் 
முதலியார்
நாயுடு
நாயக்கர்
என உறவுகளின்
திருமண பத்திரிகைகள்
குவிந்தவண்ணமாக
என் வீட்டில்...

கலை

உன்னைப் போல் அழ 
நான் எதற்கு?
அதையும் நீயே செய்!

பூ கூட 
அதிகமாகக் கொட்டினால் 
குப்பைதான்.

சம்பவம்

சம்பவம் நடக்கும் வரை 
போலிஸ் லேசில் பிடிக்காது
நிருபர்கள் பரபரப்புச் செய்திக்காக 
காத்திருக்கிறார்கள்
பத்திரிக்கைகள் அரசியல் செய்த்துக்கொண்டிருக்கு
அரசியல்வாதிகள் ஆளாய்ப் பறக்கிறார்கள்
அடுத்த தேர்தலுக்கு..
கழுத்தில் சின்னதாய் ஒரு தங்கச் சங்கிலி போட்ட
தனி மனிதன் 
தற்காப்பு கருதி
பதுங்கிப் பதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறான்
நாட்டில்...

வணக்கங்களின் நோக்கங்கள்

எல்லா ‘குட் மார்னிங்’ கும் உற்சாகக் காலை வணக்கமா சொல்கிறது!?

சிலது 
நான் உன்னோடு!

சிலது
என் நினைவிருக்கா?

சிலது
தன் இருப்பை காட்டவே.!

சிலது
என்னை மறந்துவிடாதே.!

சிலது
நான் எழுந்து விட்டேன்.!

சிலது
இரவில் தூங்கவில்லை

சிலது
ஒரு ஆரம்பமாக..

சிலது
இன்று முழுக்க என்னோடு வா..

சிலது
சிலரைச் சோதிக்கவே

சிலது
பழக்க தோசம்

சிலது
ஒரு ஒப்பிற்கு

சிலது
மேல் நாட்டு விசுவாசத்திற்காக.!

சிலது
எவ்வளவு பேர் திருப்பிச் சொல்கிறார்கள்
என்று பார்ப்பதற்காக...!!

விதை

உன் பகிர்வுகளுக்கு
உயிர் இருக்கு
அவை என் மனதில்
பாய்கின்ற போது
துளிர்விடுகின்றன

திங்கள், ஜனவரி 23, 2012

நெருக்கம்


எல்லா
நாளிலும்
என்னோடு
நீ இருந்தால்
உன்னையும்
சந்தேகிக்கும்
இந்த பாழாய்ப் போன
மனது..
போய் விடு தூரமாய்.

நிபந்தனைகள்

தொலைப்பேசி எண்கள்
கிடைத்த மறுநிமிடம்

அழைந்தால் !
எடு.
எடுத்தால்!
பேசு.
பேசினால்!
கூடுதலாக
கூடினால்
தொடர்......
தொடர்ந்தால்
வம்புதானே!?
ஏன் வம்பு!
அதனால்
எண்களின் வரிசையில்
ஒரு எண்
தவறாக....

வெள்ளி, ஜனவரி 20, 2012

ஒத்துப்போகிறது

எங்கோ ஒரு மூலையில்
யாரோ ஒருவர்
எனக்காகவே எழுதிக் கொண்டிருக்கிறார்
சில கவிதைகளை
நான் யாரென்று தெரியாமலேயே..

எங்கோ ஒரு மூலையில்
யாரோ ஒருவரின் எழுத்தை 
எனக்காகவே எழுதப்பட்டதாக
நினைத்து 
நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்

எங்கோ ஒரு மூலையில்
யாரோ ஒருவரின் பேனா
என் உணர்வுகளை
எழுதிக்கொண்டிருக்கிறது
என்னை யாரென்று தெரியாமலேயே...

அப்போ நான் யார்?

படைப்புகளை

ஒரு பள்ளி ஆசிரியருக்கு
அனுப்பினேன்
புள்ளிகள் வழங்கப்பட்டது..

ஒரு எழுத்தாளருக்கு
அனுப்பினேன்
குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன..

பத்திரிக்கையாளருக்கு
அனுப்பினேன்
பதிலே வரவில்லை

வாசகருக்கு
அனுப்பி வைத்தேன்
அவர் இன்னும் அதை வாசிக்கவில்லை..
வாசகர் வாசகர் தான்..

இவர்கள் தான் மக்கள்

நட்பு’
‘ஆண் பெண் நட்பு!!?”
நகைக்கப்பட்டது.!

காதல்’
“ஆமாம், காதலாம்
இது’களும்.. நம்புதுக..!”

காமம்’
அதுவும்
பொய்யாக்கப்பது...!

பிரிவு’
இது தெரிந்ததுதானே
நினைத்தேன்
நடக்குமென்று..!

விரக்தியின் விளிம்பில்
வதந்திகள் பரப்பப் பட்டது
 “அவள் விபச்சாரி..!”

இப்போ பேசிக்கொள்கிறார்கள்
“கதை தெரியுமா?
நெருப்பில்லாமல்
புகையாதே..!”

இவர்கள் தான் மக்கள்.





வியாழன், ஜனவரி 19, 2012

தொலைந்து விட்டது

நான் 
என் இதயத்தை 
மூடிய பிறகு 

நீ 
உன் கண்களை
அகல விரித்தாலும்
திரும்பாது
தொலைத்த நம்பிக்கை..

