சனி, ஜூலை 21, 2012

இப்போ என்ன?

ஒரு முக்கியமான டாக்குமண்ட் தொலைந்து விட்டது  எங்கள் அலுவலகத்தில். எப்படித் தொலைந்தது எனத் தெரியவில்லை. அது ஒரு ரெஜிஸ்டர்எங்க சி.இ.ஒ செகரட்டரியின் (அவருக்கு நிறைய செகட்டரிகளில் இவளும் ஒருவள்)  கார் ரோட் டஃக்ஸ். ஏற்கனவே, மூன்று நாட்களுக்கு முன்னமே அவள் என்னிடம் சொல்லி வைத்திருந்தாள். 


``ரொம்ப அர்ஜெண்ட், எங்க அப்பா அனுப்பி வைப்பார், பத்திரம் பத்திரம்..’’ என.! 


``சரி, வந்தால் நிச்சயம் எடுத்து வைக்கிறேன்’’ என, நானும் உறுதி வழங்கியிருந்தேன்.


முடிந்த சனிக்கிழமை எங்களுக்கு வேலை. நான் செல்லவில்லை. பொங்கல், வீடு சுத்தம் செய்யனும் என்பதால் லீவு எடுத்துக்கொண்டேன். ஒரு போலிஸ் புகார் செய்வதற்காகவும்,  வெளியே சென்றிருந்தோம். தொலைப்பேசி தொல்லை என்பதால், அதை அடைத்துப்போட்டு விட்டு, எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின், தொலைப்பேசியை ஆன்செய்தேன். என்ன ஆச்சிரியம், 19 மிஸ்டு கால்கள். எல்லாமே அவளுடைய எண்கள். பதறிப்போய், பதில் அழைப்பு விட்டேன்.

ஹாலோ, என்னுடைய அந்த ரெஜிஸ்டர் வந்து மூனு நாளாச்சாம்..

அப்படியா?, என்னிடம் இல்லையே.!

யாரோ..ஷம்சூல் என்பவன் சையின் பண்ணி எடுத்திருக்கான்..

, அவனா? பக்கத்து பில்டிங்கில் ஸ்டோரில் வேலை செய்பவன்.. அவனிடம் போய் கேளு..!

இன்னிக்குச் சனிக்கிழமை, அவர்களுக்கு வேலை இல்லை..

அப்போ இரு, திங்கட்கிழமை கேட்போம்..

நான்..திங்கட்கிழமை வெளியூர் போறேன், அந்த ரோட் டக்ஸ் இல்லாமல் என்னால் நகர முடியாது..” மனதிற்குள் திட்டினேன் அவளை, அதற்கு நான் என்ன பண்ண முடியும். !? சொல்றது விளங்குதா பாரு.. இவளை.... இர் இர் இர் !


ஹாலோ, என்ன பண்ண முடியும்? எப்படிப் பார்த்தாலும், திங்கட்கிழமை வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.
மீண்டும் தொடர்கிறாள் .. குருட்டுத்தனமான கேள்விகளோடுஷம்சூலுக்கு போன் போட்டால்?”

ம்ம்..போடு நம்பர் இருந்தால்.. என்னிடம் அவன் நம்பர் இல்லை.!’’

நீ, இப்படிப் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது விஜி..


எனக்குக் கோபம் வந்துவிட்டது.. இப்போ நம்மால் எதுவும் பண்ண முடியாது, காத்திரு திங்கட்கிழமைவரை.. பிறகு பார்க்கலாம்.. என் போனில் கிரெடிட் வேறு ரொம்ப குறைவா இருக்கு..போனை வை.என துண்டித்து விட்டு வேலைகளைக் கவனித்தேன். இருப்பினும் என் மனம் அவளைச் சுற்றியே.. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், இங்கிதமென்பது ரொம்ப குறைவாகவே தான் இருக்கு, ஒரு சின்ன விஷயத்தைக்கூட புரிந்துக்கொள்ள முடியாமல், இப்படிச் சூழ்நிலை கைதியாகிக் கிடக்கிறாளே! இதனைக்கும் அவள் வெளி நாடு சென்று படித்து பட்டமெல்லாம்(!) வாங்கியவள்.


