வியாழன், நவம்பர் 17, 2011

மரணபயம்

மருத்துவமனையில்
மருந்து நெடியடிக்கும்
நோயாளிகளின் அருகில்
வெள்ளை ஆடையோடு
நடமாடாதே!
கைப்பிடித்துக் கதறுவாள் தாய்...
’’டாக்டர், என் புள்ளையை, எப்படியாவது காப்பாத்துங்க!’’

புதுமைத்தாய்

மருத்துவரிடம் செல்லாமலேயே
கருகலைப்புச் செய்கிறாள்
புகையைச் சுவைத்தபடி...!!!

நவம்பரில் நாங்கள்

காதல் இளவரசன், உலக நாயகன், பதமஸ்ரீ டாக்டர் கமலஹாசன்
சூப்பர் ஹீரோ ஷாருக்கான்
உலக அழகி ஐஸ்வரியா ராய்
பாடாகர் கார்த்திக்
உன்னி மேனனும்
இடையில் நீயும் (வித்யாசாகர்)

காதல் மன்ன்ன் ஜெமினிகணேசன்
இசையமைப்பாளர் தேவா
நகைச்சுவைப் புயல் விவேக்
யூனிவெர்ஸ் அழகி சுஸ்மிதா சென்
கட்டழகி நாயன்தாரா
கவர்ச்சிப்புயல் ஷகிலாவும்
இறுதியில் நானும் (விஜயா)
பிறந்துள்ளோம் இம்மாத்தில்..

இசை,காதல்,அழகு,கவர்ச்சி,நடனம்,நகைச்சுவை,நளினம், நவரசம் என
எல்லாம் கலந்த கலவை நாங்கள் (வி..வி)

யாருக்காவது வயிற்றிலும் காதிலும் புகை புகையாக வந்தால்.. குட்டிச்சுவரைத்தேடவும்,
மண்டை உடையும் படி நன்றாக முட்டிக்கொள்ளவும்.

ஒரு பத்திரிக்கை ஆசிரியருக்கு, நான் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து.

ஒரே ஒரு

கைத்தட்டலில்
கண்சிமிட்டலில்
கைகுலுக்கலில்
மௌனப்புன்னகையில்
ஊடுருவலில்
அணைப்பினில்
மறைந்துக்கொண்டு
வேடமிடுகிறது
உன் மீதான
எனது தீராத கோபம்!

தீபாவளிப்படங்கள்

வேலாயுதமே அருமை

தீபாவளி திரைப்படங்களில், என்னை மிகவும் கவர்ந்தது விஜய்யின் வேலாயுதம்’ . நன்றாகச் சிரித்தேன். இரண்டு இரண்டரை மணி நேரம் திரையரங்கே கலைக்கட்டியிருந்த்தது. சினிமாவில் லாஜிக் எல்லாம் பார்க்கவேண்டாம், உலகத்தரம் என்கிற முத்திரையோடு வரும், எந்த ஆங்கிலப்பட்த்தில் லாஜிக் இருக்கு?? பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்கிறோமே.! நம் ஆறாம் அறிவிற்கே எட்டாத விஷயங்களில் உள்ள அனைத்து விவரங்களையும் ஒரு படத்தில் நுழைத்து, அதைப் பார்ப்பவர்களை வாய் பிளக்க வைத்து, உலக அளவில் வசுலில் சாதனை படைத்தும் வருகிறார்களே எப்படி? லாஜிக்கோடு இருப்பதாலா!? நமக்கு அதில் ஒரு மட்டையும் புரியாது, ஆனால் நாமும் ஒப்பிற்கு அதை ஆஹா.. உலக தரம், ஜேம்சு போண்டு கலக்கிட்டான் அப்படி இப்படியென பிறரோடு சேர்ந்துக்கொண்டு, நமது அறிவின்மையை காடிக்கொள்ளாமல் ஜால்ரா போட்டுக்கொண்டிருப்போம். அதுவே தமிழ்படமென்றால், சரமாரியாக வசைபொழிகிறோம்.    

கொஞ்ச நேரம் ஜாலியாக பொழுதைகழிக்க திரைப்படங்களுக்குச்செல்கிறோம், அங்கும் (இங்குள்ள சில பேனா தமிழ் புலிகள் போல்) தமிழைகளின் புளித்துபோன வரலாறு, மஞ்சள் மகிமை துளசி மகிமை, சாணி மகிமை என ஆத்து ஆத்து என ஆத்தினால், ரசிகன் பொலிவில்லாமல் திரையரங்கை விட்டு வெளியேறுவதைத்தவிர வேறு என்ன நடக்கும். ஒரு குழந்தையைக்கவராத திரைப்படம் வெற்றிப்பெறுமா என்ன? நாம் எல்லோரும் மனதளவில் குழந்தைகள்தான். மனதைக்கவராத திரைப்படம் எப்படி எடுபடும்?

