வியாழன், ஜூன் 04, 2015

குடும்பத்தலைவன்கள்

சமைப்பதற்கு இஷ்டம்
சட்டிபானை கழுவவேண்டுமே..!?
கடைக்குச்செல்ல விருப்பம்
சாமான்களை கார்வரை தூக்கிவரவேண்டுமே.!?
மார்க்கெட் செல்ல பிடிக்கும்
வாங்கியவற்றை தூய்மைப்படுத்தி வைக்கவேண்டுமே..!?
துணிமணிகள் துவைக்கலாம்..
மடித்துவைக்கவேண்டுமே..!?
செடிவளர்க்க ஆசை
தினமும் பாதுகாக்கவேண்டுமே..!?
வளர்ப்புப்பிராணிமேல் பிரியம்
நமக்கே தலைசாய்க்கும் வரை வேலை..!?
வேலைக்குச்சென்றும்..
இதெல்லாம் நம்வேலை
உதவிக்கு வரவில்லை
கால் ஆட்டி
வாலையும் ஆட்டுகிறார்கள்..
சில குடும்பத்தவளைகள்..

செவ்வாய், மே 05, 2015

பண்டோங் பயணம்

ஜகார்த்தா பண்டொங் - இந்தோனீசியா சென்று வந்தேன்
மொழி ஏறக்குறைய விளங்குவதால், மக்களுடன் கலந்து சரளமாக உரையாட முடிந்தது.
உணவு - ஆடர் கொடுக்கத்தெரிந்தால் அருமையான உணவுகளை உண்டு சுவைக்கலாம்.
பெரிய ஹோட்டல்களைவிட ஒட்டுக் கடைகளில் உணவுகள் அறுசுவை. தூய்மையாக உணவுகளைத்தயார் செய்கிறார்கள்.
சுட்ட சோளம், ஈக்கான் பாக்கார் (சுட்ட மீன்), ஆயாம் பென்ஞெட் (சுட்ட கோழி) பூளுட் பாக்கார், ரொஜாக், சூப் வகைகள், பொரி கடலை வகைகள் என எங்கு பார்த்தாலும் தின்பண்டங்கள். போகிற இடமெல்லாம் தின்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தோம்.
அங்கே சுற்றிப்பார்ப்பதற்கு வெடித்துச்சிதறிய எரிமலைகள்தான் புகைகளைக் கக்கிக்கொண்டு காட்சியளிக்கின்றன. அவைகளைச் சென்று காண வளைந்து வளைந்து செல்லும் மலைகளைக் கடக்கவேண்டும். மோசமான பாதைகள். குதிரை வண்டியில் செல்வதைப்போல் உடல் குலுங்கிற்று. வாந்தி மயக்கம் தலைசுற்றல் இல்லாமல் என்னால் அச்சூழலைக் கடக்கமுடியவில்லை. இருந்தபோதிலும் அழகிய இடங்கள் அவை.
ஷோப்பிங்க செல்ல பண்டொங் அற்புதமான இடம். கைவினைப் பொருட்கள், துணிமணிகள், கைப்பைகள் என, நம் நாட்டைவிட பொருட்களின் விலை மலிவு. மலேசிய வியாபாரிகள் (மலாய்க்காரர்கள்) பொருட்களைப் பேரம்பேசி வாங்கி குவித்துக்கொண்டிருந்தார்கள்.
அங்கே சீனர்கள் செல்வச்செழிப்புடன் சிறப்பாக வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் காரக்குடியில் இருக்கின்ற கோட்டைகள் போல் வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் சீனர்கள். இந்தோனீசியர்கள் பெரும்பாலும் அவர்களிடம் பணிபுரிகின்ற ஊழியர்களாகவே இருக்கின்றார்கள். ஏழைகள் மிக ஏழைகளாகவும் செல்வச்செழிப்பில் வாழ்கிறவர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாகவும் வாழ்ந்துவருகிறார்கள்.
அரசு பணிக்குச்செல்லவேண்டுமென்றால் ‘சுவாஃப்’ செய்யவேண்டுமாம். லஞ்சம் கொடுப்பதை இப்படித்தான் சொல்கின்றார்கள். அப்படிக்கொடுத்தும் வேலை கிடைக்குமா .(.!?) என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் என்கிறார் எங்களுக்கு வாகனம் ஓட்டிய தம்பி.
ஜகர்த்தாவின் ஆறு கால்வாய்கள் எல்லாம் நீரோட்டம் இன்றி தேங்கியகுட்டைபோல் சலனமில்லாமல் இருக்கின்றன. சாலையும் அந்த நீர்தேக்கமும் ஒரே அளவில் இருப்பது கலவரத்தை உண்டுபண்ணியது.
``ஏன் இப்படி? கொஞ்சம் மழைபெய்தாலே வெள்ளம் வரும் போலிருக்கே.!? நான் இக்காட்சியினை எங்கும் கண்டதில்லை. இந்தோனீசியாவின் தலைநகரமாகத் திகழ்கின்ற மிகப்பெரிய பட்டிணத்தில் மழைவராமலேயே வெள்ள அபாய அறிகுறிகள் தென்படுகின்றனவே, என்ன கொடுமை இது.?” என்று நான், என் சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்.
``கொடுமைதான் அக்கா. என்ன செய்ய.? மழைவந்தால் வெள்ளம் நிச்சயம் உண்டு.”
``ஏன் உங்கள் அரசாங்கம் இதை நிவர்த்தி செய்யவில்லை? லஞ்ச ஊழல் அதிகமோ.?’’ கேட்டேன்.
``இல்லையக்கா. ஜகர்த்தா கடலோரம் இருக்கின்ற ஒரு ஊர். இங்குள்ள நீர்தேக்கமெல்லாம் மிக அருகில் இருக்கின்ற கடலை நோக்கியே பயணிக்கும், கடலின் நீர் மட்டம் குறைகிறபோது இங்குள்ள கால்வாய் ஆறுகளில் சலசலப்பு இருக்கும். அங்கே அதிகரிக்கின்றபோது நாடு வெள்ளத்தில் தத்தளிக்கும். இதுதான் இங்குள்ள நிலை. ’’ என்று விளக்கமளித்தார்.
எங்கு பார்த்தாலும் நீர்த்தேக்கமாக இருப்பதால் டிங்கிக் காய்ச்சல் அபாயம் அதிகம் என்கிறார் ஓட்டுனர்.
இரவு வேளைகளில் கொசு நம்மை உறிஞ்சு எடுக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலிலும் கொசுத்தொல்லை.
மற்றுமொரு சகிக்கவியலா பிரச்சனை, கடுமையான சாலை நெரிசல். எங்கு நுழைந்தாலும் சாலை நெரிசல். சாலை நெரிசல். சாலை நெரிசல். அங்கே இருக்கும் வரை `சாலைநெரிசலோப்போபியா’ என்னை வாட்டி வதைத்தது. கண்ணயரும் போதெல்லாம் சாலை நெரிசல் கனவிலும் வந்து தொல்லை கொடுத்தது. பயணமே இந்த கடுமையான சாலை நெரிசலால் பாழ்பட்டுக்கொண்டிருந்தது.
எல்லா நாட்டிலும் சாலை நெரிசல் உண்டுதான் இல்லை என்றல்ல. ஆனால் நமக்கு மாற்று வழிகள் நிறையவே உண்டு. அங்கே மாற்றுவழிகள் அறவே இல்லை. நெரிசலை நெரிசலோடு நெரிசலாக கடந்தே ஆகவேண்டிய கட்டாயம்.
இரவு 7.40க்கு எங்களின் விமானம். நாங்கள் மதிய உணவைக் கூட எடுக்காமல் இறுதிகட்ட ஷோப்பிங்கில் மூழ்கியிருந்தோம். எங்களைத்தேடி வந்த எங்களின் ஓட்டுனர், `நேரத்திற்கு வீடு திரும்பவேண்டுமா, வேண்டாமாக்கா?’ என்று கேட்டார்.இன்னும் நேரமிருக்கு தம்பி கொஞ்சம் பொறு.’, என்றோம். `முடியாதுக்கா.. கிளம்பலாம்,’ என்றார் கறாராக.
என்ன அநியாயமா இருக்கு.! இங்கிருந்து 10கிலோ மீட்டர்தான் ஏர்ப்போர்ட்’க்கு. அதற்குள் அவசரப்படுத்துகிறானே.! என்று முனகிக்கொண்டே கிளம்பினோம். அப்போது மணி மாலை 3.15.
அங்கிருந்து வெளியேறி ஏர்போர்ட் செல்லும் சாலையில் நுழைகிறபோது மாலை மணி 4.00. பிடித்தது நெரிசல். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து நகர்ந்து ஏர்ப்போர்ட் வந்துசேர மாலை மணி 6.15. அதன் பிறகு என்ன ..ஓட்டமும் நடையுமாய் எல்லா வேலைகளையும் கார்ட்டூன் போல் செய்து முடித்தோம். சாப்பிடவே இல்லை. மன உளைச்சல். வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது. தப்பித்தோம் இறைவா, என மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டோம்.
எங்களோடு பயணித்த என் தோழிக்கு இதுதான் முதல் விமானப் பயணம். விமானத்தில் ஏறியவுடன். ஜபமாலைகளைக் கைகளில் ஏந்தி `ஆண்டவரே நீர்தான் பைலட், ஆண்டவரே நீர்தான் என்னருகில், ஆண்டவரே எனக்கு மூன்று பிள்ளைகள், எங்களை பத்திரமாக கொண்டு சேர்ப்பீராக.. ஆண்டவரே என் பயத்தைத் தூக்கி தூரப்போடுவீராக.. ஆண்டவரே ஜீஸஸ்.. என விமானம் தரையிறங்கும் வரை பிரார்த்தனை செய்துகொண்டே வந்தாள்.
பசி.. பசி என ஆளாய்ப்பறந்த அவள், விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவைக்கூட விழுங்கமுடியாமல் பீதியில் மூழ்கிக் கிடந்தாள். அவளைப் பார்த்து மூத்திரம் முட்டுகிற அளவிற்கு சிரிப்பை அடக்கிக்கொண்டு பயணித்தோம்.
போதுமடாசாமி - ஒருமுறை பயணிக்கலாம்.

