வியாழன், செப்டம்பர் 11, 2014

தமிழ் அனுபவம்

மேடான் சென்றிருந்தபோது, சில தமிழர்களைச் சந்தித்தேன். கோவிலில் ..ஹோட்டலில் சாப்பிடும்போது. மோட்டார் ரிஃக்‌ஷா எடுக்கச்சென்ற இடத்தில்.

அங்கே ஒரு பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு சென்று வந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். உள்ளே விநாயகர் சதூர்த்தி நிகழ்வு பற்றிய அறிக்கையினை அச்சிட்டிருக்கின்ற காகிதத்தை எடுத்துப்பார்த்தேன். பாதி தமிழிலும் பாதி இந்தோனீசிய மொழியிலும் அச்சிட்டிருந்தார்கள்.

ஆஹா, தமிழ் தெரிகிற, பேசுகிற, படிக்கிறவர்கள் இருப்பார்கள் போலிருக்கு, என்று நினைத்து, போகிற வருகிறவர்களை எல்லாம் பார்த்து ஒரு புன்னகையை வீசினேன். பதிலுக்கு அவர்களும் புன்னகையைத் தந்தார்கள். ஆனால் யாரும் வாய்த்திறக்கவில்லை. பயபக்தியுடன் வழிப்பாட்டில் மூழ்கினார்கள்.

சீனர்களும் கோவிலில் விழுந்து விழுந்து வழிபாடு செய்துகொண்டிருந்தார்கள்..

பேச வாய்ப்பு இல்லயே என ஏங்கினேன். கோவில் பூசாரியும் முனகிக்கொண்டே பூஜை செய்தார். சத்தம் வெளியே வரவில்லை.

கோவில் கருவறையின் வெளியே, ` உள்ளே நுழையாதீர்கள்’ என்று இந்தோனீசிய (மலாய்) மொழியில் எழுதியிருந்தார்கள்.

என்ன? யாரிடம் பேசுவது,! என்று மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டே, அங்குள்ள ஒருவரிடம், தமிழில், டாயிலட் எங்கே.? என்று கேட்டேன். அவருக்கு விளங்கிற்று. வாயால் பேசுவதைவிட, கைகளால்.. அதோ.. அங்கெ அங்கெ..பின்னாடி போங்கொ.. என்றார்.

பின்னால் சென்றேன். அங்கே ஒரு கூட்டம்.. பெண்கள் அமர்ந்து காய்கறிகளை வாளி வாளியாக நறுக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகில் சென்று,  டாய்லட் எங்கே.? கேட்டேன்.

சிரித்த முகத்துடன் ஒரு பெண் கைகளை நீட்டி, தோ.. என்றார்.

டாய்லட் சென்று வந்தவுடன். அவர்களிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.

இவ்வளவு காய்கறிகளை நறுக்குகின்றீர்கள். என்ன விஷேசம். விநாயகர் சதூர்த்திதான் முடிந்துவிட்டதே..!? மெதுவாகப்பேச்சு கொடுத்தேன். அவர்களின் முகங்களை உற்று கவனித்தேன்.

ஓ.. இல்லெ. நாளிக்கு கல்யாணம். அதா. நீங்க எங்குள்ளவங்க? என்னிடம் கேட்டார் ஒரு பெண்மணி.

கோலாலம்பூர்..

ஓ.. நா வந்திரிக்கெ அங்கே..

அப்படியா.? தமிழர்கள்தானே..!  நான் தான் கேட்டேன்.

ஆமா..ஆமா.. தமில்தான். பதில் சொன்னார் அவர். கஷ்டப்பட்டு பேசுவதை உணர்ந்த நான் மேலும் தொடர விரும்பவில்லை. கொஞ்ச நேரம் நின்று அவர்களைக் கவனித்தேன். வேலைகளில் மூழ்கினார்கள். அவர்களுக்குள் பேசுகிறபோது இந்தோனீசிய பாஷயிலேயே பேசி சிரித்துக்கொள்கிறார்கள். என்னிடம் கஷ்டப்பட்டு தமிழ் பேசிய அவர்கள். அவர்களுக்குள் மிகச்சரளமாக இந்தோனீசிய மொழியில் உரையாடிக்கொள்கிறார்கள்.

கோவிலின் வெளியே காலணிகளைக் கலற்றி வைக்கின்ற இடத்தில் தந்தையும் மகளும், இந்தோனீசிய மொழியில் பேசிக்கொண்டிந்தார்கள்.

கோவிலுக்கு எதிர்ப்புறத்தில்  நினைவுச்சின்னங்கள் விற்கப்படுகிற கடை ஒன்றில் நுழைந்தேன். அங்குள்ள கடை அக்கா எங்களைக் கண்டவுடன் பதற்றமடைந்துவிட்டார். ஆங்கிலத்தில் பேசினார். நான் தமிழில் பேசினேன். கஷ்டப்பட்டார். வேர்த்து விறுவிறுத்தது அவருக்கு. நா தஞ்சாவூர் போவே.. சாமா வாங்குவே.. என்றார். நான் இந்தியா அல்ல. மலேசியா, என்றேன். ஓ.. கோலாலபூர் போவே அடிக்கடி. ரொம்ப கூட்டாலி இருக்கெ.. என்றார். பதற்றமாகவே பேசினார். முடிந்தால் எங்களை கடையை விட்டு விரட்டியே விடுவார் போலிருக்கு..

அடுத்து, ஹோட்டலில் ஒருவரைச் சந்தித்தேன். உணவு சாப்பிடுகையில். தமிழரா.? கேட்டேன். அசட்டுத்தனமாக சிரித்துவிட்டு.. ஆமா.. நீங்க எங்கே உள்ளிவங்க? கேட்டார். மலேசியா. என்றேன்.
ஓ.. நான் டெஃக்டையிஸ் வைத்திருக்கேன். மலேசியால கடை இருக்கு. வருவேன். அடிக்கடி. என்றார். அவரும் விட்டால் போதும் என்கிற பாணியிலே பேசினார். துன்புறுத்த முயலவில்லை. பொழச்சுப்போ.. என்று விட்டுவிட்டேன்.

மோட்டார் ரிஃக்ஷா ஓட்டும் ஒரு வாலிபனைச் சந்தித்தோம். இன்னொரு ஓட்டுனரிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கையில் இவன் நுழைந்து இந்தோனீசிய பாஷயிலேயே `வராது அக்கா.. தூரம். ரேட் குறைவுதான், என்று அவர்களுக்குப் பரிந்து பேசினான். தமிழாய்யா? கேட்டோம். ஆம், என்றான். அபப்டினனா நீங்களே வாங்களேன். பேசிக்கிட்டே போகலாம். என்றோம்.

ஆ.. என்ன சொல்றீங்க? எனக்கு தமிழ் தெரியாது. என்று மலாய்மொழியில் அசடு வழிய சொல்லி, இடத்தைக் காலி செய்தான்..

இப்படியாக எங்களின் தமிழ் அனுபவம் அங்கே....

நல்லவேளை.. மலேசியாவில் தமிழ் கம்பீரமாக பீடு நடை போடுகிறது, என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக்கொண்டோம்.