புதன், அக்டோபர் 04, 2017

கவனம் கவனம்

முகநூலில் ஒன்பது வருடம் கடந்துவிட்ட எனக்கு நேற்று ஏற்பட்ட சங்கடம் இது…
என் உறவுக்கார தங்கை ஒருவள் முகநூலில் என் நட்பு வட்டத்தில் இருக்கின்றாள். சமீபத்தில் நானும் அவளும் நண்பர்களானோம்.
ஆனால், நேற்று இரவு தீடீரென்று அவளிடமிருந்து மீண்டும் ஒரு நட்பு விண்ணப்பம் வந்திருந்தது. `இவள்தான் நம் நட்பு வட்டத்தில் இருக்கின்றாளே.! ஏன் மீண்டும் அனுப்புகிறாள், என்று யோசித்துக்கொண்டே, அவளின் நட்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டேன். அப்போது நான் இரவு உணவிற்காக வெளியே சென்றிருந்தேன். என் கைப்பேசியின் பேட்டரி வேறு முடியும் தருவாயில் அதன் விளக்கை மங்கச்செய்துகொண்டிருந்தது.
விண்ணப்பம் ஏற்றுக்கொண்ட மறு நொடி, மெசன்ஞர்’இல் வந்து அக்கா ஒரு உதவி, என்றாள். அவள் இதுவரையில் என்னிடம் எந்த ஒரு உதவியும் கேட்டதில்லை. இளவயதில் கணவனை இழந்தவள். அழகானவள். இருந்தபோதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் தன் சொந்தக்காலில் கம்பீரமாக வாழ்ந்துவருபவள் அவள். அவளிடமிருந்து இப்படி உதவி என்று கேட்டு ஒரு கோரிக்கை வருகின்றபோது அதை என்னால் மறுக்க முடியவில்லை. சரி சொல்லு என்ன உதவி, என்றேன்.
என் கைப்பேசியில் உள்ள எண்கள் எல்லாமும் அழிந்துவிட்டன, என்னிடம் உங்களுடைய கைப்பேசி எண்ணைக்கொடுங்கள் என்றாள். நானும் கொடுத்தேன். இந்த உரையாடலின் போது, பேட்டரி இன்னமும் கரைந்துகொண்டிருந்தது.
என் எண்ணைக்கொடுத்த மறுகணம், அக்கா இப்போது உங்களின் கைப்பேசியில் நான்கு எண்கள் கொண்ட ஒரு `கோட்’ வரும் அதை என்னிடம் பகிருங்கள் என்றாள். அதைச்சொல்கிற போது அவள் அவசரத்தில் உள்ளதுபோல், விரைவாக விரைவாக என்று என்னிடம் மன்றாடினாள். நானும் கொடுத்தேன். எனது பேட்டரி மங்கிக்கொண்டே இருந்தது. மறுமொழி சொல்கிறபோது, எனது பேட்டரி எச்சரிக்கையினை அவளிடம் மெசஞ்சர் வழி சொன்னேன். அதைக்கேட்ட அவள், அக்கா ப்ளீஸ், கொஞ்ச நேரம், எனக்காக, ப்ளீஸ் என்று போராடுவதைப்போல் இருந்தது. முதலில் வந்த நான்கு எண்களைக்கொடுத்தவுடன், மீண்டும் ஒரு நான்கு எண்கள் வந்துள்ளது, அதையும் சொல்லுங்கள் என்றாள், அதையும் கொடுத்தேன். என்னமோ பிரச்சனை போலிருக்கிறது அக்கா, நான் உங்களிடம் பிறகு சொல்கிறேன், இன்னொரு நான்கு எண்கள் வந்துள்ளது அதையும் கொடுங்கள் என்றாள். கொடுத்தேன். இப்படியே நான்கு ஐந்து முறை இருக்கும். கொடுத்துக்கொண்டிருந்தேன். சட்டென்று மனதிற்குள் ஒரு பொறி தட்டியது. மர்ம ஆசாமியிடம் சிக்கியதை உணர்ந்தேன். தம்பியை அழைத்து, அந்த உறவுக்கார தங்கையின் தொலைபேசி எண்களை வாங்கி அவளுக்கு அழைப்பு கொடுத்தேன். (அவளின் புதிய எண்கள் என்னிடம் இல்லை)
ஹாலோ யார் இது.? மறுமுனையில் அவள்தான். நான் தான் விஜயாக்கா, என்றேன். ஏன் திடீர் அழைப்பு.? இப்போதுதான் என் நினைப்பு வந்ததா.? என்றாள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. முகநூல் மெசஞ்சர் விஷயத்தை அவளிடம் விளக்கினேன். அரண்டுபோனாள். ஏன்க்கா இப்படி இருக்கீங்க.! என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கக்கூடாதா.? என்று உரிமையுடன் திட்டினாள். பேசிக்கொண்டிருக்கின்றபோது பேட்டரி மடிந்துவிட்டது. கைப்பேசி அணைந்துவிட்டது. மண்டையில் நண்டு ஓட, உணவுக்கடையில் உணவைக்கூட சுவைத்து உண்ண முடியாமல், எதோ ஒருவித பயம் மனதைக் கவ்விக்கொண்ட சூழலில், சாப்பிட்டும் சாப்பிடாமலும் வீடு வந்து சேர்ந்தேன்.
