`அம்மாவிற்கு காது மொட்டையாக இருக்கு, அம்மாவுடைய தோடுகளை எங்கே வைத்தாய்?’ அண்ணியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு என் ஞாபகத்திற்கு வரவே, தோடுகளை எங்கே வைத்த்துத்தொலைத்தேன் என்கிற சிந்தனையில் மீண்டும் அவைகளைத்தேட ஆரம்பித்தேன்.
அதிக வயதானவர்களுக்கு, வயது ஆக ஆக, தோடு போடுகிற காதுகளின் துளை தன்னாலேயே பெரிதாகிவிடுகிறது. இப்போது மாமியின் காதுகளில், கொஞ்சம் முயன்றால், கைக்குழந்தைகளின் கைகள் உள்ளே போகின்ற அளவிற்கு அங்கே தூளை மிகவும் பெரிதாக உள்ளது.
இப்போ உபயோகப் படுத்துகிற இந்த தங்கத்தோடுகள் கூட, பலவேளைகளின் இந்த பக்கமிருந்து அந்த பக்கமும், அந்த பக்கமிருந்து இந்த பக்கமும் விழுந்து விடும். கட்டிலில், சமையலறையில், குளியலறையில், பூஜையறையில் என பல முறை விழுந்து காணாமல் போயிருக்கிறது. இருப்பினும் கண்டு பிடித்து காப்பாற்றி வைத்திருக்கின்றார். இந்த முறை என்னிடம் வந்து, எங்கே போனதென்று தெரியவில்லை.
இவை என்னுடைய தோடுகள்தான். திருமணமான புதிதில், கணவருக்கு அதிக அன்பு என்மேல். (இப்போதும் உண்டு ஆனால் நகை வாங்கிக்கொடுக்குமளவிற்கு இல்லை). அப்போது, என்ன கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுப்பார். ஒரு முறை ஷாப்பிங் செல்லுகையில், ஒரு நகைக்கடையில் தற்செயலாக நுழைந்து, கண்ணைப் பறித்து தக தக வென ஜொலிக்கும்ஒரு தங்கத்தோட்டை விலை விசாரித்து, அதிக விலை என்பதால் அதை அப்படியே வைத்து விட்டு வந்து விட்டேன்.
ஒரு வருட திருமண ஆண்டு திரும்புகையில், எனக்குத்தெரியாமலேயே அத்தோடுகளை வாங்கிவந்து ஒரு சப்ரைஸ் கொடுத்தார். நான் ஏற்கனவே பார்த்து வைத்து விட்டு வந்த அதே பெரிய தோடுதான் அவை, இருப்பினும் என் காது துவாரத்தில் அவைகள் நுழையவில்லை. அழுத்திப்போட்டுப் பார்க்கையில் இரத்தமே வந்து விட்டது.
முன்பெல்லாம் எதை வாங்கினாலும் மாமியாரிடம்/அம்மாவிடம் காட்டுவது எங்களின் வழக்கம். வீட்டின் பெரியவர்களுக்குத் தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது என்பது எங்களுக்குப் போடப்பட்ட அன்புக் கட்டளை. இன்னமும் அப்படித்தான். இருப்பினும் இந்தத் தோடுகளை அன்புப் பரிசாகக் கொடுக்க வேண்டுமென்கிற ஆர்வத்தில் யாருக்கும் தெரிவுபடுத்தாமல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.
மேலும், தங்க ஆபரணங்கள் வாங்கவேண்டுமென்றால் மாமி அவர்கள் வாடிக்கையாக வாங்கும் ஒரு பத்தரிடம் தான் வாங்க வேண்டும். அது அவர்களின் வழக்கமும் கூட. அவர் செய்க்கூலி அவ்வளவாக வாங்கமாட்டாராம்.! நகைகளுக்கு விலை அதிகம் போட மாட்டாராம்.! தரமான தங்கத்தில் செய்து கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அப்பத்தரையே நம்பியிருந்தார்கள்.
இங்கே டவுனில் கிடைக்காததா!? இருப்பினும் இது அவர்களின் நம்பிக்கை.
நாம் எம்மாதிரி ஆடர் கொடுக்கின்றோமோ அதுபோலவே செய்து கொடுப்பாராம், நம்முடைய நகைகளைக் கொடுத்தால், அதற்குத் தகுந்தாட்போல் தரமாக தங்கத்தில் மறுபொருள் செய்துகொடுப்பார். ஏமாற்றமாட்டார், மாதமாதம் பணம் இருக்கின்ற போது கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்,என்கிற கூடுதல் வசதியெல்லாம் அவரிடம் இருப்பதால் அவரை சுற்றி ஒரு கூட்டம் வட்டமடித்தவண்ணமாகவே இருக்கும். ஒரு காலத்தில் (50.60,70 களில்) இது போன்ற பத்தர்கள் பெருத்த லாபத்துடன் ஏழை மக்கள் வாழும் எஸ்டேட் பகுதிகளில் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து வந்துள்ளது நிஜம்.
