`லில்லி’ மாம்பழங்கள் வாங்கினேன். சாப்பிடத்தான் நேரமில்லை. மறந்துவிட்டேன் என்று கூட சொல்லலாம். வாங்கியபோது இந்தியா மாம்பழங்கள் போல் தோலேல்லாம் பளபள என மஞ்சளும் லேசான சிகப்பும் கலந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
பிள்ளைகள் இருந்தார்கள் என்றால், அந்த மாம்பழத்தின் கொட்டை கூட முளைத்திருக்கும், சாப்பிட்டு, சப்பி எடுத்து வீசியிருப்பார்கள், காரணம் அவ்வளவு இனிப்பு. தித்திப்பான மாம்பழம். திகட்டாதா மாம்பழம்.
நேற்றுகூட அவர், பழம் வாங்கினாயே, எங்கே? வெட்டி எடுத்திட்டு வா, சாப்பிடலாம் என்றார். வேலை செய்யுமிடத்தில், தோழி சில மாங்காய்களை வெட்டி வேகவைத்து, அதில் கச்சானை (கடலை) அரைத்து, ஊசி மிளகாய், உப்பு, கிச்சாப், ஒய்ஸ்ட்தெர் சாஸ் என ஊற்றி கலந்து ஒரு பாட்டலில் அடைத்துக்கொடுத்தாள். அதை அவர் முன் வைத்தவுடன், வாங்கி வைத்திருந்த மாம்பழங்களை இருவரும் மறந்து, இந்த மாங்காய் பச்சடியின் ருசியில் மூழ்கினோம். உண்மையிலே சுவைதான். புளிப்பு,இனிப்பு, காரம், கச்சானின் சுவை என அசத்தல் தான் போங்க. இன்று கூட வேலை முடிந்து வந்தவுடன் அந்த மாங்காய் கச்சான் பச்சடி மீதமிருக்கா, என்று கேட்டுவிட்டு, மிச்ச மீதியெல்லாம் காலியாக்கினார்.
நானும் மாம்பழம் இருப்பது நினைவுக்கு வர, சரி, சமையல் வேலையெல்லாம் முடிந்த பிறகு, இன்று அதில் ஒன்றைச் சாப்பிடலாம் என மனதில் நினைத்துக்கொண்டு, வேலையெல்லாம் முடித்தவுடன், பழம் வைத்திருக்கும் கூடையைத் திறந்தேன். பெரிய பெரிய பழங்கள் மூன்று, பத்திரமாக இருந்தது. ஆனால், அதன் தோளில் இருந்த அந்தப் பளபளப்பு குறைந்து காணப்பட்டது. நிறம், மஞ்சள் மற்றும் சிகப்பு கலந்து அப்படியே.!
ஒரு பழத்தைக் கையில் எடுத்தேன்.. கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தேன். நன்கு பெருத்த பழம். ஒரு பழமே குறைந்தது முக்கால் கிலோ இருக்கும். அதன் தோளில் கருப்புப் புள்ளிகள் அங்காங்கே. காம்பு உள்ள இடத்தில் கொஞ்சம் கருப்பு அதிகமாகவே இருந்தது. அதன் மூக்கு அப்படியே சிவந்து, பளப்பளப்பாகவே.. பழம் முழுக்கக் கருப்புப்புள்ளிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் பழம் அழுகவில்லை.
கழுவினேன், கை நழுவி, கழுவும் இடத்தின், வஷிங் பேஷனில் பொத்தென்று விழுந்தது. விழுத்த பழத்தை பட்டென்று எடுத்து அதை மீண்டும் கழுவி தட்டில் வைத்தேன். பார்த்தேன். விழுந்த இடத்தில், பழத்திற்கு அடிப்பட்டு நீர் வடிந்தது. கரும்புள்ளிகள் உள்ள இடத்தில், கை வைத்து அழுத்திப்பார்த்தேன், உள்ளே சென்றது, அதிலும் நீர் வடிந்தது. கொஞ்சம் பலங்கொண்டு அழுத்தினால் ஓட்டை விழுத்துவிடும் அளவிற்கு அந்த கரும்புள்ளிகள் உள்ள இடங்கள் அழுகியதுபோல் இருந்தது. இருந்தாலும் சாப்பிடலாம்.
இதுபோலவே இருந்த ஒரு பெண்ணின் காலை நேற்று நான் மருந்துவமனையில் பார்த்தேன். சக்கரை வியாதியின் கொடுமையால், அவளின் காலுக்கு ஏற்பட்ட கதி. இந்த மாம்பழம் போலவே இருந்தது, அவளின் காலும். அநேகமாக காலை எடுக்கவேண்டிய நிலை வரலாம்.
அந்தக்காட்சி நினைவுக்கு வர, பழத்தை மீண்டும் கூடையிலே வைத்தேன். நாளைக்குத்தான் ஃப்ரூட் லாசி செய்யவேண்டும், மாம்பழங்களை வெட்டி தயிர் விட்டு கிரைண்டர் செய்தால் ப்ரூட் லாசி தயார்.