ஞாயிறு, மார்ச் 15, 2015

குறையொன்றுமில்லை..

தலைநகரில் நடைபெற்ற சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் `குறையொன்றுமில்லை’ என்கிற நூல் வெளியீட்டு நிகழ்விற்குச் சென்றுவந்தேன்.

சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு அது. இலக்கிய ஆர்வலர்கள் நிறைந்து வழிந்தார்கள் என்பதைவிட, இணைய இதழாகச் செயல்பட்டுவரும் வல்லினத்தின் இலக்கிய ஈடுபாடுகளின் பால் தீராத காதல் கொண்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று நிகழ்வு சிறக்க பேருதவியாக இருந்தார்கள்.

டாக்டர் சண்முகசிவ அவர்களின் உரையை நன்கு ரசித்தேன். எல்லாம் கலந்த கலவையாக அது அமைந்திருந்தது. நான் என்னை வைத்து உலகத்தைப் பார்ப்பவன். எதிலும் குறைகள் இருப்பதாக எனக்கு எப்போதுமே தோன்றுவதில்லை. சுவாமி அவர்கள் சமுதாயத்தை வைத்து உலகத்தைப்பார்க்கின்றார். அங்கே நிகழ்கின்ற சீர்கேடுகளை இலக்கிய ஆன்மிக பார்வையுடன் கூர்ந்துநோக்கி, அதை அறச்சீற்றமாக மீள்பதிவேற்றி, பத்தி மற்றும் சிறுகதை வடிவில் நமக்குக்கொடுத்திருக்கின்றார். குறைகள் ஆங்காங்கே இருப்பினும் `குறையொன்றுமில்லை’ என்று கூறி தமது நீண்ட உரையை நிகழ்த்திமுடித்தார்.

பாண்டியனின் உரை ஆன்மிகத்தில் இலக்கியம். நமது எல்லா பக்தி இலக்கிய படைப்புகளின் இலக்கியப்பங்கேற்ப்பைப்பற்றி உரையாற்றினார். எல்லா பக்தி இலக்கியங்களைப் பற்றியும் மேலோட்டமாகத் தொட்டு விட்டுச்சென்றார். ஆன்மிகத்தில் இலக்கியம் என்பது பத்துநிமிட பேச்சில் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருப்பினும் பிசகாமல்  `லேசான’ படபடப்பில் சிறப்பாகவே தமது பங்களிப்பை வழங்கியிருந்தார் பாண்டியன். எனக்கு அவரின் உரையைவிட  எழுத்தின்மேல் கிறக்கம் அதிகம். நன்றாக எழுதுகிறவர்களுக்கு பேச்சுக்கலை தடுமாறும் என்பார்கள்.  

ஆனால், பூங்குழலிக்கு எல்லாமும் அத்துப்படி. மூன்றாவது பேச்சாளர் பூங்குழலி. சுவாமி அவர்களின் `குறையொன்றுமில்லை’ என்கிற நூலை முழுமையாக வாசித்து அதில் அவரைக் கவர்ந்த விஷயங்களை பார்வையாளர்களோடு பகிந்துகொண்டார். சுருக்கமாகப் பேசிய குழலியின் உரை அற்புதம். நுலைப்பற்றி அவர் சொன்னதைவிட, அழகிய தமிழில் குரலின் ஏற்ற இறக்கங்களோடு சொல்லவந்ததை மிக அழகாகப் பகிர்ந்தவிதம் - எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இறுதியாக சுவாமியின் உரை. புத்தகத்தைத்தொட்டு அவர் ஒன்றும் சொல்லவில்லை. வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கிய ஆன்மிக சொற்பொழிவாகவே அது இருந்தது. குறிப்பாக மிக நெருக்கமான ஒருவர் மரணத்தைத் தழுவுகின்றபோது அங்கே மஹா கருணையாளனாக பேரன்பு நிறைந்தவனாக நாம் போற்றி வந்திருக்கின்ற இறைவன், நிஜமாலுமே கருணையாளனா? பேரன்பு நிறைந்தவனா.?   இக்கேள்விகளுக்கு நாம் விடைதேட எத்தனிக்கின்றபோதுதான், இலக்கியம் கைகொடுக்கிறது. இலக்கியமும் ஆன்மிகமும் வெவ்வேறு அல்ல, ஆழமாகச்செல்லுகையில் இரண்டும் ஒரே நேர்கோட்டில்தான் போதித்து நிற்கும். அற்புதமாகப்பேசினார் ஐய்யா அவர்கள்.

