செவ்வாய், ஜனவரி 21, 2014

நான்

உன் எழுத்தில் இருக்கின்ற `நான்’னில் எனக்கு உடன்பாடில்லை. 
வாசகியாகிய நான், அதில் தெரிகிற`நான்’ஐ வாசிக்கின்றபோது, சோர்ந்துபோகிறேன். 
உன் `நான்’ என்னைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவனைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவளைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவர்களைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ உயர்திணை மற்றும் அக்றிணையைச் சொன்னாலும் நான் பொறுத்துக்கொள்வேன்.
முழுக்க முழுக்க உன் `நான்’னில் நீயே மறைந்திருப்பதை நான் எப்படி ஏற்றுக்கொள்வது.?
உனது `நான்’ எதையும் பறைசாற்றாமல், `நான்..நான்’ என நீயே உன்னை வடித்துக்கொண்டிருப்பதால், நான் அதில் எதைக் கற்க.?
உனது `நான்’ சொல்லவரும் செய்திதான் என்ன?
உனது `நான்’னில் நான் என்ன தெளிவு கொள்ளமுடியும்.?
நீ கேட்கலாம், நீயும் எழுதுகிறாய், உனது `நான்’ என்ன சொல்லவருகிறது?
எனது `நான்’னில் நான் மட்டும் இருக்கமாட்டேன். நாசுக்காக நான் சொல்லும் `நான்’ நான் அல்ல. நீ.
நல்ல `நான்’ நீரோடைபோல், செல்கிற வழியெங்கும் பயிர்களைச் செழிக்கச்செய்யலாம்.
ஆனால், உனது நான்’னில் நீ மட்டுமே தெரிகிறாய்.
எதற்கு இந்த `நான்’...
விடு விடு..
வாசிக்கப்படுவாய்...
வாசகியாய் வேண்டுகிறேன்
நான்..