திங்கள், டிசம்பர் 12, 2011

சிவபுராணம்

ஒரு இறப்பு வீட்டில்

தொல்லை இருள் பிறவி சூழும் தல நீக்கி....அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதோ............ வேகம் கொடுத்து ஆண்டவன் வேதம் வெல்க....... பிறப்பருக்கும் பிஞ்ஞகந்தன் பொய்கழல்கள் வெல்க............... கண் நுதலான் தன் கண் காட்ட வந்த செய்தி......

நீத்தார் கடன் செய்யவந்தவர், அவரின்  கணீர் குரலில் பாடல்களைப் பாட, சேர்ந்து படிக்கும் மற்றவர்களைப் பாடவே விடாமல்..அதிவேகமாக தேவார திருவாசகங்களை கட கடவென வாசித்து, வருகையாளர்களை கவர்ந்துகொண்டிருந்தார்.

பலர் தலையை அசைத்து லயித்திருந்தார்கள். சரி எதற்கு வம்பு? என ஒதுங்கி ஒரு ஓரமாக போடப்பட்டிருந்த நாட்காலிகளில் அமர்ந்துகொண்டோம். ஒன்று விட்ட நெருங்கிய உறவுக்கார் ஒருவரின் கதையை ஆரம்பித்தான் தம்பி.

“கதை தெரியுமா உனக்கு?”

”என்ன?” அக்காள் தான் அதிவேகமாகக் கதை கேட்கத் தயாரானாள்.

“டேய், சாவு வீடு..அம்மாவின் இரு கண்களும் நம்மையே கவனிக்கிறது..கவனம் கவனம்..” எச்சரித்தாள் தங்கை.

“ஏய், சும்மா சொல்லு.. இந்த மாதிரி வாய்ப்புக்கிடைத்தால் தான் நாம் மீட் பண்ணுவோம், இல்லேன்னா எங்கே வாய்ப்பு!” நான் தான்

“தோடா, நாங்க எப்போதும் சந்திப்போம், நீதான் புதுசா சமஞ்ச பொண்ணுமாதிரி வூட்டுக்குள்ளேயே இருப்ப.” அக்காள் தங்கை இருவரும் மாறி மாறி.! என்னைச் சீண்டமால் அதுகளுக்குப் பொழுதே போகாது.

“ சும்மா இருங்க, சொல்றேன்.. நம்ம பெரியம்மா மகனின் பொண்டாட்டி, அவங்க புருஷனை நல்லா மொத்துச்சாம், இது தெரியுமா?”

“ புருஷனை சேர்த்துக்கிச்சா தேவி, எப்போ?” கேட்டேன் நான்.

“ம்ம்ம், அவங்க சேர்ந்து ரெண்டு வருஷமாச்சு. நீ ஒண்ணும் தெரியாத பாப்பா..!”

“அடிங்ங்ங்.. உங்களாட்டம் நான் என்ன ஊர் கதை பேசற ஆளா?, எதோ தானா வந்து விழுந்தா வேண்டாம்னு சொல்லாம கேட்டுக்குவேன்!” அக்காளிடம் பாய்ந்தேன். அவளின் வாய் ஒரு தேள் கொடுக்கு.

”யாரு சேர்த்துக்கிட்டா.! அவரே வந்து ஒட்டிக்கிட்டாராம். தேவி அண்ணி சொன்னுச்சு. சரி அத விடு, கதைக்கு வருவோம். போன சனிக்கிழமை செம்மையா அடிவாங்கிறாராம் அண்ணன், பொண்டாட்டிக்கிட்ட.”

“அய்யோ, இது எப்போ? கதை எனக்கு வரவேயில்லை!” அக்காதான்.

“உனக்கு வந்தா எங்க எல்லோருக்கும் வந்த மாதிரியாச்சே!” தங்கை.