``நிகழ்விற்கு வந்துவிடுங்கள். வருகிறேன் என்று சொல்லிவிட்டீர்கள். உங்களின் வரவை உறுதிபடுத்துங்கள். (வரலன்னாத்தான் இருக்கு..!! என்கிறதொனியில், ஒவ்வொரு முறையும் மேசெஜ் வாசிக்கின்ற போது, அரிவாளை கையில் ஏந்திக்கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டு.. எனக்கு எச்சரிக்கை அழைப்பு விடுப்பதைப்போல் இருந்தது. நவீனின் நினைவுறுத்தல். - மனபிராந்தி..) என்று வல்லின இணைய இதழ் ஆசிரியர் நவீனின் நினைவுறுத்தல். நிகழ்விற்கு முழு பொறுப்பாளரான அவர், எதிலும் பங்குகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். சிம்பளாக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். வாழ்த்துகள் நவீன். (மீ கோரிங்க் நல்லா இருந்துச்சி.. ஆனாக்கா உப்பு கூட.)

நிகழ்ச்சியினை அற்புதமாகத்தொகுத்து வழங்கிய என் தம்பியைப்பற்றிச் (தயாஜி) சொல்லியே ஆகவேண்டும். அடேயப்பா, என்ன ஒரு வளர்ச்சி இந்த ஒராண்டில். முன்பெல்லாம் பேச்சில் மொண்ணைத்தனம் அதிகமாக இருக்கும். வளவளா பேச்சில் நகைச்சுவை செய்கிறேன் பேர்வழி என போர்’அடிப்பார் தம்பி. (மன்னியுங்கள் தம்பி). ஆனால் தற்போதைய அறிவிப்பில் எவ்வளவு பெரிய மாற்றம்.! எனக்கே வியப்பாக இருக்கின்றது தம்பி. தெளிவான உரை. நிறைய அறிவுப்பூர்வ எடுத்துக்காட்டுகள். அழகான தமிழ்.  நிதானமான பேச்சு. அழகிய உடல்மொழி. சிறந்த மேடைப்பேச்சாளராக வருவதற்கான அனைத்துத் திறமைகளும் அமையப்பெற்ற ஓர் சிறந்த அறிவிப்பாளராக மிளிர்கின்றீர்கள். எனது மனப்பூர்வ வாழ்த்துகள் தம்பி. நல்லா வருவீங்கப்பா..

தங்கை மணிமொழி, யோகி, விஜி, கவிதா என அனைவரையும் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.

ரயில் விட்டு இறங்கியவுடன், எழுத்தாளர் பாண்டியனை அங்கேயே சந்தித்தேன். டாஃக்சி எடுத்து நிகழ்ச்சி நடக்கின்ற விடுதிக்கு வரவேண்டும். எல்லோரும் ஒரே டாஃக்சியில் ஏறி வந்தோம். டாஃக்சிக்கு பாண்டியன் தான் பணம் செலுத்தினார். மிக்க நன்றி.
அடுத்தமுறை ஏதேனும் நிகழ்வு நடந்தால் - எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். ரயில் ஸ்டேஷனின் சந்திக்கலாம். ஹிஹி...

நன்றி நவீன் 

ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

கலாச்சார காவலர்களே....

நம்மவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு, அதாவது விரைவாக உணர்ச்சிவசப்படுவது. எந்த ஒரு ஆய்வு மனப்பான்மையும் இல்லாமல், எல்லோரும் சொல்கிறார்கள் அது நிச்சயம் தப்பாகத்தான் இருக்கும். என்று ஒத்தூதிக்கொண்டு சரமாரியாக சர்ச்சையில் ஈடுபடுவது. சரி தப்பு என்று சொல்வதற்கு சில அறிவுப்பூர்வமான விவரங்களை பொதுவில் வைக்கத்திறன் இல்லாமல் கலாச்சாரம், பண்பாடு, சமயம், கண்ணியம் என கூப்பாடு போட்டுக்கொண்டு வன்முறையில் ஈடுபடத்துவங்கிவிடுகிறார்கள்.

அண்மையில் ஒரு வட்சாப் புகைப்படம் பரவலாக பலருக்குப் பகிரப்பட்டது. அத்தோடு சேர்த்து ஒரு அநாமதயப்போர்வழியின் குரலும் அப்புகைப்படத்தின் கீழ் பதிவு செய்து அனுப்பப்பட்டது. அக்குரல் ஒரு ஆணுக்குச்சொந்தமானது. அவர் என்ன சொல்கிறார் என்றால், இவள் ஒரு பெண்ணா? என்று ஆரம்பித்து பண்பாடு கலாச்சாரம் கோவில் என காரசாரமாக புலம்பியிருக்கின்றார். இறுதியில் `த்தூ’ என காறித்துப்பிவிட்டு அப்பெண்ணின் முதுகில் குத்தியிருக்கின்ற பச்சையை மேற்கோல் காட்டி அதையும் அசிங்கமாக விமர்சித்து தனிநபர் தாக்குதல் நடத்திவிட்டு,  `நான் தப்பாகச்சொல்லவில்லை.இப்படிக் கண்டித்தால்தான் அடுத்து கோவிலுக்கு வருகிற பெண்கள் கலாச்சார உடையுடன் அடக்க ஒடுக்கமாக வருவார்கள்,’ என்கிற மிரட்டல் எச்சரிக்கையோடு முடித்திருக்கின்றார்.

இது சட்டநடவடிக்கைக்கு உற்பட்ட ஒரு செய்கை என்பதை அறிந்துத்தான் செய்துள்ளாரா, அந்தப் `பண்பாட்டுக்’காவலர்.? இது ஒரு சைபர் கிரைம்.

