திங்கள், மே 21, 2012

படித்ததில் பிடித்தது

சில படங்களை, சிலர் நன்றாக இருக்கிறது என்பார்கள். அவர்களின் பேச்சைக் கேட்டு விட்டு படம் பார்க்கச் சென்றால், படம் நன்றாகவே இருக்கும், ஏதோ ஒரு சில காட்சிகளில் மட்டும். படம் முழுக்க நன்றாக இருந்து, அது நம்மை முழுமையாகக் கவரும் என்றால் அது நடக்காத காரியமே.

சன் டீவில் `ஆஹா.. ஓஹோ’ என்று விளம்பரப்படுத்தும்  படங்களைப் பார்க்கவே இப்போதெல்லாம் பயமாக இருக்கின்றது. ஏற்கனவே அவர்கள் தடாலடியாக அறிவுப்புச்செய்து அறிமுகப்படுத்திய கமல் படமொன்று, `வேட்டையாடு விளையாடு’..   அருமை, அப்படி இப்படி, முதல் நிலை, பிரமாண்டம், அது இது, சிறப்பு, வசூல் சாதனை, வெற்றி, கமல் இதுவரையில் நடிக்காத பாத்திரம் ஆ வூ.. என்றார்கள்.  போய்ப் பார்த்தால், பாதியிலே தியேட்டர் விட்டு வெளியே வந்துவிடும் நிலை. படுபயங்கர போர் படம் அது.

அடுத்து, கந்தசாமிக்கும் அதே நிலைதான். அதன் பிறகு மங்காத்தா. ஏண்டா போனோம் என்றாகிவிட்டது. படம் சுவாரிஸ்யம்தான் ஓரிரு காட்சிகளில், மற்றவையெல்லாம் நம் பொறுமையைச் சோதிக்கின்ற படு டென்ஷன் காட்சிகள். நாற்காலியில் அமர்ந்து கொண்டு புழு மாதிரி நெளிந்து நரக வேதனையில் இருப்பதை உணரமுடியும்.

சிலர் தமிழ் படங்களை மட்டம் தட்டி, ஆங்கிலப் படங்களை உச்சத்தில் வைத்து புகழ்த்துத் தள்ளிக்கொண்டிருப்பார்கள். கதையைக் கேட்டால், போய்ப் பாருங்கள், அப்போதுதான் புரியுமென்பார்கள். நானும் சில படங்களைத்  தொலைக்காட்சியிலும், சில படங்களை தியேட்டரிலும் பார்த்து, நொந்துபோனேன் என்று சொல்லலாம்.  ஓரிரு திருப்புமுனைகளுக்காக, புரட்சிகளுக்காக, கொஞ்சுண்டு கதைக்கருவிற்காக, அங்கே நடக்கின்ற அத்தனை அட்டூழிய காமிக்ஸ் கூத்துகளையும் கொட்டாவி விட்டுக்கொண்டு ஜீரணிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம்.

தமிழ் படங்களாவது பரவாயில்லைங்க,  அங்கும் இங்கும் நகர்ந்தாலும், கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிக்கொண்டிருந்தாலும், வெளியே சென்று தொலைபேசியில் பேசிவிட்டு வந்தாலும், கழிவறை  சென்று வந்தாலும், வந்தவுடன் படம் புரியும். அப்படியே `கட்ச் ஆப்’ பண்ணிக்கலாம்.  ஆனால்,  ஆங்கிலப் படங்கள் இருக்கே, கொஞ்சம் தவறவிட்டால், அம்பேல். படு பேஜாராகிவிடும். பிறகு ஒண்ணும் புரியாது.

ஆங்கிலப் படங்களைப்பார்க்கும்போது திரையறங்குகளில் மற்ற இனத்தவர்களுடன் பார்க்கவேண்டிய நிலை இங்கே.  முழுக்க வேறு இனத்தவர்கள் தான் ஆங்கிலப்படம் பார்க்கவருவார்கள். அவர்களுக்கு என்ன புரியுதோ, ஏது புரியுதோ.. தெரியாது.. அடிக்கடி கெக்கேபெக்கே என்று சிரிப்பார்கள். நமக்கு அது மொக்கை ஜோக்காக இருக்கும். இது ஒரு தர்மசங்கட சூழல்.

