செவ்வாய், டிசம்பர் 10, 2013

படைப்பாளி தண்டிக்கப்படலாகாது..

நம் நாடு பத்திரிகை ஆசிரியர் வித்தியாசாகருக்கு

இந்தக் கடித்ததை எந்தப் பத்திரிகை ஆசிரியருக்கும் கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு வரவில்லை. எழுதினால் உங்களுக்குத்தான் எழுத வேண்டும் என்கிற சிந்தனையில் உதித்த கடிதம் இது.

இளய தலைமுறை எழுத்தாளவர்க்கத்தினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும், திகழ்ந்து வரும் உங்களைப் பற்றி நன்கு அறிந்த வாசக எழுத்தாளர் என்கிற முறையில் இதை உங்களிடம் உரிமையுடன் பகிர்வதில் பேருவகை கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக, தமிழ் பத்திரிகைகளை அலங்கரித்த வல்லினத்தின் சிறுகதை ஒன்றின் கண்டன எழுத்துகளை நீங்களும் அறிவீர்கள். கதையில் என்ன உள்ளது என்கிற விலாவரியான விளக்கங்களையெல்லாம் பலர் சொல்லியாகிவிட்டது. புதிதாக விமர்சனம் என்கிற பெயரில் அதை மீண்டும் நான் கிழித்துத்தொங்கப் போடுவதால் சீர்கெட்ட சமூதாயம் திருந்தி நல்லவர்களாக மாறிவிடப்போவதில்லை.

ஒரு சிந்தனை எழுத்து வடிவம் பெறுகிறபோது அது வாசிப்போரை கலவரமடையச்செய்யும் என்பதனைப் பல பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருந்ததை வாசித்துள்ளேன். இருப்பினும், அதை இன்று உணர்கிறேன்.

பாதிப்புகள் வரும் என்பதால் பாதித்த விஷயத்தைத் தொட்டு ஒரு படைப்பாளி எழுதக்கூடாதா என்ன? உண்மையைச் சொல்வதில்தான் ஓர் படைப்பு வெற்றியடைய முடியும். உண்மைக்கு அரிதாரம் பூசி நாசுக்காகச் சொல்லாமல் அதை அப்படியே சொல்லிச்சென்றவிதம் பலரை பதற்றங்கொள்ளவைத்துள்ளது. சமூதாயத்தில் நடக்காத அவலமா இது.? எங்கோ ஒரு மூளையில் எவனோ ஒருவன் செய்தான் என்பதனை இனி யாரும் இதுபோல் செய்துவிடக்கூடாது என்கிற சிந்தனையில் எழுதப்படுகிற பாடம்தான் இலக்கியப்பணி. இன்னமும் ஒழுக்கச்சீல பாடம் நடத்துவதற்கு இலக்கியத்துறை ஒன்றும் பாலர் பாடசாலையல்ல.  அந்த நோக்கோடு நாம் இந்தச் சிறுகதையை நோக்கியிருந்தோமென்றால் இவ்வளவு பதட்டநிலை வந்திருக்க வாய்பில்லை.  

இந்த எழுத்துப்பாணி தமிழ்நாட்டு பிரபல எழுத்தாளர்களின் பாணி. அந்த பாணியை இலக்கியத்தில் குறைந்த அனுபவமுள்ள ஓர் இளைஞன் கையாள்கிறபோது இதுபோன்ற இக்கட்டான சூழல் வருவது சகஜமே. வாசகர்களை விடுங்கள். பத்திரிகை ஆசிரியர்கள் என்கிற முறையில் பரந்த வாசிப்பு அனுபவம் இருக்கின்ற பட்சத்தில், இதுபோன்ற படைப்புகள் உலக அளவில் ஆங்கிலம், தமிழ், மலாய் என பல மொழிகளில் அதிக அளவில் வந்துள்ளதை உணராமல், உலகத்தில் யாருமே இப்படிச்சொல்லவில்லை என்கிற ரீதியில் தனிநபர் தாக்குதல் நடத்துவது சரியா? இந்தச் சமூதாயத்தின் பார்வை எந்த அளவிற்கு கேவலமாக உள்ளது பார்த்தீர்களா?