அதற்காக, கதாநாயகன் சர்கஸ் கலையைக் கற்று வந்து கம்பு, பந்து, கட்டை எல்லாம் சுற்றி, யானை, புலி, சிங்கத்தையெல்லாம் மெய்த்து விட்டால், மனதில் உள்ள குழந்தை மகிழ்ந்து விடுமா என்ன? நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் படத்திலிருந்து பார்த்து வருகிறோம், இன்னுமா??  

நாம் நமது பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க எவ்வளவோ விவரங்கள் நம் காலடியில் கொட்டிக்கிடக்கையில், எழாம் அறிவை பார்த்து புலங்காகிதம் கொள்பவர்கள் எந்த ரக தமிழர்களாக இருக்கமுடியுமென்று தெரியவில்லை.! ஒரு சிலர் தைரியமாக தமது விமர்சனத்தை வெளிப்படுத்த இயலாமல், இந்த வருடம் வந்த இரண்டு தீபாவளிப்படங்களும் ’(அ)சுத்தமான/சுத்த குப்பைகள் என முடிவு செய்துவிடுகின்றனர். மனசாட்சி என்ன சொல்கிறதென்பதை ஆராயுங்கள், அடுத்தவர்களின் கருத்திற்குச் செவிசாய்ப்பதேன்? அதுவும் சொல்கிறவர் கொஞ்சம் இலக்கிய அறிவு, கொஞ்சம் தமிழ் பற்று, கொஞ்சம் உலக ஞானமுள்ளவராக இருந்து விட்டால் போதுமே..எல்லோரும் அவரின் வால் பிடித்து, அதுவே சரி என்பதைப்போல் முழங்க ஆரம்பித்து விடுவார்கள்.! எல்லோரும் சொல்கிறார்கள் என ஏழாம் அறிவை புகழ்ந்துத் தள்ளுபவர்களைப்பார்க்கும் போது எங்கே போய் முட்டிக்கொள்கிறதென்று தெரியவில்லை. படம் பதினைந்தே நிமிடங்கள் தான் அருமை. மற்றவையெல்லாம் நார்மல் மசாலாதான். சூரியா நடிப்பு பிடிக்கும் அதற்காக படம் பிடிக்குமென்று சொல்ல மாட்டேன். சுயமாக சிந்திப்போமா?

அவதாரங்கள்

வேலைக்காரி
சமையல்காரி
பூக்காரி
பாசக்காரி!

தந்திரக்காரி
பொய்க்காரி
வேஷக்காரி
சூழ்ச்சிக்காரி!

கோபக்காரி
குறும்புக்காரி
முறுக்கேரி
ரோஷக்காரி!

அன்புக்காரி
வம்புக்காரி
வீம்புக்காரி
நேசக்காரி!

அவதாரி
அலங்காரி
அகங்காரி
அகோரி!

நாட்டியக்காரி
நடனக்காரி
சிங்காரி
சூரி மாரி பத்ரகாளி!

பணக்காரி
பிச்சைக்காரி
தக்காளி
பப்பாளி!

சகோதரி
தோழி
காதலி
கவிதாயினி!

நமக்கேன் ஊர்வம்பு?
எல்லாம் அவள்தான்...!
விஜயலஷ்மி........

தோள் கண்டேன்...தோளே கண்டேன்

இது அம்மாவின் கதை

பொதுவாக சிலர் கட்டுக்கதைகளை விடும் போதுதான், நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க, என ஆரம்பிப்பார்கள் (பொய்யர்கள்). ஆனால் இது உணமைக்கதை. சொன்னா நம்பமாட்டீங்க..சொல்றேன்.!

18 நவம்பர்.. 

அம்மா, தமது பதினாறு வயதில் ஒரு பெரிய குடுபத்தில் முதல் மருமகளாக வாழ்க்கைப்பட்டவர். அப்பா ’ஸ்டோர் லாரி’ ஓட்டுனர். அடிக்கடி வெளியூர் செல்பவர். பெரிய குடும்பம் என்பதால் சுமைகள் அனைத்தும் மூத்த மருமகளுக்கு.

