வியாழன், ஜனவரி 31, 2013

அடி போடி


`ஏம்மா, அவ கிட்ட ஏன் கண்டதையெல்லாம் பேசறீங்க.. அவ அப்படியே சொல்றாதானே..!’

`அய்யோ அம்மா, நான் ஒண்ணுமே சொல்லல, வந்தது வராததுமா எப்படி கோள் மூட்டறா பாரு..’

`அவ கோள் மூட்டல, நீங்க பேசியதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு ஒப்பிக்கறா..!’

`யம்மா..யம்மா.. அவ சொல்றத கேளு, என்னை நம்பாதே..இல்லெ.’

`சாதாரணமா பேசினா சிரித்துக்கொண்டு சும்மா இருக்கலாம்.. கெட்டவார்த்தையெல்லாம் பேசறா.. யார் வாத்தியாரு.. இங்கே?’

`அய்ய்யோ..அவுவு (வாயில் அடித்துக்கொண்டு).. கெட்டவார்த்தையெல்லாம் யார்’ம்மா பேசுவா? நீ ஏம்மா என்னிய நம்ப மாட்டேங்கிற..!’

`அப்போ கெட்ட வார்த்த யார் பேசறா அவ கிட்ட இங்கே.. இன்னிக்கு ஒரு வார்த்தை சொன்னா.. தெரியுமா?’

`நீ நல்லா எடங்கொடு, அவ என்னிய ஏய்க்கிறா.. மரியாதை கொடுக்கமாட்டேங்கிறா..அதான் திட்டினேன்..’

`அதுக்குன்னு கெட்ட வார்த்தையா?..’

`அது என்ன கெட்ட வார்த்தையா?’

`...... இது கெட்ட வார்த்தை இல்லையா?’

`அது நான் சொல்லல..’

`பின்னே..?’

`டீவி’ல சீரியல் பார்க்கறா என் கூட, அதில் வந்த வார்த்தையா இருக்கும்.. அத சொல்லுவா.. அத போய் பெரிசு படித்திக்கிட்டு.. போம்ம்மா..’

`ஓ.. டீவி’ல சென்சார் இல்லாம இந்த வார்த்தைகளெல்லாம் பேசறாங்களா..!!? நான் சீரியல் பார்ப்பதில்லை.. இருங்க, பேப்பருக்கு எழுதி.. வாரு வாருன்னு வாரறேன்.. இப்படியா நாடக வசனங்களை சென்சர் இல்லாமல் ஒளியேத்தறாங்க..’

மாமி மௌனமாக என்னை நோக்கி ஒரு அலட்சியப்பார்வையை வீசினார்.. அதில், அவளிடம் பயன்படுத்திய அதே வார்த்தையோடு.. `அடி போடி......, பெரிய இவ இவ..’ என்கிற மையிண்ட் வாயிஸ் கேட்டது..

அவ்வளவு சத்தமாவா கேட்குது..!!!

செவ்வாய், ஜனவரி 29, 2013

ரோபோ..


கம்பனியில், புதிய வகை வக்கியூம் ஒன்று பார்வைக்கு வந்துள்ளது. ரோபோ வக்கியூம். பேசும். சொல் பேச்சு கேட்கும். (மருமகள் போல்)

சுத்தம் செய் என்றால், அப்படியே `டிர்ர்ர்ர்ர்’ என்று சுற்றிச்சுற்றி வேலை செய்யும் (மருமகள் போல்) போதும் என்றால் நிறுத்திவிட்டு, அதனின் இடத்திற்குச்சென்று பொருத்திக்கொண்டு.. `வேலை முடிந்து விட்டது’ என்று சொல்லி, சொந்தமாக ஆஃப் செய்து கொள்ளும்.

மீண்டும் ஒருமுறை, நீ செய்தவேலை சுத்தமில்லை என்றால், அது சுழலும் (மருமகள் போல்)
பிரச்சனை என்னவென்றால், அதற்கு ஆங்கிலம், மெண்டரீன் மற்றும் ஜப்பான் மொழிதான் தெரியும். அம்மொழிகளில் பேசினால் மட்டுமே விளங்கும்.

