செவ்வாய், மே 05, 2015

பண்டோங் பயணம்

ஜகார்த்தா பண்டொங் - இந்தோனீசியா சென்று வந்தேன்
மொழி ஏறக்குறைய விளங்குவதால், மக்களுடன் கலந்து சரளமாக உரையாட முடிந்தது.
உணவு - ஆடர் கொடுக்கத்தெரிந்தால் அருமையான உணவுகளை உண்டு சுவைக்கலாம்.
பெரிய ஹோட்டல்களைவிட ஒட்டுக் கடைகளில் உணவுகள் அறுசுவை. தூய்மையாக உணவுகளைத்தயார் செய்கிறார்கள்.
சுட்ட சோளம், ஈக்கான் பாக்கார் (சுட்ட மீன்), ஆயாம் பென்ஞெட் (சுட்ட கோழி) பூளுட் பாக்கார், ரொஜாக், சூப் வகைகள், பொரி கடலை வகைகள் என எங்கு பார்த்தாலும் தின்பண்டங்கள். போகிற இடமெல்லாம் தின்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தோம்.
அங்கே சுற்றிப்பார்ப்பதற்கு வெடித்துச்சிதறிய எரிமலைகள்தான் புகைகளைக் கக்கிக்கொண்டு காட்சியளிக்கின்றன. அவைகளைச் சென்று காண வளைந்து வளைந்து செல்லும் மலைகளைக் கடக்கவேண்டும். மோசமான பாதைகள். குதிரை வண்டியில் செல்வதைப்போல் உடல் குலுங்கிற்று. வாந்தி மயக்கம் தலைசுற்றல் இல்லாமல் என்னால் அச்சூழலைக் கடக்கமுடியவில்லை. இருந்தபோதிலும் அழகிய இடங்கள் அவை.
ஷோப்பிங்க செல்ல பண்டொங் அற்புதமான இடம். கைவினைப் பொருட்கள், துணிமணிகள், கைப்பைகள் என, நம் நாட்டைவிட பொருட்களின் விலை மலிவு. மலேசிய வியாபாரிகள் (மலாய்க்காரர்கள்) பொருட்களைப் பேரம்பேசி வாங்கி குவித்துக்கொண்டிருந்தார்கள்.
அங்கே சீனர்கள் செல்வச்செழிப்புடன் சிறப்பாக வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் காரக்குடியில் இருக்கின்ற கோட்டைகள் போல் வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் சீனர்கள். இந்தோனீசியர்கள் பெரும்பாலும் அவர்களிடம் பணிபுரிகின்ற ஊழியர்களாகவே இருக்கின்றார்கள். ஏழைகள் மிக ஏழைகளாகவும் செல்வச்செழிப்பில் வாழ்கிறவர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாகவும் வாழ்ந்துவருகிறார்கள்.
அரசு பணிக்குச்செல்லவேண்டுமென்றால் ‘சுவாஃப்’ செய்யவேண்டுமாம். லஞ்சம் கொடுப்பதை இப்படித்தான் சொல்கின்றார்கள். அப்படிக்கொடுத்தும் வேலை கிடைக்குமா .(.!?) என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் என்கிறார் எங்களுக்கு வாகனம் ஓட்டிய தம்பி.
ஜகர்த்தாவின் ஆறு கால்வாய்கள் எல்லாம் நீரோட்டம் இன்றி தேங்கியகுட்டைபோல் சலனமில்லாமல் இருக்கின்றன. சாலையும் அந்த நீர்தேக்கமும் ஒரே அளவில் இருப்பது கலவரத்தை உண்டுபண்ணியது.
``ஏன் இப்படி? கொஞ்சம் மழைபெய்தாலே வெள்ளம் வரும் போலிருக்கே.!? நான் இக்காட்சியினை எங்கும் கண்டதில்லை. இந்தோனீசியாவின் தலைநகரமாகத் திகழ்கின்ற மிகப்பெரிய பட்டிணத்தில் மழைவராமலேயே வெள்ள அபாய அறிகுறிகள் தென்படுகின்றனவே, என்ன கொடுமை இது.?” என்று நான், என் சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்.
``கொடுமைதான் அக்கா. என்ன செய்ய.? மழைவந்தால் வெள்ளம் நிச்சயம் உண்டு.”
``ஏன் உங்கள் அரசாங்கம் இதை நிவர்த்தி செய்யவில்லை? லஞ்ச ஊழல் அதிகமோ.?’’ கேட்டேன்.
