வெள்ளி, ஜூன் 03, 2011

சைவம்



சைவம் என்பது சிவசம்பந்தமுடையது. தில சம்பந்தமுடையது தைலம். சிலா சம்பந்தமுடையது சைலம். அதுபோல் சிவ சம்பந்தமுடையது சைவம். எனவே சிவம் என்று உளதோ அன்றே சைவம் உளது. ஆகவே தொன்மையும் நன்மையும் படைத்தது. ஏனைய சமயங்கள் ஒவ்வொரு குருமார்களால் தோன்றியவை. அதனால் அந்த சமயங்கள் அந்தந்த குருமாரகளின் பெயர்களாலேயே அமைந்துள்ளன. சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது. இச்சமயத்தின் பெருமையை அநுபூதிமானாகிய தாயுமானவர அருளிச் செய்த தண்டமிழ் வாக்கால் அறிக.

"சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே"


எல்லா உயிர்களும் ஈசன் தங்கியிருக்கும் கோயில்களே ஆகும். இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கின்றான்.ஆகவே சைவ சமயத்தைக் கடைப்பிடிப்போர்கள் எனது யான் என்ற இரண்டையும் தள்ள வேண்டும். எவரும் யாரும் யான் எனக் கொள்ள வேண்டும். இது தான் எல்லா நூல்களின் முடிந்த முடிவு. ஆன்றோரின் அநுபவ உண்மை. இந்த அநுபவம் வாய்க்கப் பெறாதவர் வானுயர் கோலம் கொள்ளினும் தேனெனும் கலைகள் கற்பினும் பயனில்லை. இதனைப் பரம அநுபவ ஞானியான அருணகிரிநாதர் இரண்டு வரிகளில் உபதேசிக்கின்றார்.

எனதி யானும் வேறாக எவரும் யாதும் யானாகும்
இதய பாவனா தீதம் அருள் வாயே
யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகு புகும்.

எனத் திருவள்ளுவரும் திருவாய் மலர்ந்தருளுகின்றார். எனவே சைவசமயிகள், எனது யான் என்ற புறப்பற்றையும் அகப்பற்றையும் அறவே களைந்து, இறைவனைத் தன்னுள் கண்டு, எல்லாப் பொருள்களிலும் அப்பரமனைக் கண்டு, அது அதுவாய் ஒன்றுபட்டு நின்று, அவ்விறைபணியில் வழுவாது நின்று, மும்மலங்களும் நீங்க, இறைவன் செம்மலர் நிழலில் ஓங்கிப் பேரானந்தப் பெருவாழ்வில் திளைத்தல் வேண்டும்.

அவனே தானே யாகிய வந்நெறி ஏகனாகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே


என்று சிவஞானபோதம் 10 வது சூத்திரம் உபதேசிக்கின்றது. ஆகவே சைவ சமயம் அருமையும் எளிமையும் உடையது. இதில் உள்ள உண்மைகள் எல்லோரும் ஒப்ப முடிந்தது. முடிந்த முடிவு சைவ சித்தாந்தம் ஆகும்.

இப்புனித மனிதப் பிறவியெடுத்த நாம் அனைவரும் சைவ சமய நெறி நின்று ஈடேறும் வண்ணம், இச்சமய உண்மைகளை உபதேசித்த குரவரகள் நால்வர். தாவில் சராசரமெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் புரிந்தார் என்ற திருவாக்கின்படி சம்பந்தர் முதலிய நால்வர் சிவம் பெருக்க வந்தவரகள். அவர்கள் பாடித்தந்த தேவார திருவாசகங்களும் ஏனைய ஆன்றோர்கள் பா;டிய அருள் நூல்களும், ஆக பன்னிரு திருமுறைகள் தோத்திரங்கள். மெய்கண்டார் முதலிய நால்வர் நம்பொருட்டு உணர்த்தியருளிய சாத்திரங்கள் பதினான்கு. தோத்திரங்கள் 12. சாத்திரங்கள் 14. சைவ சமயிகள் இவற்றைப் பெற்றுப் பூசித்து வாசித்துப் பெருநலம் பெறவேண்டும். எங்கும் சிவத்தைக் காணவேண்டும். தவத்தைச் செய்ய வேண்டும். எம்மதத்தையும் பழிக்கக் கூடாது.




விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்.

என்பது அப்பர் திருவாக்கு. எச்சமயத்தினர் எத்தேவரை வணங்கினாலும் அத்தேவராக நின்று அருள் புரியும் முழுமுதற் பரம்பொருள் சிவமேயாகும்.

"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்".

என்பது சிவஞான சித்தியார். ஆதலால் அமைதியுள்ள மனதுடன் சைவ சமயிகள் வாழவேண்டும். சைவத்திற்கே உரிய பண்பு பணிவு.

தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயஞ் சாரும் ஊழ் பெறல் அரிது.

என்கின்றார் அருணந்தி தேவர். சிவமே பொருள். அவரைச் சேரும் நெறி அன்பே. நமக்குப் பகை பிறவியே. அருட் கண்ணாலே சிவத்தைக் கண்டு களிக்க வேண்டும்.

ஓதி நூல்கோடி யுணர்ந்து உணரார்கள்பாதி வெண்பாவி
ல் பகரக்கேள் -ஆதி
சிவமே பொருள் அதனைச் சேரும்நெறியன்பே பவமே பகை அருளாற் பார்.

நன்றி
வேணுகோபால்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக