செவ்வாய், டிசம்பர் 27, 2011

தழும்பு

மலேசியப் பத்திரிக்கை,  தமிழ் நேசனில் வெளியான எனது கவிதை.
நன்றி முன்னால் ஞாயிறு பொறுப்பாசிரியர் திரு.ப.சந்திரகாந்தம்

பாலர் பருவத்தில்
கல்லில் மேல் விழுந்து
முட்டியில் ஏற்பட்ட
பெரிய காயம்!

பள்ளிப் பருவத்தில்
பால் மரம்
சீவி பழகும் போது
நடு விரலை
உளி கிழித்தது
பெரிய காயம்!

விளையாடும் போது
‘சைக்கிள் பிரேக்’
தொடையில் குத்திய
பெரிய காயம்!

வீட்டு வேலைகளைச்
செய்யும் போது
தகரக் கதவு
பெரு விரலைப்
பதம் பார்த்தது
பெரிய காயம்!

கல்லால் அடித்தாள்
தோழி
வடு உண்டு
தலையில்
அவள் இன்னமும்
எனக்குத் தோழிதான்

இவையெல்லாம் உடம்பில்
பட்ட காயங்களின்
தடயம்

நினைத்துப் பார்க்கும் போது
தழும்பு சிரிப்பைத்தரும்
சம்பவம் நினைவிற்கு வரும்!

ஆனால்
நீ சொன்ன
அந்த ஒரு ’வார்த்தை’
தழும்பில்லை
நினைத்துப் பார்க்க
தடயமில்லை......

இருப்பினும்
நினைத்த மாத்திரத்திலேயே
ஒரு வித அருவருப்போடு
கண்களில் நீர்!

நீயே முயன்றாலும்
இல்லாத அந்தத் தழும்பு
மாறாது
மறையாது!!!


(2009 தமிழ் நேசன்)

யூனிபோர்ம்

குதிரை மெய்த்தாலும்
பன்னி மெய்த்தாலும்
வெள்ளைக்காரன்
அழகு அழகுதான்
ஸ்டையில் ஸ்டையில் தான்

அகராதி

ஆசைதான்
ஆங்கில நாவல் படிக்க!
அகராதியை
எத்தனை முறைதான் திறப்பது!?

புத்தாண்டில்...

எனது 
புத்தாண்டு வாழ்த்து 
எல்லோருக்கும் அல்ல
பட்டியலில் மீண்டும் 
உன் பெயர் தான் முதலில்
உனக்கோ வாழ்த்துச் செய்திகள் பிடிக்காதே! 
பதிலும் வராதே!?
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒரு குட்டிச்சுவரை!