ஞாயிறு, ஜனவரி 01, 2012

ஒப்பாரியும் ஓலமும்

தோழி காலையிலே அழைத்திருந்தாள்.. ஒரு விசும்பல் சத்தம் அவளிடம்..

“பிரண்டி செத்துட்டான்.. ம்ம்ம்ஸூ.”

“சரி சரி காலையிலே மூக்கைச் சிந்திகிட்டு.. நான் பிறகு வரேன், அழாதே.”

அவள் பிரண்டி என்று சொன்னது அவளது நாயை, இந்த ஒரு நாய் மட்டுமல்ல, அவளின் வீட்டில் இன்னும் நான்கு நாய்கள் உள்ளன. எல்லாம் அழகழகான, அதே வேளையில் கடிக்கும் உயர்தர நாய்கள். எல்லா நாய்களுக்கும் அற்புதமான பெயர்களை வேறு வைத்திருப்பாள். அவைகளை பெயர்கள் சொல்லித்தான் அழைக்கவேண்டும். இதுதான் அவளின் வேண்டுகோள்.

போபி, பேபி, வுல்ப்பி பிரண்டி... என அழகழகான பெயர்களைச் சூட்டியிருப்பாள். நாய்கள் என்று யாரும் அவைகளைச் சொல்லக்கூடாது, அப்படிச் சொன்னால், அவளுக்குக் கோபம் வரும், அவளும் நாய் மாதிரி குரைத்து வைப்பாள் நம்மிடம். பெயர் சொல்லித்தான் அழைக்கவேண்டும்.  பெயர்கள் வேறு சரியாக நினைவில் இருக்காது, மனிதர்களின் பெயரே நினைவில் இருக்க மாட்டேன் என்கிறது.  இதில் நாய்களின் பெயர்கள் எங்கே!

`நாய்களைக் கட்டிப்போடாமல், என்னைக் கூப்பிட்டால், நான் உன்னைக் கடிப்பேன்..’  என்று பலமுறை அவளின் வீட்டு வாசலில் நின்று கத்தியிருக்கின்றேன். உடனே முகத்தை `உர்ர்’ என்று வைத்துக்கொண்டு, வந்த காரியமெல்லாம் முடித்து, வழியனுப்பும் போது, மறவாமல் எச்சரிக்கை செய்வாள். “இனி என் பிள்ளைகளை நாய்கள் என்று சொல்லாதே, நான் அவைகளுக்குப் பெயர் வைத்துள்ளேன்..” என்பாள். சரி முயற்சி செய்வோம், என்ன செய்வது, அது முடியாத காரியம் தான், அவைகளின் பெயர்களும் நினைவிலே நிற்காது.

சரி அவள் வளர்க்கின்ற நாய்களைப் பற்றி, கொஞ்சம் ஆராய்வோமே;-

ஒரு நாய்; குள்ளமாகவே இருக்கும், நமது முட்டிக்காலின் கீழ் பாதிவரைதான் இருக்கும். வெள்ளை நிறம், முகமெல்லாம் முடியாக தொங்கும், மூக்கு மட்டும் கருப்பு. ஆறு மாதத்திற்கு ஒரு முறை, நாய்கள் பரமாரிக்கும் நிலையத்திற்கு முடி வெட்ட அழைத்துச் செல்ல வேண்டும். அது கூட மலிவு கிடையாது. குறைந்தது நூறு ரிங்கிட் விகிதம் செலவு செய்தாக வேண்டுமாம்..

முடிகளை வெட்டிச் சுத்தம் செய்தப் பிறகு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். ஃக்யூட் என்பார்களே, அப்படி, நமக்கே கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருக்கும்.