திங்கட்கிழமையும் வந்தது.
அவள் வேலைக்கு வரவில்லை. சொன்னது போலவே வெளியூர் பணயம் சென்று விட்டாள். நான் காலையில் காரில் வந்துக்கொண்டிருக்கும் போதே, என் கைத் தொலைப்பேசி சிணுங்கியது. அவள் தான். நினைவூட்டினாள், அந்த ரெஜிஸ்டர் விவகாரத்தை. 


``கவலைப்படாதே, நினைவில் இருக்கு.’’, என சொல்லிவிட்டு, அலுவலகம் கூட நுழையாமல், ஷம்சூலைத் தேடி அடுத்த பில்டிங்கிற்குச் சென்றேன்.
அவன் இன்னும் வரவில்லை. அங்குள்ள மற்றொரு ஊழியரிடம் கேட்டேன், “லேட் ஆகும், பிறகு வா!என்றான்.
சரி என கூறி, சரியாக ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அவனைத்தேடிச் சென்றேன். அவன் இன்னும் வரவில்லை. நமக்குன்னு ஒரு பிரச்சனையென்றால் இப்படித்தான் கடவுள் சோதிப்பார்..இது தெரிந்த விஷயம் தானே.! அதற்குள் அவள் என்னை நிறைய முறை தொல்லை தந்த வண்ணம்.
மீண்டும் ஒரு மணி நேரம் கழித்துச் சென்றேன். அவன் அறையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஷம்சூல் எங்கே?” கேட்டேன்.

அவன் இன்று, இமெர்ஜென்சி லீவு, பிள்ளைக்கு உடம்பு சரியில்லையாம்..பதில் அவளிடமிருந்து. போச்சுடா என்றிருந்தது எனக்கு. இந்த லூசுக்கு வேறு பதில் சொல்லித்தொலைக்கனுமே.. நினைக்கும் போதே, தெலிஃப்பதி வேலை செய்தது. அவள் அழைத்தாள்.

என்னாச்சு?”

ஷம்சூல் வேலைக்கு வரவில்லை..அங்குள்ளவர்களிடம் கேட்டேன், யாருக்கும் தெரியாது என சொல்லிவிட்டார்கள். நாளை வரை பொறு.!என்றேன். அவள், விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். முணகினாள், வேலைக்கு வராத அவனைக் கெட்ட வார்த்தையில் திட்டினாள்.. என்னிடம் சலித்துக்கொண்டாள். சமாதானம் சொன்னேன், அவளால் பொறுமையாகவே இருக்க முடியவில்லை.


மறுநாள், எனக்கு முன், என் இருக்கையில் எனக்காகக் காத்திருந்தாள். சரி வா இருவரும் ஷம்சூல் அறைக்குச் செல்வோம் என சென்றோம். அவன் இருந்தான். காலைப் பசியாற, தட்டில் வைத்திருந்த மீ கொரிங்கை (நூடல்ஸ் பிரட்டல்)  பொறுமையாக சுவைத்த வாறு.. புருவத்தை உயர்த்தி என்ன? என்பதைப்போல் எங்களைப் பார்த்துக்கேட்டான். பதற்றத்துடன் விளக்கிக்கொண்டிருந்தாள் அவள். அவன் சாப்பிடுவதைக்கூட நிறுத்தாமல், “நானா? என்னிடம் கொடுக்கப்பட்டதா? எப்போ?” என கேட்டவாறு, மெதுவாக எழுந்து, கடிதங்கள் அடுக்கியிருக்கும் இடத்தில் எட்டிப்பார்த்தான்.


``நீ சாப்பிடு, எங்கிருக்கும் என்பதை மட்டும் சொல்லு, நாங்கள் தேடிக்கிறோம்..’’ என அவசரப்படுத்தினாள் அவனை.