சுரண்டல்

ஒரே ஒரு துடைப்பக்கட்டை
வியாபாரத்திலும்
ஒரு ஏழையின் உழைப்பு
சுரண்டப்பட்டிருக்கு

சொகுசு வேண்டாமென
சுகத்திற்கு ஏசி’யைக் கூட
ஏற்க மனமில்லை
ஒரு ஏழையின் உழைப்பு
சுரண்டப்பட்டிருக்கும் என்பதால்

குளிர்

இரவெல்லாம்
உறக்கமில்லை
மழைக் குளியலில்
உன்னோடு

பூட்டு

பெரிய பெரிய பூட்டுகள்
அகல விரியும்
திருடர்களின் கண்கள்

செவ்வாய், ஜனவரி 17, 2012

அகிம்சை

வலி கொடுத்தால்
கவி கொடு
பயம் கொடுத்தால்
திருப்பிக் கொடு

எங்கேயும் எப்போதும் - ரசித்த திரைப்படம்

அஞ்சலி, ஜெய், சுனைனா, ஒரு அழகான ஹீரோ (பெயர் தெரியவில்லை) நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற படம் மனதைத்தொட்ட படம். அருமையாகச் சொல்லப்பட்ட கதை.

பலரின் கனவுகளை, பிரயாணங்கள் எப்படிக் கொலை செய்கிறதென்பதை பதற்றம் நிறைந்த, அதே வேளையில் அற்புதமான காதலையும் இணைத்துச் சொல்லும் படமாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. நன்றி இயக்குநருக்கு. (பெயர் தெரியவில்லை)

படத்தைப்பார்த்துவிட்டு நானும் கண்ணீர் சிந்தினேன். இருப்பினும், மனதிற்குக் குதூகலத்தைக் கொண்டு வந்த காட்சிகளும், வசனங்களும் அதிகமென்று சொல்லலாம்.
இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த சில காட்சிகள், இங்கே;

* முதலில் இசை அற்புதம். கதைக்கு உயிரோட்டமே அந்த இசை தான். (இசையமைப்பாளர் பெயர் தெரியவில்லை)

* அற்புதமான பாடல்கள் - குறிப்பாக, மாசமா ஆறு மாசமா.. அதிகம் கவ்ர்ந்தப் பாடல் (பாடகர் தெரியவில்லை) ஜெய் யின் நடனம்- ரொம்ப சிம்பல்’லாகத்தான் இருந்தது இருப்பினும் மனதை கொள்ளைக்கொண்டு விட்டது. அந்த தோள் பட்டையைத் தூக்கித்தூக்கி அசைக்கும் போது, அதை எல்லோரும் சொல்லிவைத்தாட்போல் செய்யும் போது - ரசிக்கும் படியே இருந்தது. மிகவும் பிடித்த நடனம் பாடல். ( நடன மாஸ்டர் - தெரியவில்லை)

* சுனைனா நடிப்பு, இல்லை இல்லை பாதிரமாகவே வாழ்ந்துள்ளார். நடிப்பதைப்போலவே தெரியவில்லை. அவ்வளவு எதார்த்தம். எங்களை நாங்களே பார்ப்பதைப்போல் இருந்தது. ஒரு காலத்தில் நாங்களும் இப்படித்தான், தொட்டதிற்கெல்லாம் பயம், சந்தேகம்.. யாரைப்பார்த்தாலும் குறுகுறுப்பு. ஒரு காட்சியில் சுனைனா சொல்வார், ‘ஏங்க உங்க ஊரில், பொம்பலைங்க, சமைக்கவே மாட்டார்களா? இவ்வளவு பேர் கடையில் உட்கார்ந்திருக்காங்க!?” அதற்கு அவர் சொல்வார், எல்லோரும் வேலைக்குச் செல்பவர்கள், அதன் இப்படி என,  “நாங்க ஆம்பலைங்களுக்கே சாப்பாடு கொடுத்து அனுப்புவோம், எங்க ஊரில்” என்று சொல்லி முகஞ்சுளிப்பார். எதார்த்தமாக இருந்தது.. இதை நாங்களும் செய்துள்ளோம்.

* சுனைனாவின் அக்கா (பெயர் தெரியவில்லை) விலாசம் சொல்வாரே.. அம்மாடி அப்படியே இயற்கையாக.. நாங்களும் இப்படியெல்லாம் சொல்லியுள்ளோம். ஒரு கட்டத்தில், சுனைனா அந்த ஹென்சம் ஹீரோ விடம் போனைக்கொடுத்து, அக்கா சொல்லும் இடத்தை மனதில் வாங்கச் சொல்வார். சில வினாடிகள் தான், போனை வைத்துவிடுவார். ஏன் இவ்வள்வு சீக்கிரமாக தொலைபேசியை வைத்து விட்டீர்கள் என்று கேட்டதிற்கு, அதற்கு அவர், உங்க அக்கா உன்னிடம் சொன்னது வழி, என்னிடம் சொன்னது முகவரி.. - வாவ் வாவ் ..ரசித்தேன்.

* சுனைனாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற விருக்கும். அவருக்கு ஒரு நாள் மட்டும் பழகிய அந்த ஹீரோ மீதே ஞாபகமா இருப்பார். தனக்கு அவர் தான் பிடிக்கும் என்றபோது, அவளின் அக்கா சொல்வார். “ஒரு நாள் பழக்கத்தில் எப்படி அவனைப்பிடிக்கிறது என்கிறாய்?” அதற்கு சுனைனா சொல்லிய பதில்.. படம் பாருங்க - அற்புதமான பதில் அது. சபாஷ் வசனகர்த்தா (பெயர் தெரியவில்லை)

*சுனைனா - அவர் அம்மாவின் முன் ஒரு கவிதையை வாசிப்பார். ’நம்பினேன்..நம்பவில்லை. நம்பவில்லை நம்பினேன் ஏன் நம்பினேன் ஏன் நம்பவில்லை.... ’ இப்படி வரும்- அவரின் அம்மா ஒரு மாதிரியாகப் பார்ப்பார். பிறகு வேப்பிலை அடிக்கப்படும் சுனைனாவிற்கு. காதல் வந்தால் எவ்வளவு சுலபமாக, அற்புதமான கவிதைகள் வருகிறது பாருங்க.! ரசித்தேன்

* அஞ்சலி - படம் முழுக்க இவரைத்தான் ரசித்தேன். ஒரு தமிழ் பெண் இப்படித்தான் இருப்பார். நாங்களும் ஒரு காலத்தில். படபட பேச்சு.. பயமில்லாமல் இருப்பது. காதல் - அவர் சொல்லும் விதம் ரொம்ப பிடிச்சிருக்குங்க. என்ன அழகாக.... ஜெய்’யை அழைத்துக்கொண்டு செல்வார் மருத்துவமனைக்கு எச்.ஹை.வி டெஸ்ட் எடுக்க.. படு சுவாரிஸ்யம் அடுத்தடுத்த கட்டங்கள்.

* அம்மா, அவர் உன்னைப்பார்க்கல, என்னைப்பார்க்கிறார், ஆமாம் நான் அவரைக் காதலிக்கிறேன் - அஞ்சலி. ஆத்தாடி.. துடப்பக்கட்டை அடிக்கு பயமேயில்லாமல்.

* உடல் உறுப்பு தானமும் காதலோடு மிக அழகாச் சொல்வார் அஞ்சலி. அதன் அவசியம், ஏன் எதற்கு பண்ணவேண்டும் போன்ற விவரங்கள் - அத்துமீறி அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதைப்போல் இருந்தாலும், இவனுங்கள இப்படித்தான் மிரட்டி தானம் செய்ய வைக்க முடியும் இல்லையேல் எங்கே?? ஆண்கள், ரத்த தானம் நாள் முழுக்கக் கொடுப்பார்கள் ஆனால் உடல் உறுப்புதானம் செய்ய பெண்களுக்குத்தான் தைரியம் அதிகம். காதலோடு உருப்படியான ஒரு தகவலையும் சேர்த்துக் கொடுத்திருக்கின்றார்கள்.

* அஞ்சலியா இப்படி.. ! மாஹாநதி கமல் போல் ஒரு கட்டத்தில் அழுவார் பாருங்க.. என்னமாய் இந்த பொண்ணு.! அற்புதமான நடிப்புங்க... கதிரேசா.. போயிட்டியா டா? மனதில் சுமந்த அந்தக் காதல் வெளிப்படும் பாருங்க.. , அவன் அருகில் இருக்கும் வரை ஓயாமல் ஓட்டிக்கொண்டே இருப்பார், பஸில் கூட பேசமாட்டார். அடிப்பார், காதைப் பிடித்து திருகுவார்.. எப்போதும் உர்ர்ர்ரென்று.. ஆனால், அந்த இறுதிக் கட்டத்தில், தமிழ் பெண்ணின் காதல் வெளிப்படுகிறது பாருங்களேன்.. நானே அழுது விட்டேன். மனதில் அப்படியே நிற்கிறது அந்தக் காட்சி.

* அஞ்சலி - தனது அப்பாவைப் பார்க்க அனுப்புவது. ஆறு வருடமாக தன்பின்னால் சுற்றும் ஒருவனைப் பார்க்க அனுப்புவது, ஷாப்பிங் மால் சென்று உடைகள் வாங்கும் போது. ஜெய்’யிடம் யோசிச்சுச் சொல் அவசரமில்லை என்கிற போது, என் மேல் உனக்குக் கோபமே வராதா என்கிற போது.. காத்துக் காத்து நின்று கதவு திறக்கப்படாதபோது, வெறுப்புடன் சென்று ஜெய்யைப் பிடித்து அரை கொடுப்பது.. காப்பிக் கடையில் மடமடவென காப்பி குடிப்பது. நீ நர்ஸ்ஸ்சா!!? என்று சலிப்புடன் ஜெய் அஞ்சலியைப்பார்த்து கேட்பது.. இந்த மூஞ்சிக்கு டாக்டர் கேட்குதாக்கும்!? என அவள் பதில் சொல்வது. ஏங்க ஏங்க ஏங்க.. என, ஜெய் கொஞ்சி பின்னாடியே வருவது.. வடிவேலு, விவேக் இல்லாமலேயே படு பயங்கர நகைச்சுவைக் காட்சிகள் இவை அனைத்தும்.

*பஸ்சில் அங்கே உட்காருங்க, இங்கே உட்காருங்க என அந்த ஹென்சம் ஹீரோவை எல்லோரும் பின்னால் தள்ளுவது. கடைசி சீட்டிற்குச் சென்றவுடன்.. இனி உங்களை விரட்ட முடியாது என்கிற போதும், முதலில் வயிறு வலி என, பிறகு கால் வலி என புலம்பும் போதும்.., நல்ல காவலனாக கோபத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, சுனைனா இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்துக்கொடுக்கும் போதும், நமக்கே அந்தப் பாத்திரம் பிடித்துப் போகிறது. இறுதியில் அழுகிறார், அது நல்லாவேயில்லை. அவரின் அந்த பாத்திரத்திற்கு அழ வேண்டிய அவசியமில்லை. பதற்றப்படாமல் அதே கம்பீரத்துடனேயே காட்டியிருக்கலாம். நல்ல பாத்திரம்.

* ஜெய் - ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து, இறுதியில் எல்லோரையும் அழவைத்து விட்டாரே.! ஆரம்பத்திலிருந்து அவர் மனதிலே நிற்கவில்லை. படம் முடிந்தபோது அவர் மட்டுமே மனம் நிறைந்து நிற்கிறார். என்ன குழந்தைத்தனமான நடிப்பு- இறுதி மூச்சுவரை அஞ்சலிதான் - கடைசியாக அம்புலன்சில் ஏறும் போதும் கூட, ‘நீங்களும் வாங்க’ என்பார். அது தான் அவரின் இறுதி வசனம். நேற்றிலிருந்து இன்னமும் எனக்கு அவர் (ஜெய்)  நினைப்புத்தான். புள்ளைய வீணாக கொன்னுட்டாரே இந்த இயக்குநர். !!

* படத்தில் பீதியை கிளப்பிய ஒரு விஷயம் எதுவென்றால், பஸ் சாலையில் செல்லுகிற காட்சியை காட்டுகிற போது, மனம் திக் திக் என்கிறது.. அவ்வளவு பெரிய வாகனத்தை அசுர வேகத்தில் கொஞ்சம் கூட பொறுப்பேயில்லாமல் காட்டுமிராண்டித்தனமாக ஓட்டுகிற ஓட்டுனர்கள். அங்கு மட்டுமல்ல உலகமுழுக்க இதேநிலைதான். மலேசியாவிலும் அடிக்கடி இதுபோன்ற சாலை விபத்துகள் பல பொறுப்பற்ற பஸ்  ஓட்டுனர்களால் தான் நிகழ்கின்றன. திரைப்படத்தில் பஸ்கள் மோதிக்கொண்ட போது, ஐயோ, பிறந்ததிலிருந்து மகளைக் காணாத அப்பா ஒருவர் உள்ளே இருப்பாரே.. என்ன ஆச்சோ? என நம்மை கொஞ்ச நேரம் உரைய வைத்து விட்டார் டைரக்டர்.

* படத்தில் வரும் எல்லாக் காதலும் இனக் கவர்ச்சியில்தான் ஆரம்பமாகிறது. ஒரு காதல் பஸ்சில், தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டும்... ஒரு காதல், யாரைப் பார்த்துக் கை காட்டுகிறோம் என்பது கூட தெரியாமல் மலர்ந்து ஆரம்பமாகி குதூகலிப்பிலும். ஒரு காதல், ஒரே நாளில் பழகிப் புரிந்து  நெருக்கமானது போன்றும்.. இப்படியாக காதலின்  இயற்கைத்தன்மையை சீர்குழைக்காமல் மிக அழகாகச் சொல்லியுள்ளார் பட இயக்குனர்.

* படம் படு சூப்பர். அவ்வப்போது மலரும் சில நல்ல படங்களுக்கு மத்தியில், ஒரு அற்புதமான திரைப்படத்தைப் பார்த்த திருப்தி.

* நிச்சயம் காலத்தைக் கடந்து வாழும் இந்தப் படம்.


பகிர்தல்

எல்லா வாசிப்பும்
பகிரக்கூடியதல்ல
சிலது, ரகசியமாக
ரசிக்கப்படுகிறது..

ஞாயிறு, ஜனவரி 15, 2012

பொங்கல் - நான் சிறுமியாக இருந்த போது


போகியன்று
விடியற்காலை
நான்கு மணிக்கே எழுந்து
வீட்டின் முன் போடப்பட்ட
நெருப்பிம் முன்
நடுங்கிக்கொண்டு குளிர் காய்தல்..
இதில் பக்கத்து வீட்டுச் சிறுமிகளிடம் பந்தா வேறு
நா..ங்...க எ எ எ...... நாலு மணிக்கே எழுந்திட்டோம்.

முதல் நாளே
பெரிய பிளாஸ்டிக் பையை எடுத்துக்கொண்டு
வீடு வீடாக அலைவோம்
சாமிக்கு பூ பறிக்க
எங்களுக்கு முன் எங்களின் சக தோழிகள்
அங்கே பூ பறித்தால்
அங்கே போய் கலாட்டா செய்வது..
சண்டை போடுவது
இருந்தாலும், பூவே கிடைக்காது
எல்லாப் பூச் செடிகளும் முன்பே மொட்டையாகிவிடும்..

வீட்டின் பின்புறத்தில் கரும்புச்செடிகள் இருக்கும்
‘கரும்பை வெட்டிவா’ என்பார் அம்மா
பயமா இருக்கும்
புதருக்குள் பாம்பு இருந்தால்..!?
வேறோடு பிடிங்கி வருவோம்
கரும்பாலே அடிவிழும்..

சும்மாவே இருக்க மாட்டோம்
சாணியைக் கரைத்து..
(முகத்தை சுளித்துக்கொண்டு சாணியைக் கரைப்போம்)
வாசலில் கோலம் போடுவோம்
சும்மா அலங்கோலமாக இருக்கும்
அதையும் ரசிப்பார் அப்பா..
புள்ளைகள் படு கெட்டி, சுட்டி என. !

மாவிலை, தோரணம், கரும்பு
தேங்காய், வாழைப் பழம், வாழை இலை,
பூ காய்க்கறி, பால், மஞ்சள் இலை
வெற்றிலை, செங்கல், விறகுக் குச்சிகள்,
பால்மர ரப்பர் (அடுப்புப் பற்ற வைக்க, முன்பு இது அதியாவசியப் பொருள்) என
எல்லாம் அக்கம் பக்கத்திலேயே
உங்களிடமிருந்தது எங்களுக்கு
எங்களிடமிருந்தது உங்களுக்கு
என பரிமாறிக்கொள்தல்
பணவிரையம் தவிர்க்கப்படும்..

பொங்கலன்று
எச்சில் படாமல் மிக சுத்தமாக
எல்லாம் தயார் நிலையில் இருக்கும்
முதல் நாள் ஆட்டமாய் ஆடியதால்,
கொஞ்சம் களைப்பாகவே
உட்கார்ந்திருப்போம் வாசலில்
அம்மா நல்ல நேரம் பார்ப்பார்
அடுப்பு மூட்டி, பொங்கல் தயாராகும்
பொங்கிவரும் போது
பொங்கலோ பொங்கல் என, சத்தம் போடுவோம்
பக்கத்து வீட்டுச் சக பெண்பிள்ளைகளுக்கு
வயிறு எரியட்டும் என வேகமாக..
அவர்களும் சளைத்தவர்கள் அல்ல
மைக் போட்டு கத்துவார்கள்

அந்த இனிப்புச் சாதத்தை அப்படித்திண்போம்...
வடை பாயாசம் மதிய உணவிற்குத்தயார் ஆகும்
இருப்பினும் அந்தப்பொங்கல் வரப்பிரசாதமே.
வாழை இலையில் வைத்து பொங்கலை
அக்கம் பக்கத்திற்கும் கொடுப்போம்
அவர்களும் கொடுப்பார்கள்..
அவர்களது இன்னும் தித்திப்பாக இருக்கும்
இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டோம்
எங்களதுதான் ‘பெஸ்ட்’ என இறுமார்ந்திருப்போம்

மாடுகள் வைத்திருப்பவர்கள் மறுநாள்
கொண்டாடுவார்கள்
அங்கேயும் அன்று காலையிலேயே
காலில் செருப்பில்லாமல்
ஓடிவிடுவோம்..
அவர்கள் மாடுகளைக் குளிப்பாட்டி
அலங்கரிப்பதைப் பார்ப்போம்
அங்கும் பலகாரங்கள் கிடைக்கும்
வாங்கிச் சாப்பிடுவோம்
மாடுகள் அழகாக இருக்கும்
பொட்டு, கொம்பில் மல்லிகைச்சரம்
கழுத்தில் வடை மாலை என,
சில வேளைகளில் மாடுகள்
திமிறிக்கொண்டு ஓடும்
நாங்கள் அதைவிட வேகமாக ஓடி
மறைந்துக்கொள்வோம்
அன்று முழுக்க சிகப்பு ஆடைகள் அணியக் கூடாது என்று
பாட்டி எச்சரிகை விடும்.
அதே போல் யாரும் சிகப்பு ஆடைகள்
அணிய மாட்டோம்.
ரிப்பனில் கூட சிகப்பில்லாமல்
பார்த்துக் கொள்வோம். !

முன்றாம் நாளில்
பள்ளித்திடலில்
இளஞர்கள் ஒன்று திரண்டு
பல போட்டி நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்
இசை நாட்காலி, நூல் கோர்த்தல், தேங்காய் துருவுதல் போட்டி
பலூன் ஊதுதல். தண்ணீர் நிரப்புதல், சாக்கு ஓட்டம் என..
நாங்களும் கலந்து கொண்டு
டம்லர், குடம், தட்டு என்று அதிகமான பரிசுப்பொருட்களையெல்லாம்
பெற்று பிரபலமாவோம்..
அங்கும் கூட்டுப் பொங்கல் நடைபெறும் மாலையில்..
அடுப்பூதுவது, விறகு தள்ளி
அடுப்பை நன்றாக எரியவிடுவது என உதவிகள் செய்து
மூக்கு பிடிக்கத்திண்ணுட்டு வருவோம்..

பரதேசியாய் சுற்றுவோம் அந்த ஏரியாவையே..
அவ்வளவு சந்தோசம்....!
விடியவே கூடாது என பிரார்த்திப்போம்
அடுத்த ஆண்டு எப்படியெல்லாம் செய்யலாம் என
திட்டம் தீட்டப்படும் அன்றே.....!

இன்று எல்லாம் ‘ரெடிமெட்’
பாவம் இன்றைய பிள்ளைகள்..









சனி, ஜனவரி 14, 2012

வெள்ளி, ஜனவரி 13, 2012

பீதி

தலையை யாரோ
அடித்துக் கொண்டே
இருப்பதைப்போல
மண்டையை பிடித்து
யாரோ கீழே தள்ளுவதைப்போல்

பசியே வராமல்
உணவே இல்லால்
வயிறு ரொப்பியிருப்பதைப்போல
அப்போ அப்போ வரும்
புளித்த ஏப்பம்
கெட்ட காத்தோ?

கேட்பதெல்லாம்
அகோரமாக
கண்ணின் காணும் காட்சிகளில்
வெறுமையை சுமந்துக்கொண்டு
எதிலுமே ஈடுபாடு ஏற்படாமல்

‘பர்ஃக்கின்ஷன்’
வியாதிக் காரியைப்போல்
முன் தினம் வந்த
கொலை மிரட்டல்
குறுந்தகவலை வெரித்துக்கொண்டு
நடுங்கிக் கொண்டிருக்கிறேன்
பழிபாவமறியா குழந்தையாய்
நான்..

எல்லாம் என்னோடு போகட்டுமே
ஒன்றுமே அறியாத
என்னவரிடம் வேண்டாம்
இந்த விபரீத விளையாட்டு

எதுவுமே கிடைக்காமல்
வெட்டியான மன உளைச்சல்
மட்டுமே சன்மானமாக..
இந்த இலக்கியத் துறையே
எனக்கு வேண்டாம்?





வியாழன், ஜனவரி 12, 2012

சாடல்

வாயில் போட்டு
மெல்லுகிற வசவு

சில வேளைகளில்
விஷமாகவும்

சில வேளைகளில்
ரத்தமாகவும்

சிலவேளைகளில்
எரிதிரவமாகவும்

இன்றோ
நாளையோ
சாகடிக்குமோ
உன்னை..!?

உடல் வளர்ப்பு

கடைத் தெருக்களில்
யார் யாரோ
எதை எதையோசேர்த்து
என்னன்னமோ செய்து
எல்லாவற்றையும் கொட்டி
ஆக்கி வைக்கின்ற
உணவுகளை நம்பி
நம் பொழுது
ஓடிக்கொண்டிருக்கிறது

புதன், ஜனவரி 11, 2012

புழுக்கள்

கெட்டுப்போன
சாப்பாட்டிலும்
புழு

சாப்பிட்டுப் போட்ட
மிச்சத்திலும்
புழு

மீதம் வைத்த
உணவிலும்
புழு

அழுகிய
பண்டங்களிலும்
புழு

உணவாகி வெளியே
வருவதிலும்
புழு

வயிற்றுக்குள்ளே
தங்கியிருப்பதிலும்
புழு

குப்பையில்
போடுவதிலும்
புழு

நோயாகும்
புண்ணிலும்
புழு

குணமாக்கும்
மருந்திலும்
புழு

குடிநீரிலும்
பூந்தொட்டிலும்
புழு

நாம்
மண்ணுக்குப்போனாலும்
புழு

கண்ணை
மூடினாலும்
புழு

கனவிலும்
நெளி நெளியாய்
புழு
புழுவாய்..

என்ன கொடுமை இது?
எது எழுதினாலும்
கவி
கவியாய்..

செவ்வாய், ஜனவரி 10, 2012

பாசம்

பாராட்டுதல்கள் வேண்டாம்
வாங்க மனம் விட்டுப் பேசலாம்.

திட்டுங்கள், ஏற்கிறோம்
ஆனால் இட்டுக் கட்டாதீர்கள்..

பேசுங்கள் பொதுவாக இங்கே
பர்சனல் மேசெஜ் வேண்டாம்.

உங்கள் பாசமும் வேசமும் 
எங்களுக்கு ஆவேசமே..
வேண்டாம்..

பத்திரிக்கை ஆசிரியரின் பங்கு

தென்றல் விழாவிற்குச் சென்றுவந்தவுடன், நான் எழுதிய ஆதங்க கட்டுரை இது, ஆசிரியர் வித்யாசாகரின் உரையை மேற்கோள்காட்டி எழுதியிருந்தேன். சிறப்பாகவே சேர்த்துக்கொண்டார் இதழில்.
தென்றலின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, பல முகம் காணா நட்புகளையும் நீண்ட நாள் உறவுகளையும் சந்தித்தில் பேருவகை கொள்கிறேன்.

விழாவிற்கு உயிரோட்டமாய் இருந்தது அந்தக் கலகல அறிவிப்பு பணிதான் என்றால் அது மிகையல்ல.  பலகுரல் வண்ணம் செய்துகாட்டி, அற்புதமான பாடல்களைப் பாடி, தமது பாணியில் வித்தியாசமாக அறிவுப்புப் பணிதனை மேற்கொண்டு ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட்டார் ஜாசின் தேவராஜன்.

கேக்’கிற்கு சுவை வெதுப்பி என்று தமிழ் படுத்தி புதிய சொல் ஒன்றையும் கற்றுக்கொடுத்தார். நன்றியும் வாழ்த்துகளும் ஜாசின் தேவராஜ் அவர்களுக்கு.

ஆசிரியர்  உரை:-

நிகழ்விற்கு முத்தாய்ப்பாய் அமைந்தது ஆசிரியரின் உரை. உள்ளபடியே உரைந்துபோனேன். சொற்கள் ஒவ்வொன்றும் சுருக்சுருக் என்றிருந்தது. உண்மையைச் சொல்லும்போது, உறைக்கத்தான் செய்யும்.! இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே என்கிற ஏக்கத்தை உண்டு பண்ணியது அவரின் உரை.

சொல் வேந்தர் சுகி சிவம் சொல்வார், ‘மேடைப்பேச்சு சுவாரிஸ்யமாக இருக்க வேண்டுமென்றால், தனிநபர் துதிப்பாடுதலை பேச்சாளர்கள் விட்டொழிக்க வேண்டும்.’ என்று. அதை ஆசிரியரின் உரையில் காண முடிந்தது.

அனைத்திற்கும் சன்மானம்!

அவரின் பேச்சில் என்னை அதிகம் கவர்ந்தது இதுதான். :
`எங்களுக்கு எந்த பாராபட்சமும் கிடையாது. படைப்புகள் தரமானதாக இருந்தால், மீண்டும் மீண்டும் அதே படைப்பிற்கும் படைப்பாளிக்கும் பரிசு தருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..’ என்ற போது, அகமகிழ்ந்து கைத்தட்டினேன். நல்ல சிந்தனைதான் இருப்பினும், போட்டிகளின் போது பிரசுரமாகுகின்ற அனைத்து சிறுகதைகளுக்கும் கண்டிப்பாக சன்மானம் வழங்கப்படவேண்டும் என்பதுதான் எங்களின் அவா. எல்லாமே சிறப்பான சிறுகதைகள்தாம் இல்லையேல் இந்த சிறப்புப்போட்டியினை அலங்கரிக்க அவை தகுதியற்றவைகளாக ஆகியிருக்குமே. 

முட்டை இடும் கோழிக்குத்தான் வலி தெரியும் என்பதைப் போல, எழுதுகிறவர்களுக்குத்தான் அதன் சிரமம் புரியும்.

ஒரு படைப்பை முடிக்க எப்படியெல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்கள் தெரியுமா எழுத்தாளர்கள்? சும்மானாலும் எதையும் எழுதிவிடமுடியாது. சண்டைக்கு வந்துவிடுவார்கள். ‘உண்மையாகச் சொல்லப்பட்டதா? சரியாக இருக்குமா? பிரச்சனை என்று வந்தால் என்ன செய்யலாம்? யாரிடமாவது உறுதிப்படுத்திக் கொள்வோமா? எங்கேயோ படித்ததைப்போல் இருக்கிறதே!? காப்பி என்று சொல்லிவிடுவார்களோ!? எதற்கும் இணையத்தில் துணை கொண்டு சோதித்து எழுதலாமா? இந்தந்த புத்தகங்களைப் புரட்டினால், கிடைக்குமா?.. என, இப்படிப்பல போராட்டங்களில் உழன்றுதான் ஒரு படைப்பை முடிக்கிறான் ஓர் படைப்பாளி. அப்படியிருக்கும் போது, உற்சாகப் படுத்த சன்மானமோ, பரிசோ, மலர்மாலையோ, பொன்னாடையோ கொடுத்துத் தட்டிக்கொடுக்கலாம். முடிந்தால் அடுத்த முறை அனைவரையும் மேடையேற்றி அறிமுகமாவது செய்து அங்கீகரிங்கலாம்.

அநாகரிக எழுத்து

ஆசிரியர் அவர்களின் உரையில் சொன்ன மற்றொரு கருத்திலும் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ’எழுதும் வாசகர்கள் கணிசமாகக் குறைந்துக்கொண்டே போவதால் தான்.. எழுதப்படுகின்ற அனைத்து படைப்புகளுக்கும் ஆதரவு தருகிறோம்’ என்பது தான் அது. இது எப்படி இருக்கு தெரியுமா? உணவிற்குச் சுவை கொடுக்கிற உப்பு தீர்ந்து விட்டால், உப்பைப் போலவே இருக்கின்ற மண்ணைக் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம் என்பது போல்தான் இருக்கின்றது.