நான் எழுதினேன். எனது சிந்தனை சரியில்லை. எனக்கு எழுதுவதற்கு தடை என்று எதாவதொரு சட்டதிட்டங்களைக் கொண்டுவாருங்களேன், அதை விடுத்து வேலை இடத்தில் வேட்டு வைக்கப்பட்டு, அதையும் கருத்தில் கொண்டு ஒரு நிறுவனம் அவனின் வேலையைப் பறிக்கின்ற பணியை செம்மையாகச் செய்துள்ளார்களே.., ஒரு இலக்கியப் படைப்பை இலக்கியப்படைப்பாகவே விமர்சித்து கருத்து மோதல்களைச் செய்வதைவிடுத்து, அதை எழுதியவருக்கு வேலை போகின்ற அளவிற்காக செயல்படுவது.!

ஒரு இலக்கியப் படைப்பாகப்பட்டது களிமண் போன்றது. எழுதுகிறவர் என்ன சொல்லி எந்த சிந்தனையில் எழுதினாலும் வாசகன் என்பவன் அதை நல்ல நோக்கோடு நல்ல சிந்தனையோடு வாசித்துப் பழகவேண்டும். சிலவேளைகளில் படைப்பில் சொல்லப்பட்ட விஷயம் நம் வாழ்வோடு எப்படி பின்னிப்பிணைந்துள்ளது என்று வாசகனாகப்பட்டவன் யோசிக்கவேண்டும். சினிமா பார்க்கின்றோம், நல்லதை ஏற்போம் கெட்டதை விட்டுவிடுவோம் என்கிற ரீதியில்தானே திரையறங்குகளிலோ அல்லது தொலைக்காட்சியின் முன்னிலையிலோ அமர்கிறோம். குலுக்கல் நடனமோ அல்லது முதலிரவு காட்சிகளோ வருகின்றபோது கண்களையா மூடிக்கொள்கிறோம்.!? சரி சினிமாவை விடுங்கள், பத்திரிகைகளில் வரும் அந்தரங்கம் என்கிற கேள்விபதில் அங்கத்தில் (எல்லா பத்திரிகைகளிலும் பெரும்பாலும் இந்த அங்கம் இருக்கும்) சில கேள்விகளை சென்சார் செய்கிறேன் என்று சொல்லிய பின்பும் வரும் சில கிளுகிளுப்பு விஷயங்கள், அப்போது மட்டும் எழுத்துகளையும் கருத்துகளையும் மனோத்தத்துவ ரீதியில் அணுகவேண்டும் என்று வாசனுக்கு அறிவிப்பு செய்கின்ற பத்திரிகை ஆசிரியர்கள் தனி ஒரு எழுத்தாளரின் படைப்புகளை மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமாக ஆட்களைத் திரட்டி விமர்சித்து கொண்டிருக்கிறது என்கிற வினாவிற்குத்தான் பதில் இல்லை.

நல்ல விஷயங்கள் எவ்வளவோ எழுதியுள்ளோம். ஒருவர் வாசித்திருக்கமாட்டார். பத்திரிகை ஆரிசிரியர் என்கிற முறையில் உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். விமர்சனம் என்று வருகிறபோது மட்டும், வருகிறவர்கள் போகிறவருகிறவர்கள், அறவே இலக்கிய வாசிப்பில் பரிச்சயம் இல்லாதவர்கள் கூட கருத்து சொல்கிறேன் பேர்வழி என புழுதிவாரிக்கொண்டிருப்பது இந்த சமூதாயத்தின் சாபக்கேடு.
`நீ எத்தனை முறை நல்ல எழுத்துகளை நல்லமுறையில் வாசித்து விமர்சித்துள்ளாய்? இப்போது மட்டும் மோசமான எழுத்து என்று உன் கருத்தைக் கூறவந்துவிட்டாய்.? என்று பத்திரிகை ஆசிரியர்களே அந்த கடிதத்தின் கீழ் சூடுகொடுப்பதைப்போல் ஓரிருவரிகள் எழுதி, கருத்து எழுதியவரை கேள்விகேட்டால்தான், அறவே இலக்கிய வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் கருத்துச்சொல்ல வந்துள்ளேன், என்று, இலக்கிய வட்டத்திற்குள் மூக்கை நுழைக்க முன்வரமாட்டார்கள். எல்லோரும் இஷடம்போல் கருத்து கூறுவதால்தான் நமது சமூகத்தில் நல்ல படைப்புகள் இன்னமும் வரவில்லை. இனியும் வராது. தி.ஜா எழுதிய `அம்மா வந்தாள்என்கிற நாவலை வாசித்தவர்கள், தாய்மை களங்கப்படுத்தப்பட்டு விட்டது என்கிற வெட்டி வியாக்கியானமெல்லாம் செய்துகொண்டிருக்கமாட்டார்கள்.  

