மகள் அழைத்திருந்தாள்
“ அம்மா, நான் பிரசவவாட்டில் இருக்கின்றேன், இன்னிக்கு இங்கு தான் பயிற்சி. நிறைய குழந்தைகள். கைமுய்கைய்முய்’ன்னு ஒரே சத்தம். தாய்மார்களின் பிரசவ வேதனை, குழந்தைகளின் அழுகுரல், அவசரப்பிரிவின் அதிவேக நடவடிக்கைகள் என, படு பரபரப்பா இருக்கு. அன்னிக்கு மாதிரி பயமெல்லாம் இல்லை
“என்னிக்கு மாதிரி பயம்?” என் கேள்வி, என் மகளிடம்.
“அதான்ம்மா அன்னிக்கு, எமர்ஜென்ஸி வார்ட்ல டிரெய்னிங்.. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அந்த அறையில் சிகப்பு விளக்கு எரிந்தவண்ணமாகவே இருந்தது. ஒரே அஃக்சிடெண்ட் கேஸ்கள், பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை, ஒரு பிணம் விழுறது.”
“அய்யோ, அப்புறம் எப்படி?? தாங்கினாயா? இங்கே யாராவது இறந்து போனால், தூங்கக்கூட மாட்டியே, எப்படி இதெல்லாம்??”
“ஆடிப்போயிட்டேன்ம்ம்மா.., அதுவும் நாங்க மாணவர்கள் , எங்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவை என்பதால், அந்த வேலைகளெல்லாம் எங்களையே செய்யச்சொன்னார்கள். நான் முடியாது என்றேன், நல்லா டோஸ் விழுந்தது, பெரிய டீன்’னிடமிருந்து. எதுக்கு இந்த வேலைக்கு வந்தாய்? பேசாமல் கல்யாணம் கட்டிக்கிட்டு, குடும்பம் நடத்தவேண்டியது தானே’ன்னு திட்டினார்”
“அடக் கடவுளே.. பிறகு என்ன? செஞ்சியா அதெல்லாம்?”
“செஞ்சேன்ம்மா, பயந்து பயந்து.. பிணத்திற்கு தலையிலிருந்து கால் வரை கட்டுப்போடணும். அப்படியே மலாய் சினிமா படத்தில் வரும் ஆவி பேய்போல் இருந்தது.. கை கால்கள் எல்லாம் நடுங்குது. இடமே ஒரே பிண வாடை, ரத்த வாடை.. அன்றைய நாள் வீட்டிற்கு வந்தவுடன், என்னால என் ரூம்மை விட்டு வெளியே போகவே முடியல, ஒரே பயமா இருந்தது.”
“அதான் தேவாரம், திருமந்திரமெல்லாம் இருக்கே, யாரையாவது துணைக்கு அழைக்க வேண்டியதுதானே!”
“அவர்கள் தான் அன்று இரவில் எனக்குத்துணை. இருந்தாலும் காலையில் கிளாஸுக்குப் போகல, பயங்கரமான காய்ச்சல், அதற்கப்புறம் எனக்கு அந்த பகுதி இன்னும் கிடைக்கவில்லை. இன்னைக்கு பிரசவ வார்ட்ல இருக்கேன், சந்தோசமா இருக்கு”
புன்னகையுடன் உற்சாகமாக பேசினாள். அவளுக்கு Pediatrics அதாவது குழந்தை பராமரிப்புத்துறையில்தான் மாஸ்டர் பண்ணவேண்டுமென்கிற லட்சியம். அதனால் அந்தப் பிரசவ வார்ட்டில் மிக மகிழ்வோடு காணப்பட்டாள். மருத்துவப்படிப்பு என்பது எல்லாவற்றையும் படித்த பிறகுதான், தமக்குப்பிடித்த துறையைத் தேர்வு செய்யவேண்டும் போலிருக்கிறது.. எனக்கென்ன தெரியும், எதாவது சொன்னால் கேட்டுக்கொள்வேன்.