அடிக்கடி சந்திக்கின்ற நம்மை  வெகு சுலபத்தில் அடையாளங் கண்டுக்கொள்ளும். நம்மைப் பார்த்து விட்டால் போதும், வாலை ஆட்டிக்கொண்டு நம்மை நோக்கி ஓடி வரும். இருப்பினும், ஒரு கடமைக்காகக் குரைத்துவைக்கும்.’அவ் அவ் அவ்’ என செல்லமாக.  அவ்வளவு அழகாக இருக்கும், ஆனால் எனக்கு மட்டும் அவைகளைக் கண்டால் கொஞ்சம் அலர்ஜிதான்.

அடுத்தது..; குட்டி கருப்பு நாய். ஆஸ்த்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்டதாம்.! ஒரு காலில் அடிப்பட்டு நொண்டி நொண்டி தான் நடக்கும். இதன் காரணமாக அது அவ்வளவாக வெளியே நடமாடாது. அதே சமயம் அது உள்ளே எங்கு உட்கார்ந்திருக்கும் என்பது கூட நமக்குத்தெரியாது. அதுவும் பார்ப்பதற்கு  மிக அழகாவே இருக்கும். `பெஞ்சி பாய்’ (அப்பாடா, இதன் பெயராவது நினைவில் இருக்கே.!)

முன்பு,  என் தோழியின் தோழி ஒருவளின்  வீட்டில் இருந்ததாம் இந்த நாய். அவளின் அப்பாவிற்கு `ஸ்ட்ரோக்’ வந்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில்,  பெஞ்சி பாய்’யிற்கும் காலில் அடிபட்டு அதனின் முட்டி உடைந்து தவித்துக்கொண்டிருந்ததாம்..! இந்த இக்கட்டான நிலையில், தோழியால் நாயிற்கும் சேர்த்து மருத்துவச் செலவு செய்து மாளாமல் கஷ்டப்பட்ட போது, எனது தோழியின் கணவரை நாடி, அதை அவரிடம் ஒப்படைத்து பாதுகாக்கச்சொன்னார்களாம். அதைக் கொண்டுவந்து, நிறைய செலவு செய்து அதன் உயிரைக் காப்பாற்றி வீட்டிலே வைத்துக்கொண்டாராம் அவளின் கணவர். இன்னமும் தமக்கு அதிக செலவு வைக்கும் ஒரு `பிள்ளை’ இது என்பாள். அடிக்கடி நோய்வாய்ப்படும் இந்த நாயை கால்நடை மருத்துவரைச் சந்திக்க சென்றுக்கொண்டே இருப்பார்களாம்.  ஒரு முறை அவளின் சுண்டுவிரலை கடித்து விட்டது, இருவருக்கும் சண்டை என் கண் முன்னே.
 “நன்றி கெட்ட நாயே, உன்னை எப்படியெல்லாம் சீராட்டி பாலுட்டி வளர்த்தேன், என்னையே கடிக்கிறாயா? இரு `டேடி’ வரட்டும் , உன்னை தெருவில் .... திங்க விடறேன், அப்ப தான் நீ அடங்குவாய்?” என, தாறுமாறாக திட்டித்தீர்த்தாள். அவளையே உற்று நோக்கிய அது, என்னமோ புரிந்ததைப்போல், செல்லமாக குரைத்தது. வாலை ஆட்டிக்கொண்டு வலிய வலிய வலம் வந்தது. கொஞ்ச நேரத்தில்.. `செல்லம் செல்லம்..அம்மா சாரி பேபி’ என கொஞ்சி அனைத்து முத்தமிட்டுக்கொண்டாள்., (என்னால முடியலங்க)

நம்முடைய கோபதாபங்களை நாய்கள் மிக விரைவாக அடையாளங் கண்டுகொள்கிறது. கோபமாக இருந்தால், அதனின் கொஞ்சல் மிகுதியாகவே இருக்கும். ஜாலியாக இருந்தால், நம்மைச் சீண்டிக்கொண்டே இருக்கும். அவைகளைப் பார்க்கவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தால், முணகிக் கொண்டே இருக்கும். அந்த முணகல், கோபம் விரக்தி ஏக்கம் என எல்லாம் கலந்து வரும். மிக நெருக்கமானவர்களை, குறிப்பாக; காதலன் காதலியையும், காதலி காதலனையும்  நாய்க்குட்டி என்பார்களே செல்லமாக.. அதற்குக்காரணம் இந்த செல்லச் சிணுங்கல்தான் போலும்

