தென்றல் விழாவிற்குச் சென்றுவந்தவுடன், நான் எழுதிய ஆதங்க கட்டுரை இது, ஆசிரியர் வித்யாசாகரின் உரையை மேற்கோள்காட்டி எழுதியிருந்தேன். சிறப்பாகவே சேர்த்துக்கொண்டார் இதழில்.
தென்றலின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, பல முகம் காணா நட்புகளையும் நீண்ட நாள் உறவுகளையும் சந்தித்தில் பேருவகை கொள்கிறேன்.
விழாவிற்கு உயிரோட்டமாய் இருந்தது அந்தக் கலகல அறிவிப்பு பணிதான் என்றால் அது மிகையல்ல. பலகுரல் வண்ணம் செய்துகாட்டி, அற்புதமான பாடல்களைப் பாடி, தமது பாணியில் வித்தியாசமாக அறிவுப்புப் பணிதனை மேற்கொண்டு ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட்டார் ஜாசின் தேவராஜன்.
கேக்’கிற்கு சுவை வெதுப்பி என்று தமிழ் படுத்தி புதிய சொல் ஒன்றையும் கற்றுக்கொடுத்தார். நன்றியும் வாழ்த்துகளும் ஜாசின் தேவராஜ் அவர்களுக்கு.
ஆசிரியர் உரை:-
நிகழ்விற்கு முத்தாய்ப்பாய் அமைந்தது ஆசிரியரின் உரை. உள்ளபடியே உரைந்துபோனேன். சொற்கள் ஒவ்வொன்றும் சுருக்சுருக் என்றிருந்தது. உண்மையைச் சொல்லும்போது, உறைக்கத்தான் செய்யும்.! இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே என்கிற ஏக்கத்தை உண்டு பண்ணியது அவரின் உரை.
சொல் வேந்தர் சுகி சிவம் சொல்வார், ‘மேடைப்பேச்சு சுவாரிஸ்யமாக இருக்க வேண்டுமென்றால், தனிநபர் துதிப்பாடுதலை பேச்சாளர்கள் விட்டொழிக்க வேண்டும்.’ என்று. அதை ஆசிரியரின் உரையில் காண முடிந்தது.
அனைத்திற்கும் சன்மானம்!
அவரின் பேச்சில் என்னை அதிகம் கவர்ந்தது இதுதான். :
`எங்களுக்கு எந்த பாராபட்சமும் கிடையாது. படைப்புகள் தரமானதாக இருந்தால், மீண்டும் மீண்டும் அதே படைப்பிற்கும் படைப்பாளிக்கும் பரிசு தருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..’ என்ற போது, அகமகிழ்ந்து கைத்தட்டினேன். நல்ல சிந்தனைதான் இருப்பினும், போட்டிகளின் போது பிரசுரமாகுகின்ற அனைத்து சிறுகதைகளுக்கும் கண்டிப்பாக சன்மானம் வழங்கப்படவேண்டும் என்பதுதான் எங்களின் அவா. எல்லாமே சிறப்பான சிறுகதைகள்தாம் இல்லையேல் இந்த சிறப்புப்போட்டியினை அலங்கரிக்க அவை தகுதியற்றவைகளாக ஆகியிருக்குமே.
முட்டை இடும் கோழிக்குத்தான் வலி தெரியும் என்பதைப் போல, எழுதுகிறவர்களுக்குத்தான் அதன் சிரமம் புரியும்.
ஒரு படைப்பை முடிக்க எப்படியெல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்கள் தெரியுமா எழுத்தாளர்கள்? சும்மானாலும் எதையும் எழுதிவிடமுடியாது. சண்டைக்கு வந்துவிடுவார்கள். ‘உண்மையாகச் சொல்லப்பட்டதா? சரியாக இருக்குமா? பிரச்சனை என்று வந்தால் என்ன செய்யலாம்? யாரிடமாவது உறுதிப்படுத்திக் கொள்வோமா? எங்கேயோ படித்ததைப்போல் இருக்கிறதே!? காப்பி என்று சொல்லிவிடுவார்களோ!? எதற்கும் இணையத்தில் துணை கொண்டு சோதித்து எழுதலாமா? இந்தந்த புத்தகங்களைப் புரட்டினால், கிடைக்குமா?.. என, இப்படிப்பல போராட்டங்களில் உழன்றுதான் ஒரு படைப்பை முடிக்கிறான் ஓர் படைப்பாளி. அப்படியிருக்கும் போது, உற்சாகப் படுத்த சன்மானமோ, பரிசோ, மலர்மாலையோ, பொன்னாடையோ கொடுத்துத் தட்டிக்கொடுக்கலாம். முடிந்தால் அடுத்த முறை அனைவரையும் மேடையேற்றி அறிமுகமாவது செய்து அங்கீகரிங்கலாம்.
அநாகரிக எழுத்து
ஆசிரியர் அவர்களின் உரையில் சொன்ன மற்றொரு கருத்திலும் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ’எழுதும் வாசகர்கள் கணிசமாகக் குறைந்துக்கொண்டே போவதால் தான்.. எழுதப்படுகின்ற அனைத்து படைப்புகளுக்கும் ஆதரவு தருகிறோம்’ என்பது தான் அது. இது எப்படி இருக்கு தெரியுமா? உணவிற்குச் சுவை கொடுக்கிற உப்பு தீர்ந்து விட்டால், உப்பைப் போலவே இருக்கின்ற மண்ணைக் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம் என்பது போல்தான் இருக்கின்றது.
ஆசிரியர் அவர்களின் கவனதிற்கு - எந்த ஆண்டுமே இல்லாத ஓர் அநாகரிக எழுத்துப்போர், கடந்த ஆண்டு நடைப்பெற்றது நம்ம தென்றலில். கருத்து மோதல்கள் எழுத்துத்துறைக்குத் தேவையே, அதன் அடிப்படையில் நடந்த எழுத்துப் போரில், கருத்து மோதல்களை விட, தனி நபர் தாக்குதல்களில் எழுத்தில் கண்ணியம் காக்கப்படவில்லை என்பது நிஜம். ‘முண்டம், முண்டச்சி,அறிவுகெட்ட ஜென்மம், நாறிப்போகும் தென்றல், மூளையே இல்லாத மடச்சி, நீ,வா, போ, அவன், இவன், மாங்காய் மடையன், தேங்காய்கள், சாக்கடைகள், கபோதிகள் போன்ற சொற்களைக்கொண்டு வாசகர்கள் கடுமையாக மோதிக்கொண்டார்கள். இச்சர்ச்சைகளால் பொங்கி எழுந்து, பேனா பிடித்தவர்களும் உண்டு - குளிர்காய்ந்து குள்ளநரி வேண்டம் பூண்டவர்களும் உண்டு. இதனாலேயே நட்பாய் இருந்த பலர், பகையாளியாகவும் மாறிவிட்டனர் என்றுகூட சொல்லலாம்.
இதுபோன்ற படைப்புகளையும் எழுத்துகளையும் நீங்கள் தவிர்த்திருக்கலாம். (எனது படைப்புகளையும் சேர்த்துத்தான்) ஆதரவு என்கிற பெயரில், தரம் குறைந்து காணப்படும் எழுத்துக்களால், எழுத்துலகிற்கும் இலக்கியத்திற்கும் எந்தவொரு நன்மையும் ஏற்படப்போவதில்லை. அப்படி எழுதுபவர்கள் நிச்சயம் எழுத்துப்பணியில் வளர்ச்சியடையப் போவதில்லை. அவர்கள் சிந்தனை மழுங்கியவர்கள். தனிநபர் தாக்குதல் செய்து எல்லாவற்றையும் நாசம் செய்பவர்கள். எப்படி ஆதரவு தந்து வளர்த்துவிட்டாலும், நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்த கதைதான். ஆக, எழுத்தில் கண்ணியம் காக்க முடியாதவர்கள், எழுத்துத்துறைக்கு வரத் தகுதியற்றவர்கள்.
சிலரின் எழுத்துகளை நாம் வாசிக்கும் போது, அவை நம் மனதிலும் பதிந்து போகின்றன. சதா எதையாவது எழுதிக்கொண்டிருக்கும் நாம், சில விவரங்கள் எழுதும் போது, நல்ல வாசகங்களுக்குப் பதில் சட்டென்று இந்த அநாகரிக சொல் வந்து உட்கார்ந்து இடம்பிடித்துக்கொள்கிறது. இப்படித்தான் ஒரு பத்திரிக்கைக்கு, எனது கருத்தைச் சொல்லும் போது, ஒரு சொல்லை கைத்தவறி எழுதிவிட்டேன். அந்த ஆசிரியர், எனக்குத் தனிப்பட்ட முறையில் அழைத்து.. “அம்மா, எவ்வளவு கோபமாக இருந்தாலும், எழுத்தில் கண்ணியம் வேணும் டா.!” என்று அன்பாகக் கண்டித்தார்.
ஒரு பக்கம் ஏற்றுக்கொண்ட சொல், மற்றொரு பக்கம் புறக்கணிக்கப் படுப் போது - நாம் எதோ தவறு செய்துவிட்டோமென்கிற குற்ற உணர்வு நாடி நரம்புகளை ஆட்டிப்படைக்கிறது. ஆக, எழுத்தும் எழுத்துத்துறையும் வளர கண்ணியம் காக்கப்படாத எழுத்தாளார்கள் கண்டிப்பாக விரட்டியடிக்கப்படவேண்டும்.
இதுவே நான் தென்றலுக்கு வைக்கும் அன்பான வேண்டுகோள். மற்றபடி அனைத்து நிகழ்வுகளும் நன்று. வாசக அறிமுகங்கள் மனதிற்கு உற்சாகத்தை அளித்தன.
அடுத்தடுத்த நிகழ்வுகளில் நல்லதொரு எழுத்தாள வாசகர்களாக தங்களை மெருகேற்றிக்கொண்டு வலம் வருவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக..
நன்றி.