ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஷா ஆலம் விஜயாவுடன் ஒர் நேர்காணல் –

கேள்வி: வாசகர்களால் அடிக்கடி காயப்படுகிறீர்களே, எப்படி சகித்துக்கொள்கிறீர்கள்?
 எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார், எழுதுவதற்கு ஏழ்மை நிலையும் கோபமும் அவசியம் வேண்டுமென்று. நாமெல்லம் ஏழைகளே அல்ல, மூன்றுவேளை மூக்கப்பிடிக்க சாப்பிட்டு விட்டு, குளுகுளு அறையிலேயே பெரும்பாலும் வாழ்கிறோம். ஆகவே பண்பட்ட எழுத்து வருவதற்கு வாய்ப்பில்லைதான் ஆனால் கோபம்? அது எல்லோருக்கும் வரும். அதுவும் எழுத்தாளர்களின் நியாயமான கோபம் எழுத்து வடிவம் பெறுகிறபோது, அது அற்புதமான இலக்கியமாகிறது. இது பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் தெரிந்து விடுவதால் சில வாசகர்கள் வாசக நிலையிலேயே தேங்கிவிடாமல், அவர்களை அடுத்தக்கட்ட நிலைக்குக் கொண்டு செல்லத் தூண்டுவதே இந்த சர்ச்சை சமாச்சாரங்கள்.  மேலும், சிலரைத்தான் இதுபோன்ற சர்ச்சைகளில் மாட்டிவிடுவார்கள், எல்லோரையும் அல்ல என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 
எனக்கு மிகவும் பிடித்த வாசகம் ஒன்று, அதாவது.. காயமே இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருப்பவன், எதுவுமே செய்யாதவன் என்று அர்த்தம். புண்பட்டவன் பண்படுகிறான். மிதிக்கப்பட்டவன் குடமாகிறான், குத்தப்பட்டவன் சிலையாகிறான், அடிக்கப்பட்டவன் தங்க ஆபரணமாகிறான். ஆக, காயமெல்லாம் என்னை ஒன்றும் செய்யவில்லை. வாசிப்பில் ஒரு படி மேலே வளர அது உரமிட்டிருக்கு. பேட்டி எடுக்க, என்னை நீஙகள் தேர்ந்தெடுக்க இவையும் காரணம்தானே.! பெரிய விஷயமில்லையா இது.! கொஞ்சம் வலி இருக்கும், இரண்டு மூன்று நாள்கள் கழித்து அற்புதமான விவாதக் கட்டுரை தயாராகும். அவ்வளவே.

கேள்வி : வாசகர் தளத்தில் ஏற்படும் சர்ச்சைகளால் எழுதுகோல் சோர்ந்துபோன நிகழ்வுகள் உண்டா?
இல்லைஎழுதுகோலின் இதயத்துடிப்பு அதிகரித்து, அது இன்னும் அதிவேகமாகக் கிறுக்கிக்கொண்டிருக்கும் வெள்ளை காகிதத்தை கருப்பு எழுத்துகளால்.!

கேள்வி : வாசகர்களின் தாக்குதல்களுக்கு இரையாகும்போது, அதை எவ்வாறு மத்திப்பீடு செய்கிறார் உங்களின் கணவர்?
அவரின் வாசிப்பு எல்லாம் அரசியல் சம்பந்தபட்டது. இங்கே நாம் உளறிக் கொண்டிருப்பதையெல்லாம் ஒரு பொருட்டாக அவர் வாசிக்கமாட்டார். ஆரம்பத்தில் அவரும் எழுத்துலகில் இருந்ததால், இவையெல்லாம் ஒரு விஷயமாகக் கருதி மூக்கை நுழைக்கமாட்டார். (அப்பாடா தப்பித்தேன்)

