திங்கள், ஏப்ரல் 02, 2012

சொல்லத்தெரியாது எனக்கு

கடினமான முறையில்
சுற்றி வலைத்து
சொல்லத்தெரியாது, எனக்கு

மௌனத்தை மொழிபெயர்த்து
உணர்வுக்கு ஒளியூட்டி
தமிழ் சொற்களையெல்லாம் ஒன்றுதிரட்டி
வாசகங்களை நீட்டி
வாசிப்போரை வாட்டி  
எழுத்துக்களுக்கு உயிரூட்டி
கோர்க்கப்படுகிற உணர்வுகளில்
உடன்பாடு இல்லை, எனக்கு

சிப்பி, முத்து, நத்தை
காற்று, பூ, மகரந்தம்
கடல், அலை, கரை
இலை செடி கொடி
என்றெல்லாம் உவமைகளை அடுக்கி
உணர்வுதனைச் சொல்வதில் என்ன பயன்?

எழுத்து ஜாலம்
சொல் விளையாட்டு
புரியாத வார்த்தைப் பிரவகம்
மொழியைப் புரட்டிப்போடுதல், என
வாசகர்களை கிலி பிடிக்கவைத்து
எண்ணத்திற்கு உருவம் கொடுப்பதில்
இஷடமில்ல, எனக்கு

வானளவு உயர்த்தியும்
நச்சத்திரங்களோடு சேர்த்தியும்
வென்மதியோடு ஒப்பிட்டும்
சூரியனுக்கு நிகராக 
பிரகாசிக்கும் ஒளிப்பிழம்பாக
உன்னைப் பரிகாசிக்கத்து
போலியான வெளிப்பாட்டால்
ஆக்கிரமிக்கத்தெரியாது, எனக்கு

யாரையோ சொல்லி
எவரையோ உதாரணம் காட்டி
எங்கேயோ வந்து
புழு, வண்டு, தேனி, எறும்பு, கரப்பான்பூச்சி என
எதாவது ஒரு உவமையில் நிறுத்தி
சொல்லவந்ததை சொல்லாமலேயே
முற்றுப்புள்ளி வைக்கப்படுகிற
ஜாலமெல்லாம் தெரியாது, எனக்கு

வெள்ளை மனதில்
உதிப்பதையெல்லாம்
ஒளிவு மறைவு இல்லாமல்
அப்படியே சொல்லி பழகியாச்சு

புதிர் போடாமல்
தெளிவாக
நேராகவே சொல்கிறேன்
ஆச்சிரியத்தோடு, என் வினாவை.

‘_________________!?’





மகேசன் சேவை

யாருக்கு என்ன நடந்தாலும், விதி கர்மா என்பேன், அது என்னை பெற்றவர்களாக இருந்தாலும் சரி, வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி. ஆனால், என் பிள்ளைகளுக்கு எதாவது வந்துவிட்டால் மட்டும், என் மனம் இப்படித்தான் யோசிக்கும்,..

`
நான், யாருடைய மனம் நோகும் படி எதாவது செய்துவிட்டேனா,!? யாருக்காவது எதாவது துரோகம் செய்தேனா? என்னையறியாமல் எதாவது பாவக்காரியங்களில் ஈடுபட்டுவிட்டேனா!? இறைவா என்னை மன்னி..என்று மன்றாடுவேன்.

எனக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது, பெற்றவர்களின் பாவ புண்ணியங்கள் பிள்ளைகளைச்சேரும், என்கிற வாசகத்தில்..! இது மூட நம்பிக்கை என்று புறந்தள்ளிவிட முடியாது. நான் பார்த்திருக்கின்றேன் என் அனுபவத்தில், ஒருவர் செய்த பாவத்தால், அவரின் ஒன்றுமறியா மகன்கள் பலிகடா ஆனதை.

திருமணமான பெண், கணவனின் நண்பர், வீட்டிற்கு வரப்போக இருக்கையில், அவனின் மேல் மோகம் கொண்டு, காதல் ஏற்பட்டு. காதல் முற்றி, வீட்டை விட்டு ஓடிவிடும் அளவிற்கு வந்து விட்டது நிலைமை. அவன் திருமணமாகாதவன். ஒரு பெண்பித்தன். அவனின் பொழுதுபோக்கே பெண்களை வசப்படுத்தி தம் வலையில் விழ வைப்பதுதான். அனுபவிப்பது, பிறகு அடுத்த பெண்ணைப்பார்ப்பது, அவனுக்கு அது சுவாரஸ்யம்.

இவளின் விஷயத்தில் இந்த லீலைகள் எடுபடவில்லை. நன்றாகச் சிக்கிக்கொண்டான். அவளும் அவனை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு, இருவரும் ஊர்விட்டு ஓடிவந்துவிட்டனர்.

அவள் வீட்டைவிட்டு அவனுடன் ஓடுகிறபோது, அவளுக்கும் அவளின் கணவனுக்கும் பிறந்த ஆண்குழந்தைக்கு மூன்று வயது. பால் குட்டிக்கும் பச்சைக் குழந்தை. அக்குழந்தை தாயைக்காணாமல் கதறி அழுத காட்சி காண்போரை கரைய வைத்ததாம்.

அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பம் பட்ட அவஸ்தைகள் அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த மூன்று வயது குழந்தை `அம்மா காணோம்.. அம்மா வேணும்.. அம்மா அம்மா..என தினமும் வீட்டைச் சுற்றிச்சுற்றி ஓடி பெற்றவளைத்  தேடுவான்.
அந்தக்காட்சியை எழுதுகிறபோதே என் கண்கள் பனிக்கின்றன.


காதல் ஜோடிகள் பல வருடங்கள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி மறைந்து வாழ்ந்து, வெளி உலகிற்கு அறிமுகமானபோது அவர்களுக்கு இரண்டு மகன்கள். 

ஏற்கனவே உள்ள இவரின் முதல் திருமணத்தில் பிறந்த அந்த மூன்று வயது மகனையும் அங்கே விட்டு, இங்கே விட்டு.. நான் பார்க்கிறேன்! நீ பார்.! பெத்தவளே விட்டுட்டுப்போயிட்டா நமக்கென்ன.! அப்பனும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டான்.! யார் பார்ப்பா இவனை..? சொத்து பத்தா இருக்கு வைச்சுப் பார்க்க..! ரொம்ப ராங்கி.. பார்க்கமுடியல.. என்று அங்கேயும் இங்கேயும் அலைக்கழிக்கப்பட்டு, பள்ளிக்குக் கூட முறையாக அனுப்பாமல்,  போகும் இடமெல்லாம் மொத்தடிப்பட்டு, கெட்டபெயரைச் சுமந்து, வளர்ந்து பெரியவனாகி, திருடு, பொய் புறட்டு என போலிஸ் வாசலெல்லாம் ஏறி இறங்கி, ஒரு வகையாக, வாழ்வில் செட்டல் ஆகிவிட்டான்.

இவர்களின் புதிய உறவில் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருவன், பதினாறுவயதில், பயங்கரமான விபத்து ஒன்றில் சிக்கி, கழுத்திற்குக்கீழ் உடல் செயலிழந்து, இப்போது கிட்டதட்ட முப்பது வயதாகியும் அதே நிலையில், சக்கர நாட்காலியில் உலவுகின்றான்.. தமது கைகளைக்கொண்டு உணவு உண்பதற்குக்கூட இயலாமல் இருக்கும் நிலையில் அவன். 

தாய்தான் உணவு ஊட்டி விடுகிறாள். மூன்று வயது பச்சைப்பிள்ளைக்கு பால் கொடுக்காமல் தவிக்க விட்டதன் காரணமாகவே, முப்பதுவயது மகனுக்கு இன்னமும் உணவு ஊட்டுகிற நிலையில் வைத்துவிட்டார் இறைவன், என்பார்கள் சிலர்.

அவள் படுகிற அவஸ்தைகள் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இன்னொரு மகன், வேலை செய்யும் இடத்தில், கம்பனியின் பணத்தைக் சூறையாடிவிட்டான் என்கிற குற்றச்சாட்டின் பேரில் போலிஸுக்குச் சென்று, பழிபாவங்களை சுமந்து, செய்துகொண்டிருந்த வேலையில் இருந்தும் நீக்கப்பட்டான்.

பிள்ளைகள் படுகிற அவஸ்தைக்கு, தான் செய்த பாவங்களே மூலக்காரணமென்று அவளும் மதம்மாறி பல தெய்வங்களிடம் மண்டியிட்டு மன்றாடிக் கொண்டிருக்கின்றாள். இன்னமும் துன்பங்கள் தொடர்கதைதான்.


ஆகவே,  பிள்ளைகளின் வாழ்வு சிறக்க, பாவச்செயல் என்று வகைப்படுத்தப்பட்ட எந்த காரியத்திலும் நான் ஈடுபடவே கூடாது என்கிற எண்ணம் தணலாய் இருக்கும் எனக்குள்.

நான் நல்லொழுக்கங்களையும் நேர்மையையும் கடைபிடிக்கின்ற போது, என் குழந்தைகளுக்கு எதுவும் நிகழாமல் இறைவன் அவர்களைக் காப்பான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே உண்டு.

பிறர்மேல் பொறாமை படுவதற்குக்கூட அஞ்சுவேன். அது கூட பாவச்செயல்தான். பல அவலங்களின் தொடர்கதைகளுக்குக் காரணம் இந்த பொறாமை குணமே.

இறைவனிடம் வேண்டுவது, எனக்கு எந்த முறைக்கேடான சந்தர்ப்பத்தையும், சோதனையையும் கொடுத்துவிடாதே. நான் இப்படியே நல்ல பெண்ணாகவே இருந்து விட்டுச் சாகிறேன்.

என் வாரிசுகளை நல்லபடி காப்பாய். மக்கள் சேவைக்காகவே உருவாகிறவர்கள் அவர்கள். பெரிய ஆட்களாக வருவார்கள், மக்களைக் காப்பாற்றுவார்கள்.

நீயே துணை.