அப்போது, அம்மா நிறைமாத கர்ப்பினி. இருந்த போதிலும், வீட்டு வேலைகள் எல்லாம் அம்மாவின் தலையில் தான். செய்தே ஆக வேண்டுமே! மருமகளாச்சே! கூட்டுக்குடும்பம், பதினாறு பேருடைய துணிகளைத்துவைப்பது, அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு paip இல்லை, வரிசையில் நின்று, தண்ணிரை வாளியில் அடித்து நிறைத்து, தூக்கிவரவேண்டும். அதற்கு சித்தப்பா மார்கள் உதவி செய்வார்கள்.. (அதுவரைக்கும் நல்லவர்கள் தான்). ஆனாலும் துண்மணிகளைத்துவைப்பது அம்மாதான்.
எல்லோருக்கும் சமைக்க வேண்டும், அப்போது கிரைண்டர், குக்கர், கேஸ் அடுப்பு எல்லாம் கிடையாது. அம்மியில் அரைத்து, விறகடுப்பில் சமைக்க வேண்டும், புகை கரி போன்றவற்றை நினைத்துப்பாருங்களேன்!

பெரிய அண்டாவில் சோறு வடிக்கவேண்டும், அதையும் சித்தப்பா உதவி செய்வார், பாவம், கர்ப்பினியால் அண்டாவைத்தூக்க முடியாது என்பதில் எச்சரிக்கையாகவே இருந்துள்ளார்கள்.

தையல் வேறு செய்வார் அம்மா. முன்பெல்லாம் கிழிந்த உடைகளைத்தைத்துப் போடுவது வழக்கம். அந்த வேலை கண்டிப்பானது கிடையாது, அம்மா இஷ்டப்பட்டு ஏற்றுக்கொண்ட வேலை அது.

இதற்கிடையில், சித்தப்பா மனைவிகளின் வருகை, அப்போ அப்போ வந்து வந்து போகும்போதெல்லாம், பாட்டியை நன்கு குளிப்பாட்டிவைத்திருப்பதால், நல்ல மருமகள்கள் (2பேர் தான்) என்கிற சர்டிப்பிகேட் வேறு பாட்டியிடமிருந்து. மனபுழுங்கள் அம்மாவிற்கு, எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும்..இந்த கிழவிக்கு நம்மேல் நல்ல அபிப்பிராயமே வராது என.!! 

ஓயாமல் உறவுகளின் வருகை, அப்பாவின் தங்கைகளின் வளைக்காப்பு, சித்தப்பாக்களின் நிச்சயதார்த்தம், பூப்பெய்த அத்தையின் சடங்கு நிகழ்வு, பிறந்த நாள் விழா, கோவில் திருவிழா, பொங்கல், வருடப்பிறப்பு, ஆடிப்பெருக்கு, அஷ்டமி, நவமி, நவராத்திரி, சிவராத்திரி என வீட்டில் விஷேசங்களில் உறவுகளில் வாருகைக்கு குறைவிருக்காது. கிட்டத்தட்ட வருடம் முழுக்க ஓய்வே இல்லாத நிலையில் அவஸ்தைப்பட்டார், அம்மா.

இந்த நிலையில், அம்மா அப்பாவுடன் மனம் விட்டு உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வது கூட சாத்தியப்படாத நிலையில் அக் குடும்ப சூழல் அமைந்திருந்தது. அவர்களுக்கென்று ஒரு தனி அறை இல்லை. படுக்கப்போகும்போது மட்டும் ஒரு சிறிய ஃக்யூபிக்கல், அதை திரைபோட்டு மூடியிருப்பார்கள். தூங்குவதற்கு மட்டும்தான் அங்கு ஒதுங்க வேண்டும், மற்றபடி எல்லா நேரங்களிலும் சுற்றி ராணுவப்படை மாதிரி கூட்டம் தான்.