“ ஆங்..நான் இப்போ எதற்கு அழைத்தேன் தெரியுமா?!”
“ம்ம் சொல்லும்மா..”
“நான் எப்படிப்பிறந்தேன்?”
“என்ன இது? எத்தனை முறை சொல்லியிருபேன்..கிண்டலா?” கொஞ்சம் கடுப்பில்.
“ யம்ம்மா, மறந்துட்டேன், மறுபடியும் சொல்லுங்க, அதாவது, forceps, vacuum or normal?"
" forceps"
"forceps னா எப்படி?”
“நானே பயங்கர மயக்கத்தில் இருந்தேன், எப்படிச்சொல்வது!”
“இல்லேம்மா, அந்த ஆயுதம் எப்படி இருந்தது?, பூச்செடி வெட்டும் கத்தி போல்..?”
“ஆமாம், ஏறக்குறைய அப்படித்தான்..ம்ம்ம், இப்போ ஏன் இதைக் கேட்கிறாய்?”
“ இங்கு நிறைய குழந்தைகள் அப்படித்தான் பிறக்கிறது, அந்த ஆயுதத்தைப்பார்த்தாலே...!!!!!”
“குழந்தைகள், நல்லபடி பிறக்கிறது தானே..! எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல், அது போதுமே..”
“ஒரு ஆபத்தும் இல்லேம்மா, ஆனா குழந்தை பிறந்த மறு வினாடி, தலை கொஞ்சம் நீளமாக இருக்கிறது.. forceps னா அப்படித்தான்ன்னு தெரியும், நான் பிறக்கும் போது தலை எப்படி இருந்தது?”
“நீ பிறக்கும் போதும் அப்படித்தான் இருந்தது.. ஆனால், மறுநாள் காலையிலே ரோஜாப்பூ மாதிரி அழகாயிட்டே. எல்லாம் மறைஞ்சு போச்சு, பாட்டி இன்னமும் சொல்வாங்க, அழகான ஜோடிகளுக்கு பிள்ளை என்ன இப்படி அசிங்கமா பொறந்திருக்குன்னு..ஹிஹிஹி” அடிக்கடி இப்படி வெறுப்பேற்றுவது என் வேலை..
“ஹூம்..நகைச்சுவைநேரமா!. சரி, நான் ஏன் நார்மலா, பிறக்கவில்லை?”
“ ஹம்ம்ம்.. அதுக்கு கொழுப்பு ஜாஸ்தி, அம்மாவுடைய தீனியெல்லாம் தின்னுத்தின்னு பெருத்துப்போச்சு, அம்மாவால முக்கவே முடியல, எவ்வளவோ டோஸ்(ஊசி) கொடுத்தும், மந்தமா உள்ளேயே ஜாலியா தூங்கிக்கிட்டே இருந்துச்சாம். அது ஒரு சோம்பேறிக் குழந்தை, படிக்க மட்டும்தான் லாயிக்கு, வேற ஒன்னும் செய்யமுடியாது அதனால்.” நக்கலடித்தேன்.
“ஹஹஹ.. எனக்கு இன்னொரு சந்தேகமும்.. இந்த forceps னாலத்தான் என் முகம் உங்கள மாதிரி வட்டமா இல்லாமல் முட்டை வடிவில் நீளமாக இருக்கிறதோ..? எனது அடுத்த ஆராய்ச்சி அதுதான், ஒகேம்மா பை, எதாவது இருந்தா நாளைக்கு கூப்பிடறேன்”
அடிப்பாவி, உங்க அப்பாவிற்கு நீண்ட முகவெட்டு தானே..!!
வீட்டிற்கு வந்தவுடம், என் மகனிடம் இந்தக் கதையைச் சொன்னேன்.. நல்லா கதை கேட்பான்.. கதையைக் கேட்டவுடன், “அம்மா, நான் எப்படிப் பிறந்தேன்?”
“ஆள விடு, எனக்கு நிறைய வேலை இருக்கு...”
“அம்மா..அம்மா..அம்மா’’ பின்னாடியே சுற்றினான்.