வெள்ளி, ஜனவரி 27, 2012

தப்பித்துவிட்டோம்

யாருமே இல்லாத
தனி அறையில்
கத்திக் கத்தி
நமக்குப்பிடித்த பாடலை
நாம் பாடித் தொலைத்ததில்லையா?

தனிமையில்
கதவுகளையெல்லாம்
மூடிவிட்டு
மனபாரத்தை வெளியே கொட்டுவதற்கு
குறைகளையெல்லாம்
சொல்லிச் சொல்லி கதறிக் கதறி
அலங்கோலமாக அழுததில்லையா?


மேலும் கீழுமாய்
பட்டன் சரியாகப் போடப்படாமல்
சட்டையை
உள்ளே உள்ளதை வெளியேயும்
வெளியே உள்ளதை உள்ளேயும்
உடம்பில் மாட்டிக்கொண்டு
ஒரு காலில் ஒரு வித காலுறைகளோடும்
வெளியே கிளம்பி
தலைக் குனிந்ததில்லையா?

இடது கால் செருப்பில்
வலது காலையும்
வலது கால் செருப்பில்
இடது காலையும்
நுழைத்துக்கொண்டு
பாதிவழி சென்று
சுற்றும் முற்றும் பார்த்து
சரி செய்துக்கொண்டதில்லையா?


தலைகீழாக
புத்தகத்தையோ பத்திரிக்கையையோ
கையில் ஏந்திக்கொண்டு
படிப்பதைப்போன்ற பாவனையில்
எதோ ஒரு சிந்தனையில்
நீண்ட நேரம் மூழ்கி
திடுக்கென விழிப்பு நிலைக்கு
வந்துள்ளோம் தானே?

சொந்த மாகச் சிரித்து
தலையைச் சொறிந்துக்கொண்டு
அசடு வழிய
யோசித்ததில்லையா?

கோபத்தில்
கையில் கிடைத்ததை வீசி
சுக்கு நூறாக்கி உடைத்து
வேடிக்கைப் பார்த்ததில்லையா?

எங்கேயோ போக
எங்கேயோ செல்ல
எதோ ஒரு வழியில்
நுழைந்து..
கற்பனையிலே மிதந்து
இலக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் தானே?

கையில் பேனாவோடு
மேஜையில் காகிதத்தோடு
சுவரை வெரித்துப் பார்த்து
சுயநினைவுக்கு திரும்பியிருக்கோம் தானே?

யாரோ என நினைத்து
யார் யாருடனோ நலம் விசாரித்து
யாரென்று தெரியாமலேயே
இதுவரையில்...
யோசித்துக்கொண்டு தானே?

இல்லாததையெல்லாம்
இட்டுக்கட்டிக்கொண்டு
இன்னமும் நாம்....

நல்ல வேளை
மனநோயாளிகளின்
பட்டியலில் நாம் இல்லை
அதுவரையில்,
மற்றவர்களைக் கைக்காட்டுவோம்
பைத்தியமென்று.....










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக