கே:நீங்கள் யார்…?வாசகியா?கவிதை புனைபவரா?புனைகதை எழுத்தாளரா?சூடு பறக்க பத்திகள் எழுதுபவரா?
ஷா ஆலம் விஜயாவாக முத்திரை பதித்துவிட்ட எனது உண்மைப் பெயர், ஸ்ரீவிஜயலக்ஷ்மி. படித்தது, வசிப்பது எல்லாமே கோலாலம்பூரில்தான். இரண்டு குழந்தைகள். அமைதியான குடும்ப சூழல். புரிந்துணர்வுள்ள கணவர்.
நான் எப்போதுமே வாசகிதான். எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் போன்ற அங்கீகாரமெல்லாம் எனக்கு எப்போதுமே வேண்டாம். இந்த பட்டம், அந்த பட்டமெல்லாம் அடைமொழியாகப் போட்டுக்கொண்டு, அவலத்தைக் கண்டு கொதிக்கிறேன் பேர்வழி என்கிற போலி முகமுடியெல்லாம் தூரத்தூக்கி எறிய நினைக்கும் ஒரு சராசரி பெண் வாசகி நான்.
நான் இப்படித்தான், என, யார் எப்படி முடிவு செய்தாலும், அந்த வட்டத்திற்குள் சிக்காமல், அவற்றையெல்லாம் கவனத்திலும் கொள்ளாமல், எனக்குள் எழும் ஐயங்களையும் அவலங்களையும் சொல்லியே ஆகவேண்டுமென்பது தான் எனக்குள் தணலாக இருக்கும் நெருப்பு. அவை கவிதை, கதை, கட்டுரை, கடிதம் என எந்த வடிவில் வேண்டுமானாலும் வரலாம். அவற்றையெல்லாம் சகித்துக்கொண்டும், பொறுத்துக்கொண்டும், நான் எழுதும் தமிழில், இலக்கணப்பிழைகள் எழுத்துப்பிழைகள் போன்றவற்றைத் திருத்தி, எனக்குத் தொடர்ந்து ஆதரவும் உற்சாகமும் அளித்துக் கொண்டிருக்கும் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களை முதலில் நான் வணங்குகின்றேன். எல்லாப் பத்திரிகைகளிலும் எனது பங்களிப்பு இடம் பெற்ற வண்ணமாகத்தான் இருக்கின்றது. நான் என்ன எழுதினாலும், `அதுதாங்க எழுத்து’ என, தொடர்ந்து உற்சாகமும் ஆர்வமும் ஊட்டிய அனைத்து பத்திரிகை ஆசிரியர்களும் நினைவுக் கூர்பவர்கள்.
எனது நோக்கம், நம் நாட்டு இலக்கிய உலகில் நடக்கும் அவலங்களைக் களைய வேண்டும். வளரும் எழுத்தாளர்கள் என்ன எழுதினாலும் தோளில் தட்டி வளர்த்துவிடலாம், ஆனால், ஓரளவு வளர்ந்து விட்டவர்கள், சுயநலத்திற்காக இலக்கியத்துறையை கீழ் நிலைக்கு இட்டுச்செல்வதை, பேனா பிடிக்கும் ஒவ்வொரு எழுத்தாளரும் தட்டிக்கேட்கவேண்டும். இலக்கியம் தான் வருங்காலத்தில் நமது சரித்திரங்களையும் தரித்திரங்களையும் சொல்லுபவை. நாம் எழுதுகிற எழுத்து பல லட்ச மக்களின் குரலாக ஒலிக்கவேண்டும். எனக்கு, எனக்கு என்று சுயநலமாக சிந்தித்து, பேர் புகழ் வேண்டி இலக்கியத்துறைக்கு வருபவர்களை அடையாளங்கண்டு துரத்தியடிக்கப்பட வேண்டும். இலக்கியத்துறை ஒன்றும் அவர்களின் அப்பன் வீட்டு சொத்து அல்ல. நாம், நம் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லவிருக்கும் புதையல் அது.
இதில் வானொலி தொலைக்காட்சி இலக்கியத்துறைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். பத்திரிகையாவது எழுத்துப் பயிற்சிகளை வழங்குகிறது. ஆனால் வானொலி தொலைக்காட்சிகளுக்கு எழுதுவது பயிற்சியல்ல. நல்ல சன்மானம் வழங்கப்படுகிறது அங்கே என்பதும் கவனத்தில் கொள்ளல் அவசியம். சன்மானம் வழங்கப்படும் இடங்களில்தான் மலிந்துகிடக்கிறது ஊழல்.!!
கே:பெண்ணிய உணர்வு என்பது படைப்புகளில் எப்படியாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்?
