தமது ஐந்து வயது மகன் படிக்கும் பாலர் பள்ளிக்குக் காலையிலிருந்து அலைந்துகொண்டிருக்கும் தோழி, இப்போதுதான் அழைத்திருந்தாள். (படம் பார்க்கப்போகலாம் என்று ப்ளான் பண்ணியிருந்தோம் - இந்த பிரச்சனையால் அது நடக்கவில்லை..)
பள்ளியில் மகனுக்கும் (40கிலோ இருப்பான் - obesity child) மற்றொரு மாணவிக்கும் சண்டையாம். இவரின் மகன் கோபத்தில் அந்தப் பெண் குழந்தையை எட்டி உதைத்து மிதித்துள்ளான்.
பெண் குழந்தை டீச்சரிடம் சொல்லி பிறகு தமது பெற்றோர்களிடமும் முறையிட்டுள்ளாள். நேற்றுநடந்த சம்பவம் இது. டீச்சர் அந்தப்பையனை கூப்பிட்டு மிரட்டி, ரோத்தான் அடி கொடுத்து கண்டித்துள்ளார். பையனின் பெற்றோரான என் தோழிக்கும் அவரின் கணவனுக்கும் தொலைப்பேசியின் மூலம் அழைத்துத் தகவல் சொல்லி கண்டிக்கச்சொல்லியுள்ளார்.
முடிந்துவிட்டது என்று நினைத்தால், இன்று காலையில் மாணவியின் பெற்றோர்கள் பள்ளிக்குப் படையெடுத்து டீச்சரை வாங்கு வாங்கு என்று வாங்கியிருக்கிறார்கள். (சொற்போர்தான்..) போலிஸ் ரிப்போர்ட் அப்படி இப்படி என பயமுறுத்தியுள்ளார்கள்.
கலவரமடைந்த ஆசிரியை, என் தோழியையும் அவரது கணவரையும் அழைத்து பெற்றோர்கள் இருவரையும் பேசவைத்துள்ளார். குழந்தையின் அம்மா வேதனையில், `பையனைக் கண்டியுங்கள் இல்லையேல் விபரீத முடிவு எடுக்கவரும்..’ என்று எச்சரித்து திட்டியிருக்கிறார்... டீச்சரும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளார் இருவீட்டாரையும்.. (செய்யத்தான் வேண்டும்..பாலர் பள்ளிகளின் கட்டணம் அப்படி இங்கே.. பல்கலைக்கழகமாவது பரவாயில்லை)
கதை இதுதான்..!!
ஆனால் என் தோழி என்னிடம் இச்சம்பவதைச் சொல்லும்போது, தன் மகன் செய்தது நியாயம் என்பதைப்போல் சொன்னாள்.
`அந்தப் பெண் குழந்தை அவனை எப்போதும் ஆதாம்டீஸ்ட் செய்கிறாள்.. குண்டு குண்டு.. மொட்டை மொட்டை என்றும்..’
`பெத்தவங்களுக்கு அறிவு இல்லையா? இத போய் பெரிசு படுத்திக்கொண்டு..!!!’
`அந்த அம்மாகாரி டீச்சரையே வார்னிங் செய்கிறாள்..திமிறு...’
`எங்க வீட்டுக்காரருக்கு பயங்கர கோபம்.. செய்வதற்கு எவ்வளவோ வேலை இருக்கு.. இது ஒரு பிரச்சனையா? அறிவு கெட்ட ஜென்மங்கள் (அந்த பெண்குழ்ந்தையின் தாய் தந்தையர்களை)..
`சும்மா சும்மா அவனை குண்டு குண்டு என்றால், அவனுக்குக் கோபம் வராதா?..’
`இனிமேல் எதும் பிரச்சனையென்றால்.. விவரம் பெற்றோர்களுக்குப் போகாமல் டீச்சரே செட்டல் செய்யட்டும்.. அதான் பணம் வாங்குகிறார்களே.. அது கூட செய்யமுடியாதா?’
`மிதிக்கட்டும்.. இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. (சிரிக்கிறார்)..
இதுக்கு மேல் என்னால் தாங்கமுடியாது. எனக்கு எரிச்சல் வந்துவிட்டது.
அடி வாங்கியது உன் பிள்ளை என்றால் அதன் வேதனை தெரிந்திருக்கும் உனக்கு!. சின்ன வயதிலேயே உம்மவனுக்கு இவ்வளவு கோபம் வருதா? நாளை ஆண்பிள்ளைகளிடம் உன் மகன் கைவரிசையைக்காட்டும் போது, எல்லோரும் சேர்ந்து மிதி மிதி என்று மிதிப்பான்கள்..அப்போது சொல்லு, பள்ளி விவரம் எனக்கு வரவேண்டாம் டீச்சர் நீயே செட்டல் பண்ணுங்க என்று..ஒகே வா? கண்டித்துவை.. சின்னப்புள்ள கணக்கா உளறாதே என்றேன்...
படம் பார்க்க என்னோடு வரமாட்டாள் - அநேகமாக. நட்பை முறித்துக் கொண்டாலும் ஆச்சிரிப்படுவதற்கில்லை.