மேலும் தற்போது பார்வைக்கு வந்துள்ள இந்த ரோபோவிற்கு ஆங்கிலமும் தெரியவில்லை. அம்மொழியை இன்னும் சரியான முறையில் பதிவு செய்யவில்லை. அதற்கான வேலைகள் நடைபெற்றவண்ணமாக இருக்கிறது.

அங்கே வேலை செய்யும் சில மலாய்க்காரர்களுக்கு இது எரிச்சலைக் கொடுத்தது.   நம்ம ஊரில் விற்பனை செய்கிறார்கள் நம்ம மொழி இல்லையே என்று.

எனக்கும்தான்.. கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழியான என் மொழி கூட இல்லையே. :(

இன்று அந்த மிஷின் பழுதாகிவிட்டது. சில டெக்னீஷன்கள் வந்து சரி செய்துகொண்டிருந்தார்கள்.
என்ன பிரச்சனை என்று பார்த்தால், அங்கே உள்ள உள்ளூர் பணியாளர் ஒருவர், அதை அவர் மொழியில் `திட்டு திட்டு’ என்று கெட்ட வார்த்தையால் திட்டினாராம்,  அதனால்தான் என்றார். (இது டூப்பு... அடிக்கடி பேசி பேசி வேலை வாங்கினால், அது என்னவாகும்!! அது என்ன மருமகளா..!!?) -

கூடிய விரைவில் மலாய்மொழியிலும் பேசும் அந்த ரோபோ..

சில எழுர்ச்சித் தமிழர்கள் பத்திரிகையில் எழுதுவார்கள்..ரோபோவில் தமிழ் இல்லை என்று, கூடிய விரைவில் வ..ரு..ம்ம்ம்...

வியாழன், ஜனவரி 24, 2013

மணி என்ன?

"மணி என்ன?"
"காலை ஆறு.."
"ஓ.. இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் .. குளிக்கலாம்."

"மணி என்ன?"
"காலை ஒன்பது.."
"என்ன இப்போதான் ஒன்பதா? பசியாறி ரொம்ப நேரமானதுபோல் இருக்கே..!! "

"மணி என்ன?"
"ஒன்பதரை..!"
"என்ன எப்போவோ..ஒன்பதுன்ன..!! இப்பதான் ஒன்பதரையா? ப்ப்ச்ச்.."

"மணி என்ன?"
"பத்து..."
"கொஞ்ச நேரம் வெளியே உட்காரவா?.."

"மணி என்ன?"
"பத்து பத்து.."
"தூக்கம் வருது, உள்ளே போய் படுக்கவா?"

"மணி என்ன?"
"உங்களுக்குப் பசிக்குதா? சமையல் ஆச்சு. சோறு ஊட்டவா?.."
"வேணா இன்னும் மணியாகல..."

"மணி என்ன?"
"ஐய்யோ கடவுளே.. என்ன இது, ஓயாம..!!?"

"என்னை அனுப்பிடு, என்னால் உனக்குத்தொல்லை. மணி கேட்டா கூட தப்பா போகுது இந்த வீட்டில்...!!"

வயதானால்... மணி கேட்க அவ்வளவு ஆசையா? நான் என்ன செய்ய... !!

புதன், ஜனவரி 23, 2013

இறவா இன்றுகள்


இன்று சம்பள நாள்
உன்னோடு பேசமுடியாது..

இன்று குழந்தைக்கு காய்ச்சல்
உன்னோடு பேசமுடியாது

இன்று உறவுகள் என்னோடு
உன்னோடு பேச முடியாது

இன்று நண்பனின் வீட்டில் நான்
உன்னோடு பேச முடியாது

இன்று கோவிலுக்குச் செல்கிறேன்
உன்னோடு பேச முடியாது

இன்று அருகில் அப்பா இருக்கிறார்
உன்னோடு பேச முடியாது

இன்று அலுவலகத்தில் வேலைப்பளு
உன்னோடு பேச முடியாது

இன்று பக்கத்தில் ஆள் இருக்கு
உன்னோடு பேச முடியாது

இன்று மனைவியோடு சண்டை
உன்னோடு பேசமுடியாது

இன்று கொஞ்சம் எழுதும் வேலைகள் இருக்கு
உன்னோடு பேசமுடியாது

இன்று படிப்பது பாதியிலே நிற்கிறது
உன்னோடு பேச முடியாது

இன்று பழைய காதலியை சந்திக்கச் செல்கிறேன்
உன்னோடு பேச முடியாது

இன்று எனக்கு சளி காய்ச்சல்
உன்னோடு பேச முடியாது

இன்று காரில் செல்கிறேன்
உன்னோடு பேச முடியாது

இன்று இரைச்சல் அதிகம்
உன்னோடு பேச முடியாது..