நிச்சயமாக போலியாக இருக்கக்கூடாது என்பதுவே என் எதிர்ப்பார்ப்பு. உணர்வுதானே என கற்பனையில் மிதக்கின்ற அனைத்து எழுத்தும் ஆபாசமானவை. உணர்வுகளை ஒளிவு மறைவின்றிச் சொல்வதில் என்ன தயக்கம்.? சில பெண் எழுத்தாளர்கள், தமது உணர்வுகளை மற்றவர்களின் மேல் திணித்து, அதை ஒரு பாத்திரமாக அமைத்து, கதை மாந்தர்களின் உணர்வுகளாகவே பார்த்து, அதற்கு, இவர்களின் மனசாட்சியைக் குடைந்துகொண்டிருக்கும் நல்லொழுக்கங்களைத் தீர்வாக வழங்கி, இவர்களை உலக மகா பரிசுத்த ஆத்மாவாக பொதுவில் காட்டிக்கொண்டு, படைப்பை முடிக்கின்றார்கள். இன்னமும் அதே பழைய பாணி.
மேலும், ஆண்களை எதிர்ப்பதுதான் பெண்ணியம் என்பதும் படு நகைச்சுவை. விவாகரத்து செய்துவிட்ட எல்லா பெண்களும் ஒன்று திரண்டு, இரவு பகல் பாராமல் பெண்ணியம் பேசுவதால், பெண்களின் வளர்ச்சி உச்சத்தை அடைந்துவிடுமென்று நினைப்பதும் அதைவிட நகைச்சுவை..
கே:சிலருக்கு நீங்கள் சிம்ம சொப்பனமாக தோற்றம் தருகிறீர்கள் எனபதை மறுக்க முடியுமா?
இந்த கேள்வியில், உள்குத்து ஒன்றுமில்லையே.!?
அப்படியெல்லாம் இல்லை சார். நான் என்ன எழுதினாலும் கடுமையான விமர்சனங்கள் எதிர்ப்பாக, அவை குப்பையாக இருந்தாலும், பிரசுரமாகிக்கொண்டுதானே இருக்கின்றன.!கருவாட்டுக்கடைக்கு கத்தரிக்காய்க் கடை அவசியம்தான்.! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.! சூரியனின் வேலை என்ன? உலகிற்கு வெளிச்சத்தைக்கொடுப்பது. இச்சிந்தனையிலேயே நாம் இருந்து விட்டால், பூனை கத்தினாலும், நாய் குரைத்தாலும் பிரச்சனை இல்லை. இந்தப் பயணத்தில் எனக்கு ஏற்பட்ட காயங்கள் கொஞ்ச நஞ்சமா.!? வேறு பெண்ணாக இருந்திருந்தால், இலக்கியமாவது மண்ணாவது என இந்நேரம் காணாமல் போயிருப்பார்.
கே:ஒரு காலத்தில் ஞாயிறு பிரதிகளில் நிறைய எழுதிக்கொண்டிருந்த நீங்கள் திடிரென இணையத் தளத்தில் நிறைய எழுத ஆரம்பித்து விட்டீர்களே..எப்படி?
நம் நாட்டு பத்திரிகைகளின் நிலவரம் அப்படி. உலகமே இணையத்தின் வழி எங்கேயோ சென்று கொண்டிருக்கையில், நமது நாட்டின் பத்திரிகை ஆசிரியர்கள் சிலர், எப்படி கதை, கட்டுரை, கவிதைகள் எழுதி தபால் நிலையத்தில் கொண்டு சேர்ப்பது என்பனவற்றைப் போதித்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்லவேளை, தபால் தலையை நாக்கை நீட்டி, எச்சில் தொட்டும் ஒட்டலாம், இல்லையேல் நீரைத்தொட்டும் ஒட்டலாம் என்று போதிக்கவில்லை. !
அதுமட்டுமல்ல, அவலங்களைச் சொல்லி கடிதங்கள் எழுதினால், `அது அரசாங்கம் சார்ந்த விவகாரம், நமக்கு நாமே எப்படி ஆப்பு அடித்துக்கொள்வது? நாம் இக்கடிதத்தைப்போடுவதால் எவ்வளவு சிக்கல்களைச் சமாளிக்கவேண்டியுள்ளது தெரியுமா? எழுத்து என்பது எல்லோருக்கும் வந்து விடாது, வரும் படைப்புகளை ஆதரித்து, கொடுக்கும் பணத்தை பகிர்ந்துகொள்வதால் என்ன அவலம் வந்துவிடப்போகிறது..!’ என, கொஞ்சங் கூட பொறுப்பே இல்லாத தொடை நடுங்கும் ஆசாமிகள் இருக்கும் இடத்தில் நமக்கென்ன வேலை? இந்த விரக்திதான் என்னை அதிகமாக இணையத்தில் எழுதவைக்கின்றது. மேலும், அவைகள் உலகமுழுக்கப் போகின்றன. புரிந்துணர்வுள்ள வாசகர்கள் மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றார்கள். நிறைய பகிர்வுகள் எழுத்திற்கு உரமிடுகின்றன. பல எழுத்தாளர்களின் அறிமுகமும் நமது வாசிப்புத் திறனை வளர்க்க உதவுகின்றது. இது போதாதா, தனி ஒரு எழுத்தாளரின் வளர்ச்சிக்கு..! . என மனம் பேசும் அவலங்கள் பல, பிரசுரத்தகுதியை இழந்து விடும், ஆகவே, எனது இணையத்தளம் இதற்கு வடிகாலாக அமைந்து விட்டதால் எல்லாவற்றையும் அங்கே கொட்டிக் கொண்டிருக்கின்றேன்.
