ஞாயிறு, மார்ச் 17, 2013

பரதேசி

பாலாவின் பரதேசி திரைப்பட விமர்சனத்தை பலர் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.

யார் பக்கமும் நான் செல்லவில்லை, அவ்விமர்சனங்களை வாசிக்கவும் இல்லை. காரணம் சிலரின் விமர்சனம் நமது மூளையைச் சலவை செய்து, படம் பார்க்காமலேயே அப்படத்தின் மீது வெறுப்பை உமிழ்கிற தன்மையை நம்மிடம் விட்டுச்சென்று விடும்.

ஆக, படம் எப்படி இருக்கிறது என்பதனை நாமே  பார்த்துவிட்டு முடிவு செய்துகொள்ளலாம் என, நேற்று திரையரங்கிற்குச் சென்று பரதேசியைப் பார்த்துவிட்டு வந்தேன்.

வந்தேன் என்பதை விட, மனச்சுமையோடு வீடு திரும்பினேன் என்று சொல்லலாம். குளமாகும் கண்ணீரைத்துடைக்காமல் திரையரங்கை விட்டு வெளியேற முடியவில்லை. கண்கள் பனித்தவண்ணமாகவே இருந்தன. யாராவது பார்த்தால் என்னாவது..! என்கிற சிந்தனையில், விளக்கு எரிய ஆரம்பித்தவுடன் கண்களில் வழியும் நீரை மிகவிரைவாகத் துடைத்துக்கொண்டேன். இருப்பினும் அரங்கிலிருந்து வெளியேறும் அனைத்து ரசிகர்களும் மூக்கைச் சிந்தியபடிதான் வெளியேறினார்கள். ஒரு பெண், தேம்பித்தேம்பியே அழுதார். கணவர்/காதலன் அவரை அப்படியே அணைத்தபடி அரங்கை விட்டு வெளியே அழைத்து வந்தார்.

பாலாவின் படம் என்றாலே அது என்னை அதிகம் கவரும் (அவன் இவன் - படத்தைத்தவிர). சேது, இன்னமும் என்னைக் கவர்ந்த திரைப்படங்களில் முதல் நிலையிலேயே உள்ள ஓர் படம். அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால், நான் தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு நகரமாட்டேன்.

‘நான் கடவுள்’ என்கிற படத்தை பலர் மோசமாக விமர்சனம் செய்திருந்தார்கள்.  அவ்விமர்சனங்களைப் படித்துவிட்டு, திரையரங்கிற்குச் செல்லவில்லை, படத்தை நிராகரித்தேன். அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, மனவேதனை அடைந்தேன். இதுபோன்ற நல்ல படங்களை திரையரங்குகளில் கண்டுகளிக்காமல் தவறவிட்டிட்டோமே என.!?

எங்களின் தாத்தா உயிருடன் இருக்கும்போது, அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து, குளித்து முடித்து, சாப்பிட்ட பிறகு இரவில் நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “தாத்தா, தாத்தா ஜப்பான்கார காலத்துக் கதைகளைச் சொல்லுங்கள்..” என்று அவரைத்துன்புறுத்துவோம். தாத்தா அருமையாகக் கதைகளைச் சொல்பவர். ஒரு கதையை எங்கு ஆரம்பித்து எப்படி கொண்டுவந்து எங்கு முடிக்கவேண்டுமென்று நன்கு அறிந்துவைத்திருப்பவர் தாத்தா. இடையிடையே நகைச்சுவையைக் கலந்தும் சொல்வார். பாடல்களைப் பாடுவார். வாயால் இசைக்கருவிகளை வாசிப்பார். கைகளைத்தட்டுவார். எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நாங்களெல்லாம் அப்படிச்சிரிப்போம். குதூகலிப்போம்.

பள்ளிப்பருவம் அது, அன்றைய காலகட்டத்தில் கதைகளை நகைச்சுவைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் கேட்டபோதிலும், அக்கதைகள் அனைத்தும் எங்களின் மூதாதையர்கள் ரத்தத்தை வேர்வையாகச் சிந்திய உண்மைச் சரித்திர சம்பவங்கள் என்பதனை உணர்ந்துகொள்கிற பருவம் வந்தபோது, மனம் பட்ட வேதனைகள் சொல்லிமாளாது.

காடுகளை அழித்தார்கள். தண்டவாளங்களைப் போட்டார்கள். சாலைகளைக் கட்டினார்கள். கல் உடைத்தார்கள். விடிய விடிய பால்மரம் சீவினார்கள். கட்டட வேலைகள் செய்தார்கள். துரைமார்களின் கக்கூஸ் கழுவினார்கள். அவர்களின் வீட்டுவேலைகளைச் செய்தார்கள். கைக்கட்டி கூலிக்காக மணிக்கணக்காக காத்துநின்றார்கள். போரில் மாண்டார்கள். போராட்டத்தில் மாட்டார்கள். அடி வாங்கினார்கள். மலேரியா வந்தது, மாண்டார்கள். காலரா வந்தது மாண்டார்கள். பசியால் மாண்டார்கள் என பல கதைகள் சொல்வார் தாத்தா. அதை அப்படியே பரதேசி திரைப்படத்தில் பார்த்தேன். மனம் கணத்தது.

