திங்கள், ஜூன் 17, 2013

உணவுகளும் கழிவுகளும்

மதிய உணவின் போது, உணவுப் பாத்திரத்தை கையில் ஏந்தி கரண்டியைக்கொண்டு வீட்டிலிருந்து சமைத்து எடுத்துவந்திருந்த உணவைச் சுவைத்துக்கொண்டே மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டார் பத்திரிகையில் கண்களை மேயவிட்டேன்.

அன்றைய பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே அதிர்ச்சிதரக்கூடிய தகவல் ஒன்று என் கண்ணில் படவே, உணவில் லய்ப்பதைவிடுத்து, அந்த முதல் பக்கச் செய்தில் லய்த்திருந்தேன்.


என்ன செய்தி அது?

மலேசியர்கள் நாளொன்றிற்கு பதினைந்தாயிரம் டன் எடையுள்ள உணவுகளை குப்பையில் வீசுகிறார்களாம். ! அப்படி வீசப்படும் உணவுகள் 7.5 மில்லியன் மக்களின் பசியினைப் போக்கவல்லதாம். அதிர்ச்சிதானே.!

உணவுகளின் சொர்க்கபூமியான மலேசியாவில் உணவு விரையம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிற ஆலோசனைகளும் அங்கே பகிரப்பட்டிருந்தது. மேலும் கழிவுகளை எப்படி மறுசுழற்சி செய்து உரமாக்கலாம் போன்ற ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்கள்.

உதாரணத்திற்கு, கோழி, இறைச்சி, மீன் போன்ற சமைக்காத கழிவுகளை மண்ணில் புதைத்து உரமாக்குவது. காய்கறிகள் பழங்கள் கொடுக்கின்ற கழிவுகளை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் கொஞ்சம் சீனியைக்கொட்டி, சுக்காவையும் ( vinegar )  ஊற்றி ஓரிரு வாரங்கள்  இறுக்கமாக மூடிவைத்துவிட்டால்அத் திரவத்தைக்கொண்டு  பாத்திரங்கள் கழுவுவது, குளியலரை, வீடு வாசல் போன்றவைகளை சுத்தம்செய்வதற்கு உபயோகப்படுத்தலாம். நல்ல மணமாகவும் இருக்கும்.


அதிக உணவுகள் கழிவுகளாக வீசப்படுவதற்கு முக்கிய காரணங்கள் :- 

அதிக உணவுகளைக் கழிவுகளால வீசப்படுவதற்கு முக்கிய காரணங்கள் பல. அவற்றில் ;-
உணவு பிடிக்கவில்லை. சுகாதாரமற்ற கடைகளில் நுழைந்து உணவு ஆடர் செய்தபிறகு சூழல் பிடிக்காமல் உணவை வைத்துவிட்டு சென்றுவிடுவது. வாங்கிய உணவை சாப்பிட்டு முடிக்கமுடியாமல் வீசுவது. சுவை குறித்த அதிருப்தி. அதிக அளவில் உணவை எடுத்து தட்டில் வைத்துக்கொள்வது. சமையலில் போதிய அளவு பற்றிய தெளிவின்மை. பசி வந்தவுடன் அதிகம் உண்ணவேண்டுமென்கிற வெறித்தனம். சேகரித்துவைத்து உண்ணலாம் என்கிறபோது அவ்வுணவு கெட்டுப்போகுதல். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு உணவுகளை பொட்டலங்கட்டிச்செல்வது.  டின்களில் அடைக்கப்படும் பொருட்களை அதிக அளவில் வாங்கி குவித்துக்கொண்டு, காலாவதியானவுடன் அவைகளை தூக்கி வீசுவது. முறையான செய்முறையின்றி புதிய சமையல் செய்கிறேன் பேர்வழி என உப்பு காரம் சக்கரை போன்றவற்றை அதிக அளவில் சேர்த்து சமையலைக் கெடுப்பது. புதிதாக எதையாவது சாப்பிட்டுப்பார்க்கலாமே என்று நினைத்து, கேள்விப்படாத ஐரோப்பிய ரெஸ்டரண்டுகளுக்குச் செல்லமுயன்று உணவு பிடிக்காமல் அப்படியே வைத்துவிட்டு வருவது. என இன்னும் பலவித காரணங்கள் உணவுகளை விரையமாக்குவதற்காகச் சொல்ல்லாம்.