மாதத்திற்கு ஒரு முறை வீட்டுவாசலில் ஆஜராகிவிடுவார். அவரைக் கேட்காமல் வெளியே எதாவது நகை நட்டுகள் செய்தால், அவருக்குக் கடுமையான கோபம் வரும். என்னிடம் ஒரு வார்த்தை கேட்காமல் செய்துவிட்டீர்களே. இதில் இது குறை, அது குறை, என, குறைபுராணம் பாடி, வெளியே வாங்கிய பொருளை தரமிழந்ததாகச்செய்து விடுவார். இவரை, அவர்கள் முழுமையாக நம்பினார்கள். வீட்டில் நடைபெற்ற அனைத்து வைபவங்களுக்கும், பலவிதமான நகைகள் அவரின் கைவண்ணமே.
ஆக, நாங்கள் இங்கே வாங்கிய தோடுகளில் மாமிக்கு அவ்வளவாக திருப்தியில்லை. என்ன அவசரம்? அம்மாவிடம் ஒரு வார்த்தைச் சொல்லியிருந்தால், இந்த விலைக்கு நல்ல ஒரு பொருளாகச் செய்திருப்பேனே.! மேலும் நகைகள் வாங்கும் போது இப்படி தகதகவென மின்னும் கற்கள் கொண்ட நகைகளை வாங்காதீர்கள், வாங்கும் போது மதிப்பு இருக்கும், பிறகு அதை மீண்டும் கொடுக்கும்போது (விற்கும்போது), கற்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். கற்களின் பாரத்தைக் குறைத்துவிட்டுத்தான் அதனின் மதிப்பை அளவிடுவார்கள், அப்போது, அது ஒண்ணுமில்லாமல் போய்விடும். என்றும் ஆலோசனை வழங்கினார். அதுமட்டுமல்லாமல், மகன் இதுவரை தனக்கு ஒரு குந்துமணி கூட வாங்கிக்கொடுக்காமல், தமது புதுமனைவிக்கு மட்டும் நகை வாங்கியிருக்கின்றானே என்கிற புகைச்சலும் அவரின் வார்த்தைகளிலிருந்து வெளிப்பட்டதை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது.
மேலும் அந்தத்தோடுகள் அன்று மாமியின் காதுகளில் மிகச் சுலபமாக நுழைந்துகொண்டது. எனக்கு ஏற்பட்ட அவஸ்தை அங்கே ஏற்படவில்லை. ``சரி, நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்..’’ என அவருக்கே கொடுத்து விட்டேன். கணவருக்கும் பெருமை, தன் மனவியின் தியாக(!) மனப்பான்மையை நினைத்து.!
மாமி வைத்திருந்த தங்க நகைகளிலேயே, அவரை மிகவும் கவர்ந்த நகை இந்த கற்கள் பதித்த தோடுகள்தான். வெள்ளைக்கற்கள் தகதகக்க வென மின்ன, காதுகள் நிறைந்து பார்ப்பதற்கு மிக அழகாக, முகத்திற்கு ஒருவித வசீகரத்தைக் கொடுத்து, மாமியை மேலும் மங்களகரமாக்கியது. போகுமிடமெல்லாம் எல்லோருக்கும் இந்த தோடுகளின் மீதே கண்கள். மஹாராணி மாதிரி இருக்கே, மகன் வாங்கிக்கொடுத்த தோடுகளைப் போட்டுக்கொண்டு, என, எல்லோரும் கண் வைப்பார்களாம்.! பூரிப்பில் சொல்லிச் சொல்லி மகிழ்வார் மாமி.
மகள்களுக்குக்கூட இந்த தோடுகளில் மீதுதான் கண். ``அம்மா இல்லேன்னா, இந்த தோடுகளை நான் எடுத்துக்கொள்வேன்..’’ என்று, என் முன்னே பேரம் பேசுவார்கள் விளையாட்டாக. நானும் ``நான் ஒருத்தி இருக்கும் வரை நடக்காது.’’ என வேண்டுமென்றே வம்பிற்கு நிற்பேன்.