ஒருவருக்குத்தெரியாமல் அவரை பின்பக்கமிருந்து புகைப்படம் எடுப்பது.
அவரைப்பற்றி அவதூறாகப் பேசி பதிவு செய்து பரவலாகப் பரப்பிவிடுவது.
அவர் எம்மதத்தைச்சேர்ந்தவர் என்பதை அறியாமல், அவர் நம் கலாச்சார பண்பாட்டுக்கூறுகளைக் கடைபிடிக்கவில்லை என்று கூப்பாடு போடுவது.. போன்றவற்றைக்குறிப்பிடலாம்

நாடுமுழுக்க அந்தப் புகைப்படம் எல்லோர் கைப்பேசியிலும் வந்து, அவனவன் இஷ்டத்திற்கு அப்பெண்ணின் புகைப்படத்தை எடிட் செய்து பெண்களை பொதுவில் கேவலப்படுத்திக்கொண்டிருப்பது இந்த சமூகத்தின் மீதும் ஆணாதிக்க அட்டூழியத்தின் மீதும் கூடுதல் வெறுப்புதான் மிஞ்சுகிறது.

அவனவன் வீட்டில் நடக்கின்ற அனைத்து ஒழுக்கக்கேடுகளையும் மூடுமந்திரம் செய்துவிட்டு, பொதுவில் பண்பாட்டுக்காவலர்கள் என்கிற முகத்திரையோடு உலாவருவது சுயமரியாதையாக்கப்பட்டுவிட்டது இங்கே.

ஒரு பெண்ணை அவளுக்குத்தெரியாமல் புகைப்படம் எடுப்பதே ஒழுக்கக்கேடான செய்கைதான் என்பதை உணராமல், கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றைப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கின்றது இவர்களுக்கெல்லாம்.? எவளோ ஒருவளைப் புகைப்படம் எடுத்து ஒட்டுமொத்த பெண்குலத்தையே கேவலப்படுத்துவது எந்த காலத்துத் தமிழ் கலாச்சாரம்.?

அப்பெண்ணின் அண்ணனோ மாமனோ மச்சானோ அப்பாவோ அங்கிருந்து, நீ அப்புகைப்படத்தை எடுக்கின்றபோது அதை அவர்கள் பார்த்து பெரிய பிரச்சனையாகி, வாய்ச்சண்டையாகி, கைச்சண்டையாகி, குண்டர் சண்டையாகி, வெட்டுக்குத்துவரை சென்றிருந்தால், நம் சமூகத்திற்குக் கெட்ட பெயர்தானே.! கோவிலில் சண்டை போடுகிறார்கள் என கொட்டை எழுத்தில் பிற இனத்தவர்களின் பத்திரைகையின் முதல் பக்கச்செய்தியாக வருமே. அப்போது யார் மீது குற்றம் சொல்வது. ? தனிமனித சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைத்த நீதானே அங்கே குற்றவாளி.! இது சமுதாயக் கேடு இல்லையா.?

இப்படிப்புகைப்படமெடுத்துப்போட்டால்தான் மக்கள் திருந்துவார்களாம்..! அப்படியென்றால் தினமும் நடக்கின்ற குண்டர் சண்டைகளை மிகக்கேவலமாகச் சித்தரித்து பத்திரிகையில் போட்டுவருகிறார்களே.! திருந்துகிறதா இந்தச்சமூகம்.? தைபூசத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புகூட பார்க்கிங் பிரச்சனையில் ஒருவனின் கைகால்கள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டதே.. அப்புகைப்படமும் பொதுவில் பரப்பப்பட்டதே.. ! இந்த ஆண்வர்க்கத்தால்தான் கலாச்சாரம் பண்பாடு எல்லாம் பாழாகிறது என எந்தப்பெண்ணாவது கூப்பாடு போட்டு புகைப்படங்களை பரப்பி வந்தாளா?

எவ்வளவோ சொன்னார்கள்.. சுருட்டு பிடிக்காதீர்கள். பீர் அருந்தாதீர்கள். கத்திமேல் நிற்காதீர்கள் பேன்ஸி காவடிகளையெல்லாம் எடுக்காதீர்கள் என, யார் கேட்டார்கள். எங்கோ ஒரு மூலையில் தைபூசத்தின் போது இவையெல்லாம் நடந்து கொண்டுதானே இருந்தது. முற்றாக அழிந்துவிட்டதா? ஏன் அவைகளைக் கேவலமாகச் சித்தரித்து குரல் பதிவுகள் வரவில்லை. ? பிரச்சனை பெரிசாகும். குண்டர் சண்டைகள் வரும் என்கிற பயம்தானே.!. சமய ஆசான்களே இவைகளை பொதுவில் சொல்கிறபோது, கொஞ்சம் பவ்வியமாகத்தான் எடுத்தியம்புகிறார்கள். காரணம் நம்மவர்களின் நிலைமை அப்படி.

ஆனால் அதுவே பெண்களின் பிரச்சனைகள் என்றால் கூடுதல் இளக்காரம். குடும்ப மானம், கணவன், பிள்ளைகள் அண்ணன் அப்பா என எல்லோரையும் சந்திக்கு இழுத்து கேவலப்படுத்தலாம் இஷ்டம்போல். அது நமது கலாச்சாரம், அப்படித்தானே. !

ஒரு அனுபவம் சொல்கிறேன்..
சென்றவாரம் நானும் என் அக்காவும் காய்கறி சந்தைக்குச்சென்றோம். என் அக்கா மொட்டை போட்டு முடி இப்போதுதான் வளர்கிறது. அவர் நிறத்தில் கொஞ்சம் கருப்புதான். நான் மாநிறம்.

இருவரும் ஒரு மீன் கடைக்குச் சென்றோம். பேசிக்கொண்டே, மீன்களின் செவுள்களை திறந்து திறந்து புதிய மீன்களா என ஆராய்ந்துகொண்டிருந்தோம். அப்போது அந்த வியாபாரி (சீனப்பெண்), மலாய்மொழியில் சொன்னாள், அக்கா எல்லாம் புது மீன்தான்.. சந்தேகமே வேண்டாம். தாராளமாக வாங்கலாம்.... என்று சொல்லி முடிப்பதற்குள்.. ஆஆ.. சாரி. மலாய் தெரியுமா? என்று கேட்டாள். ஏன் அப்படிக்கேட்கிறாய்? என்றதிற்கு, நீக்ரோவோ என்று நினைத்தேன்.  என்றாள். . உடனே நான் என் அக்காவிடம் திரும்பி,  இனி நீ, கூந்தல் நீளமாக வளரும் வரை என் கூட வராதே. என்னையும் நீக்ரோவாக நினைக்கின்றார்கள், என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டு,  `நீக்ரோதான் டாப்ஸ் பட்டேலா பேடுகிறாளா? பொட்டு வைக்கிறாளா.? என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். அதற்கு அவள், அக்கா நீக்ரோ மட்டுமல்ல நாங்களும் இப்போதெல்லாம் சிலவேளைகளில் உங்களைப்போல்தான் உடுத்துவோம். புடவை கட்டுவோம். சுடிதார் போடுவோம். என்றாள். சந்தோசம்.