எழுத்தாளன் மனப்பிறழ்வு நிலையில் படைப்புகளைக் கொடுப்பான். வாசகன் தான் அதைச் சீர்தூக்கிப்பார்த்து வாசித்து சல்லடை செய்துகொள்ளல் வேண்டும்.

எழுத்தாளர்களுக்கு சமூதாயத்தின் மூலமாக எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு எழுத்தாளனை இவ்வளவு மோசமான நிலைக்குத்தள்ளுவதற்கு இந்தச் சமுதாயமும் பத்திரிகையும் துணைபோனதை நினைத்து மனம் வேதனைப்படுகிறது.
இலக்கியத்தால் வாழ்ந்தான் என்பதைவிட இலக்கியத்தால் வீழ்ந்தான் என்கிற சத்திரித்தை நம் நாட்டு வருங்கால இலக்கியம் சொல்லும்.

வானொலி தொலைக்காட்சிகளைப்பற்றிய விமர்சனங்கள் ஒன்று இரண்டல்ல, அப்போதெல்லாம் எந்த அறிவிப்பாளரும் பணி இடைநீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் வானொலிக்கே சம்பந்தமில்லாத ஓர் விஷயத்தால் அங்கே பணிபுரியும் அறிவிப்பாளருக்கு பணி இடைநீக்கம்.! காரணம் அவர் எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் இச்சமூகத்திற்கு இளக்காரம். பத்திரிகை ஆசிரியர்களே, உங்கள் கைகளில் செய்தி ஊடகம், இருப்பினும், இலக்கிய வளர்ச்சிக்கு உங்களின் பங்கும் அத்தியாவசிய ஒன்று. இலக்கியத்தின் நிலைமையைப் பார்த்தீர்களா? எழுத்தாளர்களின் நிலை பார்த்தீர்களா?

இலக்கியத்தில் எவ்வளவோ போராட்டங்கள் வந்திருப்பினும் சம்பந்தமேயில்லாமல் வேலை நீக்கம் ஏற்பட்டதாக இதுவரையிலும் கேள்விப்படவில்லை. அந்தப் படைப்பாளியின் வேலைக்கு பிரச்சனை வரவேண்டிய அளவிற்கு என்ன அவமானம் நிகழ்ந்துவிட்ட்தென்றுதான் இன்னமும் புரியாத புதிர். செவிசாய்க்கவேண்டிய விவரங்களுக்குப் பாராமுகமாக இருந்துவிட்டு, எங்கேயோ தேள்கொட்டினால் எங்கேயோ நெரிகட்டிக்கொள்ளும் என்பதைப்போல கேழ்விரகில் நெய்வடிகிறதென்று மதிகெட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவை நினைத்து நிலைகுலைந்துபோனேன்.  

இலக்கியம்போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.


ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் நல்ல படைப்புகளைக் கொடுக்கமுடியாது.


அதற்காக தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது, அதனால்தான் வல்லினத்தில் பிரசுரமாகியிருந்த அச்சிறுகதையை `அருமை வாழ்த்துகள்என எனது முதல் பின்னூட்டத்தைப் பதிவு செய்தேன்.


ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்குஅக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.


எல்லா எழுத்தாளர்களாலும்.. அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்


ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.


இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.

படைப்பு விமர்சனத்திற்கு உற்பட்டதுதான். இருப்பினும் படைப்பாளி தண்டிக்கப்படலாகாது.

10/12/2013 - நம் நாடு - பத்திரிகையில் வந்த எனது ஆதங்கக் கட்டுரை.
நன்றி திரு வித்யாசாகர். ஆசிரியர் நம் நாடு.  

படித்ததில் பிடித்தது - பாண்டியன் அன்பழகனின் கட்டுரை.

இன்று நம் நாடு நாளிதழில் தயாஜியின் சிறுகதை குறித்த எனது கண்ணோட்டம் வெளிவந்தது. நாளிதழ் வாசிக்காத நண்பர்களுக்காக அக்கட்டுரையை இங்கு பதிவேற்றம் செய்கிறேன். நன்றி: நம் நாடு.