இத்தோடுகள் வாங்கிய இருபது வருடங்களில், எத்தனையோ முறை அதனின் கற்கள் விழுந்து விழுந்து காணாமட் போனாலும், தமது வாடிக்கைப் பத்தரிடம் சொல்லி நல்ல தரமுள்ள கற்களைக்கொண்டு, அழகாக பதித்துக்கொள்வார். அத்தோட்டை விட்டு மாமி பிரிந்ததேயில்லை. எங்கு சென்றாலும் அதை அணிந்துகொண்டுதான் செல்வார். அவரிடம் பல தோடுகள் பல வடிவங்களில் இருப்பினும், இது அவருக்குப் பொக்கிஷம். தனது கடைக்குட்டியின் உழைப்பு, என் மகன் எனக்கு வாங்கிக்கொடுத்த அரிய சொத்து என அவ்வப்போது பீற்றிக்கொள்வார்.
கொஞ்ச காலமாக மாமி உடல் நலம் குன்றியிருப்பதால் (முதுமை தழுவிக்கொண்டது), அவரிடமுள்ள அனைத்து சொத்துகளையும் எல்லோருக்கும் பங்கிட்டு கொடுத்துவிட்டார். யார் யாருக்கு என்னென்ன பொருட்கள் கொடுக்க வேண்டுமென்று முடிவெடுத்து பிரிக்கப்பட்டு விட்டன. எல்லாம் விலை மதிக்கவே முடியாத பழைய காலத்து நகைகள். எதையும் அழித்துப் புதுப்பிக்காமல் அப்படியே, அந்தப் பழமை மாறாமல் பாதுகாத்து வைத்திருக்கின்றார். சரடு, நெற்றிச்சுட்டி, சங்கு தோடு, குமிழ் தோடு, நெளி மோதிரம், தாலிக்கொடி, ஜிமிக்கி, ரெண்டைச் சங்கிலி, பருப்புச் சரடு.. என இன்னும் அதிகமாக நகைகள், கொஞ்சம் சேமிப்புப்பணம், இப்போது இருக்கும் அந்த குட்டி பங்களா லாட் வீடு.
நகைகள் எல்லாவற்றையும் மகள்களுக்கும், வீடு மற்றும் பணத்தை மகன்களுக்கும் பங்கிட்டுக்கொடுத்து விட்டார் மாமி. எனது அந்த தோடுகளைத் தவிர. யார் யாருக்கு என்னென்ன நகைகள் போனதென்பது பற்றி, மருமகள்கள் நாங்கள் மூன்று பேரும் மூச்சு விடவில்லை. தத்தம் கணவர்களின் ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் ஆளாகவேண்டிவரும் என்பதால், நாங்கள் மனதில் இருக்கும் ஆசைகளுக்குப் பூட்டுப்போட்டு கொண்டோம். இருப்பினும் எங்களுக்குள் பேசிக்கொள்வோம். அது யார்கிட்டே இருக்கும்? இது யார் வைத்திருப்பார் என.! பெண்களின் புத்தியாச்சே, விட்டுப் போகுமா..?!
எல்லாவற்றையும் பங்கிட்டுக்கொடுத்து விட்டு, இந்தத் தோடுகளை அணிந்துகொண்டு தான் வந்தார் மருத்துவமனைக்கு. நோயின் கடுமையில் அவதியுற்றபோது, இனி நாம் எங்கே பிழைக்கப்போகின்றோம் என்கிற அவநம்பிக்கையில், விடைபெற்றுக்கொண்டு இங்கே வந்தார். நவீன மருத்துவம், மகன்களின் அன்பான அரவணைப்பு என நன்கு தேறிவிட்டார். இப்போது நலமாக இருப்பினும் பழையபடி இல்லை என்றே சொல்லவேண்டும்.
ஆக, இது என்னுடைய தோடு என்பதால், மருத்துவமனையில் இருந்து கழற்றிக் கொடுக்கும் போது, விஜியிடம் கொடு, என்று சொல்லி கொடுத்தனுப்பியிருந்தார். என் தோடுகள், என்னிடமே வந்து சேர்ந்தது.
அத்தோடு என் கையில் கிடைக்கும் போது, நான் வாசலில் வைக்கப்பட்டிருந்த என் செடிகளோடு உறவாடிக்கொண்டிருந்தேன். அவைகளை எங்கே வைத்தேன் என்பதனை மறந்தேபோனேன். அடிக்கடி தோடு பற்றிய அழைப்புகள் வந்து, அதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்ததால், மனச்சோர்வோடு அதை முழுமையாக தேடும் முயற்சியில் இறங்கினேன்.
