இன்று,
ஆறுமணிக்கு ஒரு நிகழ்விற்குப்போக வேண்டும். தம்பி வாங்கிய புதிய கடைக்கு இன்று ரிப்பன் வெட்டும் நாள்.
சரியாக ஆறுமணிக்கெல்லாம் வந்திடுங்கள், என எல்லோருக்கும் சொல்லியாச்சு.
சரி சும்மாவா போறது? மதிய உணவு முடிந்தவுடன் சில பலகாரங்கள் செய்யலாமே என, பருப்பு வடை மற்றும் பாசிப்பயிர் உருண்டை செய்து எடுத்துச்செல்லலாம் என, அவைகளைச் செய்ய ஆயத்தமானேன்.
கிட்டத்தட்ட ஐந்து மணியாகிவிட்டது எல்லாவற்றையும் செய்து முடித்து சுத்தம் செய்ய.!
விஷேசங்களுக்கு பலகாரங்கள் செய்து எடுத்துச் செல்வதைப் போன்ற ஒரு படபடப்பான வேலை வேறெதும் இல்லை.. அப்பப்பா, சுவையெல்லாம் சரியான இருக்கவேண்டும். நல்லா இருக்குமா இருக்காதா? எல்லோருக்கும் பிடிக்குமா? நேரமெடுத்துச் செய்கிறோமே, சாப்பிடாமல் வீணடித்தால்..! பேன்ற எண்ணங்கள் நம்மை அலைக்கழிக்கும். சில இடங்களில், சிறுபிள்ளைகள் முதற்கொண்டு, `அய்யே அண்டி, நல்லாவேயில்லை..’ என கிண்டல் செய்வார்கள்.
``ஆறுமணிக்கெல்லாம் அங்கே இருக்கணும், இன்னும் நீ என்ன செய்யற அடுப்படியில்?’’ கணவர்தான். ``டீ கலக்கி, எனக்கும் ரெண்டு வடை கொண்டு வா.’’ அவரேதான். அதையும் செய்தாகிவிட்டு, மகனை காலெஜில் கொண்டு விடணுமே, அவர்தான் அழைத்துச்செல்வார். அதோடு இன்னொரு முக்கியமான விஷேசத்தில் அவர் கலந்துகொள்ள வேண்டும். அவருக்கும் சட்டை அயர்ன் செய்யனும்.
நான் கிளம்புவதற்குள், மகனுக்கு, ஒருவார பயன்பாட்டிற்கு தேவையானதையெல்லாம் எடுத்து வைக்கவேண்டும். மிக விரைவாக துணிகளையெல்லாம் அயர்ன் செய்து, அவனுடைய பேக்கில் எடுத்து வைத்து விட்டு, புதிய துணிகளை ஊற வைத்திருந்தேன் அவைகளை கையில்தான் துவைக்க வேண்டும், மிஷினில் போடமுடியாது. அது ஞாபகத்திற்கு வரவே, அதையும் விருவிருவென செய்து, உலர போட்டேன்.
``இரவு உணவு என்ன?’’ என் மகன் தான்.
``மதியம் சமைத்தது இருக்கிறது, அதை சாப்பிட்டுக்கொள் ய்யா.``
``ஹூஹும் முடியாது, கோழி வறுவல் செய்துகொடுக்கிறேன் என்றீர்களே, என்னாச்சு?’’
``எனக்கு நேரமில்லை, நீ இருப்பதை சாப்பிடு, மூணு பேருக்கு, முப்பத்திரெண்டு தடவை சமைக்கணும்.’’
``செய்துக்கொடுங்கள், இல்லையேல், இன்று நான் பட்டினியாக காலெஜ் செல்கிறேன்.!’’
``இருப்பதைச் சாப்பிடு என்கிறேன், என்ன இப்படி புரிந்துகொள்ளாமல்? பார்க்கிறாய் தானே, அம்மா காலையிலிருந்து எங்கேயாவது உட்கார்ந்தேனா.!?’’
``ஏய்,மணியாச்சு,கிளம்பு நீ, நானும் போக முடியாது, நீயும் லேட்டா போனால், எதாவது நினைச்சுக்குவான் உன் தம்பி.’’ அவர்தான்.
இவனிடம் போராடாமல், நான் அவசர அவசரமாக குளித்து, கண்முன்னே இருந்த ஒரு சுடிதாரை அணிந்துகொண்டு, தலையில் நீர் வடிய, தயார் செய்து வைத்திருந்த பலகாரங்களை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக கிளம்பினேன்.
காரின் அருகில் சென்ற போது, ``என்னுடைய சாக்ஸ் எங்கே?’’ மேலிருந்து ஒரு குரல், சத்தமாக.. மகன்தான். பொறுக்காதுங்க, நான் எங்கேயாவது கிளம்பினால்..!
``கீழே கொடியில் இருக்கு, எடுத்துக்கோ.’’ என்று சொல்லி, காரில் அமர்ந்து, சரியாக ஆறுமணிக்கெல்லாம் கடை வாசலில்.
பூஜை நடத்துனர் இன்னும் வரவில்லை. அம்மா இன்னும் வரவில்லை, சாப்பாடு இன்னும் வரவில்லை, தண்ணீர் வாங்கச்சென்றவன் இன்னும் வரவில்லை.. என எட்டு மணிக்குத்தான் ஆரம்பித்தார்கள் நிகழ்வை.! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சும்மானாலும் உட்கார்ந்திருந்தோம், சில வெட்டி கதைகளை பேசிக்கொண்டு. வீட்டிலேயே இருந்திருந்தால், இன்னேரம் எவ்வளவோ வேலைகளை செய்திருப்பேன். அப்படியே உடம்பில் கம்பளிப்பூச்சி ஓடுவதைப்போல் இருந்தது எனக்கு. ஞாயிறு என்றால் பகலில் கொஞ்ச நேரம் தூங்குவேன். அதையும் இவ்வாரம் தியாகம் செய்தாகிவிட்டது.!
இந்த மாதிரி ஆட்களோடு, இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு, இன்னும் சொச்ச வாழ்வை எப்படித்தான் ஓட்டுவது.? எனக்கே தெரியவில்லை!!!??
பெண் பிழைப்பு...!