பரதேசி ஒரு உண்மைக் கதை என்பதை, படம் ஆரம்பிக்கும்போது அலட்சியம் செய்ததை, படம் முடிகிறபோது மனபாரத்துடன் ஏற்றுக்கொண்டேன்.

பாலாவின் நடிகர்களின் தேர்வு அற்புதம்.

அதர்வா நடித்தாரா? இப்படி அழவைக்கின்றார்.! சிறந்த நடிகர் விருது அடுத்து உங்களுக்குத்தான். அப்பாதான் இல்லை பார்ப்பதற்கு.

அழகுப்பதுமை வேதிகாவிடம் இவ்வளவு திறமையா? எல்லாப் புகழும் பாலாவிற்கே.

கிராமம், செட் போடப்பட்டதுபோல் இருந்தாலும், அற்புத சூழலைக் கொடுத்தது.

ஏழ்மைச்சூழலிலும் மேலோர் கீழோர் என்கிற பாகுபாடுதான் நம் இனம் இந்த அளவிற்கு கொடுமைப் படுத்தலுக்கு ஆளாகியிருக்கின்ற அவலம். கொடுமை.

சிரிக்கச்சிரிக்கப்பேசி வளையில் விழவைக்கின்ற கபட நாடகத்தின் போது, நம் மக்களின் அப்பாவித்தனம் மனதைப்பிழிகிறது.

பணத்தை இப்படிக் காட்டிக்காட்டியே ஏமாற்றினால்தான் இவர்களை எப்போதும் நம் பக்கமே வைத்திருக்க முடியும் என்கிற போது, படம் பழிவாங்கும் படலமாக முடியவேண்டுமென்று மனம் ஏங்குகிறது.

கூலியைக் கொடுக்காமல், அதற்கு, இதற்கு, தாயத்து கட்டியதற்கு , மருத்துவச்செலவிற்கு, வாடகை, மளிகைசாமன் என பிடித்துக்கொண்டு துரத்துகிறபோது, ‘அடப்பாவிகளா’ என நம் மனமும் குமுறுகிறது. ‘ஏய், எவ்வளவு பேர் இருக்கிறீர்கள், ஒன்று சேர்ந்து அடித்து நொறுக்குங்கள்,’ என்று கத்தவேண்டும் போல் இருந்தது.

கால்களை விந்திவிந்தி நடக்கின்ற சில வேலையாட்களைப் பார்த்தபோது, ஏன் ஊனமாக இருப்பவர்களை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கின்றார்கள்.? என்று யோசிக்க, அது அங்கே நடந்த கொடுமையால் வந்தது என்று கதை பின்னால் வருகின்ற போது. ஆண்டவா, இது மட்டும் கற்பனையாக இருக்கவேண்டும் என்று மனம் துடிக்கின்றது.

மருத்துவம் பார்க்க வந்தவர்களும், ஆடிப்பாடி களித்து மதமாற்று வேலைகள் செய்கிறார்கள். நம்மவர்களின் நிலை..!!

இடைவேளை காட்சி வருகிற போது, அதற்குள் பாதி படம் வந்துவிட்டதா? இன்னும் என்னென்ன கஷ்டங்கள் வருமோ..! என்கிற பாதிப்பில் இருந்து மீளமுடியவில்லை.

இடைவேளை காட்சியின் போது காட்டப்படும் தவிக்கும்/துடிக்கும் கை ஒன்று ரசிகர்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறன.

குழந்தையின் விரல், தேயிலையை கிள்ளி ரத்தங்கட்டி இருப்பதைக் காட்டியபோது ஆரம்பித்த என் கண்ணீர்துளி இறுதிவரை கட்டுப்படுத்த முடியாமலேயே போனது.

இறுதிக்காட்சியின் அழுகை... நம்மிடம் ஒட்டிக்கொள்கிறது.

படம் அவார்ட்டுகளைக் குவிக்கும் நிச்சயமாக. சேது’விற்குப்பிறகு.

இதற்குமேல் நான் என்ன சொல்ல ..!!  பார்க்கவேண்டிய படம். தொடர்ந்து வந்த திரைப்படங்கள் நம்மை ஏமாற்றியபோது, பாலாவின் இந்தப்படம் அற்புதம் அற்புதம் அற்புதம்.

ஒரே ஒரு குறை - இளையராஜாவின் இசை இல்லை. பாலா படம் என்றால் இளையராஜாதானே இசை.. என்னாச்சு!??

இனி ப்ளாக்கில் வந்துள்ள விமர்சனங்களைப் படிப்பேன்.