ஞாயிறு, டிசம்பர் 18, 2011

மகள்

அவள்
குழந்தையாக இருக்கும் போது
அவ்வளவு அழகி!

பேசுவாள்
பேச்சுப்போட்டிகளுக்குப்
போவதைப்போல்

சுவரெல்லாம் ஓவியங்கள்
வீடெல்லாம் பொம்மைகள்
கலர் பென்சில்கள்
காகிதங்கள்..

அழகாய் பாடுவாள்
துள்ளிக் குதிப்பாள்
இசை கேட்டு நடனமாடுவாள்
சுட்டியாய்..சிட்டாய்
தனியாளாய்
அவள் அறையில்..

எனக்கு
ஓய்வே இல்லை
இங்கும் வேலை
அங்கும் வேலை

சரியாகக் கூட
அவளைக் கொஞ்சியதில்லை
மழலைச்சொல்லை ரசித்ததில்லை
அந்தப்பெரிய கன்னங்களை
கிள்ளி விளையாடியதில்லை

தத்தித்தவழும் நடையழகில்
கிறங்கடித்தும் கண்டுக்கொள்ளாமல்
துருத்துரு பார்வையை
பார்க்கக்கூட நேரமில்லாத
பரபரப்புச்சூழலில்...
நாளைய விடியல் பொழுதிற்கு இன்றே
இயந்திரமாய்..

இரவிலும்
கதை சொல்லவில்லை
பாப்பா பாட்டுப்பாடவில்லை
தட்டி தூங்கவைக்கவில்லை

நாளை பள்ளி
அம்மாவிற்கு வேலை
தூங்கு பேசாமல்
இதுதான் அவளுக்கு நான் பாடிய
தாலாட்டு..

ஏட்டிக்குப் போட்டியாய்
பாடாய், போராட்டமாய்
என் உணர்வே எனக்கு மேலாய்

அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு..
அழுவாள், அடம்பிடிப்பாள்
அடிப்பேன்
கத்துவேன்
மிரட்டுவேன்
பிரம்பெடுப்பேன்
பெண் ;ஹிட்லராய்’

பட்ட அவமானக்கதைகளைச் சொல்வேன்
பாட்டி வடைசுட்ட கதை போல் தினமும்
அவளை திசை திருப்ப


பொழுது விடிந்தால்
புத்தகப்பை ஒரு கையில்
டிபன் டப்பா ஒரு கையில்
எனது, ’ஹென் பேஃக்’ ஒரு கையில்
ஒரு காலில் சப்பாத்து
ஒரு காலில் சொஃக்ஸ்
வாயில் நீர் வடிய
தூங்கியும் தூங்காமலும்
எழுந்தும் எழாமலும்
தோளில் போட்டுக்கொண்டு
ஆயாவிடம்,
அவளும் இயந்திரமாகவே....


நல்ல ஆசிரியர்கள் தேடி
நல்ல வகுப்புகளைத்தேடி
நல்ல உணவுகளைத்தேடி
அரோக்கியத்தைத்தேடி
இன்னபிற நல்லனவற்றையெல்லாம் தேடித்தேடி
மழையிலும் வெயிலிலும்
இரவு பகல் பாராமல்

காலையில் படிப்பு
மாலையில் படிப்பு
இரவில் படிப்பு
வார இறுதியில்
வகுப்பு
படிப்பு
படிப்பு
படிப்பு

அவளுக்கும் நேரமில்லை
எனக்கும் நேரமில்லை

அயர்வு சோர்வு
படிப்பில் அவள் மூழ்க
எனக்கும் தொந்தரவுகள் குறைய
என் பசி, என் உறக்கம்,
என நானும் சுயநலமாய்..

கொஞ்சம் கூட தியாகமே செய்யாமல்
அவளின் உயர்வில்
தாய் ஸ்தானத்தில்
பக்கத்தில் நிற்கக் கூட
அருகதையற்றவளாய் நான்...

எல்லாப்புகழும் அவளுக்கே.!

இருக்கட்டுமே..
விட்ட குறை தொட்டகுறையாக...

”வாடி என் செல்லமே
இன்றாவது ஒரு முத்தம் தரவா..”

மரணம் வருவதற்குள்
ஈகோவை தூரவிட்டு கேட்பேன் இதை;
ஒரு நாள் நிச்சயமாக.

2 கருத்துகள்: