திங்கள், செப்டம்பர் 17, 2012

ஒழுக்கம் விழுப்பம்

வெட்டி வேதாந்தம்,
வீண்கதை மன்னன்
பேச்சில் எப்போதும் கேலி கிண்டல்
எல்லாவற்றிலும் அலட்சியம்,
தேவையற்ற வீராப்பு
இவர்தான் தாத்தா..

வெற்றிலை உரலை
`டொக் டொக்’ என இடித்துக்கொண்டு
எல்லாரையும் பழித்துக்கொண்டு
வாயிற்கு வந்த வார்த்தைகளைப் புலம்பி
காறி உமிழ்ந்துக்கொண்டிருக்கும்
பாட்டி..

நானே சாகிறேன்
எனக்கு என்றுதான் விடுதலையோ
பொழுது போய் பொழுது வந்தா
குடிகாரனோடு பாடாயிருக்கு
எழவு..சனியனுங்க..
எமன் கொண்டுக்கிட்டு போகமாட்டானா.
இப்படி ஓயாமல் சாபங்களின் வழி
பெற்ற பிள்ளைகளையும் கட்டிய கணவனையும்
வசவுகளால் நிரப்பிக்கொண்டிருக்கும் அம்மா.....

அக்கம் பக்கத்தில் போடும்
குழாயடி சண்டையில்
வீதியில் பட்டமாய் பறக்கும்
ஆபாச வசனங்கள்
கெட்டவார்த்தைகளின் பல்கலைக்கழகம்..

சீர்க்கெட்ட உறவில்
உழலும் சுற்றுச்சூழல்கள்
தந்தையோடு மகள்
அண்ணனோடு தங்கை
அண்ணியோடு கொழுந்தன்
தம்பியோடு அக்காள்
கொல்லைப்புறத்தில் முகமூடிகளோடு
ஓடி மறைகிற கள்ளக்காதல்

தெருவெல்லாம் ஆர்ப்பாட்டம்
திருவிழா குண்டர் சண்டை
மது,போதை, கஞ்சா, கொலை, கொள்ளை
பெண் கடத்தல், கற்பழிப்பு
அரிவாள் வெட்டுக்குத்து
ஓயாத ரணகளம்

இப்படியே ஓடி மறைந்த
இருட்டு பின்புலத்தை நினைத்துப்பார்க்கின்றேன்
எதுவுமே என்னோடு ஒட்டிக்கொள்ளவில்லை
துணையாக வந்த
குறளும் வள்ளுவரையும் தவிர..


16/9/2012 கிள்ளானில் திரு பாலகோபாலன் நம்பியார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற 100வது  வாசகவட்ட இலக்கிய நிகழ்வில், கவிதைப்போட்டியில், ஒழுக்கமே விழுப்பம் என்கிற தலைப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட எனது கவிதை இது. விதிமுறை, 16வரிகள். எனது கவிதை விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை இருப்பினும் பங்குபெற்றதில் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்து, அற்புத பரிசை வழங்கி - மேடையிலேயே சிறப்புச் செய்தார்.  
நன்றி தலைவரே.