வெள்ளி, மார்ச் 30, 2012

காதல் சுவாரிஸ்யங்கள்

நமது வாழ்வு சரியான தடத்தில் சென்றுகொண்டிருப்பதைப் போல் தான் நமக்குத்தோன்றும். ஆனாலும் சில வேளைகளின், சில இடங்களில் திடீரென தடம் புரளும். நாம் செய்துக்கொண்டிருக்கும் காரியத்தில் எதோ கோளாறு நிகழ்ந்திருக்கின்றதென்று, சில நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும்.

 வாழ்வின் சுவாரிஸ்யங்கள் - பருவம் சார்ந்ததாகவும், அறிவின் முதிர்ச்சி சார்ந்ததாகவும், சேர்கிற சுற்றங்கள் சார்ந்ததாகவும், நம்முடைய பக்குவம் சார்ந்ததாகவும், சில கசப்பான அனுபவங்கள் சார்ந்ததாகவும், பெறப்படுகிற நன்மை தீமை சார்ந்ததாகவும், பல வேளைகளில் நம்முடைய சொந்த ஈடுபாடு, அதையொட்டி நம் செயல்பாட்டின் நடவடிக்கைகள் சார்ந்ததாகவும் இருக்கும் பட்சத்தில், சுவாரிஸ்யங்கள் தொடர்வதில் இடையூறுகள் இருப்பதை கண்டுக்கொள்ளலாம்

இந்த சுவாரிஸ்ய உணர்வு கொஞ்ச காலம் நீடிக்கும், இது நீடிக்கும் வரை, நாம் எதிர்க்கொள்ளும் சில நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து, சாதக பாதக, ஏற்ற இறக்கங்களை சீர் தூக்கிப்பார்க்கதுவங்கி, அதே போன்ற நிகழ்வுகள் வேறு எங்கேனும் யாருக்கேனும்  நிகழும் போது,  நமக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை அவைகளோடு ஒப்பீடு செய்து,  இதற்கு இதுவே காரணம், இதற்கு இதுவே தீர்ப்பு, இதனால் தான் இது நடைபெற்றது, இப்படியில்லாமல் இருந்திருந்தால் இது வர வாய்ப்பில்லை என்றெல்லாம் உரை நிகழ்த்துவோம்.

கொஞ்ச காலம் சென்றவுடன்,  மறுபடியும் வாழ்வு அதே வட்டத்திற்குள் உருலும். முன்பு இருந்த அதே இடத்திற்கே திரும்பவும் வந்துவிடுவோம். இப்போது பிடிப்பு வேறு வடிவில் சுழல ஆரம்பிக்கும். ஆனாலும் அதுவும் அதே வட்டத்திற்குள்.! ஏற்கனவே செய்த தவற்றை மீண்டும் படு சுவாரிஸ்யமாகச் செய்துக்கொண்டிருப்போம்.

இந்த இடத்தில், தவறு என்று சொல்வது, கொஞ்சம் அபத்தமாகப் படலாம். செய்வது தவறா இல்லையா என்பது, செய்தபின்பு வரும் வினைப் பயன்களைப் பொருத்தே அது வடிவமைக்கப்படுகிறது. சில நிகழ்வுகள் தவறாகப் படுவதற்கு எது மூலக்காரணமாக இருக்கிறதென்றால், நம்மை உறுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து செய்து வருவதுவே. மனசாட்சியின் குரல்  பலவாறாக உணர்த்திக்கொகொண்டே இருந்தாலும், நியாயப்படுத்தி, நாம்,  நமது சிந்தனைகளை, சில சுவாரிஸ்ய ஒப்பீடுகளால் நிரப்பிக்கொண்டு, மனசாட்சியின் குரலுக்கே டிம்மிக்கி கொடுத்துவிடுவோம்.

சரி, நியாயப்படுத்துதல், சுவாரிஸ்ய ஒப்பீடுகள் என்பது, எதில் அதிகமாக இருக்குமென்று ஆராய்ந்தோமென்றால், காதலில், கள்ள உறவுகளின், உடலின்பத்தில், அருவருக்கும் இச்சைகளில்.