இதை நான் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், மூவினம் கடந்து பல இனங்கள் வாழுகிற நம் நாட்டில் எல்லா ஆடைகளும் எல்லோருக்கும் சாத்தியம். மிகச் சுலபமாக நமது கலாச்சார ஆடைகள் எல்லா இடத்திலேயும் கிடைக்கின்ற பட்சத்தில் பலரும் அதை பரவலாக அணிந்து வருவது சகஜமாகிவிட்ட நிலையில், புடவை கட்டியிருப்பவர் எல்லாம் இந்துக்கள்தான் என முடிவெடுப்பது சரியா? கண்ணால் காண்பதெல்லாம் மெய்யா?

சரி இன்னொரு கேள்வி வரலாம். கோவிலில் அப்பெண் இருக்கின்றாள், உடை சரியில்லை. ? பத்துமலை தைபூசம் இப்போது உள்ளூரில் இருக்கின்ற உலகமக்களால் கொண்டாடப்படுகிற ஒரு பொது விழா. யார்வேண்டுமானாலும் அங்கே செல்லலாம். இம்முறை மலாக்காரர்களும் அதிகம் பேர், வரிசையில் நின்று உணவு வாங்கிச்சாப்பிட்டார்கள். (பார்ப்பதற்கு மலாய்க்காரர்கள் போலத்தான் இருந்தார்கள். ஆனால் முஸ்லீமா என எனக்குத்தெரியாது. மன்னிக்கவும்) ..

இந்துக்கள் மட்டும்தான் செல்லவேண்டும், மலையேறவேண்டும் என்கிற சட்டதிட்டமெல்லாம் அங்கே யாரும் இன்னும் கொண்டுவரவில்லை. அப்படி ஒரு சமய சட்டம் இந்துக்களிடையே இல்லை என்பதைச் சொல்லிக்கொள்வதில் இந்துவான எனக்குப்பெருமையே. !

ஆங்கிலேயப்பெண்மணிகள் புடவை கட்டியிருக்க நம்ம பெண்களுக்கு புடவை கட்ட கசக்குதா? ! இப்படி ஒரு குற்றச்சாட்டு. வெறும் அரைகால் பேண்ட், மொட்டைக்கை சட்டை போட்ட ஆங்கிலேயப்பெண்மணிகள் கேமராவை கழுத்தில் மாட்டிக்கொண்டு உலாவந்ததையும் நான் பார்த்தேனே. ரசித்தேனே... தவறில்லை உஷ்ணமான சிதோஷ்ணநிலையில் அவர்களின் ஆடைதேர்வு அப்படி.

கோவிலுக்கு வருபவர்கள் எப்படி வரவேண்டுமென்று பாடம் நடத்த நினைக்கின்ற பலர், கோவில் வளாகத்தில் நுழைந்த நொடியில் இறை சிந்தனையோடு மட்டுமே இருக்கவேண்டிய இடத்தில் கேமராவை வைத்துக்கொண்டு எவள் எம்மாதிரி ஆடை அணிந்திருக்கின்றாள் என்று வேவு பார்ப்பது மட்டும் பண்பாடா?

அவளின் ஆடை உடுத்தல் என்னை வழிபாடு செய்யவிடாமல் தடுக்கிறது என்றால், புகைப்படத்தில் இருக்கின்ற பெண் கோவிலில் நிற்கவில்லையே. வெளியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றாள். வேடிக்கைப்பார்க்கவந்த மற்ற இனத்துப்பெண்ணாக அவள் இருக்கலாமே.!?

முதுகு தெரிகிற ஒரு ரவிக்கையால் எங்கள் இனத்தின் கலாச்சாரம் பண்பாடு பாழ்படுகிறது என்றால், தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்களின் சிலைகளுக்கு ரவிக்கையும் இல்லை தாவணியும் இல்லை.

  

சனி, ஜனவரி 24, 2015

ரசித்து நெகிழாமல்

ஐ-
ஏற்கனவே எழுத்தப்பட்ட விமர்சனங்களையெல்லாம் மாங்கு மாங்கு என நெட்டில், முகநூலில் வாசித்துவிட்டு படம் பார்க்கச்சென்றிருந்தீர்கள் என்றால், நிச்சயம் அந்தப்படம் உங்களுக்குப் பிடிக்காமல்தான் போகும்.
படம் பார்க்கப்போகிறபோது நமது பார்வை நமதானதாக மட்டும் இருக்கட்டுமே. நமக்குப்பிடித்திருந்தால் அது நம் ரசனையைப் பொருத்தது. நமக்கு பிடிக்குமா பிடிக்காத என்பது கூட அடுத்தவர் பார்க்கின்ற பார்வையில்தான் அமையுமென்றால் நமக்கென்று இருக்கின்ற அடையாளம் இல்லாமல் போகும்தானே. !
அடேயப்பா எவ்வளவு காரசாரமான விமர்சனங்கள் நெட்’இல்.
அவைகளையெல்லாம் வாசிக்கின்றபோது, அடக் கடவுளே, நாம் அவசரப்பட்டு ஐ- படத்தைப் புகழ்ந்து தள்ளிவிட்டோமே, என்கிற சிந்தனை எழாமல் இல்லை. நம் ரசனை குறித்து நாமும் வெற்கித் தலைகுனிகிற நிலைக்குத்தள்ளிவிடுகிறது அவ்விமர்சனங்கள்.
சரி அது கிடக்க்கட்டும். ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்றபோது அப்படத்தின் கதையினுக்குள் நாம் நுழையவேண்டும். நாம் ஒரு பாத்திரமாக அங்கே இணையவேண்டும். நடக்கின்ற நல்லது தீயதுக்கெல்லாம் நாம்தான் சாட்சி அங்கே. அப்போது அடாவடித்தனம் புரிந்து நாம் நல்லவர் என்று காட்சியகப்படுத்தியிருக்கின்ற நாயகனையோ அல்லது நாயகியையோ வில்லன் என்கிற தீயவன் துன்புறுத்துகிறபோது, அந்த வில்லனாகப்பட்டவன் எந்நிலையில் பழிவாங்கப்படுவான் என்கிற எதிர்ப்பார்ப்பு இல்லாமல் படம் பார்க்கமுடியாது.
மற்றவர்களைப் பற்றி தெரியாது ஆனால் நான் ஆழ்ந்த ரசிப்பில் இருக்கின்றபோது அங்கே நடக்கின்ற கிண்டல் கேலி பார்வைகள் வில்லன்களை குறிவைத்து எடுக்கப்பட்டிருந்தால் ரசிக்கத்தான் செய்வேன்.
உதாரணத்திற்கு இறுதிக்கட்டத்தில் சந்தானம் செய்கிற கேலிகிண்டல்கள் படத்தை முழுமையாகக் கண்டு ரசித்து நெகிழாமல் அந்த இறுதிக்காட்சியை மட்டும் பார்த்திருந்தேன் என்றால், எனக்கும் சங்கரின் மேல் கடுமையான கோபம் வந்திருக்கும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்களையும் ஊனமானவர்களையும் ஏன் இப்படி நையாண்டி செய்திருக்கின்றார் என. ஆனால் காட்சிகளை அணுவணுவாக ரசித்து அதில் மூழ்கித் திளைத்திருக்கின்ற நமக்கு அக்காட்சிகளாகப்பட்டது குதூகலத்தையே கொண்டு வந்தது.
அதர்மம் தர்மத்திடம் தோற்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு கடை நிலை ரசிகனுக்கு எப்போதும் இருக்கின்ற ஒன்றுதான்.. அது நாவலாகட்டும் சினிமாவாகட்டும்.
அடுத்து, விளம்பர நடிகையின் மேல் சாதாரண ஆண்மகனுக்கு பார்த்த மாத்திரத்திலேயே காதல் பொங்கிவருகிறது என ஒரு குற்றச்சாற்று.
காதலைப்பொருத்தவரை, சினிமா என்றைக்குமே அப்பட்டமான பொய்களைத்தான் புகுத்திவருகிறது. சேரியில் வாழும் பரம ஏழை மீது கோடிஸ்வரிஅல்லது கோடிஸ்வரன் காதல் கொண்டு திருமணம் நடப்பதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம். நிஜவாழ்வில் 0.001%தான். அதை அழகாகச் சொல்லவில்லையா நம் சினிமா? ஏற்றுக்கொள்கிறோம்தானே நாம்.!
அடுத்து கொளுந்துவிட்டு எரிகிற ஒரு பிரச்சனை, திருநங்கைகள் அவமதிக்கப்பட்டுவிட்டார்கள் படத்தில். நானும் கூனிக்குறுகினேன் நகைச்சுவை என்கிற பெயரில் சந்தானம் செய்கிற ஆரம்ப கட்ட கலாட்டாவில். அது மட்டுதான் குறையாக இருந்தது எனக்கு. இருந்தபோதிலும் திருநங்கையான அந்நடிகை, நான் இதுமாதிரியான காட்சிகளின் நடிக்கமாட்டேன். இதுபோன்ற வசனங்களை வைக்காதீர்கள் என கட்டளை பிறப்பித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை.? சங்கர் படமென்றால், உலக ரசிகர்களால் ரசிக்கப்படுகிற ஒரு படமாக அமையும் என்பதால், தமது பக்களிப்பை உலகமே கண்டு ரசிக்கவேண்டும் என்பதற்காக, தம்மைச் சார்ந்தவர்கள் கேவலப்பட்டாலும் பரவாயில்லை என அந்தப் பிரபல ஒப்பனைக் கலைஞர் அப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதுதான் கண்டிக்கத்தக்கது.
சரி உனக்கு என்ன வந்தது.? நீ ஏன் இந்தப் படத்திற்கு இப்படிப் பாடுபடுகிறாய்.? என்றால், படம் பார்த்துவிட்டு நல்ல படம் என விமர்சனம் எழுதிவிட்டேன். அது தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது என்கிற நினைவுறுத்தல் சில முகநூல் நண்பர்களால் என் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனால்தான் இதை எழுதுகிறேன். இதனால் எனக்கு ஒன்றுமில்லை. எனது ரசனை எப்போதும் சரியானதாகத்தான் இருக்கும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில் நான் எப்போதும்...

