தீபாவளிக்கு curtain ஆடர் செய்து தைக்கக்கொடுத்திருந்தேன். பெரிய பிரபல பேரங்காடியில் துணி வாங்கி அங்கேயே professional curtain tailors களிடம் தைக்கக்கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு மாதத்திற்கு முன் எல்லாம் ரெடி என அழைப்பு வரவும், வேலை முடிந்தவுடன் அவசர அவசரமாகச் சென்று எடுத்து வந்து ஒரு இடத்தில் போட்டு விட்டேன், நம்பிக்கைதான்.
இன்று நேரமிருக்கவும் அதை எடுத்துப்பார்த்தால், எல்லாம் தலைகீழ். தையல் சரியாக இல்லை..மேலும் கீழுமாகத் தைத்து, அலங்கோலமாக இருந்தது பார்ப்பதற்கு. கோபம், கோபம்.. காரணம் விலை மலிவு அல்லவே...
அழைத்தேன் அந்த கம்பனிக்கு. ஒரு மலாய் பெண்மணி அழைப்பை எடுத்தாள். பேசுகிற நான் தமிழ்பெண் என்று தெரிந்தவுடன் ஒரு தமிழ்ப்பெண்ணிடம் அழைப்பைக்கொடுத்தாள்.
தமிழ்ப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இன்று ஞாயிற்றுக்கிழமை நாளை எடுத்துக்கொண்டு வாருங்கள், சூப்பர்வைசர் இருப்பார், அவர் செட்டல் செய்வார் கவலை வேண்டாம், என்றார். எல்லம் சரியே, ஆனால் தையல்காரி யார்? என்று கேட்டபோது, `ஒரு நாட்டுக்காரிதான்’ என்றார் பாருங்கள். எனக்கு கடுமையான எரிச்சல். அவள் நாட்டுக்காரி என்றால் நீ யார்? அவர்களை (மலாய்க்காரர்களை) சிறுமைபடுத்துவதாக நினைத்துக்கொண்டு, நம்மை நாமே சிறுமை படுத்திக்கொள்வதுதான் எங்க ஊரில் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். பேசிக்கொண்டிருந்த விவரத்தை விட, இது இன்னும் கூடுதல் கடுப்பேற்றியது என்னை. நம்ம பெண்ணை கொஞ்சம் கண்டித்து, இனி மேல் அவள் நாட்டுக்காரி, இவன் நாட்டுக்காரன், என்கிற அடையாள அடைமொழி எல்லாம் வேண்டாம். நாம் எல்லோரும் வந்தேறிகள்தான். இப்போது இது நம் நாடு. அது எல்லோருக்கும் சொந்தம், என எச்சரித்து விட்டு, தொலைப்பேசியை வைத்தேன்.
அதற்குள் என் மகன்.. `ஏம்மா எல்லார் கிட்டேயும் சண்டை போடறீங்க?’ என்றான். அவனும் என் கணவரும் ஒன்று. எதையும் தட்டிக்கேட்கக்கூடாது. பொருள்களில் சேதமென்றால், பரவாயில்லை பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமென்றே செய்தார்களா, எதோ தவறு நடந்திருக்கும் .. நாம் என்ன பர்ஃபெக்ட்’ஆ? என்கிற தத்துவமெல்லாம் பேசி, புதிதாக வாங்குவார்களேயொழிய ஒரு போதும் நியாயம் கேட்க படையெடுக்கமாட்டார்கள்.
எல்லோர் வீட்டிலும் ஆண்கள் இப்படித்தானா?