எனக்கு எந்த வருத்தமும் இல்லை
எங்களின் ஊரில், எடிட்டர்கள் இல்லையென்றால் பலர் எழுத்தாளர்களே இல்லை. !?
அதனால்தான் இந்த கணினி யுகத்திலும் பல வாசக எழுத்தாளர்களுக்கு சமூகவளைத்தளங்கள், பேஸ்புக், வலைச்சரம் போன்ற மின் ஊடங்களைப்பற்றிய போதிய ஞானம் இல்லை. இன்னமும் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்து விட்டு, அவை வருமா வராதா என்று வாரவாரம் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கின்றனர்.
படைப்புகளுக்கு ஏற்ப தலைப்பைப் போடுவது, பத்திகள் பிரிப்பது, பிழைகளைத் திருத்தம்செய்வது, மோசமான கருத்துப்பிழைகளை கண்டறிவது, சுருக்குவது, நீட்டுவது, சரியான வார்த்தைகளைக்கொண்டு பத்திகளை நிறைவுசெய்வது, தேவையற்றதை நீக்குவது போன்றனவற்றில் விழிப்புணர்வு இல்லாத்தால், அவ்வரிய காரியத்தை பத்திரிகை எடிட்டர்கள் செய்து பல `எழுத்தாளர்களை’ எழுத்தாளர் அந்தஸ்திற்கு உருவாக்கி உயர்த்துள்ளனர்.
ஒரு முறை, பத்திரிக்கை அலுவலகமொன்றிற்குச் சென்றிருந்தேன். சொந்த பணியின் காரணமாக அப்பக்கம் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், பத்திரிகை அலுவலகமும் செல்லும் வழியிலேயே இருந்துவிட்டதால், எனது சிறுகதை ஒன்றினை அப்பத்திரிகை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிடலாமே என்றெண்ணி அப்பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றேன்.
படைப்புகளை நேராக வந்தும் கொடுக்கலாம், அதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று அப்பத்திரிகை ஆசிரியரே ஒப்புதல் வழங்கியதால்தான் படைப்பை கையுடன் எடுத்துச் சென்றேன்.
நான் அங்கு சென்று சேர்ந்தபோது, அந்த ஆசிரியர் அவசர அவசரமாக ஒரு வேலையில் மிக மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒரு படைப்பை பக்கம் பக்கமாக திருத்திக்கொண்டும் வெட்டிக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தார். என்னதாக இருக்குமென்று எட்டிப் பார்த்தால், ஒரு `பிரபல’ எழுத்தாளரின் படைப்பு அது. தலையே சுற்றியது எனக்கு. பல ஆண்டுகளாக பத்திரிகைகளிலும் இதழ்களிலும் விடாமல் எழுதிக்கொண்டிருப்பவரான அந்த குறிப்பிட்ட எழுத்தாளரின் எழுத்து இவ்வளவு மோசமான எழுத்துப்பிழைகளோடு வந்திருப்பது எனக்குப் பெரும் அதிர்ச்சி.! ஆசிரியர் சிகப்புப் பேனாவால் பிழைத்திருத்தங்களை செய்துகொண்டிருந்ததால், பளிச்சென்று கண்களுக்குத்தென்பட்டன அங்கே அவர் திருத்தம் செய்திருந்த பிழைகள்.
எதற்காகப் போடவேண்டும்? முயன்று, வாசிப்பில் கவனம் செலுத்தி நன்றாக எழுதவரும்போது அவைகளை பத்திரிகையில் பிரசுரிக்கலாமே, என்றதிற்கு, பாவம், எழுத்தில் அதிக ஆர்வமிருக்கிறது, மேலும் தமிழில் எழுதுபவர்கள் வேறு குறைந்துகொண்டே வருகிறார்கள். இந்நிலையில் ஆர்வம் உள்ளவர்களை எங்களைப்போன்ற ஆசிரியர்கள்தான் வளர்த்துவிடவேண்டும். பிறகு பய்யப்பய்ய எழுத்தை வளர்த்துக்கொள்வார்கள் என்கிறார்..!
எப்போது? எத்தனை ஆண்டுகளாக இந்நிலை..?
இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு சிறுகதை கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிற்பதற்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில், பல சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தன. அவற்றில் பத்து கதைகளை சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார்கள். அந்த ஆய்வுகளை அக்கருத்தரங்கில் வாசித்து விமர்சனம் செய்தார்கள். விமர்சனங்கள் அனைத்தும் அற்புதம். செய்தவர் ஒரு முனைவர் என்பதால் நிகழ்வு சோர்வாக இல்லாமல் சுவரஸ்யமாகவே நகர்ந்துகொண்டிருந்தது. அனைத்தும் அற்புதமான கதைகள்.
ஒவ்வொன்றாக விமர்சனம் செய்துகொண்டே வரும்போது, ஒரு கதையின் விமர்சனம் எனக்குள் சிறு நெருடலை உண்டு பண்ணியது. அக்கதை அப்பட்டமான காப்பி. சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளில் ஒன்றான பின்நோக்கிச் சென்று வள்ளுவரையும் சித்தர்களையும் சந்தித்துவிட்ட பிறகு முன்நோக்கிச்செல்வதைப்போன்ற ஓர் அற்புதக்கதை அது. அதை அப்படியே நகல் எடுத்து தமது பெயரை போட்டுக்கொண்டு போட்டிக்கு அனுப்பியுள்ளார் ஒருவர். அச்சமயத்தில் நான் மிக அண்மையில் படித்த கதை அது என்பதால், அக்கதை அப்படியே மனதில் பதிந்துபோயிருந்தது.
தவறு, எழுதியவரின் மேல் இல்லை. எழுதுபவர்கள் இப்படித்தான் எதையாவது செய்து தம்மை நிலைநிறுத்தப்பார்ப்பார்கள். கதைகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் அக்கதைகளை ஆய்வு செய்பவர்களுக்கும் எங்கே போனது சுரணையை உணர்வு? அவர்களின் வாசிப்பின் பரப்பளவு என்ன? புதிதாக எழுதுகிற ஒருவர், எழுதிய உடனேயே மிகப்பெரிய எழுத்தாளர்களின் பாணி தெரிகின்ற போதே, அவைகளை ஆராயவேண்டாமா..!?
நிகழ்வில் ஓய்வு நேரம் வழங்கப்பட்டது. அப்போது, கதைகளை ஆய்வுசெய்திருந்த முனைவர் ஐய்யா அவர்களை தனிப்பட்டமுறையில் சந்தித்து, கதைகளில் ஒன்று அப்பட்டமான காப்பி என்றும், எனக்குத்தெரிந்த ஒன்று காப்பி என்பதால் மற்றவைகளையும் கொஞ்சம் ஆராய்வதுதான் சிறப்பு என்பதனை தயங்கித்தயங்கியே சொன்னேன்.
கண்களை அகல விரித்து ஆச்சிரியமாகப் பார்த்தார் என்னை. அப்படியா? அதுமாதிரியே எழுதியிருக்கலாமல்லவா.!? என்றார் படபடப்பை மறைத்தவண்ணம். எனக்கும் இச்சூழல் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதால், அமைதியாக வந்துவிட்டேன். இதுபோல் இன்னும் எத்தனை காப்பிக் கதைகளை புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்களோ.. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
இதையொட்டி, அந்நிகழ்வை எடுத்து நடத்திய பத்திரிகைக்கும் தகுந்த ஆதாரத்தோடு ஒரு வாசகர் கடிதம் எழுதினேன்.. அதையும் மூடுமந்திரம் செய்தார்கள்.
தமிழ் நாட்டு மோகத்தில் ஆட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுப்பவர்களின் படைப்புகள் கூட அச்சு அசப்பில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் சாயல் உள்ளதுவே.
இங்குள்ள மற்றவர்களுக்கு இதுபுரியாமல் இருக்கலாம் ஆனால் நான் தினமும் இரண்டு தமிழ்நாட்டு சிறுகதைகளையாவது படித்துவிடுபவள். இந்தச் சாயல் மோகம் தப்பு என்று சொல்லவில்லை, நல்ல விஷயம் தான். பெரிய வளர்ச்சி. அவர்கள் போல் கதை எழுதுவது சாமானியமான ஒன்றா!? ஒரு முதிர்ந்த நிலை பார்வையில் கதைகளைப் புனைவது பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான்.
இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஒருவர் என்னைக் கேட்டார், மலேசிய இலக்கியத்திற்கு உனது உழைப்பு என்ன?