``அங்க பாரு, இங்க பாரு..’’ என இடத்தை மட்டும் காட்டி விட்டு, சாப்பாட்டைத்தொடர்ந்தான். ரெஜிஸ்டர் கிடைக்கவில்லை. குப்பைத்தொட்டியில் கிளறினாள், மேலே அடுக்கி வைத்திருக்கும் டாக்குமெண்ட்ஸ் பெட்டிகளில் தேடினாள். (யாராவது அவ்வளவு உயரத்தில் எடுத்து வைப்பார்களா என்ன!!) அவனின் அனுமதி இல்லாமல் அவனுடைய பேஃகைத் திறந்தாள், தேடினாள். அவனின் ட்ரேய், ஒவ்வொன்றாகத்தேடினாள், பக்கத்தில் இருந்த அலமாரியை அலசினாள், நானும் எதையோ தேடுவதைப்போல் பாசாங்கு செய்தேன். ஒரு சின்ன ரெஜிஸ்டர் அவ்வளவு பெரிய கடிதக் குப்பையில் சுலபமாகக் கிடைத்து விடுமா என்ன!?
ஷம்சூலும், கைகளைக் கழுவச் சென்று விட்டான். மெதுவாக உள்ளே நுழைந்தான். ஒரு துண்டை எடுத்து, வாய் கை என மெதுவாக துடைத்துக்கொண்டே.கிடைத்ததா?” என்றான். அவனின் பதற்றமில்லாத இந்த செய்கை வேறு அவளை எரிச்சல் ஊட்டியது.

நீ, இப்படி ரெஸ்பான்சிபல் இல்லாமல் இருக்காதே.! உன்னுடைய சையின் தான் இருக்கு. நீ தான் சையின் பண்ணி ரெஜிச்டரை எடுத்திருக்கின்றாய். இதற்கு நீதான் பொறுப்பேற்கனும்!அவனை எச்சரித்தாள். அவன் அதைக் கொஞ்சங்கூட சட்டை செய்யவில்லை.

அப்படியா? உன்னுடையது ஏன் இங்கு வருது? சரியான முகவரி நீ கொடுக்கலையோ!?” அதே அமைதியான தொணியில் அவனிடமிருந்து பதில். நான் அந்தக் காட்சியை உற்று கவனித்துக்கொண்டிருந்தேன். அவள் நெருப்பில் இட்ட புழுவாய் நெளிந்துக்கொண்டிருந்தாள் படபடப்பாக.!


அவளின் சுபாவமே அப்ப்டித்தான். அவசரக்குடுக்கை. ஒரு நாள் இப்படித்தான், நான் அமர்ந்திருக்கும் இடத்தின் முன்னே உள்ள கண்ணாடிக்கதவு திறப்பதற்குள் வேகமாகச் சென்று முட்டிக்கொண்டாள். படார் என்று ஒரு சத்தம், நான் பதறிப்போனேன்.. அவளின் மூக்குக் கண்ணாடி உடைந்து நொருங்கியது. தலையில் காயம். மண்டையைப் பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள். எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு, சிரிக்கக் கூடாதுதான் ஆனால் சிரிப்பு வருதே, இது போன்ற கோமாளிகளை நினைக்கும் போது என்ன செய்ய!? விபத்தைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது ஆனால் அரக்கப் பறக்கச்சென்று எதிலுமே பொறுமையில்லாமல் பீடு நடைபோட்டு, முட்டி மோதுபவர்களைக் கண்டால் குழந்தைகள் கூட சிரிக்கும். 


அப்போதும் கூட அவள் ஆள் தேடினாள், யார் மேல் பழி போடலாமென. நல்ல வேலை கதவு என்னுடையதல்ல.! இருப்பினும் எனக்கு அறிவுறுத்தல் வந்தது, கதவு திறக்கும் முன் சென்று விட வேண்டாமென, வருவோர் போவோருக்கு எச்சரிக்கை வாக்குமூலம் கொடுக்க வேண்டுமென்கிற பைத்தியக்கார நிபந்தனையும் அவள் மூலமாகக் கொண்டுவரப் பட்டது. சரி செய்கிறேன் என்றுச் சொல்லி, பின்னால் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.!


சரி, ரெஜிஸ்டர் போஸ்டைக் காணவில்லை. நாம் அங்கு தானே விட்டோம்.!? அவனின் பதிலும் திருப்தியளிக்கவில்லை. அவள் புழுவாய். நான் ஒரு பாத்திரமாய்...