ஆசிரியர் அவர்களின் கவனதிற்கு - எந்த ஆண்டுமே இல்லாத ஓர் அநாகரிக எழுத்துப்போர், கடந்த ஆண்டு நடைப்பெற்றது நம்ம தென்றலில். கருத்து மோதல்கள் எழுத்துத்துறைக்குத் தேவையே, அதன் அடிப்படையில் நடந்த எழுத்துப் போரில், கருத்து மோதல்களை விட, தனி நபர் தாக்குதல்களில் எழுத்தில் கண்ணியம் காக்கப்படவில்லை என்பது நிஜம். ‘முண்டம், முண்டச்சி,அறிவுகெட்ட ஜென்மம், நாறிப்போகும் தென்றல், மூளையே இல்லாத மடச்சி, நீ,வா, போ, அவன், இவன், மாங்காய் மடையன், தேங்காய்கள், சாக்கடைகள், கபோதிகள் போன்ற சொற்களைக்கொண்டு வாசகர்கள் கடுமையாக மோதிக்கொண்டார்கள். இச்சர்ச்சைகளால் பொங்கி எழுந்து, பேனா பிடித்தவர்களும் உண்டு - குளிர்காய்ந்து குள்ளநரி வேண்டம் பூண்டவர்களும் உண்டு. இதனாலேயே நட்பாய் இருந்த பலர், பகையாளியாகவும் மாறிவிட்டனர் என்றுகூட சொல்லலாம்.

இதுபோன்ற படைப்புகளையும் எழுத்துகளையும் நீங்கள் தவிர்த்திருக்கலாம். (எனது படைப்புகளையும் சேர்த்துத்தான்) ஆதரவு என்கிற பெயரில், தரம் குறைந்து காணப்படும் எழுத்துக்களால், எழுத்துலகிற்கும் இலக்கியத்திற்கும் எந்தவொரு நன்மையும் ஏற்படப்போவதில்லை. அப்படி எழுதுபவர்கள் நிச்சயம் எழுத்துப்பணியில் வளர்ச்சியடையப் போவதில்லை. அவர்கள் சிந்தனை மழுங்கியவர்கள். தனிநபர் தாக்குதல் செய்து எல்லாவற்றையும் நாசம் செய்பவர்கள். எப்படி ஆதரவு தந்து வளர்த்துவிட்டாலும், நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்த கதைதான். ஆக, எழுத்தில் கண்ணியம் காக்க முடியாதவர்கள், எழுத்துத்துறைக்கு வரத் தகுதியற்றவர்கள்.

சிலரின் எழுத்துகளை நாம் வாசிக்கும் போது, அவை நம் மனதிலும் பதிந்து போகின்றன. சதா எதையாவது எழுதிக்கொண்டிருக்கும் நாம், சில விவரங்கள் எழுதும் போது, நல்ல வாசகங்களுக்குப் பதில் சட்டென்று இந்த அநாகரிக சொல் வந்து உட்கார்ந்து இடம்பிடித்துக்கொள்கிறது.  இப்படித்தான் ஒரு பத்திரிக்கைக்கு, எனது கருத்தைச் சொல்லும் போது, ஒரு சொல்லை கைத்தவறி எழுதிவிட்டேன். அந்த ஆசிரியர், எனக்குத் தனிப்பட்ட முறையில் அழைத்து..  “அம்மா, எவ்வளவு  கோபமாக இருந்தாலும், எழுத்தில் கண்ணியம் வேணும் டா.!” என்று அன்பாகக் கண்டித்தார்.

ஒரு பக்கம் ஏற்றுக்கொண்ட சொல், மற்றொரு பக்கம் புறக்கணிக்கப் படுப் போது - நாம் எதோ தவறு செய்துவிட்டோமென்கிற குற்ற உணர்வு நாடி நரம்புகளை ஆட்டிப்படைக்கிறது. ஆக, எழுத்தும் எழுத்துத்துறையும் வளர கண்ணியம் காக்கப்படாத எழுத்தாளார்கள் கண்டிப்பாக விரட்டியடிக்கப்படவேண்டும்.

இதுவே நான் தென்றலுக்கு வைக்கும் அன்பான வேண்டுகோள். மற்றபடி அனைத்து நிகழ்வுகளும் நன்று. வாசக அறிமுகங்கள் மனதிற்கு உற்சாகத்தை அளித்தன.

அடுத்தடுத்த நிகழ்வுகளில் நல்லதொரு எழுத்தாள வாசகர்களாக தங்களை மெருகேற்றிக்கொண்டு வலம் வருவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக..

நன்றி.



சரியா?

பிள்ளைகளின் போக்கு
சரியில்லையென்றால்
‘தாய் சரியில்லை’

கணவனின் ஆடை அணிகலன்கள்
சரியில்லை என்றால்
“மனைவி சரியில்லை’

மாமியாருக்குச் சேவை
திருப்தியளிக்க வில்லையென்றால்
“மருமகள் சரியில்லை’

வீட்டு நிலவரம்
கொஞ்சம் குளறுபடி என்றால்
‘பெண்களே சரியில்லை’

சரியில்லாததை
ஏன் வைத்துக் கொள்வானேன்!?
சரியில்லை என திட்டுவதற்கு
சரியான ஆள் கிடைக்காது
என்பதற்காகவா?

உண்மை விமர்சனம்

தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு அற்புதமான மொழிமாற்றுச் சிறுகதையை பாராட்டி எழுதினேன், அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாசகர் என்னைத் திட்டித்தீர்த்தார் - அவருக்கு நான் எழுதிய கண்டனக் கடிதம்.