எனது பதில்: குப்பைகளை எழுதிக் குவிப்பதுதான் உழைப்பு என்றால் - எனது உழைப்பு ஒன்றுமேயில்லைதான். நான் ஒரு சாதாரண வாசகி.
என்னைப்போல் இலக்கியங்களை விமர்சனம் செய்ய முடியுமா உன்னால்!!? என்றால்...
எனது பதில்: என்னால் முடியாதுதான், நான் ``நல்லாருக்கு, நல்லாலை’’ என்கிற வார்த்தையோடு முடித்துக்கொள்வேன். தேவையில்லாமல் இலக்கிய விமர்சனம் என்கிற பெயரில் எழுத்தாளர்களின் மனதை இரணமாக்க நான் தயாராக இல்லை. அவரவரின் பார்வையில், படைப்புகளின் தன்மை வேறுபடலாம். ஏன் நன்றாக இல்லை என்பதற்கு, நான் 100 காரணங்களை வைத்தால், ஏன் நன்றாக இருக்கு என்பதற்கு அவர்கள் 200 காரணங்களைக் கொடுக்கமுடியும். இதில் யாருக்கு என்ன லாபம்?
எது சரியான படைப்பு என்பது படிப்பவரின் பக்குவத்தைப் பொருத்தது. ஒருவர் மனது அதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், எழுதியது எழுதியதுதான். நான் ஒருவள் தனிப்பட்ட முறையில் `ஆஹா.. ஓஹோ’ என்பதாலும் அல்லது, இது எழுத்து அல்ல குப்பை என்பதாலும் , எழுதியவரின் வங்கித்தொகையில் கூடுதல் ஆயிரம் ரிங்கிட் கூட்டியோ குறைந்தோ போவதில்லை.
எழுத்துக்களின் மூலம், அவரவர் பார்வையில் அவலம் என்பதை அவரவர் பாணியில் பிரித்துப் பகுத்துச் சொல்ல வருகிறார்கள், அவற்றில் அங்கீகாரம் தேடுகிறார்கள், புகழ் சேர்க்கப் பார்க்கிறார்கள், தம்மை நிலைநிறுத்தத் துடிக்கின்றார்கள். கிடைத்தால் எல்லோருக்கும் சந்தோசம். கிடைக்காவிட்டால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
மிகப் பிரபலமாக பேசப்பட்ட, பல புகழ்பெற்ற எழுத்தாளர்களே, இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை (தமிழில்). நமக்குள் ஏன் பிரியோஜனமேயில்லாத வாக்கு வாதம்.!?
தயவு செய்து தமிழ் நாட்டு இலக்கியவாதிகளின் சர்ச்சைகளில் இதில் சேர்க்கவேண்டாம். அவர்களுக்கு எழுத்து முழுநேரத் தொழில், இங்கே நாம், பொழுதுபோக்கு எழுத்தாளர்கள். லட்சியமில்லாத எழுத்து பலருக்கு. எழுத்தால் என்ன மறுமலர்ச்சி புரட்சி வந்தது என்று யாராவது கேட்டால், எனக்குத்தெரியாது, தெரிந்தால் பகிருங்கள். கோபமில்லாமல். நான் கேள்விப்பட்டதில்லை (பத்திரிகை நிருபர்களின் எழுத்தைத் தவிர, பத்திரிக்கை நிருபர்கள் எழுத்தாளர்கள் அல்ல - அதுவும் அவர்களின் பிழைப்பு)
அரசியல் தலைவர்களை மட்டம் தட்டி, அரசியல் சூழலை மையமாக வைத்து சில தகிடதத்தோம் எழுத்துகளை எழுதிவிட்டால், அது அதிரடி அரசியல் எழுத்தாகிவிடுமா? அதனால் வந்த மாற்றம் என்ன என்பது தான் இங்கே கேள்வி. மாற்றமே வராது, ஆனால் ``நான் எருமை வாங்கினால் உன் தோட்டதில்தான் மேயவிடுவேன்’’ என்கிற கதையில், நடக்காத விஷயத்திற்காக வரும் சண்டையிடும் நிலைதான் இங்கு இலக்கிய வட்டத்தில் அவ்வப்போது நடக்கும் கூத்து.
சரியாய் சொல்லி இருக்கிறீர்கள்..
பதிலளிநீக்கு