கேள்வி : வலைப்பூ, முகநூல் மற்றும் இணையங்களில் மிகுதியாக முகங்காட்டுவதால், வாசிப்பின் பரப்பளவு சுறுங்கிவிட்டதாக உரைக்கப்படுகிறதே, இதை மீட்டெடுக்க முடியுமா?
முகநூல் உலகிற்கு அறிமுகமாகி ஏறக்குறைய ஏழு வருடங்கள் தான் ஆகின்றன.! இதற்கு முன் நாம் புத்தகமும் கையுமாக இருந்தோமா என்ன? எனக்கென்னவோ, தமிழ் நாட்டுத் தொடர்களின் ஆதிக்கம் நம் தொலைக்காட்சியை அலங்கரிக்கத் தொடங்கியதிலிருந்துதான் நாம் நமது வாசிப்புப் பழக்கத்திற்கு முழுக்கு போட்டுவிட்டோமென்று தாரளமாகச் சொல்வேன்.  புத்தக வாசிப்பின் மகத்துவம் அறிந்தவர்கள் இன்னமும் தொடர்ந்து வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எந்த இணையச் சக்தியாலும் தடுத்துவிட முடியாது. என்னைப் பொருத்தவரையில், முகநூல் சகவாசமே என்னை அதிகமாக வாசிக்கத்தூண்டியது என்பேன். வலைப்பூவில் கால் பதிக்கவும் இந்த மூகநூல் எனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளதை இங்கே நான் கண்டிப்பாக சொல்லியாகவேண்டும் .
சமூக வலைத்தளங்களில், முகநூல் மிகப்பிரபலம், அதில் தம்மை இணைத்துக்கொள்ளாதவர்களே இல்லை என்று சொல்லுகிற அளவிற்கு குறுகிய காலகட்டத்திலேயே உலகம் முழுக்க தமது அசுர ஆதிக்கத்தைச் செலுத்திய ஒர் தொடர்புச்சாதனம் இந்த முகநூல்.. இதில் நண்பர்களின் வெட்டி அரட்டைகள் வீன் வம்புப்பேச்சுகள் ஒரு புறமிருந்தாலும், கற்பதற்கு அரிய விஷயங்கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றன. என் விஷயத்தில், எல்லோரும் நுழைகின்றார்களே என்று சும்மானாலும் நுழைந்து பார்த்தேன், அதன் பிறகுதான் தமிழ் நாட்டின் அற்புதமான இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அற்புதமான வாசகர்கள் என அறிமுகமானார்கள். இந்த அறிமுகம் இலக்கிய உலகின் மேல் மரியாதை வருவதற்குக் காரணமாக அமைந்தது. கவிதைகளை அதிகமாக வாசிக்கக் கற்றுகொண்டேன். (கவிதைகள் எழுதுவது ஒரு புறமிருக்க, அவைகளை வாசித்து உள்வாங்கி மறைந்து கிடக்கின்ற கருபொருளைப் புரிந்துகொள்வது,  விடுகதைகளுக்கு விடை தேடுவதைப்போல் சுவாரஸ்யமான ஒன்று.) கவிதை மொழி, கவிதை உணர்வு, கவிதைக்கரு என மேலும் உள்வாங்கப் பழகிக்கொண்டேன். சமூதாயத்தில் எழுத்தாளார்களின் பங்கு பற்றிய தெளிவு வந்தது, இலக்கு நோக்கி எழுதப்படுவதுதான் இலக்கியம் என்கிற புரிந்துணர்வு புத்தியில் புகுத்தப்பட்டது. பட்டைதீட்டிய மறுவாழ்வு கிடைக்கப்பெற்றதுபோன்ற தெளிவு எட்டிப்பார்த்தது . அவற்றை நமது படைப்பு இலக்கியத்தில் எப்படிப்புகுத்துவதென்பது யோசிக்கப்பட்டது.. அதற்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால் முத்திரை பதிப்பதென்பது அவ்வளவு எளிதல்லவே.! காலம் வரட்டும். பார்ப்போம்.