ஞாயிறு, ஜனவரி 18, 2015

ஐ - படம் சூப்பர்.
ஒரு சராசரி ரசிகையான எனக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுத்திருக்கின்றார் சங்கர்.
எல்லாத்துறையிலும் ஒருவரின் வளர்ச்சியின் மேல் பொறாமைகொள்கிறவர்கள் சிலர் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்.. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சில கெடுதல்கள் செய்வதற்கு பலமுயற்சிகள் எடுப்பார்கள். அது அவதூறு செய்வதில் ஆரம்பித்து அயல் நாடுகளுக்குச்சென்று செய்வினை செய்வதுவரை தொடரும்.
எதிலுமே சாதிக்காத நாம்,முகநூலில் கொஞ்சம் கூடுதல் `லைக், கமெண்ட்ஸ்’ வாங்கிவிட்டாலே சிலர் வயிற்றெரிச்சலில் புகைந்து வெளியே அவதூறு பரப்பிவருவது கண்கூடு.
பொறாமை வயிற்றெரிச்சல் எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுத்து வாழத்துடிக்கின்ற ஒரு சாதாரண அப்பாவி இளஞனை வீழ்த்துகிறது, பாதிக்கப்பட்ட அவன் எப்படி அவர்களையெல்லாம் பழிதீர்க்கிறான் என்பதுதான் கதை. அதை சராசரி ரசிகனுக்கு பரபரப்பாக பிரமாண்டமாகக் கொடுத்திருக்கின்றார் சங்கர்.
சோர்வில்லாத கதையோட்டம்.
அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பு.
நகைச்சுவை கொஞ்சம் தேவலாம்.
பழிதீர்க்கப்பட்டவர்களின் நிலையினைப்பார்த்து சந்தானம் அடிக்கும் லூட்டி ரகளை.
பாடல்கள் அருமை.
சண்டைக்காட்சிகள் பிரமிப்பு.
படம் முடிந்துவிட்டது. பெயர் பட்டியல் வரத்துவங்கிவிட்டன. மக்கள் இருக்கையை விட்டு எழவே இல்லை. லிங்கேசனுக்கு ஒரு விடிவு வராதா? என காத்திருக்கின்றனர். இறுதியாக அந்த பரிதாபத்திற்குரிய பாத்திரத்தின் கொஞ்சம் தேறிய முகத்தைப் பார்த்த பிறகுதான் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுத்து நகர்கின்றார்கள்.
சியான் விகரம் - உங்களின் உழைப்பு உங்களை மிக உயரத்தில் அமரவைத்துவிட்டது.. வாழ்க. கண்கலங்க வைத்துவிட்டீர்கள். அற்புத நடிப்பு ( மற்றவர்கள் உழைக்கவில்லையா? என்பவர்களுக்கு... கலைக்காக உழைப்பதும், நான் என் குடும்பம் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக உழைப்பதும் ஒன்றாகாது. கலை என்பது பரபரப்புச்சூழலில் வாழ்கிற ஒரு மனிதனின் உணர்வு சம்பந்தப்பட்டது.)
மலேசியாவில் அரங்கம் நிறைய கூட்டம். வார இறுதியில் டிக்கட் கிடைக்கவில்லை. திரையரங்கில் அலையலை என கூட்டம் அலைமோதுகிறது.
வசூல் சாதனையை முறியடிக்கின்ற அற்புத படம் - குடும்பத்துடன் ரசித்து மகிழலாம்.
வரிசையாக பல படங்கள் நம்மை ஏமாற்றிய பிறகு சங்கரின் ஐ- தெம்பைத்தந்துள்ளது.
மனதார ரசித்தேன். கண்டு களியுங்கள்

திங்கள், ஜனவரி 05, 2015

பிடிக்காதவனையும் பகைத்துக்கொள்வதில்லை.