ஒரு முறை அவள் வீட்டின் முன் நான்! வாசலின் அழைப்பு மணியை அழுத்திய மறு வினாடி, எல்லா `குழந்தைகளும்’ சத்தமாகக் குரைத்த வண்ணம் என்னை நோக்கி வாசலுக்கு ஓடி வந்தன.. அதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத நான் அரண்டுத்தான் போனேன், வாசலிலேயே நின்றுக்கொண்டு கத்தினேன்.

“ஒழுங்கா உள்ளே இட்டுப் பூட்டு உம்புள்ளைகளை. இல்ல, நான் இப்படியே கிளம்பி விடுவேன்..!” எச்சரித்தேன் அவளை.ஒவ்வொன்றாக  இழுத்து  உள்ளே படுக்கையறையில்(!) போட்டுப் பூட்டினாள்.

என்னை நன்கு அடையாளங் கண்டு கொண்டதால், அவைகள் என்னைப் பார்த்து பாசத்தில் குரைக்கின்றனவா அல்லது நான் வந்தவுடன், என் தோழி என்னுடன் வெளியே கிளம்பிவிடுவாள், என்கிற எரிச்சலில் குரைக்கின்றவா என்பது புரியாத ஒன்றுதான். தோழி சொல்வாள், ``நீ வந்தால் நான் வெளியேறி விடுவதால், அவைகளுக்கு உன்னைப் பிடிப்பதில்லை, அதனால் தான் இவ்வளவு நாள் பழக்கத்திற்குப் பிறகும் உன்னைப் பார்த்து குரைத்துக்கொண்டே இருக்கின்றன.’’ என்பாள். அதுசரி, நாய்கள் சொல்வதாக ஜாடைமாடையாக இப்படித்திட்டினால்தான் உண்டு, இல்லையேல் உண்டு இல்லை என்றாகிவிடுமே.!

அவளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் போதெல்லாம் சமைக்கமாட்டாள் என் தோழி. அப்போது என்னைத்தான் உணவு வாங்கிவரச்சொல்லி கேட்பாள்.

ஒரு முறை நான் வாங்கிவந்த உணவை, அவளின் சமையலறையில் வைத்து இருவரும் சுவைத்துக் கொண்டிருந்தோம். அப்போது திடிரென்று  எனக்கு ஒரு  எச்சரிக்கையை விடுத்தாள். ``உன் காலை தயவு செய்து அசைத்து விடாதே, காலடியில் பெஞ்ச் பாய் இருக்கான். அசைவு இருந்தால் நிச்சயமாகக் கடித்து வைப்பான்.’’என்றாள். எப்படியிருக்கும்?? சாப்பாடே இறங்கவில்லை எனக்கு.

அசையாமல் திட்டினேன் அவளை.. வாய் மட்டுமே ஆடியது. அவளும் அசைய முடியாது, ஏனென்றால் அவளையும் கடிக்கும்.. எப்படி எழுந்து கை கழுவச் செல்வது. !? முறைத்தேன் அவளை. உட்கார்ந்த இடத்திலே ஒரு பிஸ்கட்டைத்தூக்கிப் போட்டாள்..அது தூரமாக விழ, அங்கே ஓடியது பெஞ்ச் பா(நா)ய்.. நடுவில் உள்ள க்ரீலைப் பூட்டினாள். தப்பித்தேன் என்றிருந்தது.