கேள்வி : புனைவிலக்கியம், பத்தி, கவிதை, இவற்றில் தீவிர கவனம் செலுத்துவது எதில்?
தீவிர கவனம் செலுத்துவதால் இலக்கியம் வந்துவிடாது. அது ஒரு நிகழ்வு, காதல் போல்.! ஓஷோ சொல்கிறார், ‘மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது நேர்மையுடன்.’  82வயது மூதாட்டியின் வாழ்க்கைக் குறிப்பு, அவரது பாணியிலேயே எழுதப்பட்டுதமிழ் நாட்டில் சிறந்த இலக்கியமாக சேர்த்துக்கொள்ளப்பட்டதாக, அண்மையில் கலந்துகொண்ட ஒரு இலக்கிய நிகழ்வின் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.  மனதில் உதிப்பதை நமது பாணியில் இஷ்டம் போல் கிறுக்கி வைக்கவேண்டியதுதான். கட்டுரையாக வந்தால், அது கட்டுரை.! கதைபோல் வந்தால், அது கதை.! கவிதைபோல் இருந்தால், கவிதை. எல்லாமே இலக்கியம்தான். சிலது நம்மை என்னவோ செய்த இலக்கியம். சிலது நம்மை ஒன்றுமே செய்யாத இலக்கியம். அவ்வளவுதான்.! எனக்கு எல்லாமும் வரும் இலக்கண எழுத்துப் பிழைகளோடு. அவைகளை பொறுமையாகத் திருத்தி வெளியிட்டு, தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு இவ்வேளையில் எனது மனப்பூர்வ நன்றி.

கேள்வி : உங்கள் எழுத்துக்களை ஆவணப்படுத்தியுள்ளீர்களா?
ஒரே ஒரு சிறுகதை, எண்பதுகளில், ஒரு வருட தைபூச வெளியீடாக வந்திருந்தது. அந்தச் சிறுகதையின் பெயர் பூஜைக்கு வந்த மலர்’. என் கதையின் தலைப்புதான் புத்தகத்தின் தலைப்பும். நம் நாட்டின் பிரபல எழுத்தாளர் கா.இளமணியின் அறிமுக முன்னுரையால் அன்று எழுத்துலகில் கால் பதிக்க நினைத்த முற்றிலும் புதிய வாசகர்களை உற்சாகமூட்டும் வகையில் மலர்ந்து பலரைச் சென்றடைந்தது. அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லைதான். பத்திரிக்கைகளில் வெளிவந்த எனது அனைத்து எழுத்துப்படிவங்களையும் வெட்டிச் சேகரித்து வைத்துள்ளேன். இப்போது அவைகளைக் கொஞ்சங்கொஞ்சமாக எனது வலைப்பூவில் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கின்றேன். உலகமுழுக்கப் போகின்றன. எனது வலைப்பூவை அதிகமாக வாசிப்பவர்கள் அமெரிக்கத் தமிழர்கள். (யூ.எஸ்). தமிழ் நாட்டு இணைய இதழிலும் எனது கவிதைகள் கட்டுரைகள் அவ்வப்போது இடம்பெற்று உட்சாகமூட்டிய வண்ணமாகத்தான் இருக்கின்றன.

கேள்வி : வெற்றிகரமாக பெண் இலக்கியவாதிகள் தங்களின் ஆய்வுக்களத்தை நகர்த்தியிருக்கின்றார்களே!
ஆமாம், கேள்விப்பட்டேன். வாழ்த்துகள்