“இதை விட இன்னோரு ஆளுக்குத்தெரிந்தால், கதை ஆல் இந்தியா ரெடியோ மாதிரி இன்னும் அதிவேகம், ஆனா அது ஏதோ கோஸுஃக்குப்போயிருக்காமே, இங்கு ஆளையே காணோம்!” தம்பி.

“அதுசரி, ஏன் அடிச்சதான் அண்ணி வீட்டுக்காரரை..?” நாங்க எல்லோரும்.

“தண்ணிபோட்டிடுட்டு வந்து ரூம்மில் ஒளிந்துக்கிட்டாராம் அண்ணன். தேவி குளிச்சுட்டு, துணி மாற்றும் போது, வெளியே வந்துருக்கார் ஹீரோ.. பார்த்தவுடன் தேவி அண்ணி அரண்டுபோய் கத்துச்சாம்.. அவருக்கு சரியான கோபம், ‘ஏன்டி, நான் உம்புருஷன் தானே, ஏன் கத்தறவ.?’ன்னு சொன்னவுடன்.. சரமாரியா விழுந்ததாம் அடி., போதாததிற்கு மகளும் வந்திட்டாளாம். அடி பின்னி எடுத்திட்டாங்களாம் ரெண்டுபேரும் சேர்ந்து.”

“அட பாவமே.. உள்ளே நுழைந்தது  என்ன தப்பு?  தொட்டுத்தாலி கட்டின பொண்டாட்டி தானே! ஏன் அடிக்கணும்.? ஒரு மனுஷனை இப்படியா கொடுமை படுத்துவார்கள்! ச்சே!” நான் கொஞ்சம் இளகிய மனது. யாராவது துன்புற்றால் தாங்கிகொள்ள முடியாது.

வேகமாக இடைமறிந்த என் அக்காள்,  “ ம்ம்ம், குடும்பம் நடத்தத் துப்பில்லாமல், பிள்ளைகள் சின்னதா இருக்கும் போது, சிங்கப்பூர் போய் வேலை செய்து கூரையைப்பிச்சுக்கிட்டு கொட்டறேன்னு, திரும்பிக்கூட பார்க்காமல், அங்கேயே மன்மதலீலை பண்ணீட்டு, இப்போ வந்து என்ன சொந்தம் கொண்டாட வேண்டிக்கிடக்கு! மிதிக்கணும் இவனையெல்லாம்.” பழையதை அப்படியே ஞாபகத்தில் வைத்து உயிரை வாங்கும் ஒரு துர்க்குணம் அவளுக்கு.

“ அது சரிடா.. ஏன் அவர் ரூம்மில் போய் ஒளியனும்!!??” அப்பாவியாய் தங்கை. கதை இன்னும் முழுமையா விளங்காமல்...

வேகமாக சிரித்துவிட்டோம் எல்லோரும்.. அம்மா கிட்டே வருவது தெரியாமல்.. பக்கத்தில் இருந்த தென்னை மட்டையை எடுத்தார்..அடிப்பதற்கு.. ”உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா? இது என்ன இடம்??? ”

“சரி சரி வர்றோம், போங்க.. நாம என்னமோ பேசி சிரிக்கிறோம்’ல, அம்மாவை மட்டும் விட்டுட்டு, அதான் கோபம் பொங்குது அம்மாவிற்கு, வேறொன்னுமில்லை” இதைத் தம்பி சொன்னவுடம், பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு சிவபுராணம் படிக்கும் இடத்திற்குச் சென்றோம்..

 எல்லோரும் கண்ணீர் மல்க நின்றிருந்தார்கள்.

நாங்கள், சிவா அண்ணன் தேவியையே விரைக்கப்பார்ப்பதை ரசித்துக்கொண்டிருந்தோம்.

பாவம் ரொம்ப நாளாச்சுப்போலிருக்கு. !!!

நீர்த்தார் கடன் செய்பவர் இப்போ, சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லி, எல்லோரையும் கூடவே வாசிக்கச்சொன்னார். இன்னும் பக்திப் பரவசமானது அந்தச் சூழல்.