அவள் தான். நான் சரியான முகவரி தான் கொடுத்திருந்தேன், தவறிப்போய் இங்கு வந்திருக்கும், நீ என்ன செய்யனும்!, உங்களுடையது இல்லையென்றால் அந்த போஸ்ட்மென்னிடமே கொடுத்திருக்க வேண்டும்.. அதை நீ செய்தாயா?” அவளிடம்.
அவனுக்குக் கொஞ்சம் கூட பதற்றமே இல்லை. ஆமாம், நான் எடுத்தேன், என்னுடைய சையின் தான் இருக்கு. ஆனால் உன் பெயர்போலவே எங்களுக்கும் இங்கே ஒரு ஸ்டாஃவ் இருக்காங்களே, அவர்களுடையது என நினைத்து எடுத்திருப்பேன்....!
பதற்றத்தோடு அவள்.. இல்லை அங்கேயும், நான் கேட்டுப் பார்த்து விட்டேன், அந்த ஸ்டாஃவ்யிடமும் இல்லை..

அப்படியில்லையென்றால், அந்த கடிதம் மீண்டும் போஸ்ட் ஆபிஸிக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கும்.....அவனின் பதில்.

சரி விஜி, இப்போ நீ, இங்கேயே போஸ்ட் ஆபிஸூக்கு அழை.என்னை உருட்டி எடுத்தாள். நானும் அழைத்தேன். எல்லாத்தகவல்களும் கொடுக்கப்ப்ட்டது.. அங்கிருந்து பதில், “இல்லை, இன்னும் எங்களுக்கு அந்த ரெஜிஸ்டர் திருப்பி அனுப்பப்படவில்லை. அப்படி அனுப்பியிருந்தால் எங்க ஊழியர்கள் நிச்சயம் அதை கணினியில் பதிவு செய்திருப்பார்கள்.”...


மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “பார்த்தாயாஅங்கும் இன்னும் செல்லவில்லை. இங்கு எங்கேயாவது தான் இருக்கனும், தேடு தேடு இல்லையேல், நீ தான் அதற்காக நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்..சொன்னதுதான் போதும்ஷம்சூலுக்குக் கோபம் வந்தது..
கொஞ்சம் குரலை உயர்த்த ஆரம்பித்தான்.


``இது என்ன பணமா, எடுத்து வைத்துக்கொண்டு உன்னிடம் வித்தைக் காட்டுவதற்கு! நாக்கு வழிக்கக்கூட உதவாத அந்த ரோட் டாக்ஸை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவதாம்.!? எங்கேயாவது போயிருக்கும், கிடைத்தால் கொண்டு வந்து கொடுக்கிறேன், இடத்தைக் காலி பண்ணு, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, என ஓட்ட ஆரம்பித்தான்.

சரி நான், உன்னுடைய போஸ்சைத் தொடர்புக்கொள்கிறேன்.!என முணகிக் கொண்டே, என்னோடு நடந்தாள் எங்களின் அலுவலகம் நோக்கி.. அவனும், “உன்னால் முடிந்ததைச் செய், இனி எதுவென்றாலும் போஸிடமே பேசிக்கொள்..எனக் கூறிகணினியை ஆன் செய்துக்கொண்டிருந்தான்.


கோபத்தில் என்னன்னமோ உளறினாள்அவனை என்ன பண்ணுகிறேன் பார், என என்னிடம் மங்கம்மா சபதமெல்லாம் போட்டுக் கொண்டே வந்தாள்.....


நான் மௌனமாக அவளின் வசவுகளைக் கேட்டுகொண்டே வந்தேன்..


இதை வாசிப்பவர்களுக்கு, இன்னேரம் ஒரு கேள்வி தோன்றியிருக்குமே!?
ஆம், அந்தக் கேள்வியை நான் அவளிடம் கேட்டவுடன் தான் அவள் அடங்கினாள். வாயை மூடினாள்.


(
ரெஜிஸ்டர் கிடைத்துவிட்டது - செவ்வாய்க் கிழமை மாலையில்) 


சென்ற மாத மின்னல் வாரப்பத்திரிகையில், போட்டிக் கதைகளுக்குத் தேர்வாகி பிரசுரமான கதைகளில் ஒன்று.. எனது சிறுகதை...