அடுத்தது, ஜெர்மன் ஷிப்பர்ட் - நல்ல உயரம், பழகினால் நட்பாகிவிடும். என் தோளில் நின்றுகொண்டு என் முகத்தை நக்கும், என்னால் இதெல்லாம் சகித்துக்கொள்ள்வே முடியாது, அதனின் வாடை எனக்கு வாந்தியே வரும். எத்தனையோ முறை, வாந்தியும் எடுத்துள்ளேன். எங்கு பார்த்தாலும் அதன் உரோமங்கள். உட்காரும் ஷோபா செட், தரை, கார்பிட் என எல்லா இடங்களிலும் அவைகளின் ராஜ்ஜிய அடையாளங்கள்தான்...

இது அழகான நாய். பெயர் பெம்பி. உயரமாக இருக்கும் ஆனால் அதுதான் அந்தக் குழுவிலேயே குழந்தை. அவளின் எல்லா கவரின் நகைகளையும் அதற்குப் போட்டு அழகு பார்ப்பாள். வெளியே சென்றால் அந்த நாயிற்கு வளையல், கொழுசு என வாங்குவாள். பொட்டு வைத்து விடுவாள். டேடி செல்லம்.

நானும் என் தோழியும் வெளியே சென்றுவந்தால், டேடி வந்தவுடன், என்னன்னமோ கதையளக்குமாம் அவரிடம். நானும் கேட்டுள்ளேன், ஒரு மாதிரியான முணகல் கொஞ்சலாக வரும். ’கோழ் சொல்லி’ என திட்டுவாள் செல்லமாக.!

ஒரு முறை, என் தோழிக்கு உடம்பிற்கு முடியாமல் போக, என் கம்பனியில் பணி புரியும் ஒரு இந்தோனிசியப் பெண்மணியை அழைத்துச் சென்றேன் உதவிக்கு (பணத்திற்காகத்தான்). அவளுக்குத் தெரியாது அங்கே நாய்களின் ராஜ்ஜியம் இருக்கின்றது என.! உள்ளே நுழையும் போது எல்லாம் அமைதியாகத்தான் இருந்தன, நுழைந்தவுடன், மோப்பம் பிடித்து கத்திக்கொண்டு வெளியே ஓடிவர ஆரம்பித்தன. எங்களுடன் புதியவர் ஒருவர் இருப்பதால். விடாமல் ‘லொல் லொல் லொல்’ என குரைத்துக்கொண்டே இருந்தன..!  எவ்வளவோ தடுத்தும், அந்த இந்தோனீசியப் பெண்மணியை வட்டமடித்தன.

ஆடிப்போனாள் அவள். என் இடுப்பை இருக்கிப் பிடித்துக்கொண்டு ‘காக்கா..காக்கா..காக்கா’ என. (அக்காவை அப்படித்தான் அழைப்பார்கள்) கத்தினாள், வேர்த்து விருவிருத்தது. கைகால்கள் கடகட வென நடுங்கியது. வேலையே செய்ய முடியவில்லை அவளால்..! ’போகலாம் க்கா’ என என்னைப்பிடுங்கி எடுத்தாள்.

இப்படியெல்லாம் அனுபவம், இந்த நாய்களால்.

இப்போது இறந்துப்போன நாய்தான் பிரண்டி.. `புல்டோக்’ நாய்தான் ஆனால் அவள் சொல்வாள், இது `புல்டோக்’ நாய் இல்லை. ஜெர்மன் நாயிற்கும் புல்டோக் அம்மாவிற்கும் பிறந்தது என்பாள். எனக்கு ஒன்றுமே விளங்காது.

“இங்கே பார், இதன் காது இப்படி. இங்கே பார், அதன் காது அப்படி.. இதன் மூக்கைப்பாரு, அதன் மூக்கைப்பாரு..என நிறைய வித்தியாசங்களை நெட்டில் காட்டியுள்ளாள், `ம்ம்ம்’ என்பதைத் தவிர வேறென்ன செய்ய..? இதில் எனக்கு அறிவு மிக மிக கம்மி.