நீ எழுது, உன் எழுத்துக்கு நான் அடிமை என்று இதுவரையிலும் யாரும் சொன்னதில்லை.
ஊரைத் திருத்தப்போகிறேன். உலகைத்திருப்போகிறேன் என்கிற சபதத்தோடு எழுத முயன்றதில்லை.
நாலு பேரு நல்லா பாராட்டுவாங்க.. என்றும் மூளையைக் கசக்கிப் பிழிந்ததில்லை.
புத்தகம் போட்டு எல்லோரும் வாசிக்கவேண்டும் என்றும் சிந்தித்ததில்லை.
எழுதி எதையும் சாதித்ததில்லை. சாதிக்கவேண்டும் என்கிற எண்ணமும் இல்லை.
எழுத்து தொழிலும் அல்ல.
இருந்த போதிலும் நான் எழுதுகிறேன்.. ஏன்?
பெண்ணான என் உள்ளக் குமுறலைக் கேட்க ஆளில்லை. எழுதி வெளிப்படுத்துகிறேன்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் அண்டை அயலாரோடு எந்த ஒரு பிக்கல் பிடுங்கள். பிரச்சனைகளில்லாமல் இருந்து வந்தவர்கள் நாங்கள். அதற்குக்காரணம் நான் நல்லவள் என்பதைவிட, எனது அண்டை அயலார்கள் மிகவும் நல்லவர்களாகக் கிடைப்பெற்றதுதான் எனது பாக்கியம். 

என்று நான் வீடு மாற்றலாகி இங்கே வந்தேனோ, அன்றிலிருந்து பிடித்தது எனக்குச் சனியன். 

தொட்டதிற்கெல்லாம் குற்றம் சொல்கிற் ஒரு தொல்லைப்பேர்வழி தற்போதைய அயலார்.

வந்த புதிதில், `ஏர்காண்ட்’ இன் தண்ணீர் என் வீட்டில் விழுகிறது, வாசல் அசுத்தமாகிறது. பாசி பிடிக்கிறது.’ என்கிற முனகல் முதல் கோணல். சரி, தவறு நம்முடையதுதான் என்று ஏற்றுக்கொண்டு, கூரைமேல் ஏறி ஏர்காண்ட் ட்டீயூப்’ஐ நகர்த்தி அது என் வீட்டு வாசலில் விழும்படி வைத்தோம்.

அவர்களின் பூமரம் பூத்துக்குலுங்கி எங்களின் வீட்டு வாசலை வந்தடைந்து மணம் பரப்புகிறதென்று, நான் கதற கதற, என் வீட்டுப்பக்கம் பூத்துக்குலுங்கிய கொடிகளை கத்தரித்துவிட்டார்கள். காய்ந்து வாடியது என் பக்கக்கொடிகள். 

மரமாக வளர்ந்து வருகிற வேப்பமரத்தை குறிவைத்து அவர்களின் பேச்சுகள் வட்டமடிக்கத்துவங்கின. 

இரவானால் பேய் வரும். வீட்டிற்கு நல்லதல்ல. மரமாக வளர்ந்தால், காற்றில் முறியும்.வீட்டின் மேல் விழும். மரம் பெரிதாக வளர வளர வேர்கள் கீழே படர்ந்து, கால்வாயைப்பிளக்கும். வாசலின் டயில்ஸ் எல்லாம் விரிசல் விழும்.. இலையுதிர் காலத்தில் இலையாகக் கொட்டும். யார் கூட்டிப்பெருக்குவது.? என ஓயாத எச்சலூட்டும் எச்சரிக்கைகள். 

என்னால் முகத்திலடித்தாட்போல் ஒன்றும் சொல்லமுடியவில்லை. காலையில் எழுந்தவுடன் முகத்தப்பார்க்கவேண்டுமே.! சிலவேளைகளில் எரிச்சலின் உச்சத்தில் எதையாவது உளறி வைத்தாலும், பெரும்பாலான நேரங்களின், பயிரைக்கொஞ்சும் நான், சக உயிருக்கு மதிப்பளிக்கத் தவறுகிறேனே, சதா எதையாவது கேட்டுக்கொண்டு  என்னோடு பேசுபவர்கள் அவர்கள்.. அவர்களின் எண்ணம் அவர்களோடு. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ, என பரிதாபம் மேலிட, என்னை நான் கட்டுப்படுத்திக்கொண்டு மௌனமாகவே இருந்தேன்.

இருப்பினும் தொல்லைகள் தொடர்கின்றன.

வீட்டில் குடியேறுவதற்கு முன், வீட்டைச் சீரமைத்தோம். பின் பக்கம் சுவர் எழுப்பி, சமையல் அறையினை இழுத்துக்கட்டினோம். இழுத்துக்கட்டுகிறபோது, வீடுகள் வரிசையாக இருப்பதால் இரண்டு பக்கமும் சுவர் எழுப்பித்தான் சமையலறையை கட்டிமுடிக்கவேண்டும். சீரமைப்பு செய்பவர் எங்களுக்கு சில அலோசனைகளை வழங்கினார். அக்கம் பக்கத்தில் கேட்டுக்கொள்ளுங்கள், நாம்முடைய சுவரை அவர்களும் உபயோகமாக இருக்கும், பணம் ஏதும் கொடுத்து சுவர் கட்டுவதில் அவர்கள் எதேனும் பங்கு கொள்கிறார்களா? என்று எதற்கும் கேட்டுக்கொள்ளுங்களேன், என்றார்.
என் கணவரோ, வேண்டாம். நமக்குத்தேவைப்படுகிறது. நாம் கட்டுகிறோம். அவர்கள் சீரமைப்பு செய்கிறபோது பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்று, பங்கு பற்றி அக்கம் பக்கத்தில் கேட்டுக்கொள்ளாமல் வேலைகளை முடித்தோம்.

அதேபோல் தான் முன் பக்கமும். இடது வலது பக்கம் நாங்கள் சுவர் எழுப்பினால், அவர்கள் ஒரு பக்கம் மட்டும் சுவர் எழுப்பினால் போதுமானது. அவர்களின் வாசற்பக்கம் முழுமையடைந்துவிடும். இதனால் நாங்கள் செய்கிற செலவில் பாதிதான் அவர்களுக்குச் செலவாகும். சீரமைப்புப் பணியின் பாரம் குறையும். கோலாலப்பூரில் சீரமைப்புப் பணி, சிலவேளைகளில் வீடுகளின் விலையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர் எழுப்பினால் மட்டும் போதுமா.? இந்தப்பக்கம் என்ன செய்கிறோமோ அதேபோல் அந்தப்பக்கமும் செய்யவேண்டும். சுவரை வழவழவென சிமெண்ட் போட்டு மொழுகுவது. சாயம் பூசுவது என எல்லா வேலைகளையும் எங்களின் செலவிலேயே செய்தோம். அக்கம் பக்கத்தை எதிர்ப்பார்க்காமலேயே. இதற்காகச் சிலர் பத்திரமெல்லாம் தயார் செய்து வக்கீல் வைத்து கையொப்பம் வாங்கி பணம் வசூல் செய்வதும் உண்டு,