உணவுகளை விரையமாக்காமல் இருப்பது சாத்தியமா?

உணவுகளை விரையமாக்காமல் இருப்பது சாத்தியமா? வீட்டில் சமைக்கின்றபோது, சமைக்கின்ற அளவு சுவை போன்றவற்றை அறிந்து வைத்துக்கொண்டு சமைத்துச் சாப்பிடுவது ஒருபுறமிருந்தாலும், வெளியே சாப்பிடுகிறவர்கள் உணவை விரையமாக்காமல் சாப்பிடத்தான் முடியுமா?

குடிக்கின்ற நீர், காப்பி, தேநீர், குளிர்பாணங்கள் தொடங்கி சாப்பிடுகிற உணவுவரை அனைத்திலும் ரசாயணக் கலவைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் தூய்மையின்மையை உணரும் பட்சத்தில், சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அது அதனின் வேலைதனை காட்ட ஆரம்பித்துவிடும். புளிச்ச ஏப்பம், வயிறு உப்புதல், காற்றுபுகுதல்,   வயிற்றைப்பிரட்டுதல்குமட்டுதல்வயிற்றுப்போகிற்கு  தயாராகும்   நிலைவருதல் என எதாவதொன்றை உடனே அறிகுறியாகக் காட்டிவிடும் நம் உடல். 

போதாக்குறைக்கு உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே எதாவது கருப்பாக சின்ன உருண்டையாகக் கண்களுக்குத் தென்பட்டால்ஈ யாக இருக்குமோ, பூச்சியாக இருக்குமோ, எலிபுழுக்கையாக இருந்துவிடுமோ, கொசுவாபல்லியின் மலமா என பலவாறாக மனது சிந்திக்கத் துவங்கிவிடும். அந்த சிந்தனையிலேயே தொடர்ந்து உணவை விழுங்குவதற்கு மனம் இடமளிக்காது.


உணவுக்கடைகளில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் :-

இதுபோன்ற சிந்தனைகள் ஏன் வருகிதென்றால், நாளிதழ் தொடங்கி தனிநபர் வரை உணவுக்கடைகளில் ஏற்படும் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருவதால், கடைகளில் உண்கிற தவிர்க்கமுடியாத நிலை ஏற்படுகிற போது, மனதாகப்பட்டது சில சம்பவங்களிலேயே வட்டமடிக்கத்துவங்கிவிடுகிறது.

படித்த, அனுபவபட்ட, கேள்விப்பட்ட சில சம்பவங்கள் இங்கே

* காய்கறி சூப்பில் பிஞ்சிபோன மோப் துணியின் சுருள்.

* பரோட்டா போடும் ஆடவன் கழிவறை சென்று கைகளைக்  கழுவாமல்  பரோட்டா போட்டதால், பரோட்டா எல்லாம் மலவாடை.

* நாசி லெமக் உணவில் பொரித்து வைக்கபபட்ட நெத்திலியில் ஒரு பல்லிக்குஞ்சும் நெத்திலி போல் பொரிந்து கிடந்தது.

* மலேசிய பிரபல உணவான சீ சொங் ஃபன் உணவின் சோஸில் கரப்பான்பூச்சி.

* பிரபல சத்தே உணவகத்தில் குவா கச்சாங்கில் செத்த எலி.

* உணவுக்கடைகளில் கழுவுவதற்கு   வைக்கப்பட்டிருந்த  எச்சில் தட்டுகளை நாய்கள் நக்குகின்றன.

* கொதிக்கவைக்காத நீரில் குளிபானங்களைத் தயார் செய்வது.

* நன்கு கொதிக்காத நீரில் காப்பி தேநீர் கலக்குவது.

* குளிர் பாணங்களுக்குப் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளில் உரைந்த நிலையில் செத்துக்கிடக்கும் தவளைகள்.

* உணவுக்கடைகளில் எலிகளின் ராஜ்ஜியம்.

* சாப்பிட்டு மிச்சம் வைக்கின்ற உணவுகளை மீண்டும் பரிமாறுவது.

* உணவுகளில் மயிர்.

* சமைத்த காய்கறியில் புழு (கத்தரிக்காயில் இருந்திருக்கும்).

* நாசி கோரிங்கில் பானை விளக்கும் சுருள் கம்பிகளின் கொத்து. (என் அனுபவம்)

* உணவில் கக்கூஸ் ஈ. (அது ஒரு ராட்சஸ ரக  ஈ. அது போடும் முட்டைகளால் உடம்பே கூசிப்போகும்.)

* காதுகளையும் மூக்குகளையும் நோண்டிக்கொண்டு உணவைப் பரிமாறுவது.

* சரியாக வேகாத சோறு அல்லது அதிகம் குழைந்த நிலை சோறு (இங்கே அடிக்கடி)

* சந்தையில் காய்கறிகளின் அதிக விலையேற்றத்தின் காரணமாக, பொதுமக்கள் வாங்கிச்சென்று, மிச்சப்பட்டு மிதிபட்டுக்கிடக்கும் காய்கறிகளை ஆக மலிவு விலையிலோ அல்லது இலவசமாகவோ பொறுக்கி எடுத்துச்சென்று சமைத்து வருகையாளர்களுக்கு விற்பனை செய்கிறார்களாம் (சில கடை முதலாளிகள்).

* மீன் கோழிகளும் அதே போல்தானாம். எல்லோரும் வாங்கிய பின்புமிச்சமீதியை மலிவான விலையில் வாங்கிச்சென்று சமைத்து விற்பனை செய்கிறார்களாம்.

* என் பணிப்பெண், என் வீட்டில் வேலை செய்வதற்கு முன் ஒரு ரெஸ்டரண்டில் வேலை செய்தவள். அவள் சொல்வாள் அங்கே நடக்கும் சில கூத்துகளை. முதல் நாள் சமைத்த கோழியோ மீனோ அதிக அளவில் மிச்சப்பட்டுப்போனால் அதைக் கழுவி குளிர்ச்சாதணப்பெட்டியில் வைத்துவிட்டு மறுநாள் அதை வேறொரு உணவு வகையாக மாற்றிச் சமைத்து பரிமாறிவிடுவார்களாம். (இது சகஜம். யார்தான் வீசி நஷ்டப்பட விரும்புவார்கள்.!)


இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதைக்கேள்வி படும்போதோ அல்லது நேரடியாக நமக்கே அவை நிகழ்கின்றபோதோ, எப்படி தொடர்ந்து உணவை விரையமாக்காமல் உண்பது.விரையமாக்கக்கூடாது என்பதால், ஆடர் செய்த உணவை சகித்துக்கொண்டு விழுங்கினால் உடல் என்னாவது?

தினந்தோறும் கடைகளில் உண்பவர்கள் எதிர்நோக்கிப் பகிர்ந்து செல்கிற பிரச்சனைகள்தான் இவையனைத்தும்.