வந்தவுடன் முதல் வேலையாக கைப்பேசிக்கு உயிர்கொடுக்க சார்ஜரில் போட்டேன். சிலநிமிடம் கழித்து கைப்பேசி கண்விழித்தது. என்ன தான் நடந்தது என்று எல்லா குறுந்தகவல்களையும் படபடப்புடன் வாசித்தேன். அதில், use PIN code ____ to complete your payment. This key is valid for 30minutes. என்று வந்திருந்தது. DIGI ringtone புதுப்பிக்கின்ற குறுந்தகவல்கள் வருகின்ற எண்ணில் இந்த குறுந்தகவல்களும் வந்திருந்தன.
என்ன payment confirmation ஆக இருக்கும் என்கிற குழப்பத்தில், DIGI செண்டருக்கு அழைத்தேன். தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு அவசர வேலைக்காக அழைத்தால், ஒன்ன அமுத்து, இதுக்காக.. ரெண்ட அமுத்து, அதுக்காக…. மூன அமுத்து, இதுக்காக….. நால அமுத்து அதுக்காக …’ன்னு பொறுமைக்கு சோதனை வரும். பலமுறை முயன்று, ஒருவர் அழைப்பை எடுத்தார். விவரத்தைச்சொன்னேன். அவர்.. ஐய்யோ, உங்களை யார் உங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்கச்சொன்னது, உங்களின் இந்த மாத பில்’இல் இருந்து ரிங்கிட் மலேசியா முன்னூறு சற்றுமுன் தான் அந்த எண்ணிற்கு மற்றப்பட்டுவிட்டது. அதை நாங்கள் திருப்பிக்கொண்டு வர, நீங்கள் கிட்டத்தட்ட ஒருமாதகாலம் காத்திருக்கவேண்டும். இருந்தபோதிலும் பயம் வேண்டாம், அதை நாங்கள் மீட்டுக்கொள்வோம். இப்படிப் பலமோசடிகள் ஆன்லைனில் நடந்துகொண்டு வருகிறது. நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கவலைவேண்டாம்.! வேறு எதாவது கேட்கவேண்டுமா.? என்று அழைப்பைத்துண்டிக்க நினைத்தார். அவரிடம் சிலகேள்விகள் கேட்டேன். எப்படி எங்களின் DIGI பில் பணத்தை பிறர் எடுத்துக்கொள்ள DIGI அனுமதிக்க முடியும்.! அதற்கு நீங்கள் செய்யவிருக்கின்ற பாதுகாப்பு அம்சங்கள் யாவை.? ஏன் இப்படி நடக்கிறது.? DIGI எடுக்கவிருக்கின்ற எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன.?
அவர் சொன்ன பதில், ஆன்லைனில் இப்படி பலவித மோசடிகள் நிகழ்கின்றன, நீங்கள்தான் உங்களின் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். இனிமேல் யார் எதைக்கேட்டாலும் பகிராதீர்கள். எங்களின் நிறுவனம் இந்தச்சிக்கல்களை கூடிய விரைவில் சரி செய்யும். பொறுமை காக்க, என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தார்.
எச்சரிக்கை..எச்சரிக்கை. இப்படி என் பெயரில் யாரேனும் உங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்க நேர்ந்தால், தயவு செய்து பகிராதீர்கள். Fraudகள் நிரைந்த உலகமைய்யா இது.
எல்லாம் முடிந்தபிறகு தங்கைக்கு அழைத்து விவரங்களைக் கேட்டேன். அவளின் முகநூலில் எந்தச்சிக்கலும் இல்லை. யாரும் `ஹெக்’ செய்யவில்லை. ஆனால் யாரோ ஒருவர், அவரின் புகைப்படங்களை எடுத்து/திருடி, பெயரில் சில மாற்றங்கள் (சட்டென்று கண்டு கொள்ளமுடியாத அளவிற்கு) செய்து, உதாரணத்திற்கு; அப்பா பெயர் Murthy என்றால் அதை Mutty என்று மாற்றி, அதை வைத்து ஒரு பேக் ஐடி செய்து, எல்லா உறவுகளுக்கும் நட்பு விண்ணப்பம் கொடுத்து, அவர்களிடம் அவரவர் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துவருவதாக சில உறவுக்கார நபர்கள் பகிர்ந்தார்கள். இந்த வகை திருட்டு, வட்சாப்பிலும் பரவலாக வந்துகொண்டிருக்கிறதாம். கவனம்.!!