உடற்பயிற்சி செய்கிறேன்
உன்னோடு பேசமுடியாது..

அவசரவேலை
உன்னோடு பேசமுடியாது

இன்னமும் பேச்சு
முடிந்தபாடில்லை
பேசுவதற்காகவே...


எதிர்ப்பார்ப்பு

இந்தச் சின்ன மனசு
சில விஷயங்களை எதிர்ப்பார்க்கிறது
அதில் ஒன்று
உன் வருகை..

புதன், ஜனவரி 09, 2013

வெற்று உரையாடல்

நேற்று கோவிலுக்குப்போணோம்..
`ஆமாம் போணோம்.’

அங்கே நான் கட்டிய மாலை, பார்த்தாயா? எப்படி?
`பார்த்தேன், ரொம்ப அழகா இருக்கு..’

ஐய்யோ, சேலையை மேலேயே கழற்றிப்போட்டுவிட்டேனே.. துவைத்து விட்டாயா?
`ம்ம்ம்.. துவைத்துக் காயப்போட்டு மடித்து வைத்தாச்சு.’

நிறைய பலாக்கொட்டைகள் கொண்டுவந்தேனே..எங்கே வைத்தாய்?
`ஐஸ் பெட்டியில் இருக்கே.’

அறிவிருக்கா உனக்கு? அத போய் யாராவது ஐஸ் பெட்டியில் வைப்பாங்களா. பிரட்டு நெத்திலி போட்டு, சாப்பிடலாம்.
`சரி, அப்படியே செய்கிறேன்.’

நாளைக்கு என்ன நாள்..?
`வியாழக்கிழமை..’

நான் அதைக்கேட்கல, என்ன விஷேசம்?
`ம், என்ன விஷேசம்?’

உனக்குத்தெரியாதா?
`சொல்லுங்களேன்..’

கோவில் திருவிழா. போகணும். நகையெல்லாம் எடுத்துவை.
`சரி எடுத்து வைக்கிறேன்.’

சாமீ ஊர்வலம் வருமே. கச்சான் பொங்கச்சோறு ஆக்கணும், எல்லாம் வாங்கிட்டியா?
`ஆ, எல்லாம் வாங்கிட்டேன்.’

வடை சுடு, தேர் கூட ஆள் வருவாங்க.. கொடுக்கலாம்..
`ம், சுடறேன்.’

எப்படி சுடுவே? சரி உனக்குத்தெரியாது. பருப்பு உளுந்து ஊறபோட்டிருக்கேன் அரைச்சு வை. உப்பு நா போடறேன். சரியா? நீ கூட போட்டுடுவ, பெரியவன் சாப்பிடமாட்டான்.. !
`ஓகே.’

உனக்கு நீண்ட லீவா? ரொம்ப நாள் இங்கேயே இருக்க..!? எப்பப் போவ?
`இந்த வாரம் போயிடுவேன்..’

அவ யாரு.? நம்ம வீட்டுக்குள் மலாய்க்காரி?
`விருந்தாளி.’

மாலாய்க்காரியெல்லாம் கோவிலுக்கு வருவாங்க?
`இல்லை அவ இங்கே இருப்பா..’ (இந்தோனீசியப்பணிப்பெண்)

ஆமாம், இப்போ நான் எங்கே இருக்கேன்???
`நம்ம வீட்டுல..!!’

ஓ விஜியா? ச்சே நான் மறந்தே போயிட்டேன். நாம இங்கே இருக்கோம்ல..ம்ம்ம்ம்...

(எங்குமே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும், என் மாமியிடம் தினமும் நான் பேசும் வெற்று உரையாடல் இது. ஆரம்பத்தில் கோபம் வெறுப்பு வந்தது..இப்போது எல்லாமும் மறைந்து.. அவரிடம் குழந்தையாக நானும்....!!! )