கழிப்பறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ – தீர்ப்பு உங்கள் கையில்
அ.பாண்டியன்.

கடந்த மூன்று நாட்களும் மிகவும் முக்கியமான நாட்களாக உணர்கிறேன். எனக்கு மட்டும் அல்ல. மலேசிய இலக்கிய வாசகர்கள் பலருக்கும் இவை முக்கியமான நாட்கள்தான். காரணம் வல்லினத்தில் வெளிவந்த தாயாஜியின் சிறுகதை தான். ஒரு மலேசிய படைப்பாளி எழுதிய இலக்கிய படைப்பை முன்வைத்து பரவரலான கருத்தாடல்கள் இடம்பெருவது என்பது இந்நாட்டு இலக்கிய பரப்பில் அபூர்வமானது. வாசித்தோம் வாயை மூடிக்கொண்டிருந்தோம் என்பதே இங்குள்ள இலக்கிய வெளிப்பாடாக இருக்கும் போது பலர் இக்கதையை பற்றி (நல்ல மாதிரியோ வேறு மாதிரியோ) எழுதிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று நாளிதழ்களிலும் அறிக்கைகள் வந்துள்ளதால் இச்சிறுகதை கூடிய விரைவில் ‘வெள்ளிவிழா’ கொண்டாடக் கூடும். அந்த அபூர்வத்தை நிகழ்த்தி காட்டிய அளவில் ‘கழிப்பறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ (க.ப.வ) வை மனதார பாரட்டலாம். அதோடு மலேசிய வாசகர்களை ஒரு வாரத்திற்கேனும் இலக்கியம் குறித்த தீவிர கலந்துரையாடலுக்குள் தள்ளிவிட்ட வல்லினத்திற்கும் நன்றி பாராட்டத்தான் வேண்டும்

இச்சிறுகதை குறித்த என் தனிப்பட்ட கருத்துகள் சில உள்ளன. ஆனால் அதற்கு முன் க.ப.வ மீது பல்வேறு சாடல்களை தொடுப்பவர்களின் கருத்தை மதித்து மீள்பார்வை செய்ய வேண்டியது அவசியம். அவர்களின் இலக்கிய ரசனை, எதிர்ப்பார்ப்பு, அவர்கள் வடித்துக்கொண்ட இலக்கிய நோக்கம் போன்ற பல்வேறு கூறுகளை இச்சிறுகதை களைத்துப் போட்டு விட்டது என்றே நான் நினைக்கிறேன். தமிழர் வாழ்வியல், பண்பாடு, ஆன்மீகம் போன்ற பல்வேறு விழுமியங்களின் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக உணரும் பலரின் ஆவேச குரலை நான் மதிக்கிறேன். அது அவர்களின் உரிமை. மலேசிய சூழலுக்கு இப்படிப்பட்ட கதை தேவையா இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு. நான் அணிந்திருக்கும் ஆடையை திடீரென உருவி என்னை கோவணாண்டியாக்கி விட்டு, பண்டை தமிழர் கோவணம் உடுத்தி வாழ்ந்தவர்களாவர் ஆகவே நான் அதை சினம் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூற முடியாது. நான் நிச்சயம் கோபப்படுவேன். அது தார்மீக கோபம்.

அந்த அன்பர்களுக்கு, வல்லினம் ஆசிரியர் என்ற நிலையில் நவீன் பொறுப்புடன் கொடுத்த நீண்ட விளக்கம் ஓரளவேணும் புரிதலை கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அந்த விளக்கமும் அவர்களுக்கு ஒம்பாமல் போகலாம். அதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் ஒரு இலக்கிய பிரதியின் தரத்தையும் தேவையையும் முடிவு செய்யக்கூடியவர்கள் உண்மையான வாசகர்கள்தான். வெளிச் சக்திகளின் தூண்டுதல் காரணமாக ஒரு வாசகன் தன் மனதுக்கு ஒவ்வாத ஒன்றை இலக்கியமாக அங்கீகரிக்க மாட்டான்.

அடுத்து இன்னொரு சாரார் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்று தங்கள் பழிவாங்கும் அரசியலை நிறைவேற்ற இச்சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. வல்லினத்தில் வந்த ஒரு சிறுகதை சர்ச்சைக்குள்ளாவதை காரணம் காட்டி இதுநாள் வரை வல்லினம் முன்னெடுத்த எல்லா போராட்டங்களையும் சிறுமைபடுத்தி ஒரு நாளிதழில் செய்தி போடும் ‘கோழை’ தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு பொதுவான போராட்டம் நடந்து கொண்டிருந்த போது வாயை மூடிக் கொண்டு யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன; நமக்கு எல்லாரும் வேண்டும், என்று இருந்தவர்கள் இப்போது வல்லினத்தின் யோக்கியதையை பதம் பார்ப்பது கீழ்த்தரமான அரசியல் அன்றி வேறில்லை. நீண்ட காலமாக வல்லினத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டிருந்த பலரின் குள்ளநரித்தனம் இப்போது வெளிப்படுவது ஆச்சரியம் இல்லை. அவர்களுக்கு இக்கதை குறித்த எந்த விளக்கமும் தேவை இல்லை. அவர்களிடம் நம் சொல் எடுபடாது. அதைவிட அவர்களுக்கு இலக்கியம் பற்றியோ சமுதாயம் பற்றியோ எந்த வித உண்மை அக்கரையும் இல்லை. அவர்களின் நோக்கம் வல்லினத்தையும் அதன் குழுவினரையும் சமுதாய அசிங்கங்களாக காட்டி தங்கள் அசிங்கங்களை மறைத்துக் கொள்வது மட்டும்தான். ஆகவே அவர்களின் முயற்சிகளுக்கு அவர்களிடம் ‘அப்படியே செய்க!’ என்று மட்டும்தான் கூற முடியும்.

சரி இனி க.ப.வ குறித்த எனது கருத்துகள். முதலாவதாக இது ஒரு பின்நவீனத்துவ கதை அன்று. நோன் லீனியராக கதை சொல்லும் உத்தியும் இல்லை. ஆக இது வழக்கமான நேர்கோட்டு எதார்த்தவியல் கதை. ஆனால் கதையில் களம் இல்லை. கதை முழுதும் ஓரங்கவுரை புலம்பலாக அமைந்துள்ளது. கதை எடுத்துக் கொண்ட கருவும் மிகவும் பழமையானது. செயலுக்கு ஏற்ற பலாபலன்களே நமக்கு கிட்டும் என்பதையே இக்கதையும் கூறுகிறது. அதாவது இருவிணை தத்துவத்தையே இக்கதையும் வழிமொழிகிறது.
அடுத்து, இக்கதை காமத்தை வலியுறுத்துகிறது என்று சொல்வது அடிப்படையிலேயே பிழையான கருத்து. உண்மையில் இக்கதை காமத்திற்கு எதிரானது. காம உணர்வை அருவருப்பானதாக காட்டும் பழம்போக்கை மீறாத பழமைவாத கதை. காமத்தை மலத்தோடு ஒப்பிடும் ‘சமண மத’ கொள்கையை வலியுறுத்தும் இக்கதை ‘மலரினும் மெலியது காமம்’ என்ற தமிழ் சூழலை புறக்கணிக்கிறது என்பதே உண்மை. காம வலையில் சிக்குதலும் கழிப்பறையில் சிக்குதலும் ஒன்றே என்னும் போதனையையே இக்கதை செய்கிறது. எளிமையாக சொல்வதென்றால் புகழ் பெற்ற பழைய ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்பட பாணியை ஒத்த கதையே இச்சிறுகதை. அப்படத்தை இக்கதையின் ‘தெளிந்த’ முன்மாதிரியாக கூறலாம். காமத்தின் தூண்டுதலால் முறையற்று செயல்பட்டவன் இறுதியில் “கொண்டவளைத் துறந்தேன்; கண்டவள் பின் சென்றேன்; இன்று கண்களையும் இழந்தேன்” என்று புலம்புவதன் நவீன விரிவாக்கமாகவே இக்கதை போக்கு உள்ளது. புலம்பலின் வெளிப்பாடே கழிப்பறையில் சிக்கியவனின் பேச்சும் செயலும். ஆக இது நிச்சயம் காமக் கதை அன்று.

இப்படி காமத்தை இழிவானதாக கூறும் இக்கதையை காமக் கதை என்று (தவறுதலாக) குற்றஞ்சாட்டி பலரும் கடுமையாக தாக்குவதன் காரணம் என்ன என்று சிந்திக்கும் போது, அதன் விவரிப்பு மொழியும் கதை சொல்லும் பாங்குமே காரணம் என்று நாம் கண்டடைய முடியும். அதை தொட்டே வேறு பல சிக்கல்களும் பண்பாட்டு விழுமியங்களை உரசிப்பார்க்கும் தன்மையும் தெரிகிறது

முதலாவதாக, கதையின் காட்சி விவரிப்புகள் மிக அதிகம். வாசகனின் கற்பனைக்கு வேலை வைக்காமல் படைப்பாளனே வலிந்து சொல்லுதல் தேவை இல்லாதது. சொல்லியும் சொல்லாமலும் செல்லவேண்டிய பகுதிகள் இக்கதையில் நிறைய இருந்தும் படைப்பாளி எல்லாவற்றையும் தானே சொல்ல முன்வந்தது முதல் தவறு. வாசகனுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் போக்கே இக்கதையில் குழப்பம் ஏற்பட காரணமாகிறது. உதாரணமாக கதைநாயகனின் பாலியல் மனப்பிறழ்வு தன் தாயின் மேல் காமம் கொள்ளச் செய்கிறது என்பதை வாசகர்களால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். தாய்மை புனிதமானது என்பது இக்கதையில் எந்த இடத்திலும் மீறப்படவில்லை. தன் மகனின் கண்ணில் விழுந்த தூசை பரிவுடன் நோக்கும் தாயின் அன்பே முதன்மையாகிறது. ஆனால் அதை மறக்கடிக்கும் படியாக நீலப்படம் குறித்த தெளிவான விவரிப்பு கதைக்கு சற்றும் தேவை இல்லாதது. இதை வெறும் ஆபாச திணிப்பு என்றுதான் வாசகர்கள் உணர்வார்கள்.

கதையின் பல்வேறு இடங்களில் கதையின் முக்கியத்துவத்தை சிதைக்கும் காட்சி விவரிப்புகளால் இக்கதை நிரம்பி இருக்கிறது. காட்சி விவரிப்புகள் கூடும் போது தேவையற்ற பாலியல் காட்சிகள் தவிர்க்க முடியாமல் போயிருப்பதை உணரமுடிகிறது
இறுதியாக, கதையின் முடிவும் கதை போக்கை சிதைத்து விடுகிறது. சிறு வயது முதல் பல்வேறு காம அவலங்களில் கழித்திருந்த ஒருவன் தன் இறுதி நாளில் (தன் செயலால்) மனம் வருந்தி அரற்றுவதாகவே கதையை தயாஜி வடிவமைத்து இருக்கிறார். அந்த அரற்றலின் உச்சம்தான் தன் இஷ்ட தெய்வம் காளியிடம் முறையிடுதல். காளியை தன் காதலியாக கதைநாயகன் நோக்குவது இந்து ஞான மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல. கடவுளை குருவாக, தந்தையாக, தாயாக, நண்பனாக, காதலி அல்லது காதலனாக நேசிக்கும் மாண்பை இந்து ஞானம் போதிக்கிறது. ஆகவே இக்கதைநாயகனின் போக்கு விந்தையானது அல்ல. ஆனால் காளியை காதலியாக கண்டவன் அவளுடன் ஐக்கியமாதலை முதன்மையாக கொள்வதை (சரணாகதி நிலையை) படைப்பாளரால் தெளிவாக கொடுக்க முடியவில்லை என்பதே என் கருத்து. மேலும் ஆரம்பம் முதல் தன் காமத்தை வெறுத்து இம்மை வாழ்வில் இருந்து விடுதலை வேண்டும் என்று புலம்பியவன் இறுதியில் காளியிடம் ‘காதலை உயர்த்திப்பிடி, காமத்தை விதைப்போம்’ என்று கூறுவது மிகப்பெரிய முரண். இந்த முரணே தெய்வ அவமதிப்பாக தோற்றம் தருகிறது. மொத்த கதையும் இவ்விடத்தில் தான் திசை மாறிப் போவதாக நான் கருதுகிறேன்.

ஆகவே தயாஜியின் க.ப.வ வை சாடுவதும் பாராட்டுவதும் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்ட நிலை. ஆனால் சாடுவதாக இருந்தாலும் பாராட்டுவதாக இருந்தாலும் – மற்றவர்கள் சொல்கிறார்களே என்று செயல்படாமல் - இக்கதையின் உட்கிடங்கை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். சரியான புரிதலின் வழி மட்டுமே சரியான தீர்ப்பை உங்களால் வழங்க முடியும். நன்றி.