மனித உறவுகளை எடுத்துக்கொள்வோமே.! உறவுகள் என்றால்..!! காதலை எடுத்துக்கொள்வோமே.! காலகாலமாக, காதல் நம் சமூகத்தில் கெட்டவார்த்தையாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. சில சமூக சீர்த்திருத்தவாதிகளால் காதல் என்கிற உணர்வு கொச்சைப் படுத்தப்பட்டுவிட்டது. காதல் வயப்படுபவர்கள், எங்கோ ஒரு மூளையில், அறை எடுத்து தமது இச்சைகளை தீர்த்துக் கொள்ளத்துடித்துக் கொண்டிருக்கும் இரண்டு உயிர்களின் தீவிர முயற்சி என்றே முடிவு கட்டப்பட்டுவிட்டது. இதற்காக ஆதாரங்களும் ஆய்வுகளும் எழுத்து வடிவில் அரிதியிட்டுக் கூறி விட்டதால்தான், காதலுக்கு இந்த அவச்சொல்.

புலனாசைகளில் காமம் சிற்றின்பமாகக் கருதப்பட்டாலும், காதல் எப்போதுமே பேரின்பமாச்சே! இதை பக்தி இலக்கியங்களும்,  ஆன்மிக சிந்தனைகளும் பறைசாற்றுகின்றனவே.  பிறகு ஏன் அதை சிற்றின்பச் சிந்தனையோடு கலந்து கொச்சைப் படுததுகிறார்கள்.! எல்லா காதலும் படுக்கையறையில் தான்  முடியுமென்று கருத்துரைப்பது அபத்தமில்லையா!?

சரி, அது ஒரு புறமிருக்கட்டும், நாம் இங்கே சொல்லவந்தது, வாழ்வின் சுவாரிஸ்ய இழப்பிற்கு, சில அநியாயங்கள் நியாயப்படுத்தப் படுவதுவே முக்கிய காரணமாகக் கொள்ளலாம். நல்ல சிநேகங்கள் பாழ்படுவதற்கு, மனித நட்பு நேச உறவில் ஒரு சீரான ஒழுங்கு முறை கடைபிடிக்காமின்மையே காரணமாகிறது.

காதல் என்றால் என்னவென்று இதுவரையில் உணர்ந்திராத ஒருவருக்கு, காதல் என்கிற உணர்வு ஊட்டப்பட்டு உணர்த்தப்படுகிறபோது, அது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் அபரீதமான மாற்றங்களைக் கொண்டுவந்துவிடுகிறது. இந்த தீடீர் உணர்வு தாக்குதலுக்கு உள்ளானவர்கள், பல மாதிரியான சீர்கேடுகளை நிகழ்த்துவதற்குக் கூட தயாராகிவிடுகின்றனர். சீர்கேடுகள் என்பது மனசாட்சியின் குரல்வலையை நெறிப்பது.  வாழ்வியல் தேடல்களை சீர் தூக்கிப்பார்க்கின்ற ஆற்றலை வலுவிழக்கச் செய்கிற இந்த உணர்வால் பலருக்கு அவஸ்தையே.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, திருமணமானவர்களாக இருந்தாலும் சரி, ஆகாதவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுபோது அவர்களின் உச்சபட்ச நிலையாகப்பட்டது, உடல் சுகத்தைத் தேட ஆரம்பிக்கிறது. அந்த சுகம் அனுபவிக்கக் கிடைத்தாலேயொழிய இதற்கு விடிவு காலமே இல்லை என்கிற பரிதாமான சூழலுக்குத்தள்ளப் பட்டுவிடுகின்றனர்.  அதன் பிறகே ஆரம்பமாகிறது, சூழ்ச்சியும் வஞ்சகமும், குழிபறிக்கும் நிலையும்.

இந்த வஞ்சக சூழ்ச்சியில் செய்யப்படுகிற துரோகங்களும் அக்கிரமங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. நன்றாகப் போயிக்கொண்டிருந்த அனைத்தும் தவறான பார்வையில் பார்க்கப்பட்டு விடுகிறது. நல்ல கணவன் மனைவி உறவு வேம்பாகக் கசக்க ஆரம்பிக்கிறது. நல்ல பெற்றோர்கள் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டு விடுகின்றனர். நல்ல சுற்றங்கள் உறவுகள் நட்புகள் என எல்லோரையும் நயவஞ்சகர்களாக பார்க்கத்துவங்கி விடுகின்றனர். காதல் என்கிற வட்டத்தில் இருப்பவரைத்தவிர வேறு யாரையும் நேசிப்பதில்லை. நல்ல குடும்பங்கள் சீரழிந்து போயிருக்கின்றன. சிலர் கொலைகாரர்களாகவும் மாறி கம்பி எண்ணிக்கொண்டிருப்பது உண்மையே.

மிக அண்மையில் ஒரு பத்திரிக்கைச் செய்தியை படிக்க நேர்ந்து அதிர்ந்துப்போனேன். தமது காதலியை வேறொருவனும் காதலிக்கிறான் என்பதற்காக அவனை கொலை செய்துவிடுகிறான் ஒரு மாணவன். தாயின் கதறல், என் மகன் ரொம்ப நல்ல பிள்ளை.. அமைதியானவன், அவன் செய்திருக்கமாட்டான், அவனை ஏன் பிடித்துப்போகிறீர்கள் என்று.! அந்த குடும்பம் அவனை நல்லவனாக வளர்த்திருக்கின்றதுதான், ஆனால் எது இந்த கதிக்கு ஆளாக்கியது என்றால்!! அது காதல் அல்ல, காதல் என்று வேடமிட்டுக்கொண்டிருக்கிற காமமே.

இதுபோன்ற அபத்தங்கள் நிகழும்போது, பெரும்பாலானோர்களின்  பார்வையில் காதல் என்கிற உணர்வு அசிங்கப் படுத்தப்படுகிறது, அருவருப்பாக்கப்படுகிறது, புறக்கணிக்கபடுகிறது, வெறுக்கப்படுகிறது. காதல்தான் இங்கு பலிகடாவாகிறது. இன்னமும் நம்மவர்கள் காதலை எதிர்ப்பதற்கு இதுவே காரணம்.

காதல் ஒரு தெய்வீக உணர்வு. காதல் வயப்பட்டவர்கள் தெய்வத்தன்மை நிறைந்தவர்கள். காதல் நுழையும் மனது அன்பின் வடிவமாக, சாந்த சொரூபமாக உருமாறுகிறது. சக்தி ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒளிவட்டம் பிரகாசமாய், அழகாய் மாறுகிறார்கள். மனிதர்களை வளர உயர வைக்கிறது காதல். பால் வேறுபாடுகள் கலைந்து ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் மதித்து   உயர்ந்த நிலைக்கு மனிதர்களை மாற்றக்ககூடிய ஆற்றல் காதலுக்கு உண்டு.

ஆனால் இந்த நிலையைக் கொடுப்பதற்கும் பெறுவதற்கும் நாம் தான் தயாராக இல்லை என்பதுவே இங்கு நிதர்சனம். நமக்கு ஆசைகள் அதிகம். பின்னிக்கிடக்கின்றோம் ஆசையென்னும் வலையில். எல்லாமே விரைவாக தேவைப்படுகிறது நமக்கு. எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கின்றோம், எதையோ தேடி.

ஒரு வாசகம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால், எங்கு படித்தேன் என்பது சரியாக நினைவில்லை.

`எனக்கு ஒரு பெண்ணின் உடம்பு மட்டும் வேண்டும், காதலிக்கப்போகிறேன்’

இப்படியும் யோசிப்பவர்கள் இருப்பதால் தான், காதல் என்றாலே அலறுகிறார்கள் பலர்.

அவசர யுகத்தில் காதலும் ஒரு ‘ஃபாஸ்ட் ஃபூட்’
எல்லாமே `வேஸ்ட்’


சில சிதறல்கள்

பரப்ரப்பு

நேரமாகும் போதெல்லாம்
நாற்காலியை விட்டு எழுந்துவிடுகிறேன்
கால தாமததிற்கு
கொடுக்கும்
மரியாதையாய்..

எழுத்து

என் எழுத்து
எனக்கே பிடிக்காமல்
போகிறது.
பிறரின் எழுத்து
அதிகம் பிடித்து விடுவதால்..

கவிதை

ஓய்வுப்பொழுதுகளில்
சாவகாசமாக
வருவதல்ல
அவை பரபரப்பு வேளையில்
உடனே உதிர்பவை

வேடம்

மற்றவர்களுக்கா தைக்கப்பட்ட
ஆடைகளில்
நான் நுழைந்துக்கொள்ளும் போது
எனக்கான கோமாளி
வேடமும்
தயாராகிவிடுகிறது

மூச்சு

உளைச்சலின் போது
வேகமாக ஊதுகிறேன்
யாரை `அணைக்க’
என்பதுதான் தெரியவில்லை..

காதல்

உன்னிடம் கேட்பதற்கு
என்னிடம் ஒரு கேள்வி உண்டு
என்ன பதில் வரும் என்பதை
நானே யூகித்து விட்டதால்
கேள்வியை கிடப்பில் போட்டுவிட்டேன்.
பதில் இதுதான்
``சத்தியமா இல்லை!’’