ஆயிரம்தான் சொல்லுங்க, நம்ம தமிழ் படம் மாதிரி வராதுங்க. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை.  கிராமிய சூழல், புடவை தாவணி, கல்யாணம், குடும்பம், பெரியவர்களுக்கு மரியாதை, நல்ல வசன அமைப்பு, அழகாக காதல், கிழம் தட்டாத ஹீரோ, நாய் தூக்கிகொண்டு போகிற மாதிரியான, எலும்பும் தோலுமா இல்லாத ஒரு கதாநாயகி.. வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை வசனங்கள், ரம்மியமான இசை, வித்தியாசமான கதைப்போக்கு, கார்ட்டூன் கூத்துகள் இல்லாத எதார்த்தம்...! பில்டிங் பில்டிங்’ஆ தாவுகிற தலைவலி, பிஸ்டோல், பாம், மிஷின்கன் என கண்களை பிடுங்கிப்போடுகிற அளவிற்கு பயங்கச் சத்தம்.. என எதுவுமே இல்லாமல், மிக எதார்த்தமாக, நல்ல குடும்ப சூழலைச் சொல்லும் படங்கள் நம்ம படங்கள்....! எந்த ஊர் படம் என்றாலும் அது நம்ம ஊர் படம் போல வருமா!?

இன்று, எஸ்.ரா எழுதிய CATERPILLAR என்கிற ஜப்பானிய திரைப்படத்தின் கதை விமர்சனத்தைப் படித்து விட்டு மெய்சிலிர்த்துப்போனேன். அற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். திரைப்படத்தைப் பார்த்தே ஆக வேண்டுமென்கிற உந்துதலைக்கொடுத்தது அவரின் அந்த விமர்சனம். முக்கியமான கருவை மட்டும் கோடிக்காட்டி, படத்தின் மூலக்கதையை மிக அழகாக, எளிய நடையில் தமது பாணியில் சொல்லியிருப்பதால், அது நம்மை வெகுவாகக் கவர்கிறது, கிட்டத்தட்ட இரண்டு மணி நேர திரைப்படத்தை, நாம் பத்து நிமிடத்தில், அவரின் விமர்சனத்தின் மூலமாக உள் வாங்கிக்கொண்டோம். அதுவே திரைப்படமென்றால்..!!? இது வேறு ஜப்பானிய மொழிப்படமா!  மொழி வேறு விளங்காதா,  சப் டைட்டிலை விழியை உருட்டிக் கொண்டு படித்தாக வேண்டுமே, அப்படியும் கதை புரிந்தால், சம்போ சிவசம்போ தான்.! (தமிழ் நாட்டில், ஆங்கிலப்படத்திற்கு தமிழில் சப் டைட்டல் இருக்குமாமே!? இங்கு இல்லை, மலாய் மொழியில்தான் போடுவார்கள்.. அந்த மொழி, ஒரு பரீட்ச்சை மொழி- படிக்கும் போது மெனக்கட்டு படித்ததோடு சரி..)

பலவிதமான வேற்று மொழிப்படங்களை, காட்சிகளின் அசைவுகள், முக பாவனைகள், உணர்வுகள், இசை சொல்லும் ரகசியங்கள், கொஞ்சம் புரிகிற விவரங்கள் என, திரைக்கதையை ஓரளவு புரிந்து வைத்துக்கொண்டு, நண்பர்களிடம் பில்டாப் செய்ததும் உண்டு..அது ஒரு காலம்.! இப்போ அது தேவையே இல்லை. எஸ்.ரா, சாரு போன்ற எழுத்தாளர்கள், தாங்கள் பார்த்த படித்த வேற்று மொழிப் படங்கள், இலக்கியங்கள் போன்றவற்றை, விமர்சனம் மூலமாக, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கின்ற அரிய பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.  நமகெல்லாம் அது சுலபமாகப் புரிந்தும் விடுகிறது.

எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் குறிப்பிட்ட CATERPILLAR  பட விமர்சனம் இதோ உங்களின் பார்வைக்கும். கண்டிப்பாக படித்துப்பாருங்கள். அருமையான விமர்சனம்.

http://www.sramakrishnan.com/?p=2955