ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

எனக்கு ஒரு கண் என்றால்....!!!?

பக்கத்துவீட்டுப் பூச்செடி எங்களின் வீட்டில் பூத்துக் குலுங்குவதைக் கண்டு நான் பூரித்துபோனதுண்டு பலமுறை.
நல்ல நறுமணத்தை வீசிக்கொண்டு அதுகொடுக்கின்ற மலர்.. மனதிற்கு அவ்வளவு இதம்.

அது அவர்களின் மரம்தான். கொடிபோல் எங்களின் வீட்டிலும் படர்ந்து அழகிய தோற்றத்தைக்கொடுத்துக்கொண்டிருந்தது.

இந்த செடியால் உங்களுக்குத் தொந்தரவா? இலை கொட்டுகிறது.. பூ கொட்டுகிறது.. கட்டெறும்பு வருகிறது.. கேட்டார் பக்கத்துவீட்டுக்கார பெண்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தப் பூமரம் என் பொழுதை இனிமையாக்குகிறது. எவ்வளவு அழகு. என்ன மணம். இரவில் கொஞ்சநேரம் இங்கே உற்கார்ந்திருப்பது எனக்கு எவ்வளவு மகிழ்வு தெரியுமா. என்றேன்.

இல்லை இல்லை என் கணவர் திட்டுகிறார். உங்களின் வீட்டை நாசம் செய்கிறதாம் இந்தச்செடி.. வெட்டப்போகிறாராம்.

தோ..பாருங்க. எனக்குப் பிரச்சனையில்லை. எனக்குப்பிடித்திருக்கிறது. அப்படியே விடுங்கள். என் வீட்டுப்பக்கம் நான் தூய்மை படுத்திக்கொள்கிறேன். கவலை வேண்டாம். என்றேன்.

இல்லை சிஸ்,அவருக்கு அக்கம் பக்கத்தில் பிரச்சனை என்றால் பிடிக்காது. வெட்டுவேன் என்கிறார்.

அட பிரச்சனை வராது. விடுங்க. தரை அசிங்கமாவது பெரியவிஷயமேயில்லை. மனதை இதமாக்குகிறது இந்தச்செடி.. அதுதான் முக்கியம்.. எவ்வளவோ சொன்னேன்.

சென்ற வாரம், அந்த ஆள் பெரிய கத்தரிக்கோல் வைத்துக்கொண்டு அவர்களின் இடத்தைச் சுத்தம் செய்கிறேன் என்று என்னன்னமோ செய்துகொண்டிருந்தார்.
பார்த்தால், அங்கிருந்து இந்தப்பக்கம் படர்ந்திருக்கின்ற கொடிகளையெல்லாம் கத்தரி செய்துள்ளார். இந்தப்பக்கம் உள்ள அனைத்தும் காய்ந்து குச்சிகளாக தொங்கிக்கொண்டிருந்தன. அழைத்துக்கேட்டேன்.

என்ன இப்படி?

இல்லை, அவருக்கு மற்றவர்களுக்கு தொந்தரவு என்றால் பிடிக்காது.. அதனால்தான் கத்தரித்துவிட்டார். என்றார் அப்பாவிபோல்.!

எனக்குக் கோபம் வந்தது. நான் தொந்தரவு என்றேனா? எவ்வளவோ சொன்னேன்.. என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? என்று எரிச்சலுடன் சொல்லி, எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு தூய்மை செய்து, பூவைக் கொடுக்காத நீங்கள் குச்சியையும் காய்ந்த இலைகளையும் கொடுக்கலாமா? வெட்டுகிறபோது எல்லாவற்றையும் தூய்மைப் படுத்தவேண்டுமா இல்லையா? உங்களின் செடிதானே.. !கேட்டேன். மேலும்.. இனி இந்தச்செடி இப்பக்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. என்று முகத்தை உர்ர் என்று வைத்துக்கொண்டு சொல்லியே விட்டேன்.

இனி நட்பு விளங்கும் நல்லா.

என்னால் யாரிடமும் ஒத்துப்போகமுடியவில்லை. எப்படியாவது பிரச்சனை வந்துவிடுகிறது...

எப்படி சிலர் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குகிறார்கள்..?
 —