ரசனை என்பது தன்னால் வருவது, வற்புறுத்தி வருவதல்ல. ஈடுபாடு என்பது பிறர் சொல்லக் கேட்டு வருவதல்ல.

கலைகளில் ஈடுபாடு கொள்ளும்போது, நம்மையறியாமலேயே ஏதோ ஒன்று உள்ளுக்குள் மலர வேண்டும். கண்கள் அகல விரிய வேண்டும், உள் மனம் ஆஹா என்று சொல்வதை, இதயமும் லப்டப் லப்டப் என ஆமோதிக்க வேண்டும்.

ஒரு படைப்பிற்குச் சொந்தக்காரர், உள்ளூரா, வெளியூரா, பக்கத்து வீட்டுக்காரரா, தெரிந்தவரா, நெருங்கிய நண்பரா, வேண்டப்பட்டவரா, உறவுக்காரரா, நம்மை ஏற்கனவே புகழ்ந்து தள்ளியவரா, என்பதையெல்லாம் பார்த்து விட்டு விமர்சனம் செய்தால், நிச்சயம் அதில் ஒரு போலித்தனம் இருக்கும். அது இலக்கிய உலகிற்குச் சமாதி கட்டும் ஒரு செயற்கைச் செய்கை.

இதைப் பற்றி ஆசிரியர் கூட பல சந்தர்ப்பங்களில் தமது கேள்வி பதில் அங்கத்தில் வெளிப்படையான ஆதங்கத்தைச் சொல்லிய வண்ணமாக இருந்து வந்துள்ளார்..!

இன்னொரு கிறுக்குத்தனமான கேள்வியையும் அந்த வாசகர் நம் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார். அதாவது ‘அயல் நாடுகளுக்குப் போய் சேருமா, உங்களின் இந்த ஆஹா ஓஹோ புராணம்?’ என்று.

நண்பரே, இலக்கிய விமர்சனம் என்பது சம்பந்தப்பட்ட படைப்பாளிகளுக்குப் போய் சேர்கிறதா என்பதை விட, அவை உங்களின் ஆழ்மனதை உலுக்கியதா என்பதுதான் இங்கே கேள்வி. பெரும்பாலான நமது விமர்சனங்களில் எதிர்ப்பார்ப்புகளே விஞ்சி நிற்பதால்தான், பலரால் வெளிப்படையான, உண்மையான, நேர்மையான விமர்சனங்களை நெற்றியில் அடித்தாற்போல் சொல்ல முடியாமல், பூசிமொழுகி வார்த்தை ஜாலம் செய்து கொண்டிருக்கின்றோம்.

உண்மைக்கு அரிதாரம் தேவையில்லை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. எதையும் நன்கு ஆராயாமல் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவும். உங்களுடைய ஆதங்கம் ஒரு குப்பை.

நன்றி தென்றல்.. 2007

ஞாயிறு, ஜனவரி 08, 2012

பயம் வந்தால் எல்லாமே

காருக்குள் நான்
முன்னே ஒரு பெரிய கால்வாய்
இரு பக்கமும் வாகனம்
என் கார் முன்னே நகர்கிறது
காரின் ‘ப்ரேக்’கை அழுத்தமாக மிதிக்கின்றேன்
கை ப்ரேக்’கை இறுக்கமாக பிடித்து 
பலம் கொண்டு இழுக்கின்றேன்
கார் முன்னோக்கியே...
விழுவேன் நிச்சயம் கால்வாயில்
கண்களை இருக்கமாக மூடினேன்
என்ன சோதனை இது
மயக்கமே வந்தது..
ஒன்றுமே நிகழவில்லை
இரு பக்க வாகனமும் நகரும் போது
வந்த மனப்பிரம்மை..

படித்ததில் பிடித்தது

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்

ஆத்மாநாம்.

ஆராய்ந்து

பழி வந்ததா
இழிவு வந்ததா
ஆராய்ந்து ஆராய்ந்து
குறைத்து விடாதே
மன நிம்மதியை

தகுதி

சின்னச் சின்ன
சீண்டல்களையும்
ஆராய்ந்துக்கொண்டிருக்கிறேன்
என்னோடு உனக்கென்ன 
வெட்டி வேலை ?

சனி, ஜனவரி 07, 2012

புரிதல்

நான் 
எதையும்
யாருக்காகவும்
சேகரித்து வைக்கவில்லை
எல்லாம் எனக்கான 
புரிதலின் வெளிப்பாடே.

உணவாகும் அழகு

வெட்டுக்கிளிக்கு
உணவாகுது
எனது
அழகிய 
பச்சைச் செடிகள்

விளம்பரம்

எனக்கு 
வேண்டாம்
என்றாலும் 
விரட்டி விரட்டி 
கொடுக்கிறார்கள்
விளம்பரத்தை
கடுமையாக விமர்சித்து..

வெள்ளி, ஜனவரி 06, 2012

ஜீவனற்றவளாய்

வலியால் உதிக்கின்ற
வார்த்தைகள் யாவுமே..
வலியால் உணரப்பட
எழுதுகிறேன் ஒரு
நிவாரண சாசனம்...

நீ வரைந்த
சொற்கள் யாவுமே
நிரந்தரமாய்
தனிமையின் நிழல் வட்டமாய்
பிரபஞ்சத்தில் என்னோடு
இன்றும் என்றும்
நீ, ஜீவித்திருந்த போதிலும்..

அதுவும்
மௌனம் தானே
இதுபோல்..
சேகரித்து வைத்த சொல்
சொந்தமாய் பேசட்டும்
ஜீவனற்ற என் இதயம்
இரண்டாய்ப் பிளக்கட்டும்
பரவாயில்லை..

உன்னுடனேயான எனது தனிமை
பறிக்கப்பட்ட பொழுதுகளில்
ஜீவனற்று நான் உணரும்
இந்த நொடி
மரண வலி
உனக்கும் வரட்டும்
பிடி சாபம்..!!