இந்த பிரண்டி தான் அவளிடம் அதிக நாட்கள் இருந்த நாய். குட்டியாக இருந்த போது வந்ததாம், இவளின் முதல் நாயும் கூட. இப்போ  நாற்பத்தொன்பது வயது.! அதாவது, ஏழு வருடம். ஒரு நாயிற்கு ஒரு வயது என்றால், அது ஏழு வயதிற்குச் சமமாம்.! இதையும் அவள் தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தாள்.  முதல் வளர்ப்புப்பிள்ளை என்பதால்,  இதன் மேல் தனி அக்கறை அன்பு வைத்திருந்தாள். கிழட்டு நாய்தான், வயதாகிவிட்டது. நோயின் தாக்குதலும் கூட.

கொஞ்ச நாளாய் உடல் நலமில்லை பிரண்டிக்கு. ரத்தப்போக்கு ஏற்பட்டு, வீடே நாறியது. சலிக்காமல் அரவணைத்தால். மருந்திட்டாள், தடவிக்கொடுத்தாள், அதற்கென்று இருக்கும் மெத்தையில் படுக்கவைத்திருந்தாள்.

ஒரு முறை இந்த வாடையை பொறுக்கமுடியாமால் எனக்கே குமட்டிக்கொண்டு வந்தது. வூவக் வூவக் ’ என்று அவளின் முன்னாலேயே வாந்தி எடுத்துவிட்டேன்.! எனக்கு ஒரே ஆச்சிரியம்.. எப்படி இவள் மட்டும் இப்படியெல்லாம்..!? ஒருவேளை அவளுக்குக் குழந்தைகளே இல்லாததால் இப்படி ஒரு அன்பா நாய்களின் மேல்!!! புரியவில்லை.?

சரி வாங்க, அவள் அழைத்திருந்தாள், பிரண்டி செத்துவிட்டான். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

காலை பத்து மணிக்கு அவளின் வீட்டிற்குச் சென்றேன். செத்துப்போன பிரண்டியை, நடு வீட்டில் கிடத்தியிருந்தாள். கேரளாவில் இருந்து வாங்கி வந்த அழகான வெள்ளைப் பட்டுப்புடவையை அந்த மேல் போர்த்தியிருந்தாள். சுற்றி அகல் விளக்குகள். கண்ணத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தாள். வீடே அமைதியாக இருந்தது, மற்ற நாய்கள் மிக பவ்யமாக ஒரு இடத்தில், சத்தமேயில்லாமல் படுத்திருந்தன. என்னைக் கண்டவுடன் குரைக்கும் நாய்கள் இன்று அமைதியாகவே இருந்தன.. ஆச்சிரியம்தான். என்னிடம் கைப்பேசியைக் கொடுத்து, பிரண்டியைக் கட்டிப்பிடித்து அமர, என்னை ஒரு புகைப்படம் எடுக்கச் சொல்லிச் சொன்னாள். முகமெல்லாம் வீங்கிப்போயிருந்தது. கண்கள் சிவந்துப்போயிருந்தன, ஆனாலும் அப்போது அவள் அழவில்லை.

“கணவர் எங்கே?” என்றேன்.

“ இவன் எங்களின் முதல் குழந்தை. இந்தக் காட்சியைக் காண அவர் மனம் தாங்காது, அதனால் வர முடியாது என்று சொல்லிவிட்டார்.” என்றாள்.

“சரி, அடுத்து என்ன?”

“முன்சிபல்’லிருந்து வருவார்கள், எடுத்துச் செல்ல..” சோகமானது குரல்.

கொஞ்ச நேரத்தில், ஒரு கருப்பு வேன் வந்தது. உள்ளே நுழைந்து, பிரண்டியை அளந்தார்கள், விலையைச் சொன்னார்கள், மலேசிய ரிங்கிட் RM1200 என்றார்கள், அவளும் அத்தொகையைக் கொடுத்தாள்.அந்தப் புடவையை எடுக்கச் சொன்னார்கள்.