ஒரு நாள், அம்மாவிற்கு இடுப்பு வலி வந்து விட்டது (லேசாகத்தான்). அப்பா வேறு ஊரில் இல்லை, வெளியூர் வேலைக்குச்சென்று விட்டார். அந்த சமயத்தில், சித்தப்பாவிற்கு பெண் பார்க்க பக்கத்து ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள் குடும்பத்தில் உள்ளவர்கள். அம்மா தமக்கு வலி வந்து விட்டது என்றவுடன், பாட்டி,  “ஏண்டி, இன்னும் நாள் இருக்கே! அதற்குள் என்னவாம் உம்புள்ளைக்கு, வெளியே வரணுமாக்கும்!?” என்று சொல்லவும், அம்மா அமைதியாக இருந்துவிட்டார். மேலும் முன்பெல்லாம், வெளியே செல்லணும் என்றால், வாடகைக் கார்தான் புக் செய்வார்கள். அதற்கு முன்பணமெல்லாம் கொடுத்து தயார் நிலையில் இருப்பதால் அந்த விவகாரத்திற்குப்போயே ஆகவேண்டும், இல்லையேல் பணம் திருப்பித்தரமாட்டாது. மூன்று நாள்களுக்கு புக் ஆகியிருந்தது வாடகை கார். முன்பு அப்படித்தான், வெளியே கிளம்பினால், அப்படியே ஊர் உறவுகளைக் காண கூடுதல் இரண்டு மூன்று நாள்கள் எடுத்துக்கொள்வார்கள்.

அம்மாவிற்கு வலி வந்த விவரத்தை, பாட்டி பக்கத்து ஊரில் இருக்கும் சித்தப்பாவிடம் சொல்ல, அவர் உடனே சின்னம்மாவை (அவரின் புது மனைவியை) அனுப்பிவைத்தார். அதோடு, அம்மாவின் அப்பாவிற்கும் தகவல் சொல்லி அனுப்பினார் தாத்தா.

எல்லோரும் புறப்பட்டார்கள். அம்மாவும் சின்னம்மாவும் தான் வீட்டில்.
சின்னம்மாவைப்பற்றி நிச்சயம் சொல்லியே ஆகணும். பயங்கர இசைப் பிரியர். ஓயாமல் பாட்டு நடனம் கூத்து கும்மாளாம் தான். பாடிக்கொண்டேயிருப்பார். சின்னமாவால் அம்மாவிற்கு கலகலப்பாக கழிந்த்து பொழுது. இருவரும் சேர்ந்தே வேலைகளைச்செய்தனர். இருப்பினும் சின்னம்மா அம்மாவிற்கு ஒரு வேலையையும் கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் அவரே செய்து முடித்தார்.

மறுநாள் 19ஆம் தேதி நவம்பர்

தாத்தா (அம்மாவின் தந்தை) வந்தார், அம்மாவை அழைத்துச்செல்ல. அப்போது என் அக்காவிற்கு வயது ஒன்று, ஓடி தாத்தாவைக்கட்டிக்கொண்டாள். சமைத்து சாப்பிட்டுவிட்டு சின்னம்மாவிடம் வீட்டுப்பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, சில முக்கிய விவரங்களையெல்லாம் சொல்லிக்கொடுத்து விட்டு, விடை பெற்றார் அம்மா.

20 ஆம் தேதி நவம்பர்.
அம்மா தாய் வீட்டில். மஹாராணி போல். ஒரு வேலையில்லை. நல்ல ஓய்வு, நல்ல சாப்பாடு உற்சாகமாக இருந்தார் அம்மா. இசை கேட்டுக்கொண்டு சோபாவில் படுத்திருந்தார். வானொலியில் தோள் கண்டேன் தோளே கண்டேன், தோளில் இரு கிளிகள் கண்டேன்’’ என்ற பி.பி ஸ்ரீநிவாஸ் பாடல் ஒலியேறிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அம்மாவிற்கு நிஜமாகவே பிரசவ வலி வந்தது. துடித்தார். அப்போது அப்பாவும் பக்கத்தில் தான் இருந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். இருந்த போதிலும், நான் மறுநாள் நவம்பர் 21ஆம் தேதி காலையில்தான் பிறந்தேன்.

(நேரம், வருடமெல்லாம் வேண்டாம்.. அதை வைத்து சூனியம் செய்ய நிறையபேர் காத்திருப்பதால், அதை இங்கு சொல்ல வேண்டாமென முடிவு செய்துள்ளேன்.)

மேலே குறிப்பிட்ட ஃப்ளஷ் பேக் கதையை இதுவரையில் யாரும் எனக்குச் சொன்னதில்லை..!!!!
அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது, எல்லாவற்றையும் கேட்டல் மூலம் நானே உணர்ந்துகொண்டது. அதனால்தான் குறிப்பிட்ட அந்த சின்னம்மா மீது எனக்கு பாசம் அதிகம், இன்னமும்! மேலும் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது நான் கேட்ட அந்தப்பாடல் இன்னமும் எனக்குப்பிடித்த பாடல்... இப்போதுகூட நான் முணுமுணுக்கும் பாடல் தோள் கண்டேன் தோளே கண்டேன், தோளில் இரு கிளிகள் கண்டேன்...........!  .