எங்கே வைத்தேன்? தோடு கையில் கிடைத்த போது நான் எங்கே இருந்தேன்? என்ன செய்தேன்? அப்போது அவசரத்தின் எங்கு வைத்திருப்பேன்.? என அமைதியாக, எந்த ஒரு படபடப்பு சிந்தனையும் இல்லாமல், எண்ணங்களை அந்த நிகழ்வின் பால் ஓட விட்டு, யோசித்துப்பார்த்தேன். இடம் ஞாபகத்திற்கு வந்த போது, நேராக அவ்விடம் நோக்கிவிரைந்தேன். ஒரு வெள்ளை டிஷூ பேப்பரில் மடித்துக் கொடுக்கப்பட்ட அந்தத் தோடுகள், காலணிகள் வைக்கும் அலமாரியின் மேல் அப்படியே இருந்தது பத்திரமாக. நல்ல வேளை..
நீண்ட நாள்கள் கழித்து, என் தோடு என்னிடம் வந்த போது எனக்கு ஒரே ஆச்சிரியம்.! இதுதானா அந்தத் தோடு? இப்படியா இருக்கும்? சிறியதாக இருக்கின்றதே! நான் பெரிய தோடல்லவா வாங்கினேன். மகள்களிடம் கொடுத்து அவர்கள் அதை மாற்றிவிட்டார்களா!? ஏற்கனவே அவர்களெல்லாம் பொல்லாத நகை பேராசை உள்ளவர்கள் ஆயிற்றே, நம்முடையதை எடுத்துக்கொண்டு, அவர்களிடமுள்ள எதோ ஒரு சிறிய தோட்டை மாற்றி வைத்து விட்டார்களா? மாமி முதலில் உடல் நலமில்லாமல் இருந்த போது, எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் தானே கொடுத்துவைத்திருந்தார். திருட்டுவேலை ஏதும் நடந்திருக்கலாமோ..!? என் மனது அசிங்கமாக யோசிக்கத்துவங்கியது.
அதே தோடுதானா இது, என யாரிடம் கேட்பது? கதை கந்தலானால்.. கணவருக்குத்தெரிந்தால்!? தொலைந்தேன்.!! அதனால் நானே சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன். மாமியின் பழைய புகைப்படங்களை எடுத்தேன், அதில் அவர் போட்டிருக்கும் தோடும், என் கையில் உள்ள இந்த தோடும் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா என ஒப்பீடு செய்தேன். திருப்தியில்லை. பேரனின் திருமண சீடியை நைசாக வாங்கி, அதில் உள்ள மாமியின் படத்தை மட்டும் மியுட் செய்து, ஷ்ஷூம் பண்ணி தோடுகளை மட்டும் பார்த்தேன். திருப்தியில்லை.! நானே காதில் போட்டுப்பார்த்தேன், பெரிதாகவே இருந்தது இருப்பினும் அவ்வளவாக திருப்தி ஏற்படவில்லை. உடனே எனக்கு ஒன்று ஞாபகத்திற்கு வரவே, அதையும் இறுதியாகச் செய்துபார்த்தேன்.
என்னுடைய பழைய ஜோடி தோடுகளை எடுத்து, இவைகளோடு ஒப்பிட்டுப்பார்த்தேன். பிறகுதான் திருப்தியே வந்தது. காரணம் இத்தோடுகள் வாங்கிய புதிதில் என்னுடைய பழைய தோட்டோடு இதை ஒப்பிட்டுப்பார்த்துள்ளேன். இது எவ்வளவு பெரியது அதை விட என்று.!? ஆக, அப்படி ஒரு ஒப்பீட்டை மறுபடியும் செய்துப்பார்த்த போதுதான் என மனம் ஆறுதல் அடைந்தது. அதே தோடுதான். நல்லவேளை யாரிடமும் கேட்கவில்லை, கேட்டிருந்தால் என் கதி? என்னுடைய மறுபக்கம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தேவையா இது.!?
தோடுகள் கிடைத்து விட்ட விவரத்தை, அண்ணியிடம் சொல்வதற்கு, அண்ணிக்கு அழைத்தேன்.
``தோடு பத்திரமாக இருக்கிறது அண்ணி, அதை அம்மா போடமுடியுமா என்பதுதான் சந்தேகம்.!? வேண்டுமென்றால் வயதானவர்கள் போடுவார்களே, காதிலேயே மாட்டியிருக்கும் தோடு, தமிழ்நாட்டில் கூட கிழவிகள் காதுகளின் துவாரம் நீண்டு இருக்கும் போது போட்டுக்கொள்வார்களே, காதுகளில் தொங்கிக்கொண்டு.. அது போல் வாங்கிப்போடலாமா?’’ என்று எனது எண்ணத்தைச் சொன்னேன்.
தொலைப்பேசி மாமியிடம் சென்றது.
``வேண்டாம்மா, அந்த தோடு, கிழவிகள் போடுவது. எனக்கு இது போதும். பின்னாடி ஒரு பெரிய பட்டன் வைத்துப்போட்டுக் கொண்டால், அப்படியே காதில் நிற்கும்..’’ என்றார்.