“வேண்டாம், என் ஞாபகமாக இருக்கட்டும், அதனுடையே வைத்து கொழுத்தி விடுங்கள்.” என்றாள்.

அவர்கள் பிரண்டியை காருக்குத் தூக்கிச் செல்லும் போது, அந்த மூன்று நாய்களும், ஒரு மாதிரியான ஒப்பாரி ஊலை சத்தத்துடன் முன் வாசல் கேட் வரை ஓடிவந்தன.  அதுதான் எனக்கு இன்னமும் அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம்.

அந்த ஒப்பாரி, மனிதன் கவலையில் அழும்போது ஒருவித முணகல் விசும்பல் சத்தம் மெதுவாக ஒலிக்குமே, அது போலவே இருந்தது!!

மூன்று நாட்கள், அவைகள் எதுவுமே சரியாகச் சாப்பிடாமல் சோர்ந்துப்போயிருந்தனவாம். இதைக் கேட்டவுடன், எனக்கு இன்னும் அதிர்ச்சி. நாய்களுக்கு ஐந்தறிவுதானே. ?

எப்படிங்க??. ஆச்சிரியம்தான், நாய் வளர்ப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும், நமக்கு இதில் அனுபவம் பூஜியம்தான்.!!





இதுவும் வியாதியா?

இன்று மருத்துவ மனையில்.. 

மாமி தங்கியிருக்கும் வாட்டில், இந்த முறை எல்லோரும் மூதாட்டிகள். நுரையீரல் கன்சர், ஞாபக மறதி, விடாத வயிற்றுப்போக்கு, சாப்பிட்டதெல்லாம் வாந்தி, சிறுநீர் பிரச்சனை என..! 

முன்பு தங்கியிருந்தது இருதய பிரச்சனைகள் உள்ள வாட். இப்போ வேறு. 

அங்கு ஒரு மூதாட்டி. எதேதோ முணகிக்கொண்டு, ப்ளீஸ்,ப்ளீஸ்.. எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று சதா கேட்ட வண்ணமாக இருந்தார். நெஞ்சில் தமது கையை வைத்துக் கொண்டு..! 

அவர் சீன மூதாட்டி, கணவர் தமிழர். கணவர் இல்லை அப்போது. இந்த முணகலைக்கேட்ட நான், என்ன பிரச்சனையாக இருக்கும் என நினைத்து, என் இருக்கையை விட்டு எழுத்தேன், உடனே என் மாமி “போகாதே, அவள் திமிர் பிடித்தவள், நேற்று நம்ம குடும்ப உறுப்பினர்களை வெளியே விரட்ட, எல்லா நர்சுகலையும் அழைத்தாள்.” என்றார்.

இருப்பினும் எனக்கு மனசு கேட்கவில்லை, நோயாளியாயிற்றே... அருகில் சென்றேன், என்ன ஆண்டி, என்ன வேணும்? கேட்டேன்.

அவர் என்னை ஒரு முறை ஏற இறஙகப் பார்த்து விட்டு, நர்சைக் கூப்பிடு, நான் பேசிக் கொள்கிறேன், என்றார் கடுமையாக (அவ்வ்.. எனக்கு மட்டும் ஏன்???)

நானும் நர்சிடம் சென்று அவர் அழைக்கிறார் என்றேன், அதற்கு அந்த நர்ஸ், ஆண்டி, சாரி,அந்த பேஷண்டிக்கு ஒண்ணுமேயில்லை, அவர் அடுத்தவர் கவனத்தை ஈர்க்க இப்படித்தான் எதையாவது செய்வார். நீங்க பீல் பண்ணிக்காதிங்க, இன்னும் கொஞ்ச நேரம் சென்று மருந்துக் கொடுப்போம்’ என்றார்.

வியாதியின் பெயர் Attention Seeking syndrome.  ஆ, வியாதியா.. !?