வலது பக்கம் உள்ள மலாய் அன்பர். `மிக்க நன்றி. தற்போது என்னிடம் பணம் இல்லை. நான் நன்றாக வயரிங் வேலைகள் செய்வேன். எதாவது உதவிகள் வேண்டுமென்றால் என்னை அழையுங்கள், நான் வந்து பணம் வாங்கமலேயே செய்துதருகிறேன்.’ என்று சொல்லி சில எலஃக்ட்ரனிக் வேலைகளை இலவசமாகச் செய்து தந்து தமது நன்றியினை வெளிப்படுத்திக்கொண்டார். மேலும் நாங்கள் எழுப்பியிருந்த சுவர்பக்கம் சாயம் பூசவேண்டாம். எங்கள் வீட்டில் நாங்கள் பூசியிருக்கின்ற சாயத்தைப்போலவே நான் பூசிக்கொள்கிறேன். என்று சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அத்தோடு அவர்களால் எந்தத் தொல்லையும் எங்களுக்கு இல்லை. இதுவரையிலும்.. இனியும் வராது காரணம் நிஜமாலும் புரிந்துணர்வு உள்ள நல்ல மனிதர்கள் அவர்கள்.

இந்தப்பக்கம் உள்ள நம்ம ஆள், ஓயாமல் எங்களுக்கு ஆலோசனை அறிவுரைகளை வழங்கியவண்ணமாகவே இருக்கின்றார். முன் தினம் எங்களை அழைத்து, `நான் வீட்டிற்கு சாயம் பூசப்போகிறேன். உங்களின் சுவர் மழை நீர் பட்டு அசுத்தமாக மாறிக்கொண்டு வருகிறது, சாயம் பூச, உங்களின் பங்கிற்கு நீங்கள் ஒரு டின் சாயம் வாங்கிக்கொடுங்கள், எங்கள் வீட்டிற்கு சாயம் பூசும்போது நீங்கள் எழுப்பிய இந்தச் சுவருக்கும் சேர்த்தே சாயம் அடிக்கச்சொல்கிறேன், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்னங்க இது அநியாயமா இருக்கு.! உன் வீட்டுப்பக்கம் சுவர் அழகாக இருக்கவேண்டுமென்று நீ நினைத்தால், சாயம் வாங்கிப்பூசு. எங்களிடம் முறையிட என்ன வேண்டியிருக்கிறது.! நாங்கள் எழுப்பிய சுவர்தான் என்றாலும், அது  உனது சுமையைக் குறைத்து உனக்கும் பாதுகாப்பாக இருக்கின்றதுதானே. !? அறி(ய)வில்லையா?

கூடுதலாக மேலும் ஆலோசனைகளை வாரி வாரி வழங்கியிருக்கின்றார்.. மழை நீர் கூரையின் மேலிருந்து சுவரில் பட்டுத்தெறிக்காமல் நேராக கால்வாயினுற்குள் செல்வதைப்போல் ப்ளாஸ்டிக் குழாய்கள் பொருத்திவிடுங்களேன். சாயம் அடித்தாலும் நீண்ட நாள் மழை நீரால் அழிந்துபோகாமல் அப்படியே இருக்குமே.! எப்படி.??

என்னிடம் மட்டும் இதையெல்லாம் சொல்லியிருந்தால், நான் எப்போதே சில விஷயங்களைச் சொல்லிக்காட்டி சண்டை  போட்டிருப்பேன். என் கணவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவர் பல விஷயங்களைப் பலகோணத்தில் ஆராய்ந்து யோசித்துக்கொண்டிருப்பவர். என் வாயை அடைத்துவிடுபவர்.

``போடா.. நீ என சொல்வது. நாங்கள் என்ன கேட்பது.!’’ என்பதைப்போல் எதையும் பொருட்படுத்தாமல் மௌனமாகவே இருப்பதாக முடிவு செய்துவிட்டோம்.

மீண்டும் அழைப்பான்.. தலையை ஆட்டிவிட்டு. அமைதியாக இருந்துவிடவேண்டியதுதான். எனது வீழ்ச்சியில் அவன் மகிழ்வான் என்பதால் பகைத்துக்கொள்ள மனமில்லை.      

வெள்ளி, ஜனவரி 02, 2015

பதிவர்

ஒருவருடைய ப்ளாக் செல்கிறோம். அங்கே அவர்கள் இட்ட பதிவுகளை நாம் வாசிக்கின்றோம். அப்பதிவாகப் பட்டது நம்மை கவரவோ அல்லது காட்டத்தை ஏற்படுத்தவோ செய்கிறபோது, நாம் நமது கருத்துகளை அங்கே பகிர்ந்து நமது மன உணர்வுகளை எழுத்துகள் மூலமாக வெளிப்படுத்துகிறோம். அப்போது, அக்கருத்தாகப்பட்டது அந்தப்பதிவரின் அனுமதிக்குப்பிறகே பிரசுரிக்கப்படும் என்கிற சமிக்ஞையோடு விடைபெறுகிறது.
கருத்தைச் சொல்லிவிட்டு வந்த நாம் அக்கருத்திற்கு எம்மாதிரியான எதிர்மறை அல்லது நேர்மறை கருத்துக்கள் பதிவர் மூலம் கிடைக்க்கப்பெறும் என்று காத்திருக்கின்ற போது, அக்கருத்தாகப்பட்டதை அப்பதிவர் ஒரு பொருட்டாகக் கருதாமல், அனுமதித்து பிரசுரிக்காமல்அலட்சியம் செய்துவிட்டும் போது, வாசகர், கருத்துப்பகிர்கிறவர் என்கிற கோணத்தில் நாம் நமது நேரத்தை தேவையில்லாமல் இவரின் பதிவின் கீழ் வீனடித்து விட்டோமே, என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை. (அதற்குப்பிறகு அப்பதிவர் என்ன சொன்னாலும் அங்கே சென்று வாசிக்கவேண்டும் கருத்துப்பகிர வேண்டும் என்கிற எண்ணமே வராது என்பது வேறு விஷயம்.)
இதுபோன்ற பதிவர்கள், அனுமதிக்குப்பிறகு பிரசுரிக்கப்படும் என்று சொல்லாமல், பெரிய எழுத்தாளர்கள் போல், கருத்துகளுக்கு அனுமதியில்லை, என்று, கருத்துப்பகிர்வு பகுதியை எடுத்துவிடலாமே..!
வாசகர்களின் கருத்து முக்கியம். அதுதான் வளரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி பூஸ்ட் என்று பொதுவில் அப்பாவியாய் சொல்லிவிட்டு கருத்து சொல்கிறவர்களை அலட்சியம் செய்கிற வளரும் எழுத்தாளர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆமாம் இவர் பெரிய கருத்து கந்தசாமி - இவரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று முகநூலில் அலுத்துக்கொள்கிறார்; என்று முணுமுணுப்பவரா நீங்கள்...? அப்படியென்றால் நீங்கள் நிஜமாலுமே பரிதாபத்திற்குரியவர்