தமிழ்நாட்டு உணவகங்கள்

மலேசிய உணவுக்கடைகளிலாவது பரவாயில்லை, சமைப்பவர், சமைக்கும் இடம், பயன்படுத்துகிற பொருட்களின் சின்னம், இடத்தின் தூய்மை என சிலவிவரங்கள் நமது பார்வையில் படும். பொதுவாகவே பெரும்பாலான கடைகளின் சமையல் அறையை நாம் எட்டிப் பார்க்கலாம். ஆனால் தமிழ்நாட்டில்..!! சமையல் எங்கிருந்து வருகிற்தென்றே தெரியாத அளவிற்கு சமையற்கட்டு மர்மமான இடத்தில் இருக்கும். உணவுக்கடைகளில் கும்மிருட்டு. டீம் லைட் போட்டிருப்பார்கள். காதலர்கள் செல்லும் கேண்டலைட் டின்னர் போல.
பட்ட பகலிலேயே இருள் சூழ்ந்த அறையில் அமர்ந்து கொண்டு சாப்பிடுகிற துர்ப்பாக்கியம் தமிழ் நாட்டில். உணவில் மயிர் இருக்கா? பூச்சி விழுந்திருக்கா? ஈ முட்டைகள் இருக்கா? புழு இருக்கா என எதையும் ஆராயமுடியாத அளவிற்கு இருள் சூழ்ந்த நிலையிலே பல உணவுக்கடைகள். எப்படிச் சாப்பிடுவது.தட்டில் போட்டிருக்கின்ற உணவுகள் என்னென்ன என்பதனை பார்வையால் கண்டுகொள்ளவே முடியாமல், சுவையின் மூலமாக உணர்ந்துஓ.கத்திரிக்காயா!, கோழியா!ஓ.. ஆட்டிறைச்சியோ.!  என புரிந்துகொள்கிற சூழல் அங்கே.  இந்நிலையில் ஆடர் கொடுத்த உணவை எப்படி விரையமாக்காமல்  முடிப்பது?

`ஆஹா. ஓஹோ. சாப்பாடு பிரமாதம், ஃபைவ் ஸ்டார் ரேன்ஞ்என புருடா விடுவார்கள். உள்ளே நுழைந்தவுடன்தான் தெரியும் அதன் நிலவரம்.  பரிமாறுபவர்களின் உடைகள், அவர்களின் கைகள் விரல்கள், தலையில் தலைப்பாகை/தொப்பி போடாமல் இருப்பது, கால்களில் செருப்பு காலணிகள் அணியாமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டு சேவை வழங்குவது, தண்ணீர் டம்லர்களில் விரல்களை உள்ளே நுழைத்து ஒரே மூச்சில் ஐந்து ஆறு டம்லர்களைக் கொண்டுவருவது, மேஜையைத்துடைக்கும் போது நீரைப் பாய்த்து, சிந்தியிருக்கின்ற உணவை ஒன்று கூட்டி இழுக்கும்போது வாந்தி எடுத்ததைப்போல் வரும் ஒரு கலவை, அதைப்பார்க்கின்ற நமக்குக் குமட்டும்... உணவு மேஜைகளை மிக நெருக்கமாகப் போட்டுவிட்டு பக்கத்தில் உள்ளவரின் தும்மல் இருமல் நம்மையும் தாக்குகின்ற சூழல்.... போன்ற நிலவரங்களைக் குறிப்பிடலாம். இருப்பினும், மூணாரில் இருக்கும் ஒரே ஒரு தமிழர் உணவுக்கடை, சரவணபவன் ஹோட்டலில் சாப்பிட்ட திருப்தி மாதிரி வேறெங்கும் கிடைக்காது. பளீச் சென்று வெளிச்சமான உணவுக்கடை அது.


உணவும் நோயும்..

உணவு உண்ணல் என்று வருகின்றபோது, அதனூடே வரும் சில நோய்களையும் நாம் ஆராயவேண்டிவருகிறது. பசி அடங்கிய பின் தொடர்ந்து உண்பதை சிலர் தவிர்த்துவிடுவார்கள்.  மலேசிய சூழல் வேறுபெரும்பாலும் தட்டுகளை கைகளில் ஏந்தி வரிசையில் நின்று நமக்குத்தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வந்து உண்ணலாம். இந்தச் சூழலிலேயே மில்லியன் டன் கணக்கில் உணவை விரையமாக்குகிறார்கள் என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வருகின்ற போதுதமிழ் நாட்டுச்சூழலை நினைத்துப்பாருங்களேன். ! ஒரு பெரிய தட்டில் குட்டிக்குட்டியாக நிறைய பாத்திரங்களை சுற்றிலும் வைத்து, அதில் குழம்புதயிர், காய்கறி, பாயாசம்கூட்டு, பொரியல் என குறைந்தது ஒன்பதுவகை பதார்த்தங்கள் இருக்கும். நடுவில் சப்பாத்தி, புளிசாதம் அல்லது எலுமிச்சை சாதம் என வைத்து கூடவே பால்கோவா மற்றும் பெயர் தெரியாத ஸ்வீட்கள் என சிலவற்றையும் வைத்திருப்பார்கள். இவைதான் சாப்பாடுபோல என்று நினைத்து, சப்பாத்தி, புளிசாதம் போன்றவற்றை நன்கு சாப்பிட்ட பிறகே, நாம் ஆடர் கொடுத்துள்ள உணவுகள் வரும் சோற்றோடு. எப்படி உண்பது? அப்படியே தங்கிப்போகும். அனைத்தும் விரையமாகும்.


அரசாங்க ஒத்துழைப்பு

நேற்று ஒரு வேலையாக வெளியே சென்றுவந்தபோது மதிய உணவுவேளை, பயங்கரப் பசி. அருகில் எந்த தமிழர் உணவுக் கடையும் தென்படவில்லை. வாகனத்தைக் கொஞ்ச தூரம் செலுத்தினேன், ஒரு கடை தென்பட்டது. சுத்த சைவ உணவகம் என்று எழுத்தியிருந்தார்கள்.

உருளைக்கிழங்கு பொடிமாஸ், பலாக்கா பால் பிரட்டல், அப்பளம் குழம்பு அவ்வளவுதான். சுவையே புரிபடவில்லை. என்னமோ கடமைக்கு உண்பதைப்போலவே இருந்ததது. சரி ரசம் இருக்கா? என்று கேட்டதிற்கு, இல்லைவெஜி சூப் மட்டும்தான் இருக்கு என்று சொல்லி, காய்கறி பிரட்டுகையில் அதில் மிஞ்சுகிற நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்துவைத்து அதை சூப்பாகக்கொடுக்கின்றார்கள். பருகியவுடன் தெரிந்துவிட்டது. தினமும் சமைக்கின்ற எங்களுக்குத்தெரியாதா சூப் என்றால் என்னவென்று.! வாங்கிய உணவை அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டேன். விரையம்தான் என்ன செய்வது.!? அப்படிப் பார்த்தால், உடல் உபாதைகளுக்குக்கூடுதல் கட்டனம் செலுத்தவேண்டி வருமே.! பரவாயில்லையா?

ஆக, உணவு விரையம், உணவுக்கழிவுகள் என்பது வீட்டில் சமைக்கிற உணவுகளால் ஏற்படாது என்பது என் யூகம். அது பெரும்பாலும் உணவுக்கடைகளாலேயே ஏற்படுகிறது. பத்திரிகைகள் விற்பனை ஆகவேண்டும் என்பதற்காக, எதையாவது ஆய்வுகளாகப்போட்டுவிட்டு, நான் நன்றாக அலசி ஆராய்கிறேன் என்கிற புள்ளிவிவரங்களை கொடுத்து மார்த்தட்டிக்கொள்வதைவிட, லஞ்சம் வாங்காமல் தூய்மைக்கேடு நிறைந்த உணவுக்கடைகளை இழுத்து மூடுகிற வேலையில் கூடுதல் கவனம் செலுத்தினால், டன் கணக்கில் விரையமாகும் உணவுகளைத்தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்.

ஆய்வினைப் படித்து முடிக்கின்றபோது, நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவில் ஒரு ஈ அமர்வதைக் கண்டேன், என் உணவையும் குப்பையில் போட்டுவிட்டு, பன் வாங்க கண்டீனுக்கு விரைந்தேன்.

அதீதம் இணைய இதழில் வந்த எனது கட்டுரை இது... 17/6/2013.