``இல்லையக்கா. ஜகர்த்தா கடலோரம் இருக்கின்ற ஒரு ஊர். இங்குள்ள நீர்தேக்கமெல்லாம் மிக அருகில் இருக்கின்ற கடலை நோக்கியே பயணிக்கும், கடலின் நீர் மட்டம் குறைகிறபோது இங்குள்ள கால்வாய் ஆறுகளில் சலசலப்பு இருக்கும். அங்கே அதிகரிக்கின்றபோது நாடு வெள்ளத்தில் தத்தளிக்கும். இதுதான் இங்குள்ள நிலை. ’’ என்று விளக்கமளித்தார்.
எங்கு பார்த்தாலும் நீர்த்தேக்கமாக இருப்பதால் டிங்கிக் காய்ச்சல் அபாயம் அதிகம் என்கிறார் ஓட்டுனர்.
இரவு வேளைகளில் கொசு நம்மை உறிஞ்சு எடுக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலிலும் கொசுத்தொல்லை.
மற்றுமொரு சகிக்கவியலா பிரச்சனை, கடுமையான சாலை நெரிசல். எங்கு நுழைந்தாலும் சாலை நெரிசல். சாலை நெரிசல். சாலை நெரிசல். அங்கே இருக்கும் வரை `சாலைநெரிசலோப்போபியா’ என்னை வாட்டி வதைத்தது. கண்ணயரும் போதெல்லாம் சாலை நெரிசல் கனவிலும் வந்து தொல்லை கொடுத்தது. பயணமே இந்த கடுமையான சாலை நெரிசலால் பாழ்பட்டுக்கொண்டிருந்தது.
எல்லா நாட்டிலும் சாலை நெரிசல் உண்டுதான் இல்லை என்றல்ல. ஆனால் நமக்கு மாற்று வழிகள் நிறையவே உண்டு. அங்கே மாற்றுவழிகள் அறவே இல்லை. நெரிசலை நெரிசலோடு நெரிசலாக கடந்தே ஆகவேண்டிய கட்டாயம்.
இரவு 7.40க்கு எங்களின் விமானம். நாங்கள் மதிய உணவைக் கூட எடுக்காமல் இறுதிகட்ட ஷோப்பிங்கில் மூழ்கியிருந்தோம். எங்களைத்தேடி வந்த எங்களின் ஓட்டுனர், `நேரத்திற்கு வீடு திரும்பவேண்டுமா, வேண்டாமாக்கா?’ என்று கேட்டார்.இன்னும் நேரமிருக்கு தம்பி கொஞ்சம் பொறு.’, என்றோம். `முடியாதுக்கா.. கிளம்பலாம்,’ என்றார் கறாராக.
என்ன அநியாயமா இருக்கு.! இங்கிருந்து 10கிலோ மீட்டர்தான் ஏர்ப்போர்ட்’க்கு. அதற்குள் அவசரப்படுத்துகிறானே.! என்று முனகிக்கொண்டே கிளம்பினோம். அப்போது மணி மாலை 3.15.
அங்கிருந்து வெளியேறி ஏர்போர்ட் செல்லும் சாலையில் நுழைகிறபோது மாலை மணி 4.00. பிடித்தது நெரிசல். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து நகர்ந்து ஏர்ப்போர்ட் வந்துசேர மாலை மணி 6.15. அதன் பிறகு என்ன ..ஓட்டமும் நடையுமாய் எல்லா வேலைகளையும் கார்ட்டூன் போல் செய்து முடித்தோம். சாப்பிடவே இல்லை. மன உளைச்சல். வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது. தப்பித்தோம் இறைவா, என மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டோம்.
எங்களோடு பயணித்த என் தோழிக்கு இதுதான் முதல் விமானப் பயணம். விமானத்தில் ஏறியவுடன். ஜபமாலைகளைக் கைகளில் ஏந்தி `ஆண்டவரே நீர்தான் பைலட், ஆண்டவரே நீர்தான் என்னருகில், ஆண்டவரே எனக்கு மூன்று பிள்ளைகள், எங்களை பத்திரமாக கொண்டு சேர்ப்பீராக.. ஆண்டவரே என் பயத்தைத் தூக்கி தூரப்போடுவீராக.. ஆண்டவரே ஜீஸஸ்.. என விமானம் தரையிறங்கும் வரை பிரார்த்தனை செய்துகொண்டே வந்தாள்.
பசி.. பசி என ஆளாய்ப்பறந்த அவள், விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவைக்கூட விழுங்கமுடியாமல் பீதியில் மூழ்கிக் கிடந்தாள். அவளைப் பார்த்து மூத்திரம் முட்டுகிற அளவிற்கு சிரிப்பை அடக்கிக்கொண்டு பயணித்தோம்.
போதுமடாசாமி - ஒருமுறை பயணிக்கலாம்.