திங்கள், மார்ச் 04, 2013

மொழி வேண்டாம்

நீண்ட நாட்களாக புத்தக அலமாரியை அலங்கரித்த எனது புத்தகங்கள் தூய்மைப்படுத்தாமல் தூசு மண்டிக்கிடந்தது.

என் வீட்டுப் பணிப்பெண்ணை அழைத்து, எல்லாவற்றையும் சுத்தம் செய்யலாம் வா, என்றேன்.

அவளை மட்டும் அந்த வேலையைச் செய்யச்சொல்லலாம்தான், தமிழ் மொழி தெரியாத அவள் தலை கீழாக எல்லாவற்றையும் அடுக்கிவிடுவாள். இன்றைய தூய்மைப் படுத்துதலின் நோக்கமும், ஏற்கனவே அவள் தனியாளாக தூய்மைப்படுத்துகிறேன் என எல்லாவற்றையும் `கசா முசா’ என்று அடுக்கிவைத்திருந்தாள். அவளுக்கு என்ன தெரியும், சொல்கிற வேலையைச் செய்கிறாள், அவ்வளவுதான்.

இன்று நானும் அவளுடன் சேர்ந்துகொண்டு அலமாரியை சுத்தப்படுத்த ஆயத்தமானேன்.

ஒவ்வொரு பகுதிகளாக புத்தகங்களை எல்லாம் அள்ளிக் கீழே போட்டுவிட்டு ஈரத்துணியால் தூய்மை படுத்திக்கொண்டிருந்தாள் இந்தோனீசியப் பணிப்பெண்.

கீழே உள்ள புத்தகங்களையெல்லாம் பொறுக்கிப்பொறுக்கி எதை எதை எங்கெங்கு வைக்கவேண்டுமோ அதையதை அங்கங்கு வைப்பதற்கு புத்தகங்களைத் தேர்வு செய்துகொண்டிருந்தேன்.

ஒரு வரிசையில் சைவசித்தாந்தம்/ஆன்மிகம். ஒரு வரிசையில் ஓஷோ. ஒரு வரிசையில் நாவல்கள், ஒரு வரிசையில் தத்துவங்கள், ஒரு வரிசையில் என்னை அதிகம் கவர்ந்த புத்தகங்கள், ஒரு வரிசையில் மொக்கைப்புத்தகங்கள், ஒரு வரிசையில் ஆங்கிலம் மலாய் புத்தகங்கள், ஒரு வரிசையில் இதழ்கள் என, புத்தகங்களை வகுத்துக்கொண்டிருந்தேன்.

“அக்கா, இவ்வளவு புத்தகங்கள் வைத்திருக்கின்றாயே.. எல்லாவற்றையும் வாசிப்பாயா?”

“ஆங்..நேரம் கிடைக்கும்போது நிச்சயம் வாசிப்பேன்..”

“எத்தனை வருடங்களாகச் சேகரிக்கின்றாய்?”

“பள்ளி படிக்கும் காலக்கட்டத்தில் இருந்து...”

“ம்ம்.. யா... நிறைய வாசிக்கின்றாய்..மலாய் மொழியில் இருந்தால் நானும் வாசிப்பேன்..”

“உனக்கு என்னமாதிரியான புத்தகங்கள் பிடிக்கும் என்று சொல்லு, வாங்கி வருகிறேன்..”

“ஓ யா.. ம்ம்ம்.. கார்ட்டூன் புத்தகங்கள் பிடிக்கும்..”

“ஓ.. அப்படின்னா, சுப்பு உடைய புத்தக அலமாரியைத்தான் நீ அலச வேண்டும்.. அங்குதான் அவன் கார்ட்டூன் புத்தகங்களை நிறைய வைத்திருக்கின்றான்.”

“ ம்ம்ம்.. யா..  இதில் எதெல்லாம் படித்துவிட்டாய்..? புன்னையோடு கேட்கிறாள்.

“ நாவல்கள் பெரும்பாலும் வாசிக்கப்பட்டது தான், ஓஷோ புத்தகங்கள் எல்லாமும் வாசித்துவிட்டேன்.. இன்னும் நிறைய..” என்று சொல்லிக்கொண்டே, வாசித்துவிட்ட சில புத்தகங்களை அவளிடம் காண்பித்தேன்.

“ ம்ம்..ரொம்ப பழைய புத்தக ஏடெல்லாம் கிழிந்துபோச்சு, அப்படியே வைத்திருக்கின்றாய்.. வீசவேண்டியதுதானே.!”

“ஹூஹும்.. அதுமட்டும் முடியாது..”

“ஓஷோ பார்ப்பதற்கு, ஓசாமா பின் லேடன் மாதிரியே இருக்கின்றார்..”

“ஆ..இருக்கலாம் தாடி வைச்சிருக்கார் இல்லெ..”

“ம்ம்ம்ம்...”

இப்படியே எங்களின் உரையாடல், மலாய்மொழியில் தொடர்கிறது.. வேலையின் நடுவே..!  இடையிடையே, இது என்ன புக்? அது என்ன புக்? இது எதைப்பற்றி? அது எதைப்பற்றி? சமையல் புத்தகம் இல்லையா? பைபள் இல்லையா? (அவள் கிறிஸ்டியன்) என்கிற கேள்விகள் வேறு.. சொல்லித்தான் ஆகவேண்டும் இல்லையேல் அவமதிப்பாகிவிடுமே.! சொல்லிக்கொண்டே வேலை நடந்தேறியது..

எல்லாப்புத்தகங்களையும் அடுக்கி முடித்தபிறகு, ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் மடியில் வைத்துக்கொண்டு, தூய்மைப் படுத்தும் வேலையெல்லாம் முடிந்து எழும்போது, நான் இதனின் படங்களைப் பார்த்துவிட்டு கொடுக்கிறேன் என்றால் திட்டுவாயா அக்கா,? என்று கேட்டாள்.

“ அட, இதில் என்ன இருக்கு..!! சரி, பார்.. பார்த்தவுடன் புத்தகத்தை இருந்த இடத்திலேயே வைத்துவிடு...”

அப்புத்தகத்திற்கு மொழி தேவையில்லை. மொழியின் அவசியமும் இல்லை. படங்கள் சொல்லும் ஆயிரம் கதைகள்

இன்றிரவு, அறைக்குள் விரைவாக நுழைந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாள் புத்தகத்தோடு, பணிப்பெண்.