கே:மலேசிய இலக்கியங்களில் பெண்களுக்கு பங்களிப்புகள் அதிகமாக உள்ளதை ஏற்கிறீர்களா?அல்லது வாய்ப்புகளை அவர்கள் பயன் படுத்திக்கொள்ள வில்லையென கருத்து ஏதும்?
ஆமாம் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது ஆனால் அவர்களிடம் வாசிப்பின் பரப்பளவு குறைந்தே காணப்படுகிறது. மிகப்பெரிய எழுத்தாளர் என்கிற முத்திரையைப் பதித்துவிட்டவர்கள் கூட, கொஞ்சங்கூட ஆய்வு மனப்பான்மையே இல்லாமல் இன்னமும் கற்பனையில் மிதந்துகொண்டு புனைவுகளை எழுதிவருகிறார்கள். ஒரு படைப்பு, மழையைப்பற்றி சொல்வதாக இருந்தால், இன்னமும் மழையில் நனைவதால் காய்ச்சல் சளி வருமென்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.! கர்பப்பை புற்று நோயால், நோயாளி இறந்து விடுகிறார் என்கிறார்களே, இன்னமும்...! இப்படி கற்பனையிலே குதிரை ஓட்டிக்கொண்டிருப்பதை எப்படி ஜீரணிப்பது.? அதற்கு அவைகளை படிக்கமலேயே இருந்துவிடலாம். ஒரு படைப்பைப் படிப்பதால் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளவேண்டும். சும்மா பொழுது போக்காகப் படிப்பதில் அவ்வளவாக விருப்பமில்லை. பத்திரிகையில் எழுதும் பெண் படைப்பாளிகளை விட, இணையத்தில் நமது பெண்மணிகள் சிலர் சக்கை போடுபோடுகிறார்கள். அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். புவனேஸ், யோகி, பூங்குழலி வீரன் போன்றோர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
போட்டிக் கதை நாயகிகள் பத்திரிகைகளில் வரும் வாய்ப்புகளை பணத்திற்காக நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் மறுக்கலாகாது.
கே:எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?எழுத்துக் கலையை எப்படியாக காண்கிறீர்கள்?
எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் பள்ளி மாணவி. அந்த காலகட்டத்தில் எழுத்தில் அதிகமாக ஆர்வமூட்டிய வழிகாட்டிகள் அப்போது பரபரப்பாக செயல் பட்டு வந்த வாசக வட்டத்தலைவர்கள். அவர்கள் தத்தம் வாசககவட்டத்தை விரிவு படுத்தி விளம்பரம் செய்வதற்காகவே பல வாசகர்களை எழுதவைத்தார்கள். ஒரு சின்ன `ட்ம்லர்’ பரிசாகக் கிடைத்தாலும் அது மிகப்பெரிய வெற்றியாகவே எங்களுக்குள் பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்ல, எங்களின் எழுத்துகளை, அவர்கள் மூலமாகவே பத்திரிகைகளுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டது. எழுத்தே வராது. எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்போம். அதையும் பிரசுரித்து ஆர்வமூட்டினார்கள் அன்றைய பத்திரிகை ஆசிரியர்கள். அந்த வகையில் பத்திரிகை ஆசிரியர்கள் இன்னமும் மாறாமல் அதேபோல் இருப்பது வரப்பிரசாதமே. இருப்பினும், வாசகர் வட்டம் என்று எடுத்துக்கொண்டால், நிகழ்வுகளை இன்னமும் சோர்வின்றி சிறப்பாக நடத்திவருவதில் திரு.பாலகோபாலன் நம்பியார் முத்திரை பத்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்துக்கலையை வாழ்வில் ஒரு பகுதியாகவே காண்கிறேன். பிரச்சனைகள் மனதைக்குடையும் போது, அவைகளை அப்படியே எழுத்தில் இறக்கிவைப்பேன், மனம் சிறகடித்துப்பறக்கும். எப்போதுமே என்னால் உற்சாகமாக செயல்பட முடிவதற்கு இதுதான் முக்கியக் காரணம்.
நன்றி, தினக்குரல் ஞாயிறு பொறுப்பாசிரியர்
திரு. இராஜசோழன்.
நன்றி, தினக்குரல் ஞாயிறு பொறுப்பாசிரியர்
திரு. இராஜசோழன்.