கேள்வி: ஆண் இலக்கியவாதிகளுக்கு நிகராக பெண் இலக்கியவாதிகளும் இப்பரப்பில் உழுது வந்திருப்பதானது தித்திப்பான விஷயம் தானே!!
இன்னும் சரியாக வெளியே வரவில்லை என்றுதான் சொல்வேன். பொதுவாழ்க்கை கொடுக்கின்ற காயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது பெண்கள் இன்னமும்  இந்திய சமூகக் கலாச்சாரப் பின்னணியில் பிண்ணிப் பிணைந்திருப்பதால்ஊர் என்ன சொல்லும் உலகம் என்ன சொல்லும் என்கிற சிந்தனையிலே முடக்கப்பட்டு விடுகின்றனர். பெண்கள் எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து, படப்பிலக்கியத்தில் வலம்வர ஆரம்பித்தால்ஆண்களையே மிஞ்சி விடுவார்கள் என்று நம்பலாம். பெண்கள் சிறந்த படைப்பாளிகள். சமூதாய அவலங்களை அழுத்தமாகச் சொல்லக்கூடிய ஆற்றல் பெண்களிடம் உண்டு. தேவதாசி பரம்பரைக்கு மீண்டும் உயிரூட்ட நினைத்த ஒரு பிராமணரின் முகத்திரையைக் கிழித்தவர் முத்துலட்சுமி என்கிற பெண் தான். பாரதியார் சொல்லியிருப்பார், பெரியார் சொல்லியிருப்பார், மகாத்மா காந்தி சொல்லியிருப்பார் பெண்ணுரிமையைப் பற்றி ஆனால் தனிப்பட்ட பெண் ஒருவளுக்கு அவளின் உரிமை பற்றியும் சுத்தந்திரம் பற்றியும் நன்கு தெரிந்திருப்பது அவசியம். திட்டுகிற கணவனை உடனே விவாகரத்து செய்வது தான் பெண்ணுரிமை என்று நினைக்கின்ற ஊனத்தனமான சிந்தனை எங்கிருந்து வந்ததென்பதுதான் புரியவில்லை.!?

கேள்வி : இன்று புதுக்கவிதையிலும் சுரத்து குறைந்து இருப்பதாக குற்றச்சாட்டு பதிவாகிறதே! (உங்களையும் என்னையும்)
அப்படியில்லையே.. புதுக்கவிதைகள்தாம் அற்புதமான விவரங்களை இரண்டு மூன்று வரிகளிலேயே மிக எளிமையாக எடுத்தியம்புகின்றனவே.

உதாரணம் சில  

காவடி

மயில்கள் வேட்டையாடப்படுகின்றன
மயில் மேல் வரும்
முருகனுக்காக..

தேங்காய்கள்
பற்றாக்குறை
தெருவில் உடைக்க
பக்தர்கள் கோஷம்
தைபூசத்திருநாள்

எளிய வழி
இலக்கியத்தில்
எல்லாமும் உண்டு
இறைவனையே
நாடுகிறார்கள்

இவைகளின் சுரத்தில் என்ன குறை? (நான் எழுதியவை)

யாருக்கு எது பிடிக்கிறதோ அதைப் பிடித்துக்கொள்ளவேண்டியது தான். பிரம்பால் அடித்தாலும் வராத விஷயத்தில் மூக்கை நுழைக்க எனக்கு எப்போதுமே விருப்பமில்லை.

கேள்வி : வாசிக்க நேரத்தை எவ்வாறு ஒழுங்குப்படுத்துகிறீர்கள்?
தொலைக்காட்சி பக்கமே போக மாட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பேன் ஆங்கிலம் மலாய் என எதுவாக இருந்தாலும். கையடக்க இதழ்தென்றல் எப்போதும் இருக்கும் என்னோடு.

கேள்வி:  உங்களின் எழுத்துப் பணிக்கு கணவரின் பங்களிப்புப் பற்றி கூற இயலுமா?
தொல்லை கொடுக்காமல் சும்ம இருப்பதுவே.

கேள்வி : தாங்களின் அன்புக் கணவர், மழலைச் செல்வங்கள் ஆகியோருக்கு முகங்காட்டி வளர்த்தெடுத்தது செம்மொழி தமிழா?
ஆம்

கேள்வி : வாசகர் தளத்தில் முன் மொழிய ஏதேனும் விருப்பம் உண்டா?
நீ கற்பதை நிறுத்தினாலும், வாழ்க்கை உனக்குப் போதிப்பதை நிறுத்தாது. தெரியாத்தை தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொண்டே இருங்கள். கற்றவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் கற்றுக்கொடுக்க.!

தமிழ் பணி சிறக்க வாழ்த்துகள்.

கேள்விகள் அனைத்தும் அற்புதம் ஐயா. உள்ளபடியே யோசிக்க வைத்தன. நன்றி.

(இன்று, தென்றல் வார இதழில் வந்த எனது நேர்காணல்)