செவ்வாய், நவம்பர் 22, 2011

என் பெயர்

எனக்காக 
என் தந்தை 
எழுதிய முதல் கவிதை 
'விஜய லக்ஷ்மி'


மின்சாரமும் சம்சாரமும்

வஷிங் மிஷின் சத்தம் போடுது, 
க்கூக்கர் சத்தம் போடுது, 
க்கூக்கர் வூட் சத்தம் போடுது, 
எலெக்ட்ரிக் கேத்தல் சத்தம் போடுது, 
கிரைண்டர் சத்தம் போடுது,
மைக்ரோவெவ் சத்தம் போடுது,
ஃப்ரிட்ஜ் சத்தம் போடுது,

ஏர் கோன் சத்தம் போடுது,, 
ஃப்பேன் சத்தம்போடுது, 
வைக்யும் க்கிளினர் சத்தம் போடுது, 
ஷவர் சத்தம் போடுது,
ஹர் டிரையர் சத்தம் போடுது,

போன் சத்தம் போடுது,
டிவி சத்தம் போடுது, 
ரேடியோ சத்தம் போடுது, 
ஏன் மின்சார விளக்கு கூட... 
‘ஷ்ர்ஷ்ர்ஷ்ர்ஷ்ர்’ என்கிற் மெல்லிய சத்தத்துடன்... 

காதுகளுக்குத்தான் ஓய்வேயில்லை..
விரைவில் பழுதாகும்....
கவனம், மூளை மிக அருகில்
இது பெண்களுக்கு.....

save the women instead of earth...

இசைக் கச்சேரி

இப்போதெல்லாம், திருமண விருந்திற்குச் சென்றால், நிம்மதியாக உறவினர்களோடு அளவளாவ முடியலங்க. அங்கு தான் பல நாள் சந்திக்காத உறவுகளைச் சந்திக்கின்ற வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.. அவர்களோடு கொஞ்ச நேரம் மகிழ்ச்சியாகப் பேசலாம் என்றால், சந்தையில் கூவி, கூச்சல் போடும் மீன் வியாபாரி போல் காட்டுக் கத்து கத்தவேண்டியுள்ளது....!
இசை நிகழ்வு, இசை விருந்து என்கிற பெயரில் அதி வேகமாக ஒலிக்கும் விருவிருப்பான பாடல்கள் காதுகளைக் கிழிக்கின்றன. உணவு கூட இறங்க மாட்டேன் என்கிறது.
ஒரு ஆசிரியரிடம் என்னை அறிமுகப்படுத்தினாள் என் தங்கை, அவர் என் காதில் கத்த, நான் அவர் காதில் கத்த.. தர்மசங்கடம் தான் போங்க..! இறுதிவரை என்ன பேசினோம் என்பது இன்னும் எனக்கு சரியாகப் புலப்படவில்லை... 
மெல்லிசையா மெதுவாக ஒலிக்கும் பாடல்களைப் போட்டு, விருந்துகள் நடைபெற்றால் நமது கலாச்சாரத்திற்கு பாதிப்பு வந்து விடுமா என்ன! 

என்ன கொடுமை இது.?

சம்பளம்

இன்று சம்பள நாள். 
மாத முழுவதும் வேலை செய்து அதற்கான ஊதியத்தை மாத இறுதியில் பெற்றுக்கொள்கிறோம். சம்பளம் போட்டவுடன், பல செலவுகளின் பட்டியல்கள், இதற்கு..இதற்கு..இதற்கு.., மீதம் இருக்குமா என்றால், பலரிடமிருந்து ‘எங்கே...’ என்கிற இழுவைதான் பதிலாக அமையும். நடுத்தர வர்கமாயிற்றே நாம்,என்ன செய்வது.!!?

சரி விசயதிற்கு வருவோம்.. 
நம்மில் எத்தனை பேர் (பெச்சலர்கள் வேண்டாம்), நமது ஊதியதிலிருந்து ஒரு சிறிய தொகையை, நமக்காக, நமது ஹோபிக்காக செலவு செய்கிறோம்.. (புகை, மதுபானம்.. இதில் சேர்த்துக்கொள்ளவேண்டாம்).

உதாரணதிற்கு: மாதம் ஒரு முறை ,வித வித மான செடிகளை வாங்குவது, புதிய ஆடை ஒன்றாவது வாங்குவது, சினிமா செல்வது, புத்தகங்கள் சேகரிப்பது, அலங்காரப்பொருட்கள் வாங்கிவைதுக்கொள்வது, ஒப்பனைப்பொருட்க்ள், அணிகலன்கள், கைப்பைகள், காலணிகள் என இப்படி எதாவது இருக்கும்.. கண்டிபாக இருக்க வேண்டும்., இல்லையேல் உழைப்பதில் அர்த்தமில்லமல் போய்விடும்.

அப்படி ஒரு ஹோபி எனக்கும் உண்டு.. ஒரு சிறிய தொகையை (10%) நான் எனக்காகவே செலவு செய்வேன். ஆனால் எதற்கு செலவு செய்வேன், என்று மட்டும் சொல்லமாட்டேன். 
நீங்கள் யோசிக்கலாம்....பகிரலாமே..

பழிக்குப்பழி

அன்பால்
நீ, என்னை 
சாகடிக்க நினைத்தால்...!?

அதை வைத்தே
நான்,உன்னை 
கொலை செய்து விடுவேன்......!

நேசம் வைத்து
நீ என்னை
அடிமையாக்க நினைத்தால்...!?

அதை வைத்தே
நான், உன்னை
கொத்தடிமையாக்கி விடுவேன்..!

காதலால்
நீ, என்னை
கைது செய்ய நினைத்தால்..!?

அதைக்கொண்டே
நான், உன்னை
சிறையில் வைத்து விடுவேன்..!

கவனம்..பழிக்குப்பழி 
பெண்ணின் இயல்பு

களவு

ரகசியமாய்..
சத்தமில்லாமல்..
யாரிடமும் சொல்லாமல்...
நிறைவு பெறாமல்..
நிலைத்தும் நிற்காமல்..
நெருடலுடன்........!!!
போராடி போராடி
தோற்றுக்கொண்டிருக்கும்
முடிவில்லா முயற்சியில்,
தொடரும்..
கள்ளக் காதல்.

இளவரசி

 
எங்கள் ஊரின் 
பழய சாலை
புதுப்பிக்கப்படாமல்
இருந்திருந்தால்...
அந்த சிறிய
பேருந்து நிலையம்
சொல்லியிருக்கும்
நான் அமராவதி
என்று..!

தமிழ் புதிர்????

வீட்டு வேலைகளைச் செய்யும்
வேலைக்காரியின் வீடு
குப்பைத்தொட்டி..!

பெண்ணியன் பேசுபவரின் மனைவி
கிணற்றுத்தவளை..!

அடுத்த நொடி, சொந்தமில்லையாம்
சொல்பவர் முகத்தில்
ஆயிரம் ஒப்பனைகள்..!

காயப்படுத்தினாலும்
துன்பப்படுத்தினாலும்
காதலன் பெயர்தான்
திருமண பத்திரிகையில்..!

வேற்று இனப்பெண் மருமகள்
நாமென்றால்..என்ன குலம்??

பிள்ளைகளின் எதிர்காலம்
சீனப்பள்ளியிலாம்..!
வீட்டில் ஆங்கிலமாம்..!
நியாயம் கேட்க மட்டும்
தமிழ்ப் பத்திரிக்கையாம்...

’’ எழுதிப்போடு’’ என ஆவேச உத்தரவு!!..

மனசாட்சி

நீ
நல்லவளா?
இல்லையே, திடீரென்று பயங்கர
கோபம் வருமே...!

அப்படியென்றால், கெட்டவள்?
இல்லையே., துரோகம் செய்தவர்களையும்
மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளேனே...!

அப்படியென்றால், ஒரு கோழை
இல்லையே, எந்தப் பிரச்சனையும் என்னை
ஒன்றுமே செய்யவில்லையே..!

அப்படியென்றால், அடிமையோ?
இல்லையே, போராடிப்பெறுவதை
பெருமையாக நினைப்பவள் ஆயிற்றே..!

அப்போ நீ ஒரு போராட்டவாதி?
இல்லையே, பல வேளைகளில்
நமக்கேன் வம்பு என விலகியுள்ளேனே..!

ம்ம்ம்ம்..சுயநலவாதி?
இல்லையே, பல சந்தர்ப்பங்களில்
பிற்ருக்காக கண்ணீர் விடுபவள்...!!

.....ச்சே, எப்படியாவது போ
இனி என்னிடம் எதுவும் கேட்காதே...!
விடைப்பெற்றது, மனசாட்சி.

(சிற்றிதழில் வந்தது- நன்றி தென்றல்)

குளியல்

ஷவர்
சேஃம்பூ
டவல்
சோப்பு
டூத் பேஸ்ட்/பிரஷ்
ஹிட்டர்
பாத் ரூம்

நேத்து ராத்திரி யம்ம்ம்மா
தமிழ் பாத்ரூம் பாடகி நான்...

பொய்

உன் சொல்லெல்லாம்
மெய் அல்ல
சொல்லாததெல்லாம்
உண்மை

சேர்தல்

தனிமை பிடிக்கும்
பகிர்தலுக்காக....